2013 பிப்ரவரி 20-21 அனைத்திந்திய பொது வேலை நிறுத்தம்

இந்தியத் தொழிலாளி வர்க்கம், தொழிற் சங்கங்களின் தலைமையின் கீழ் 2013 பிப்ரவரி 20-21 பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள். விலைவாசி உயர்வுக்கு முடிவு கட்டவும், குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்தவும், ஒப்பந்தத் தொழில் முறைக்கு எதிராகவும், பொதுச் சொத்துக்கள் தனியார்மயப்படுத்தப்படுவதற்கு எதிராகவும் இந்த வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது.

aituc_strike_450

வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாதென ஐமுகூ அரசாங்கமும் உச்ச நீதி மன்றமும் கொடுத்த எச்சரிக்கைகளையும் புறக்கணித்துவிட்டு, பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளையும் சேர்ந்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஆர்வத்தோடு பங்கேற்றனர். ஊதிய வெட்டு, ஒழுங்கு நடவடிக்கை, விடுப்பு மறுப்பு போன்ற அச்சுறுத்தல்களால் தொழிலாளர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை.

இந்த வேலை நிறுத்தத்தில் ஒரு வரலாற்று ஒற்றுமையைத் தொழிலாளி வர்க்கம் எடுத்துக் காட்டியிருக்கிறது. விலைவாசி உயர்வினால் நசுக்கப்படும் மக்களுக்காக தொழிலாளி வர்க்கம் வாதாடியது. நாட்டின் நகரங்களிலும், மாவட்டங்களிலும் உள்ள தொழிற் பேட்டைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றிணைந்து, பேரணிகளையும் ஆர்பாட்டங்களையும் நடத்தினர். "இன்குலாப் ஜிந்தாபாத்! முதலாளித்துவம் ஒழிக! மோசமான நம்முடைய நிலைமைகளைச் சகித்துக் கொண்டு நாம் சும்மா இருக்க முடியாது! நாட்டின் ஆட்சியாளர்களாக தொழிலாளர்கள் நாம் மாறுவோம்! தனியாருடைய இலாபத்திற்காக பொதுச் சொத்துக்களை தாரை வார்க்காதே! விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்து! அனைவருக்கும் வேலைப் பாதுகாப்பைக் கொடு!" போன்ற முழக்கங்கள் மூலம் அரசாங்கத்திடம் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சிறிய - பெரிய சங்கங்கள், அல்லது அவர்களுடைய கொடிகளின் வண்ணங்கள் போன்ற வேறுபாடுகளைக் கடந்த அளவில் பரந்துபட்ட ஒற்றுமையோடு தொழிலாளர்கள் பேரணிகளிலும், ஆர்பாட்டங்களிலும் பங்கேற்றனர். தொழிலாளர்களுடைய பேரணிகள் சென்ற வழிகளில் உள்ள தொழிலாளர்களெல்லாம் மிகுந்த ஆர்வத்தோடு முழக்கமெழுப்பினர். பேரணியின் வழியெங்கும் கூடியிருந்த தொழிலாளர்கள், வெறும் பார்வையாளர்களாக இருந்துவிடவில்லை. அவர்களும் அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, தேச விரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் சேர்ந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலை நுழைவாயில்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. நாடெங்கிலும் நடைபெற்ற பல்வேறு பேரணிகளிலும், ஆர்பாட்டங்களிலும் பேசிய தொழிலாளி வர்க்கத் தலைவர்கள், வருகின்ற நாட்களில் ஆர்பாட்டங்கள் மேலும் தீவிரப்படுத்தப்படுமென உறுதியளித்தனர்.

வேலை நிறுத்தத்தினால் ஏற்படும் இழப்பு பற்றி முதலாளித்துவ நிறுவனங்களின் புகாருக்கு பதிலளித்த தொழிலாளி வர்க்கத் தலைவர்கள், "தொழிலாளி வர்க்கம் தான் இழப்பை சுமக்கிறது, முதலாளிகள் அல்ல!" "நாங்கள் தான் இந்த நாட்டினுடைய செல்வத்தை உருவாக்குகிறோம், முதலாளிகள் அல்ல!" "இலாபத்தை மட்டும் திருடிக்கொள்பவர்கள் தான் முதலாளிகள்!" என்பதைச் சுட்டிக் காட்டினர்.

