மே 4 அன்று கன்னியாகுமரி புத்தன் சந்தை சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் மேதினக் கூட்டம் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் பல்வேறு தோழர்களும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்திற்கு தோழர் தாமஸ் அவர்கள் தலைமை வகித்தார்.

கூட்டத்தைத் துவக்கிவைத்து உரையாற்றிய தோழர் தாமஸ் அவர்கள், மேதின வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துரைத்தார். 1886-இல் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடியதையும், காவல்துறை அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பலரைக் கொன்றதையும், ஆயிரக்கணக்கானவர்களை காயப்படுத்தியும், பின்னர் தொழிலாளர்கள் பலரை முதலாளிகளுடைய அமெரிக்க அரசு தூக்கிலிட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார். இந்த வீரமான போராட்டத்தையும், பல்வேறு போராட்டங்களையும் தொடர்ந்து 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையைத் தொழிலாளி வர்க்கம் வென்றது. ஆயினும் அண்மை ஆண்டுகளில் இந்த உரிமை மறுக்கப்பட்டு, தொழிலாளர்கள் 10-12 மணி நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றனர். தொடர்ந்த ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் மட்டுமே நம்முடைய உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் தக்கவைத்துக் கொள்ள முடியும். மேதினத்தன்று நம்முடைய அனுபவங்களைத் தொகுத்துப் பார்க்கவும் அதனடிப்படையில் நம்முடைய அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடவும் ஏற்றதொரு நாள் என்று கூறி அனைவரையும் வரவேற்றார்.

கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் செயல்வீரர் தோழர் சரவணன் அவர்கள் தன்னுடைய உரையில் இன்றைய நிலைமைகளைப் பற்றி விளக்கினார். தொழிலாளர்களுடைய நிலைமை மட்டுமின்றி, விவசாயிகளுடைய வாழ்வுரிமையும் சீரழிந்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். வரட்சி நிலைமையை பார்வையிட வரும் மத்திய அரசின் குழு எல்லா மாவட்டங்களையும் சுற்றிப் பார்க்க வேண்டும், விவசாய சங்கப் பிரதிநிதிகளையும், விவசாயிகளையும் சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளை முழுமையாக அறிந்து அவர்களுடைய துயர் தீர்க்கும் வகையில் இழப்பீடு வழங்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

இந்திய அரசாங்கத்தின் மத்திய அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் ஆளும் கட்சி - எதிர்க் கட்சி என்ற வேறுபாடில்லாமல் ஒன்று சேர்ந்து இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களை 2-ஜி, நிலக்கரி ஊழல் என்பன போன்ற பல்வேறு ஊழல்களில் கொள்ளையடித்ததை, அரசாங்கம் கைப்பற்றி மக்களிடம் கொடுக்க வில்லை. "உங்கள் பணம் உங்கள் கையில்" என்று சிதம்பரமும் பிறரும் சொல்லிவருவது நமக்குச் சொந்தமான இந்தப் பணத்தைப் பற்றியல்ல. யானைவாயிலே போன கரும்பைப் போல காங்கிரசு, பாஜக, அதிமுக, திமுக கட்சிகள் கொள்ளையடித்த பணம் திரும்பி வரவே வராது. மக்கள் ஒன்று திரண்டு புதியதொரு அமைப்பை உருவாக்கினால் மட்டுமே, மக்களுடைய உரிமைகளை நாம் வென்றெடுக்க முடியும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கூறி தன் உரையை முடித்துக் கொண்டார்.

