அனைவருடைய தேவைகளையும் நிறைவேற்ற பொருளாதாரத்தைத் திருத்தியமைப்பதற்காக தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைப் பெற வேண்டும்!

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மத்தியக் குழுவின் 2013 மேதின அறைகூவல்.

தொழிலாளர் தோழர்களே,

உலக அளவிலும், நமது நாட்டிலும் வர்க்கப்போராட்டம் கூர்மையடைந்து வருகின்ற ஒரு நேரத்தில் இந்த மே தினம் வந்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் முதலாளி வர்க்கத்திற்கும், தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையே ஒரு பெரும் மோதல் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகி வருகிறது.

"சிக்கன நடவடிக்கைகள்" என்ற பெயரில், தொழிலாளர்களுடைய அடிப்படை உரிமைகள் மீதும், வாழ்க்கைத் தரத்தின் மீதும் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு எதிராக, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் பெரும் ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சமூக உற்பத்தி வழிமுறையை ஒரு தீவிர நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கின்ற நிதி அதிபர்களுக்கு எதிராக எல்லா கண்டங்களிலும் கோபம் அதிகரித்து வருகிறது. முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை தங்கள் முதுகில் ஏற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராக உழைக்கும் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

வாகன மற்றும் பிற உற்பத்தித் தொழிற்சாலைகள், விமான நிறுவனங்கள், இரயில்வே மற்றும் சாலைப் போக்குவரத்து, வங்கி மற்றும் காப்பீடு, மருத்துவ மனைகள் மற்றும் எண்ணற்ற பிற துறைகளைச் சேர்ந்த நமது நாட்டுத் தொழிலாளர்கள் பெருமளவில் வேலை நிறுத்தப் போராட்டங்களிலும், பெரும் ஆர்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருவதை நாம் கண்டுவருகிறோம். முதலாளித்துவத்தின் தீவிர சுரண்டலை எதிர்ப்பதற்காக நவீன சேவைத் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் சங்கங்களை அமைக்கத் துவங்கியிருக்கின்றனர். தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட மனநிலையானது, எதிரெதிரான கட்சிகளோடு இணைக்கப்பட்டுள்ள எல்லா மத்தியத் தொழிற் சங்கங்களையும் ஒரு மேடையில் ஐக்கியப்பட வைத்திருக்கிறது. பிப்ரவரியில் நடைபெற்ற இரு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் பொருளாதாரத்தின் பெரும்பாலான துறைகளை செயலிழக்கச் செய்தது. தொழிலாளர் சட்டங்களைக் கராறாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும், அவற்றை எல்லாத் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டுமென்றும், நுகர்பொருட்களின் விலைகளை உடனடியாகக் குறைக்க வேண்டுமென்றும், தனியார்மயமாக்கலை நிறுத்த வேண்டுமென்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் கோரியிருக்கின்றனர்.

தொழிலாளி வர்க்கத்தினுடைய போராட்டங்களோடு, உலகமயமாக்கப்பட்ட சந்தையில் தாங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதை எதிர்த்து எண்ணெற்ற விவசாயிகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும் நிறுவனங்கள் தங்கள் நிலங்களைக் கைப்பற்றுவதை விவசாயிகளும், பழங்குடி மக்களும் எதிர்த்து வருகிறார்கள். மத்திய ஆயுதப் படைகள் தங்களுடைய அடிப்படை உரிமைகளை நசுக்குவதற்கு எதிராக வடக்கிலும், வட-கிழக்கிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் உள்ள ஒடுக்கப்பட்ட தேசங்களும் தேசிய இனங்களும் மக்களும் போராடி வருகின்றனர். ஊழலும், குற்றவியலுமான முதலாளி வர்க்க ஆட்சியை எதிர்த்து பரந்துபட்ட மனக்குறையும், வெறுப்பும், கோபமும் இருக்கிறது.