வங்கி, காப்பீடு, வரி, தொலை தொடர்பு, அஞ்சல் ஆகிய துறைகள், பாதுகாப்பு நிறுவனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை மற்றும் சுரங்கத் துறைகளில் வேலைகள் முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டன.

வேலை நிறுத்தத்தின் போது இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பிஎச்இஎல், பிஇஎம்எல், இந்தியன் டெலிபோன் இன்டஸ்டிரிஸ், எச்எம்டி மற்றும் பிற பெரிய இஞ்சினிரிங் தொழிற்சாலைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பெரும் நிறுவனத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். கிண்டி, அம்பத்தூர், மறைமலை நகர் மற்றும் திருப்பெரும்புதூர் பகுதிகளில் பெரும் பேரணிகள் நடத்தப்பட்டன. மத்திய அரசின் அலுவலகங்களில் வேலை முழுமையாக நிறுத்தப்பட்டது. மாநிலத்தில் உள்ள துணி ஆலைகள், இஞ்சினிரிங் தொழிற்சாலைகள், வேளாண்மைத் துறை ஆகியவற்றில் வேலைநிறுத்தம் பாதிப்பை உருவாக்கியது. ஆசிரியர்களும், கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர் அல்லாத பிற பணியாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். திருப்பூரில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் இடையிலான போக்குவரத்து வாகனங்கள் ஓடவில்லை. நாகர்கோவிலிலும், தெக்காடியிலும், மேல்புறத்திலும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.

மதுரை நகரில் பிஎஸ்என்எல் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தினால் தகவல் தொடர்பு வேலைகள் முழுமையாக முடங்கின. வருவாய்த் துறை மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர். தொழிலாளர்களுடைய வேலை நிறுத்தப் பேரணி, கூடல் அழகர் பெருமாள் கோவிலில் துவங்கி வடக்கு மாசி வீதி மேற்கு மாசி வீதிக்குச் சென்று, சந்திப்பில் ஆர்பாட்டம் நடத்தினர். மதுரை இரயில் நிலையம் முன்னர் தொழிலாளர்கள் தர்ணாவில் பங்கேற்றனர். வங்கிகளைச் சேர்ந்த 4000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். கேனரா வங்கி வட்டார அலுவலகத்தின் முன்னர் 500-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் திரண்டு ஆர்பாட்டம் நடத்தினர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலிருந்தும் மதுரை பிரிவிலிருந்தும் ஏறத்தாழ 800 உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஊழியர்கள் யாரும் வேலைக்கு வராத காரணத்தால், வங்கி வேலைகள் முழுமையாக முடங்கின.

கோவையில் தொழிற்சங்கங்கள் காந்திபுரத்தில் ஆர்பாட்டம் நடத்தினர். கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

மும்பையின் இரு முக்கியத் துறைமுகங்களும் செயல்படவில்லை. மருத்துவமனைகள் சுகாதார நிலையங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்குத் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு உடையணிந்து வேலைகளில் ஈடுபட்டனர்.

பல்வேறு மாநிலங்களிலும் எல்லா நிலைகளிலும் உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் கடைகளும் சந்தைகளும் மூடப்பட்டிருந்தன.

உத்திரப் பிரதேசம், இராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மற்றும் தில்லியைச் சேர்ந்த தொழிலாளர்கள் தீரத்தோடு வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

தில்லி, பெங்களூரு மற்றும் கட்டாக்கில் ஆட்டோக்களும் வாடகை வண்டிகளும் சேவைகளை நிறுத்தினர். உத்திரப் பிரதேசத்திலும், அரியானாவிலும் பொதுப் போக்குவரத்து சேவைகளை நிறுத்திவிட்டனர்.