பின்னர் தோழர் குமார் உரையாற்றினார். இந்த அரசாங்கம் எப்படி தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராகவும் முதலாளி வர்க்கத்திற்கு சாதகமாகவும் செயல்படுகிறது என்று கோடிட்டுக் காட்டிய அவர், அதற்காக இரண்டு உதாரணங்களை சுட்டிக் காட்டினார். இந்த மத்திய அரசாங்கம் மத்திய மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தை வைத்து தனியார் மின்உற்பத்தியை ஊக்குவித்தும் அரசு மின்உற்பத்தியை தடை செய்தும் வருகின்றனர். இதுவே இன்றுள்ள மிகையான மின்தட்டுப்பாட்டுக்கும் மின்சார கட்டண உயர்வுக்கும் மூலகாரணம். இந்த தனியார் மின்உற்பத்தியாளர்கள் ஒரு மாதத்திற்கு ஒரு நாள் மட்டும் மின் உற்பத்தி செய்தாலும் போதும், அவர்கள் அரசாங்கத்திடம் ஒரு மாதத்திற்கு மின்உற்பத்தி செய்ததற்கான கட்டணத்தை வசூலித்துக் கொள்ள முடியும். இப்படி உழைக்கும் பெருவாரியான மக்களின் பணத்தை பெருமுதலாளிகளின் கொள்ளை லாபத்திற்கு அரசாங்கம் வாரி இறைத்து வருகிறது.

சனநாயக அரசை நிர்வகித்து வருவதாக மார்தட்டிக்கொள்ளும் இந்த அரசு, ஒரு புறம் தொழிலாளிகளுக்கும் பெருவாரியான உழைக்கும் மக்களுக்கும் திறந்த சந்தை பொருளாதாரத்தை பற்றி போதிக்கிறது. அதே நேரத்தில், நிலக்கரியின் விலை உயர்ந்து விட்டதெனவும் அதனால் பாதிக்கப்பட்ட பெருநிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் கூறி, வழக்குகள், ஒழுங்குமுறை ஆணையம் என்றும் பல்வேறு நாடகங்களை நடத்தி உழைக்கும் பெருவாரியான மக்களின் கோடிக்கணக்கான வரிப் பணத்தை முதலாளிகளின் லாப விகிதம் குறைந்து விடக் கூடாதென அவர்களுக்கு வாரி வழங்குகிறது. தொழிலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் இப்படி நடக்குமா என்ற கேள்வியை அவர் எழுப்பினார். முதலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தில் உள்ள வரையில் மக்களுக்காகவே பேசிக் கொண்டு முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தை அதிகபட்சமாக சுரண்டிக் கொண்டே தான் இருக்கும் என்பதையே இன்று வரை நடந்து வரும் எல்லா செயல்பாடுகளும் காண்பிக்கின்றன. முதலாளித்துவ கட்சிகளை ஆதரித்து தொழிலாளி வர்க்கத்திற்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. தொழிலாளி வர்க்கம் வருகின்ற தேர்தலில் காங்கிரசு, பாஜக, திமுக, அதிமுக, பாமக போன்ற பல்வேறு முதலாளித்துவ கட்சிகளை புறக்கணித்து விட்டு தொழிலாளி வர்க்கத்தை ஆட்சி அதிகாரத்தில் வைக்க போராடுகின்ற தொழிலாளர்களையும் விவசாயிகளையும் தேர்தல் களத்தில் முன்நிறுத்தி ஏன் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டு தன் உரையை முடித்தார்.

தோழர் இராசேந்திரன் பேசுகையில் யார் தொழிலாளி என்ற முக்கிய கேள்வியை எழுப்பினார். ஏனென்றால் தொழிலாளிகளிடம் பிரிவினையை உண்டு பண்ணும் நோக்கோடு, இதில் முதலாளிவர்க்கம் பல குழப்பங்களை வேண்டுமென்றே பரப்பி வருகிறது. மாதத்திற்கு 1000 ரூபாய் கூலி வாங்குபவராக இருந்தாலும் ஒரு லட்சம் சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் ஊதியத்திற்காக தன் உழைப்பை விற்று வாழ்பவர் எல்லோருமே தொழிலாளிகள் தான் என்று தெளிவாக விளக்கினார்.