பாராளுமன்றம் பின்பற்றிவரும் திட்டங்களில், உலக ஏகபோக நிறுவனங்களுக்கு சில்லறை வர்த்தகத்தைத் திறந்து விடுவதும், புதிய தனியார் வங்கிகளை டாட்டாக்களும், அம்பானிகளும் அமைக்க வழிவகை செய்து வருவதும் இருக்கின்றன. தொழிலாளர்களுடைய ஓய்வூதிய நிதிகளோடு முதலாளிகள் விளையாட அனுமதிப்பதும் அவர்களுடைய திட்டங்களில் அடங்கும். விவசாய நிலங்களையும், ஆதிவாசி மக்களுடைய நிலங்களையும் மேலும் எளிதாக முதலாளித்துவ நிறுவனங்கள் கைப்பற்றுவதற்கு வழிவகை செய்ய ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது. நமது நாட்டையும், தொழிலாளர்கள் - விவசாயிகளுடைய உழைப்பையும் சுரண்டுவதையும் கொள்ளையடிப்பதையும் தீவிரப்படுத்துவதன் மூலமும், இந்தக் கொள்ளையில் சேர்ந்து கொள்ளுமாறு அயல்நாட்டு முதலாளிகளை அழைப்பதன் மூலமும், உலகஅளவில் பூதாகரமாக வளர வேண்டுமென்பது இந்திய முதலாளிகளுடைய திட்டமாகும்.

தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்களுடைய கடும் உழைப்பினால் உருவாக்கும் உபரி மதிப்பை டாட்டா, ரிலையன்சு மற்றும் பிற இந்திய பெரு நிறுவனங்களும் உறிஞ்சி எடுத்து வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்கின்றனர். இதை அவர்கள் ஆப்ரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் உலகின் பிற பகுதிகளில் பணத்தை உற்பத்தி செய்யும் தங்கள் திட்டங்களில் ஈடுபடுத்துகின்றனர். எண்ணெற்ற நாடுகளில் தொழிலாளர்களிடமிருந்து அயல்நாட்டு முதலாளிகள் பிழிந்தெடுத்த உபரி மதிப்பானது நமது நாட்டிற்குள் தங்கு தடையின்றி வருகின்றது. அது, மிகவும் திறமை வாய்ந்த மற்றும் மலிவு விலையில் கிடைக்கும் உழைப்புச் சக்தியை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும், இந்திய அரசாங்கம் அளிக்கும் வரிச் சலுகைகளைப் பெறுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

பிப்ரவரி 28-அன்று, மத்திய நிதி அறிக்கையை முன்வைத்த நிதியமைச்சர் சிதம்பரம் உழைக்கும் வர்க்கத்திற்கும் மக்களுக்கும் மிக அதிகமான கசப்பு மருந்தை அறிவித்திருக்கிறார். ஊதிய வருவாய் மீதான வரிகளும், உழைக்கும் மக்கள் பயன்படுத்தும் பண்டங்கள் மற்றும் சேவைகள் மீதான மறைமுக வரிகளும் சென்ற ஆண்டைக்காட்டிலும் இந்த 2013-14 இல் 1,25,000 கோடி ரூபாய் அதிகமாக இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் தோழர்களே!

பெரும் ஏகபோக குடும்பங்களுடைய தலைமையில் உள்ள முதலாளி வர்க்கம் தீர்மானிக்கும் திட்டத்தைத்தான் நமது நாட்டில் மாறிமாறி வந்த அரசாங்கங்கள் சுதந்திரத்திலிருந்து நடைமுறைப்படுத்தி வந்துள்ளன. இந்த உண்மையை பாராளுமன்றத்திலுள்ள அரசியல் கட்சிகள் கூடுமானவரை மறைத்து, அரசாங்கம் மக்களுடையதெனவும், அது மக்களுக்காகவும், மக்களாலும் நடத்தப்பட்டு வருவதாக மாயையைத் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.

ஒரு சோசலிச பாணி சமுதாயத்தைக் கட்டுவதே தம்முடைய திட்டமென நேரு சொல்லி வந்தார். சமுதாயம் முழுவதையும் விலையாகக் கொடுத்து, மிகச் சில பெரு முதலாளித்துவக் குடும்பங்கள் தங்களுடைய செல்வங்களைப் பெருக்கி வந்த ஒரு வகை முதலாளித்துவம் தான் உண்மையில் வளர்க்கப்பட்டது. எல்லா உரிமங்களையும் அவர்களே கைப்பற்றி வைத்துக் கொண்டு, உள்நாட்டுச் சந்தையில் ஒரு மேலாதிக்க நிலையை அடைந்தனர்.

இந்திரா காந்தி, "வருமையை ஒழிப்போமென" குரலெழுப்பினார். ஆனால் அதன் விளைவோ, தனிப்பட்ட பெரு முதலாளிகளுடைய செல்வங்கள் மேலும் பெருகியதும், அவர்களுடைய அரசியல் செல்வாக்கு விரிவடைந்ததும் அரசு இயந்திரத்தின் மேல் முழுவதுமாக அவர்களுடைய ஆதிக்கம் நிறுவப்பட்டதும் ஆகும்.