தில்லி மற்றும், குர்கான், நொய்டா, காசியாபாத், சகிலாபாத், மானேசர், தாருயீடா, பிவாடி போன்ற இடங்களில் உள்ள தொழிற்பேட்டைகளில் உள்ள உற்பத்தி ஆலைகள் முழுமையாக மூடப்பட்டிருந்தன. அண்மைக் காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்திருக்கும் குர்கானில் உள்ள வாகனத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்குச் செல்லவில்லை. மாருதி சுசுகி இந்தியா, சுசுகி பவர் டிரென், சுசுகி பைக்ஸ், ஈரோ மோட்டார் நிறுவனம், ஓண்டா மோட்டார் சைகிள், ஸ்கூட்டர் இந்தியா லிமி, ரிகோ ஆட்டோ, முன்ஜால்சோவா, சன்பீம், பஜாஜ் ஆட்டோ, சீனியர் இந்தியா, ரான்பாக்சி, ஈரோ மோட்டார்ஸ் மற்றும் இவை போன்ற பெரிய இந்திய மற்றும் பன்னாட்டு தொழிற்சாலை நுழைவாயில்கள் பூட்டி வைக்கப்பட்டன.

வேலை நிறுத்தத்தை உடைக்க முதலாளி வர்க்கம் பல சதித் திட்டங்களை முயன்றனர். ஆனால் அவர்கள் அதில் தோல்வியுற்றனர். தொழிலாளர்களை அச்சுறுத்துவதோடு, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜூன் காட்ஜே மற்றும் சரத் பவார் போன்ற அவர்களுடைய நம்பிக்கைக்குறிய தலைவர்களுடைய அறிவுரையின் அடிப்படையில் தொழிற் சங்கத் தலைவர்களோடு சமரச முயற்சிகளை மேற்கொண்டனர். பல்லாண்டுகளாக கொடுக்கப்பட்டுவரும் வெற்று வாக்குறுதிகளை புறக்கணிப்பதில் தொழிற் சங்கத் தலைவர்கள் ஒன்றுபட்டிருந்ததோடு, வேலை நிறுத்தத்திற்குத் தங்களுடைய துணிவான தலைமையின் மூலம் சரியான பதிலடி கொடுத்திருந்தனர்.

வேலை நிறுத்தத்தை முறியடிக்க அரசாங்கம் கடுமையாக முயன்றனர். அது பெருமளவில் காவல் துறையினரை காவலில் ஈடுபடுத்தினர். அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். போராட்டத்தில் பங்கேற்க இருந்த தொழிலாளர்களைத் தடுப்புக் கைது நடவடிக்கைகளில் சிறையிலிட்டனர். தொழிலாளர் தலைவர்களைக் கைது செய்தனர். காவல் துறையினர் தங்களுடைய கையாட்களைப் பயன்படுத்தி தொழிலாளர்களுடைய கோபத்தைத் தூண்டவும், வேலை நிறுத்தத்தைக் கலைக்கவும் முயன்றனர். தொழிலாளர்களை அவமதிக்க அவர்கள் பல வழிகளிலும் முயன்றனர். ஆனால் இந்த முயற்சிகள் வெற்றிபெற தொழிற் சங்க கூட்டுத் தலைமையானது அனுமதிக்கவில்லை. நொய்டாவில் சமூக விரோத சக்திகளைக் கொண்டு கலவரத்தை உருவாக்கவும், தொழிலாளர்களுடைய அமைதியான ஆர்பாட்டங்களை நசுக்கவும் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. தொழிலாளர்களுடைய பேரணிகள் மீது காவல்துறையினர் பல இடங்களிலும் தடியடி நடத்தினர். நாடெங்கிலும் தொழிலாளி வர்க்கம் தானொரு கட்டுப்பாடான, விழிப்புணர்வு கொண்ட ஒரு சக்தியென்பதை இந்த இரண்டு நாட்களில் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.