மேலும் பேசுகையில் இந்திய அரசாங்கம் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதை பல எடுத்துக் காட்டுகள் மூலம் விளக்கினார். இந்திய அரசின் சட்டங்கள், பாரபட்சமாக செயல்படுத்தப்படுகின்றன. 1984 இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் 3000-க்கும் மேற்பட்ட சீக்கிய மக்கள் தில்லியிலும், பிற இடங்களிலும் படுகொலை செய்யப்பட்டனர். குற்றவாளிகள் காங்கிரசு கட்சியின் உயர்மட்ட தலைவர்களென மக்கள் அடையாளம் காட்டியிருந்தும் இது வரை அவர்கள் தண்டிக்கப்பட வில்லை. பாபரி மசூதி 1992-இல் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடெங்கிலும் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு, இது வரை குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்பட வில்லை. அது போலவே, குஜராத்தில் 2002-இல் நரேந்திர மோடியும், அவருடைய சகாக்களும் வகுப்புவாத வன்முறையைத் தூண்டிவிட்டு நடத்தி, முஸ்லீம் மக்களை படுகொலை செய்ததை நாடே அறியும். அதிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில் எவ்வித ஆதாரமோ சாட்சியங்களோ இல்லாமல் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது எவ்வகையில் நியாயமென அவர் கேள்வி எழுப்பினார். சட்டங்கள் முதலாளிகள், பண முதலைகள் மற்றும் அடாவடியான கட்சிகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளிகள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டினார். இந்திய அரசியல் அமைப்பில் அடிப்படை மாற்றங்களை உருவாக்க வேண்டியது உடனடித் தேவை. அதைத் தொழிலாளி வர்க்கம் தான் நிறைவேற்றும் என்று திட்டவட்டமாகக் கூறி, இதை நிறைவேற்றுவதற்கு எல்லாத் தொழிலாளர்களும் கம்யூனிஸ்டுகளும் ஓரணியில் திரளுமாறு அறைகூவல் விடுத்தார்.

அதற்குப் பின்னர், இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் தோழர் பாஸ்கர் உரையாற்றினார். கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் - சென்னையில் ஃபோர்டு, உண்டாய் ஆகியவற்றிலும், தில்லியில் மாருதியிலும் தொழிலாளர்களுடைய நிலைமைகள் குறித்தும், அங்கு தொழிலாளர்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்தைப் பற்றியும் குறிப்பிட்டார். தாங்கள் விரும்பும் தொழிற் சங்கத்தை அமைக்கும் உரிமைக்காகவும், நியாயமான ஊதியத்திற்காகவும் தொழிலாளிகள் போராடி வருகிறார்கள். அவர்களுடைய உரிமைகளை மதித்து அவற்றை செயல்படுத்துவதற்கு மாறாக, முதலாளிகளும், அரசாங்கமும் தொழிலாளர்களைத் தாக்கியும், குண்டர்களைக் கொண்டு வன்முறையை ஏவியும் வருகிறது.
 
இந்திய மக்களுடைய வரிப்பணத்தில் நடத்தப்படும் ஏர் இந்தியாவில் தொழிற் சட்டங்களை மீறி, பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், 20-25 ஆண்டுகளாக தொடர்ந்து தற்காலிகத் தொழிலாளர்களாக வைக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் விமானத்துறை அமைச்சன் பிரபூல் பட்டேலும், பிற விமான நிறுவன முதலாளிகளும் ஊழல் மூலம் ஏர் இந்தியாவை 90,000 கோடி நட்டத்தில் மூழ்கடித்துள்ளனர்.