இராஜீவ் காந்தி, நவீன மயப்படுத்துவதாகவும், இந்தியாவை 21-ஆம் நூற்றாண்டிற்குக் கொண்டு செல்லப் போவதாகவும் கூறினார். 21-ஆம் நூற்றாண்டும் வந்தது. அதில் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உலகிலேயே மிகவும் ஏழ்மையானவர்களாக இருக்கையில் சில இந்திய முதலாளிகள் உலகஅளவில் பூதாகரமாக வளர்ந்திருப்பதை நாம் காண்கிறோம்.

"இந்தியா ஒளிர்வதாக" வாஜ்பாய் பெருமைபட்டுக் கொண்டார். ஆனால், பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை இருண்டதாக ஆகியிருக்கிறது. ஒரு சிறுபான்மையான முதலாளிகள் பெருமளவில் செல்வச் செழிப்பில் மிதப்பது குறித்து அவர்கள் கோபமடைந்துள்ளனர்.

இருபதாண்டுகளுக்கு முன்னர், நரசிம்ம ராவ் அரசாங்கத்தில் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோது இதே போன்ற ஆரவாரங்களோடு தனியார்மய - தாராளமய முதல் கட்ட திட்டத்தைக் கொண்டு வந்தார். மக்களை வறுமையிலிருந்து மீட்க, செல்வத்தை நாம் விரைவாக உருவாக்க வேண்டும் என்று கூறினார். உண்மை நிகழ்வுகள், இந்தப் பொய்யை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கின்றன.

கடந்த 20 ஆண்டுகளில் மிகப் பெரிய ஏகபோக முதலாளித்துவக் குடும்பங்களுடைய செல்வங்கள் 50 மடங்கிற்கும் மேல் பெருகியுள்ளன. அதே நேரத்தில், பெரும்பான்மையான தொழிலாளர்களுடைய ஊதியங்கள், நுகர் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கூட எட்ட முடியவில்லை. உண்மையில் வருவாய் உயர்ந்த தொழிலாளிகள் கூட, மிக நீண்ட நேரம் வேலை செய்தும், முன்பைக் காட்டிலும் தீவிரமாக சுரண்டப்பட்டும் வருகிறார்கள். பெரும்பான்மையான விவசாயிகள் மிகவும் கடன்பட்டு, எதிர்காலம் பற்றி நிரந்தரமற்று இருக்கிறார்கள். வறுமை மிகவும் கடுமையானதாகவும், தீவிரமடைந்தும் இருக்கிறது.

வயது வந்த ஒவ்வொருவருக்கும் வாக்களிக்கும் உரிமை இருப்பதால் நமது நாட்டிலுள்ள அரசியல் அமைப்பு, சனநாயகமென்று கூறப்படுகிறது. வெறும் வாக்களிக்கும் உரிமையானது சமுதாயத்தின் எதிர்காலப் போக்கைத் தீர்மானிக்கும் எந்த உரிமையையும் நமக்குத் தரவில்லை. அரசியல் வழிமுறை மீது ஆதிக்கம் செலுத்தும் முதலாளி வர்க்கத்தின் பல்வேறு கட்சிகள் முடிவு செய்து நிறுத்தும் வேட்பாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பங்கு மட்டுமே பெரும்பான்மையான மக்களுக்கு இருக்கிறது.

இன்று நிலவும், கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் வழிமுறையானது, முதலாளி வர்க்கம் தன்னுடைய ஆணைகளை முழு சமுதாயத்தின் மீது திணிப்பதற்கு சேவை செய்கிறது. அதே நேரத்தில், சமுதாயத்தின் போக்கைத் தீர்மானிப்பதிலிருந்து பெரும்பான்மையான உழைக்கும் மக்களை முழுவதுமாக ஒதுக்கி வைக்கிறது. முதலாளி வர்க்கத்திற்கு மட்டுமே இது சனநாயகமாகும். உழைக்கும் பெரும்பான்மையான மக்களுக்கு இது கொடூரமான சர்வாதிகாரமாகும்.

