இந்திய வங்கித் துறையை தனியாரமயப்படுத்த வேண்டுமென மிகப் பெரிய இந்திய ஏகபோகங்களும், சர்வதேச வங்கிகளும் தொடர்ந்து கேட்டு வருகின்றன. வங்கித் துறையானது இந்திய ஏகபோகங்களுக்கும் அயல்நாட்டு வங்கிகளுக்கும் படிப்படியாக திறந்து விடப்பட்டு வருகிறது. எனினும், தொழிலாளி வகுப்பினரின் உறுதியான ஒன்றுபட்ட எதிர்ப்பின் காரணத்தாலும், குறிப்பாக வங்கி ஊழியர்களின் எதிர்ப்பு காரணமாக அரசுக்குச் சொந்தமான வங்கிகள் தனியார்மயப்படுத்துவது இது வரை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அனைவருக்கும் வளமையையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் பொருளாதாரத்தைத் திருத்தியமைப்பதை உறுதி செய்வதற்கான ஒரு அவசியமான நிபந்தனையானது, வங்கித் துறையை தேசியமயமாக்குவதும் அதை சமூகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதும் ஆகும்.

இன்று இந்தியாவில் வங்கியின் மிகப் பெரிய பிரிவு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஆனால் அது சமூகக் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை. ஏனெனில், அரசே மிகப் பெரிய ஏகபோகங்களைத் தலைமையாகக் கொண்ட முதலாளி வகுப்பினரின் அரசாக இருக்கிறது. இந்த ஏகபோகங்களின் நலன்களே அரசின் கொள்கைகளையும், அரசின் கைவசம் உள்ள வங்கி நிறுவனங்களின் செயல்பாட்டையும் தீர்மானிக்கின்றன.

நிதி மூலதனத்திற்கு அதிகபட்ச இலாபத்தை உறுதி செய்வதாக இருக்கும் வங்கிகளின் போக்கை உழைக்கும் மக்களுடைய தொடர்ந்து அதிகரித்துவரும் தேவைகளை நிறைவேற்றக் கூடியதாக மாற்றியமைக்க, தனியார்மயத் திட்டத்தை தடுத்து நிறுத்தவும், அதைப் பின்வாங்கச் செய்வதும் போராட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.

தொழிலாளர் ஒற்றுமைக் குரலின் ஏப்ரல் 2015 இதழில் வெளியிட்ட நேர்முகத்தில் கூறியிருப்பது போலவே, மத்திய அரசு "அறிவுச் சங்கமம்" என்ற பெயரில் உயர் வங்கி அதிகாரிகளின் இரு நாள் கருத்தரங்கு பூனாவில் சனவரி 2015, நடைபெற்றது. அதில் வங்கித் துறையை மீள்கட்டமைப்பு செய்ய பின்வரும் நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

1. வங்கி முதலீட்டு நிறுவனம் என்பதை உருவாக்க வேண்டும். தற்போது இயங்கிவரும் 27 பொதுத் துறை வங்கிகளில் அரசாங்கம் கொண்டுள்ள தன்னுடைய பங்குகளை இந்த வங்கி முதலீட்டு நிறுவனத்திற்கு மாற்றிக் கொடுக்கும்.

2. பொதுத் துறை வங்கிகளுடைய பங்குகளை விற்பதன் மூலம், மூலதனத்தை திரட்ட வேண்டும். இப்படி 2018-க்குள் 2.60 இலட்சம் கோடிகளைத் திரட்ட வேண்டுமென இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

3. 27 பொதுத் துறை வங்கிகளை ஒருங்கிணைத்து 6 அல்லது 7 வங்கிகளாக ஆக்குவது.

4. நபார்டு (வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி), ஐடிபிஐ (இந்திய தொழில் வளர்ச்சி வங்கி) ஆகியவை உட்பட, எல்லா வங்கிகளையும் முழுவதுமாக தனியார்மயப்படுத்துவது.