இந்த வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வதற்கு உள்ளூர் மட்டத்திலிருந்து மத்திய மட்டம் வரை தொழிலாளர் அமைப்புக்கள் ஒற்றுமையோடு செயல்பட்டன. தொழிற் சங்கங்களுக்கு இடையிலும், அவர்களுடைய கூட்டமைப்புக்களுக்கு இடையிலும், உள்ளூர், வட்டார, மாநில மற்றும் மத்திய மட்டத்திலும் மின்சாரம், தண்ணீர், நகராட்சி சேவைகள், மாநில மற்றும் தேசிய போக்குவரத்து மற்றும் பிற சேவைகள் என தொழில் துறைகளைக் கடந்த அளவிலும் கூட்டுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தொழிற் பேட்டைகளில் வேலை துவங்கும் நேரங்களிலும், முடியும் நேரங்களிலும் பேரணிகள் நடத்தப்பட்டன. தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் பங்கேற்கக் கோரி, துண்டறிக்கைகளை கூட்டாகவும், தொழிலாளர்கள் அமைப்புக்கள் மற்றும் தொழிற் சங்கங்கள் மூலமும் வினியோகிக்கப்பட்டன. தெருமுனைக் கூட்டங்களும், ஆர்பாட்டங்களும், பொதுக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.

நமது நாட்டு முதலாளிகள் உலக அரங்கில் தங்களை உயர்த்திக் கொள்வதற்காக, மக்களைச் சுரண்டுவதையும், அவர்களை ஓட்டாண்டிகளாக ஆக்கி வருவதையும், தொழிலாளிகள் எதிர்க்க வேண்டும். முதலாளிகளின் இந்த பேராசையை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் எல்லா தேச விரோத, மக்கள் விரோத முடிவுகளையும் அவர்கள் புறக்கணிக்க வேண்டும்.

தொழிலாளி வர்க்கம் தன்னுடைய மோசமான நிலைமைகளிலிருந்து அதனுடைய கவனத்தைத் திசை திருப்ப ஒரு பயங்கரவாத சூழ்நிலையை உருவாக்க முதலாளிகளுடைய அரசாங்கம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியையும் நாம் முறியடிக்க வேண்டும். இந்த வஞ்சக நடவடிக்கைகளை நாம் மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கிக் காட்ட வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை உடைப்பதற்கு எடுக்கப்படும் எல்லா முயற்சிகளையும் எதிர்த்து நாம் போராட வேண்டும்.

தொழிலாளி வர்க்கம் அரசாங்கம் செயல்படுத்த மறுத்துவரும் தங்களுடைய இன்றைய கோரிக்கைகளை வெல்லுவதற்கான போராட்டத்தோடு தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாதென இன்றைய காலம் கோருகிறது. எதிர்காலத்தில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான திசையில் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

அரியானா மாநில ஏஐடியுசி-யின் பொருளாளரும், அரியானா ரோட்வேஸ் நிறுவனத்தின் ஒரு தொழிலாளியுமாகிய நரேந்திர சிங் பிப்ரவரி 20-அன்று அம்பாலா பேருந்து நிலையத்தில் ஆர்பாட்டத்தில் பங்கேற்கும் போது ஒரு தூணுக்கும் பேருந்திற்கும் இடையே சிக்கி நசுங்கி இறந்ததற்கு, அவருடைய சக தொழிலாளர்களுக்கும், குடும்பத்தினருக்கும் தொழிலாளர் ஒற்றுமைக் குரல் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்ததற்கு, ஆல் இந்தியா டிரேட் யூனியன் காங்கிரசு, இந்த் மஸ்தூர் சபா, சென்டர் பார் இந்தியன் டிரேட் யூனியன், பாரதிய மஸ்தூர் சங், இந்தியன் நேஷ்னல் டிரேட் யூனியன் காங்கிரசு, மஸ்தூர் ஏக்தா கமிட்டி, தொழிலாளர் ஒற்றுமை இயக்கம், காம்கார் ஏக்தா சள்வள், ஆல் இந்தியா சென்டிரல் கவுன்சில் ஆப் டிரேட் யூனியன்ஸ், மற்றும் பிற கூட்டமைப்புக்களையும், சம்மேளனங்களையும் தொழிலாளர் ஒற்றுமை குரல் வாழ்த்துகிறது.

ஒன்றுபட்டு இருப்பதற்காகவும், இந்த முதலாளித்துவ சுரண்டல் மற்றும் கொள்ளை அமைப்பினால் இல்லாமல் தொழிலாளி வர்க்கத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென முயன்று வருவதற்காகவும், எல்லா தொழிற்சங்கங்களையும் தொழிலாளர் ஒற்றுமை குரல் வணங்குகிறது.