சூழ்நிலையானது ஒரு புதிய வகையான சனநாயகத்திற்கான - பாட்டாளி வர்க்க சனநாயகத்திற்கான - தேவையைச் சுட்டிக் காட்டுகின்றன. அப்படிப்பட்ட சனநாயகத்தில் சுரண்டும் சிறுபான்மையினருடைய விருப்பத்திற்கும் மேலாக உழைக்கும் பெரும்பான்மை மக்களுடைய விருப்பங்களே முதன்மையாக இருக்கும். அப்படிப்பட்ட புதிய அமைப்பில், ஒரு அரசியல் கட்சியினுடைய கடமையானது, மக்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த வழிவகுப்பதாக இருக்குமே ஒழிய அதிகாரத்தைத் தன்னுடைய கைகளில் குவித்துக் கொண்டு மக்கள் பெயரால் ஆளுவதாக இருக்காது.

ஆட்சி மன்றங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்துவதற்கு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, எல்லா தொழிற் சங்கங்களும், விவசாய அமைப்புக்கள், பெண்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களும் முன்வைப்பதற்கு அரசியல் வழிமுறை வழிவகுக்க வேண்டும். வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னர் இறுதி வேட்பாளர் பட்டியல், தொகுதி மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும். தேர்ந்தெடுத்தவர்களை இரகசிய வாக்கெடுப்பின் மூலம், திருப்பியழைக்கும் உரிமையும் மக்களுக்கு இருக்க வேண்டும்.

உழைக்கும் பெரும்பான்மை மக்களுடைய விருப்பத்தைப் பிரதிபலிப்பதாகவும், தொழிலாளி வர்க்கத்தால் தலைமை தாங்கி நடத்தப்படும் இப்படிப்பட்ட ஒரு அதிகாரத்தால் மட்டுமே, முதலாளிகள் கோரும் "அதிகபட்ச இலாபத்திற்கான உரிமையைக்" கட்டுப்படுத்தி, களைய முடியும். அது, தொழிலாளர்கள், விவசாயிகளுடைய உரிமைகளுக்கும், எல்லா ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுடைய உரிமைகளுக்கும், சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினருடைய மனித உரிமைகளுக்கும் உத்திரவாதமளிக்கும். சமூக உற்பத்திக் கருவிகள், தனியார் சொத்தாக இருப்பதை, அது சமூக மற்றும் தொகுப்புக்களுடைய சொத்தாக மாற்றும்.
தொழிலாளர் தோழர்களே,

நிதியமைச்சர் சிதம்பரம் தன்னுடைய மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை முன்வைத்த போது, உழைக்கும் மக்களுக்கு கசப்பு மருந்தை அளிப்பது தவிர தனக்கு வேறு வழி ஏதுமில்லை என்று கூறினார். முதலாளித்துவ சுரண்டலையும், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஆதிவாசி மக்களைக் கொள்ளையடிப்பதையும் தீவிரப்படுத்துவது தவிர "வேறு மாற்று வழியில்லை" என கடந்த இருபது ஆண்டுகளாக முதலாளி வர்க்கம் திரும்பத் திரும்பச் சொல்லிவரும் பழைய பல்லவி தான் இது.

ஒரு சிறுபான்மையான இலாபமடிப்பவர்களுடைய பேராசையை நிறைவு செய்வதற்காக சமுதாயம் ஏன் செயல்பட வேண்டும்? சமூக உபரி மதிப்பை உருவாக்குவதற்காக கடுமையாக உழைப்பவர்களுக்கு வளமையை ஏன் உறுதி செய்யப்படக் கூடாது?

இந்த மனிதாபிமானமற்ற சமூக விரோத தாராளமயம், தனியார்மயமாக்கல் மூலம் உலகமயமாக்கும் திட்டத்திற்கு ஒரு மாற்று இருக்கிறதென ஒருமித்த குரலில் தொழிலாளி வர்க்கம் உறுதியாகக் கூற வேண்டும்.

முதலாளி வர்க்கத் திட்டத்திற்கு மாற்றானது, அனைவருக்கும் வளமையையும், பாதுகாப்பையும் ஒரு உரிமை என்ற அடிப்படையில் உறுதி செய்யும் தொழிலாளி வர்க்கத்தின் திட்டமாகும். மற்றவர்களைச் சுரண்டுவதன் மூலம் சிலர் செல்வத்தைச் சேர்க்கும் பொருளாதார அடிப்படையை அகற்றுவதன் மூலம் இதைச் சாதிக்க முடியும்.