அதிக ஊதியம் பெறுவதாகக் கூறப்படும் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றும், இலட்சக்கணக்கான வல்லுனர்களுடைய நிலைமையும் மோசமாக இருக்கிறது. அவர்கள் தினமும் 12 மணிநேர வேலை செய்யுமாறு நிர்பந்திக்கப்படுகிறார்கள். கடுமையான வேலைச் சுமையும் அதன் காரணமாக மன அழுத்தத்திற்கும், பல்வேறு வகையான நோய்களுக்கும் அவர்கள் ஆளாகிறார்கள். அவர்களுடைய வேலைக்குப் பாதுகாப்பு இல்லை. இந்த நிறுவனங்கள் விரும்பும் போதெல்லாம் தொழிலாளர்கள் வேலையிலிருந்து தூக்கி எறியப்படுகிறார்கள். அவர்களுடைய ஊதியமும் பல்வேறு வழிகளில் வெட்டிக் குறைக்கப்படுகிறது. அவர்களை நடுத்தர வர்க்கமென்று பிரச்சாரம் செய்வதன் மூலம் அவர்களை மற்ற தொழிலாளர்களிடமிருந்து பிரித்து தன்மைப்படுத்தப்பட்டு கடுமையாக சுரண்டப்படுகிறார்கள்.

இன்னொரு பக்கம் அமைப்பு சாரா தொழிலாளர்களுடைய சூழ்நிலையும் வேலையும் மிகவும் பரிதாபகரமாக உள்ளது. அவர்களுக்கு நியாயமான ஊதியமோ, மருத்துவ வசதிகளோ, பிற சமூகப் பாதுகாப்போ கிடைப்பதில்லை. அவர்களுக்காக அமைக்கப்பட்ட நல வாரியங்கள் உண்மையில் செயல்படுவதில்லை.

இவ்வாறு அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுடைய உரிமைகளும் தாக்கப்படுகின்றன. தொழிலாளர் நலத் துறையும், நீதி மன்றங்களும், காவல்துறையும் முதலாளிகளுடைய இந்தத் தாக்குதல்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

ஏகபோக முதலாளிகளுக்காக இலட்சக்கணக்கான கோடி ரூபாய் வரிகளை தள்ளுபடி செய்யும் இந்திய அரசாங்கம், 99 சதவிகிதத்திற்கும் மேலாக உள்ள மக்களுக்கு மானியங்களை வெட்டிக்குறைத்து, விலைவாசியை உயர்த்தி வருகிறது. இந்த ஆண்டு மக்களுடைய வருமான வரியும், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீதான மறைமுக வரிகளும் சென்ற ஆண்டைக் காட்டிலும் 1,25,000 கோடி ரூபாய் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சில்லறை வர்த்தகம், காப்பீடு - வங்கித் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது, தொழிலாளர்களுடைய ஓய்வூதிய நிதியை முதலாளித்துவ பங்கு சந்தையில் சூதாட்டங்களில் ஈடுபடுத்துவது, டாட்டாக்களும், அம்பானிகளும் தனியார் வங்கிகளைத் துவக்க உதவுவது போன்ற திட்டங்களை நம்முடைய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியா, மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்த அரசாங்கம் வேலை செய்து வருகிறது. இவையனைத்தும் நம்முடைய வரிப்பணமாகும். இவற்றை ஏகபோக முதலாளிகளுக்கு அரசாங்கம் வாரி வழங்கி வருகிறது.

அண்மையில் நடைபெற்ற அலைக் கற்றை ஒதுக்கீடு, நிலக்கரி போன்ற ஊழல்கள் மூலமாக பல இலட்சம் கோடி ரூபாயை இந்தியப் பெரு முதலாளிகளும், அவர்களுடைய அரசியல் கட்சிகளும் சுருட்டியிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். இந்த ஊழல்களில் கட்சி வேறுபாடின்றி எல்லா முதலாளித்துவக் கட்சிகளும் பங்கேற்றிருக்கின்றன, பொது மக்களுடைய பணத்தைச் சுருட்டியிருக்கிறார்கள். கொள்ளையடித்ததில் பெரும் பங்கு உனக்கா எனக்கா என்று போட்டியிட்டுக் கொள்ளும் இந்தக் கட்சிகள், ஊழலை ஒழிப்பதற்காகவே தாங்கள் போராடி வருவதாக வெட்கமின்றி மக்களிடம் பச்சைப் பொய்யைக் கூறுகிறார்கள். முதலாளித்துவம் நீடிக்கும் வரை, ஊழலை ஒழிக்க முடியாதென்ற உண்மையை கம்யூனிஸ்டு கெதர் கட்சி எப்போதுமே விளக்கி வந்திருக்கிறது. ஊழலை ஒழிப்பதாக நாடகமாடும் இந்தக் கட்சிகள் அதன் மூல ஆதாரமான முதலாளித்துவத்தை ஒழிக்க ஏன் போராடுவதில்லை?