மேற் கூறப்பட்ட திட்டங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து, ஆல் இந்தியா வங்கி ஊழியர்கள் அசோசியேசனுடைய (AIBEA) அனைத்திந்திய துணைத் தலைவர் தோழர் விஷ்வாஸ் உத்தாகியின் நேர்முகத்தைக் கீழே வெளியிடுகிறோம்.

தொழிலாளர் ஒற்றுமைக் குரல் : பல்வேறு வேலை நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்குப் பின்னர் ஒரு வெற்றிகரமான ஊதிய உயர்வை பெற்றதற்காக உங்களையும், உங்களுடைய தொழிற் சங்கம் ஏஐபிஇஏ (AIBEA) வையும், வங்கி ஊழியர்களுடைய சங்கங்களின் கூட்டமைப்பையும் (UFBU) முதலில் நாங்கள் பாராட்ட விரும்புகிறோம்.

தோழர் விஷ்வாஸ் உத்தோகி : நன்றி, ஒன்றுபட்டுப் போராடினால், எங்களுடைய உரிமைகளை நாங்கள் வெற்றிகரமாகப் பாதுகாத்துக் கொள்ள முடியுமென வங்கி ஊழியர்கள் காட்டியிருக்கிறார்கள்.

தொ.ஒ.கு : மேற் கூறப்பட்ட 4 நடவடிக்கைகள் குறித்து கடந்த 10 மாதங்களில் அரசாங்கம் என்ன செய்திருக்கிறதென தயவு செய்து விளக்கிக் கூறவும்.

விஉ : முதல் நடவடிக்கை ஒரு வங்கி முதலீட்டு நிறுவனத்தை அமைப்பை உருவாக்குவதாகும். இதற்காக, ஒன்றிணைத்தல், கூட்டுதல் ஆகியவற்றைத் தொடங்குவதற்கு ஆகஸ்டு 14, 2015 இல் நிதித் துறை அமைச்சகம், ஒரு வங்கி வாரியக் குழுவை நியமித்திருக்கிறது. பொதுத் துறை வங்கிகளின் உடமை அரசாங்கத்திடம் இருந்தாலும், அதற்கு இந்த உயர் மட்டக் குழுவில் ஒரு பிரதிநிதி மட்டுமே உள்ளார். அது நிதி அமைச்சகத்தின், நிதி சேவைத் துறையின் செயலாளர் ஆவார். மீதியுள்ள 5 உறுப்பினர்கள், முன்னாள் வங்கித் தலைவர்களும், இரு வல்லுநர்களும் ஆவர். குழுவின் தலைவர், வங்கியின் முன்னாள் அதிகாரி ஆவார்.

இந்த வாரியம், பொதுத் துறை வங்கிகளை மேற்பார்வையிடும் பங்கினை வகிக்கும். இது வரை இந்தப் பொறுப்பை அரசாங்கம் செய்து வந்தது. பொதுத் துறை வங்கிகளுடைய உயர்மட்ட மேலாண்மையில் இருப்பவர்களைத் தீர்மானிக்கும் பொறுப்பு இந்தக் குழுவினுடையதாகும். தற்போது பொதுத் துறை வங்கிகளின் உயர்மட்ட அதிகாரிகளை, ரிசர்வ் வங்கி ஆளுநருடையை அறிவுரையையும் கொண்டு மத்திய அரசின் நியமனக் குழுவால் தீர்மானிக்கப்படுகிறது. இதிலிருந்து புதிய முறை மிகவும் வேறுபட்டதாகும்.

ஒருங்கிணைப்பு போன்ற முக்கியத் தீர்மானங்களை எடுப்பதில், இந்த வாரியம் பொதுத் துறை வங்கிகளுக்கு வழிகாட்டும். புதிய திட்டங்களை உருவாக்குவதிலும், புதிய நிதி வழிமுறைகள் மற்றும் கருவிகள் மூலம் மூலதனத்தை உருவாக்குவதிலும் அது உதவும்.