முதல் படியானது, சமூக உபரி மதிப்பை உருவாக்கும் தொழிலாளி வர்க்கமும், பிற உழைக்கும் மக்களும் ஆட்சியாளர்களாக ஆவதாகும். இதன் மூலம் ஒரு ஒட்டுமொத்த சமூக திட்டத்தின் அடிப்படையில் அனைவருடைய தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு உபரி மதிப்பைப் பயன்படுத்த முடியும். தனிப்பட்ட இலாபத்தை அதிகரிப்பதை தன்னுடைய உரிமையாக எவரும் கேட்க அனுமதிக்கக் கூடாது.

உழைக்கும் பெருவாரியான மக்களுக்கு அதிகாரத்தை அளிப்பதன் மூலம், சமுதாயத்தைத் திருத்தியமைக்கவும், அனைவருடைய வளமைக்கும் உத்திரவாதமளிக்க பொருளாதாரத்தை மாற்றியமைக்கவும் போராடுவதற்கு நமக்கு உரிமையும், கடமையும் இருக்கிறது.

பாட்டாளி வர்க்க சனநாயகமும், பொருளாதாரத்தை சோசலிச அடிப்படையில் மாற்றியமைப்பதும் தொழிலாளி வர்க்கத்தின் திட்டமாகும். தொழிலாளர்களை வாக்கு வங்கிகளாக வைத்திருக்க விரும்பும் கட்சிகளுடைய ஆதிக்கத்திலிருந்து நாம் விடுபட்டு வருவோமானால், இந்தத் திட்டத்தை அடைவது இன்று சாத்தியமே. கட்சி வேறுபாடுகளைக் கடந்த அளவில், தொழிலாளி வர்க்கத் திட்டத்தை முன்னேற்ற வேண்டுமென்பதில் உறுதி கொண்ட தொழிலாளர்களுடைய ஒற்றுமைக் குழுக்களை ஒவ்வொரு தொழிற்சாலையிலும் தொழிற் பேட்டைகளிலும் நாம் கட்ட வேண்டும். இந்திய சமுதாயத்தைப் புதிய அடித்தளங்களில் மீண்டும் கட்டுவதற்கு ஒரு வர்க்கமாக நாம் ஒன்றுபட்டு ஒரு சக்திவாய்ந்த அரசியல் சக்தியாக ஆக வேண்டும்.

தொழிலாளர் தோழர்களே,

அரசியலில் ஈடுபடுவதென்றால், முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கமென்ற இரு எதிரெதிரான வர்க்கங்களுக்கிடையில் ஒரு போராட்டம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதாகும். இந்திய மற்றும் சர்வதேச பிற சுரண்டலதிபர்களோடு கூட்டாக முதலாளி வர்க்கம் ஆட்சியில் இருக்கும் போது அவர்களுக்கு ஒரு திட்டம், ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கிறது. தொழிலாளி வர்க்கம், விவசாயிகள் மற்றும் பிற உழைக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுடன் கூட்டாக ஆட்சியில் இருக்கும் போது வேறொரு திட்டமும், நிகழ்ச்சி நிரலும் இருக்கும். இந்த இரண்டு திட்டங்களுக்கும் இடைப்பட்டதாக வேறெதுவும் இருக்க முடியாது.

இந்த வர்க்கப் பிளவுபட்ட இந்தச் சமுதாயத்தில், ஒவ்வொரு அரசியல் கட்சியும் முதலாளித்துவ திட்டத்திற்கோ அல்லது தொழிலாளி வர்க்கத்தின் திட்டத்திற்கோ விசுவாசமாக இருக்கின்றன. யாரும் இரண்டிற்கும் சேவை செய்ய முடியாது.

பாஜக-வும், பாராளுமன்றத்தில் இருக்கும் பிற எதிர்க் கட்சிகளும் எல்லா பிரச்சனைகளுக்கும் ஆளும் கட்சியைக் குறை சொல்கின்றனர். இதன் மூலம், சமூக விரோத திட்டத்திற்கு காங்கிரசு கட்சி மட்டுமே காரணமென்ற எண்ணத்தை அவர்கள் உருவாக்குகிறார்கள். மற்றொரு பக்கம், பாஜக-வை அதிகாரத்திலிருந்து ஒதுக்கி வைப்பது என்ற பெயரில், சில தொழிலாளி வர்க்கக் கட்சிகள் காங்கிரசு கட்சியோடு கூடி வருகிறார்கள். இந்திய ஏகபோக முதலாளிகளுடைய இந்த இரண்டு முக்கிய கட்சிகளில் ஏதாவதொன்றை தொழிலாளர்கள் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

காங்கிரசு கட்சியானது "குறைவான கேடு" என்பது ஒரு வாதமாகும். ஆனால் முதலாளித்துவ கட்சி ஆட்சியின் எந்த வஞ்சகத்தையும் தொழிலாளர்கள் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்?