முதலாளித்துவச் சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும், கொள்ளைக்கும், வாழ்வுரிமை பறிக்கப்படுவதற்கும் முடிவு கட்ட வேண்டுமானால், சமுதாயத்தில் பெரும்பான்மையாக இருக்கும் தொழிலாளர்கள் நாமே ஆட்சியதிகாரத்திற்கு வர வேண்டும். இன்றைய அரசியல் வழிமுறை ஏகபோக முதலாளிகளும் அவர்களுடைய கட்சிகளும் ஆட்சியில் இருப்பதற்காகவும், மக்களைச் சுரண்டுவதற்காகவும் உருவாக்கப்பட்டவையாகும். நாம் தொழிலாளர்கள், விவசாயிகள் ஆட்சியதிகாரத்திற்கு வருவதற்கு ஏற்ற சீர்திருத்தங்களைக் கோரி அவற்றிற்காகப் போராடவேண்டும்.

காங்கிரசும், பாஜகவும் தொழிலாளர் விரோத, தேச விரோத சக்திகள் என்பது கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் தெள்ளத் தெளிவாக ஆக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை என்ற பெயரிலோ, வேறு எந்த சாக்குபோக்கு சொல்லியோ இந்த சக்திகளை மீண்டும் முன்னிறுத்துவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அதே நேரத்தில் மூன்றாவது முன்னணி என்ற பெயரில் பிராந்திய முதலாளி கட்சிகளின் கூட்டணியும் தொழிலாளி வர்க்கத்தின் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் முடிவு கட்டாது. எனவே நம்முடைய கோரிக்கைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் கொண்ட தொழிலாளர்கள், விவசாயிகளுடைய பிரதிநிதிகளை வருகின்ற தேர்தலில் நாம் முன்னிருத்த வேண்டும்.

முதலில் ஓரணியாக இருந்த ஏஐடியுசி தொழிற் சங்கத்தை சிபிஎம் உருவாக்கிய சிஐடியு தொழிற் சங்கம் உடைத்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு தொழிற் சங்கங்கள் துவக்கப்பட்டு தொழிலாளர்களுடைய ஒற்றுமை சிதறடிக்கப்பட்டுள்ளது. இது முதலாளி வர்க்கத்திற்கும் மிகவும் ஏற்ற சூழ்நிலையாகும். நாம் தொழிலாளி வர்க்கத்தில் நிலவும் பிளவுகளுக்கு முடிவு கட்ட வேண்டும். தொழிலாளர்களிடையே பரந்துபட்ட ஒற்றுமையை நாம் கட்ட வேண்டும். அதன் மூலம் தொழிலாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற வழி வகை செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