இவையனைத்தும், வங்கிகளை தனியார்மயப்படுத்தும் ஒட்டு மொத்த நோக்கத்தோடு முழுவதுமாக ஒட்டி இருக்கிறது. அவை அதிகபட்ச இலாபத்தை உருவாக்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளாகவும், சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் நலிந்த பிரிவினருக்கு குறைந்த வட்டியில் கடனுதவி அளிப்பது ஆகிய வரையறுக்கப்பட்ட நோக்கங்களைப் புறக்கணிப்பதாகவும் இருக்கின்றன.

எடுத்துக் காட்டாக, சிறிய தனியார் வங்கியாகிய லக்ஷ்மி விலாஸ் வங்கியினுடைய தலைவரை பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இரண்டாவது திட்டமாகிய, பொதுத் துறை வங்கிகளுடைய பங்குகளை விற்பதன் மூலம், மூலதனத்தை உருவாக்கும் திட்டத்தைப் பொறுத்தவரை, பங்குச் சந்தையில் நிலவுகின்ற இருண்ட சூழ்நிலை கருதி பங்கு விற்பனையை அரசாங்கம் உடனடியாக அறிவிக்கவில்லை. அதிக முதலீட்டுத் தேவைகளை சந்திப்பதற்காக, அது ரூ 25,000 கோடி திட்ட ஒதுக்கீட்டு ஆதரவை அளித்துள்ளதோடு அடுத்த ஆண்டும் இதே தொகை கொடுக்கப்படும் என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில் வங்கித் துறையில் 100 சதவிகித அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நிலை எடுத்திருக்கிறது. இதுவும் அரசாங்கத்திற்கு பிரச்சனையை உருவாக்கியிருக்கிறது. ஆனால் உடனடியாகவோ, சிறிது தாமதித்தோ அவர்கள் பங்குகளை விற்கப் போகிறார்கள்.

மூன்றாவது நடவடிக்கையான, பொதுத் துறை வங்கிகளை ஒன்றிணைப்பதைப் பொறுத்தவரை, நிதித் துறை அமைச்சகம் இந்த வேலையை மேற் கொண்டு எடுத்துச் செல்வதற்காக ஒரு குழுவை நியமித்திருக்கிறது.

கடைசியாக வங்கிகளை முழுவதுமாக தனியார்மயப்படுத்துவது மேற்கூறிய மூன்று திட்டங்களும் நிறைவேறிய பின்னர் நடைபெறும்.

ஆனால் மத்திய அரசாங்கத்தின் தனியார்மயப்படுத்தும் திட்டங்களை எதிர்ப்பதில் ஏஐபிஇஏ நாங்கள் உறுதியாக இருக்கிறோம். வங்கி ஊழியர்களுடைய இந்த நியாயமான போராட்டங்களுக்கு ஆதரவளிக்குமாறு எல்லா மத்திய தொழிற் சங்கங்களையும், தொழிலாளி வர்க்க அமைப்புக்களையும், சனநாயக உணர்வு கொண்ட மக்களையும், அரசியல் கட்சிகளையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். நம்முடைய வங்கித் துறையானது பெரும்பாலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததால் தான் 2008-09 இல் உலக நிதி அமைப்பை உலுக்கிய மோசமான பொருளாதார நெருக்கடியால் இந்தியா குறைவான அளவே பாதிப்படைந்தது.

தொ.ஒ.கு : தனியார்மயத்தை எதிர்த்தும், உங்களுடைய உரிமைகளைப் பாதுகாத்தும் வங்கி ஊழியர்கள் மேற் கொண்டுவரும் நியாயமான, வீரமான போராட்டங்களைத் தொழிலாளர் ஒற்றுமைக் குரல் முழுமையாக ஆதரிக்கிறது. நன்றி.