பாஜக இந்துத்துவா-வை முன் வைப்பதால், மதச் சார்பின்மையில் நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறப்படும் காங்கிரசு கட்சியானது ஒரு குறைவான கேடு என்று சொல்லப்படுகிறது. மதச் சார்பின்மை என்றால், மதம் தொடர்பான பிரச்சனைகளில் எந்தப் பக்கமும் சாராமல் இருத்தல் என்று பொருள்.

மதச்சார்பின்மை என்ற கருத்தியலும், ஆட்சி முறையும் ஆங்கிலேய காலனிய பேரரசின் கீழ் உருவாக்கப்பட்டதாகும். இந்துக்கள் இடையிலும், முஸ்லீம்கள் இடையிலும் இருந்த பல்வேறு மத கும்பல்களை, ஒருவருக்கொருவர் எதிராக வெறுப்பைப் பரப்புமாறு ஆங்கிலேயர்கள் தூண்டிவிட்டனர். ஒரு மதக் கலவரத்தைத் தூண்டிவிட்டு ஊதிப் பெரிதாக்கிய பின்னர், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் எந்தப் பக்கமும் சாராதவர்கள் என்று கூறிக்கொண்டு, நடுநிலையான சமரசம் செய்து வைப்பவர்களாக செயல்பட்டார்கள்.

ஆங்கிலேய காலனியவாதிகளிடமிருந்து கற்றுக் கொண்ட நரித் தந்திரத்தை காங்கிரசு கட்சி பின்பற்றுகிறது. பாஜக எப்போதுமே முஸ்லீம்களுக்கு எதிராக இருந்து வந்திருக்கிறது. காங்கிரசு கட்சி ஒரு மத கும்பலைத் தாக்கியும் இன்னொன்றை சமரசப்படுத்தியும் மாற்றி மாற்றி செய்து வருகிறது. அதனுடைய மதச்சார்பற்ற கருத்தியல் மற்றும் அரசியலின் உண்மையான உள்ளடக்கம் இதுதான். இது ஒரு ஏமாற்றுத் தனமான வகுப்புவாதமன்றி வேறொன்றுமில்லை.

பாசிசத்தை பாஜக பிரதிபலிப்பதால், அது பெரிய அச்சுறுத்தலென சிலர் வாதிக்கிறார்கள். பாசிசம் என்றால் என்ன? பாசிசம் என்றால், காட்டுமிராண்டித் தனமான வன்முறையைக் கொண்டு, அடிப்படை சனநாயக உரிமைகளை நசுக்கி, பெரும் ஏகபோக மூலதனம் நடத்தும் வெளிப்படையான சர்வாதிகார ஆட்சியாகும். இன்று பாசிசம் வளர்ச்சி பெற்று வருகிறது என்பது உண்மைதான். ஆனால் அதை காங்கிரசு, பாஜக இருவருமே முன்னணியில் இருந்து நடத்தி வருகிறார்கள்.

காங்கிசு, பாஜக இரண்டுமே பெரிய ஏகபோக முதலாளிகளுடைய கட்சிகளாகும். அரசு பயங்கரவாதம் அதிகரித்து வருவதற்கும், ஆட்சி செய்வதற்கான பிடித்தமான முறையாக வகுப்புவாத வன்முறை ஆகி வருவதற்கும், இந்த இரண்டு கட்சிகளுமே பொறுப்பாகும். அரசியல் குற்றவியலாக மாற்றப்பட்டு வருவதற்கும், சமூக சூழல் சீரழிந்து வருவதற்கும் இந்த இருவருமே காரணமாகும். இந்த இரண்டு கட்சிகளுமே, தடா (TADA), போடா (POTA), ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) போன்ற பாசிச சட்டங்களை ஆதரித்து வருகின்றன. எல்லா குடிமக்களுடைய சனநாயக உரிமைகளுக்கோ, சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுடைய மனித உரிமைகளுக்கோ இக் கட்சிகள் எந்த மரியாதையோ மதிப்போ கொடுப்பதில்லை.