தோழர் வில்சன் அவர்கள் பேசுகையில், இந்தியாவில் கம்யூனிச இயக்கத்தின் வரலாறு பற்றிக் குறிப்பிட்டார். 1925-இல் நிறுவப்பட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் பல்வேறு போக்குகள் இருந்து வந்தன. கட்சிக்குள் செயல்பட்ட குறுங்குழுக்கள் பின்னர் 1960-களில் கட்சியை உடைத்து சிபிஐ மார்க்சிஸ்டு கட்சியை உருவாக்கினர். பின்னர் சிபிஎம்-னுடைய குட்டு வெளிப்பட்டவுடன் அதிலிருந்து தோழர்கள் வெளியேறி சிபிஐ (எம்.எல்)-ஐ உருவாக்கினர். மாவோ சிந்தனைகளின் பாதிப்பு காரணமாக சிபிஐ (எம்.எல்) கட்சியும் பின்னர் சிதறுண்டு பல்வேறு குழுக்களாகின. இந்த எல்லா நிகழ்வுகளும் இந்திய முதலாளி வர்க்கத்திற்கு பெருமகிழ்ச்சியை உருவாக்கின. தொழிலாளி வர்க்கம், ஒன்றுபட்ட தலைமையின்றி முதலாளித்துவத்தால் கடுமையாகத் தாக்கப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் இந்திய கம்யூனிஸ்டுகளை ஓரணியில் இணைக்க வேண்டுமென்ற நோக்கத்தோடும், அவர்களைப் புரட்சிக்கு வழிநடத்த வேண்டும் என்ற சிந்தனையோடும், புரட்சிகர கம்யூனிஸ்டுகள் ஒன்று கூடினர். இந்திய சுதந்திர வரலாற்றில் வீரமான போராட்டம் நடத்திய இந்திய கெதர் கட்சியின் நினைவாக, இந்திய கம்யூனிஸ்டுகள், இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி என்ற பெயரில் கம்யூனிச இயக்கத்தை புரட்சிகர பாதையில் ஒன்றுதிரட்டும் பணியை மேற் கொண்டனர்.

1984-இல் இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் 3000-க்கும் மேற்பட்ட அப்பாவி சீக்கிய மக்கள் தில்லியிலும், நாட்டின் பிற இடங்களிலும் காங்கிரசு கட்சி குண்டர்களாலும், படுகொலை செய்யப்பட்டனர். இந்த வன்முறைக்கும், வகுப்புவாத படுகொலைகளுக்கும் காரணமானவர்களை, சுட்டிக்காட்டி அவர்களைத் தண்டிக்க வேண்டுமென இந்திய மக்களும் முற்போக்கான இயக்கங்களும் கோரி போராடியிருந்துங்கூட, இந்திய அரசாங்கம் அவர்களை கண்டுபிடித்து தண்டிக்கவில்லை. இதன் காரணமாகவே, பின்னர் பாபரி மசூதி வன்முறையையும், குஜராத் வன்முறையையும் பாஜக போன்ற சமூக விரோத கட்சிகள் எவ்வித அச்சமுமின்றி நடத்தியிருக்கின்றனர். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், இந்திய அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்த்தும், ஆளும் வர்க்கத்தின் வகுப்புவாத வன்முறைகளை எதிர்த்தும் கம்யூனிஸ்டு கெதர் கட்சி தொடர்ந்து போராடி வந்திருக்கிறது.

1857-இல், ஆங்கிலேய காலனியவாதிகளை எதிர்த்து வீரமிக்க விடுதலைப் போரை நமது இந்திய மக்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். அந்தப் போரில் இந்தியப் போராளிகள், நாமே இந்தியா, நாமே இதன் மன்னர்கள் என்ற முழக்கத்தோடு ஆங்கிலேயரைத் தூக்கியெறியப் போராடினர். இன்றும் இந்தியாவில் மக்கள் மீது வன்முறையும், சுரண்டலும் ஒடுக்குமுறையும் நீடிக்கிறது. இன்று இந்திய மக்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் - நாமே இந்தியா நாமே அதன் மன்னர்கள் என்ற முழக்கத்தோடு, போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னெடுத்துச் செல்கிறது. நமது கட்சியைக் கட்டுவதன் மூலம் இந்திய மக்களுடைய விடுதலைப் போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டுமென தோழர் வில்சன் கேட்டுக் கொண்டார்.

இந்தியப் புரட்சிக்கும், தொழிலாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் முழுமூச்சாக செயல்படுவதென்ற உறுதியோடு மேதினக் கூட்டம் நிறைவு பெற்றது.