காங்கிரசு மற்றும் பாஜக முன்னணிகளை புறக்கணிப்பது என்றால், ஒரு மூன்றாவது முன்னணி எனப்படும் பிராந்திய முதலாளித்துவ கட்சிகளுடைய ஒரு கூட்டணியில் தொழிலாளர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று பொருளல்ல. அப்படிப்பட்ட ஒரு முன்னணியால், ஏகபோக முதலாளித்துவத் திட்டங்களை எதிர்க்க முடியுமென எதிர்பார்ப்பது பயனற்றது என கடந்த கால நம் அனுபவம் காட்டுகிறது.

நம்முடைய அரசியல் நோக்கமானது, ஒரு முதலாளித்துவ கட்சி அல்லது கூட்டணியை வேறொன்றைக் கொண்டு மாற்றியமைப்பதல்ல. நாம் முதலாளி வர்க்க ஆட்சிக்கு நிரந்தரமாக முடிவு கட்ட விரும்புகின்றோம். அதற்கு பதிலாக, தொழிலாளி வர்க்கத்தால் வழி நடத்தப்படும் உழைக்கும் பெரும்பான்மை மக்களுடைய ஆட்சியை நிறுவ விரும்புகிறோம்.

தொழிலாளர் தோழர்களே,

நமது நாட்டிலுள்ள அரசியல் நெருக்கடியானது, கொடிய திசை திருப்பல்கள், குண்டு வெடிப்புகள், அரசு பயங்கரவாதமும், வகுப்புவாத வன்முறையும் தீவிரமடைதல், பாகிஸ்தானுக்கு எதிராக போர் வெறியைத் தூண்டி விடுதல் போன்ற அபாயங்களுக்கு வழி வகுக்கிறது. அதே நேரத்தில், தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்திற்கு வருவதற்கான ஒரு வாய்ப்பையும் இந்த நெருக்கடி அளிக்கிறது.

விவசாயிகள் மற்றும் எல்லா ஒடுக்கப்பட்டவர்களுன் கூட்டணியோடு, தொழிலாளி வர்க்க ஆட்சிஅதிகாரத்தை நிறுவும் நோக்கத்தையொட்டி நாம் உறுதியாக ஒன்றுபடுவோம். பாதகமான மாயைகளென காட்டப்பட்டுள்ள ஒரு நடுப்பாதை, மூலதனமும் உழைப்பும் சேர்ந்து நடத்தும் ஒரு கூட்டாட்சி அல்லது முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையில் ஒரு இடைக்கட்டம் போன்ற எல்லா எண்ணங்களுக்கும் முடிவு கட்டுவோம். மதச்சார்பின்மையைக் காப்போம், பாராளுமன்ற சனநாயகத்தைக் காப்போம் அல்லது எந்த "குறைவான கேட்டை"யும் ஆதரிப்போம் என்பன போன்ற அழைப்புக்களால் திசை திருப்பப்படாமல் நாம் நிற்போம்.

தொழிலாளி வர்க்கத்தின் திட்டத்தையொட்டி அரசியல் ஐக்கியத்தைக் கட்டுவதில் தங்களுடைய எல்லா சக்திகளையும் செலவழிக்குமாறு எல்லா கம்யூனிஸ்டுகளையும், தொழிலாளி வர்க்கத்தின் எல்லா அமைப்பாளர்களையும் செயல் வீரர்களையும் கம்யூனிஸ்டு கெதர் கட்சி கேட்டுக் கொள்கிறது.

பாட்டாளி வர்க்க சனநாயகத்திற்காகவும், சோசலிச முறையில் பொருளாதாரத்தை மாற்றியமைப்பதற்காகவும் நாம் போராடுவோம்!

தொழிலாளி வர்க்கத்தின் இந்த திட்டத்தையொட்டி ஒன்றுபட்டு, தேர்தல்களில் போட்டியிடுமாறு எல்லா தொழிலாளி வர்க்கக் கட்சிகளையும் கேட்டுக் கொள்வோம்!

தொழிலாளர்கள் இடையில் வேறெந்தத் திட்டத்தையும் திணிக்க எவரும் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளையும் நாம் எதிர்ப்போம்!

உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!

இன்குலாப் ஜிந்தாபாத்!