நவம்பர் 22 அன்று பாராளுமன்ற குளிர்காலத் தொடர் துவங்கியிருக்கிறது. அண்மையில் அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பல்வேறு புதிய மசோதாக்கள், பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு முன்வைக்கப்படும்.

காப்பீடுத் துறையிலும், ஓய்வூதிய நிதியிலும் அந்நிய முதலீடு நுழைவது பற்றிய இரண்டு மசோதாக்களும் கொண்டு வரப்பட உள்ளன. இது தொழிலாளி வர்க்கமும், நடுத்தட்டு மக்களுடைய எல்லாக் குடும்பங்களும் தங்களுடைய கடுமையான உழைப்பின் மூலம் சம்பாதித்த சேமிப்புக்கள், முதலாளித்துவ இலாப வேட்டைக்காரர்களுக்கும், சூதாட்டக்காரர்களுக்கும் திறந்துவிடக்கூடிய அச்சுறுத்தல் இருப்பதால் இவர்களுக்கு கவலையளிப்பதாக இருக்கிறது. மேலும், நிலம் கையகப்படுத்துவது குறித்தும், மறுவாழ்வளிப்பது குறித்தும் ஒரு மசோதா வர இருக்கிறது. இது விவசாயிகளுக்கும், பிற நிலம் வைத்திருப்பவர்களுக்கும், பழங்குடி சமுதாயத்தினருக்கும் முக்கியமானதாகும். நிலத்தைக் கையகப்படுத்தும் இந்த மசோதா 2013பிப்ரவரி-மார்ச் வரவு செலவு கூட்டத்தொடருக்கு தள்ளி வைக்கப்படலாமென கூறப்படுகிறது.

பல நிறுவன பொருள் சில்லறை வணிகத்தை அந்நிய நேரடி முதலீட்டிற்குத் திறந்து விடுவது பற்றிய பிரச்சனை பற்றிய ஒரு கசப்பான போராட்டத்தில் இந்த குளிர்காலத் தொடரின் முதல் மூன்று வாரங்கள் கழிந்திருக்கின்றன. இந்த கசப்பான சண்டையில் இரு சாராரருமே உழைக்கும் மக்களுடைய நலன்களுக்காகவே தாங்கள் செயல்பட்டு வருவதாகக் கூறிக் கொள்கின்றனர்.

காங்கிரசு கட்சியும், வணிகத்துறை அமைச்சரும், பெரும் வணிக நிறுவனங்களின் நுழைவு, ஒரு கோடி மக்களுக்கான வேலை வாய்ப்பை பெரும் அங்காடிகளிலும், குளிர் பதன கிடங்குகளிலும், மற்றும் தொடர்பான செயல்பாடுகளிலும் உருவாக்குமென கூறிவருகின்றனர். இந்த பெரிய நவீன சில்லறை வர்த்தக மையங்களின் வளர்ச்சி, "இடைத் தரகர்களை அகற்றும்" என்றும், கெடக்கூடிய உணவுப் பொருட்கள் பெரிய அளவில் வீணாவதைக் குறைக்கும் என்றும், விவசாயிகளுக்கு நல்ல விலையை அளிக்குமென்றும், நகர்புற குடும்பங்களில் உள்ள நுகர்வோருக்கு செலவைக் குறைக்குமெனவும் அவர்கள் கூறிவருகின்றனர்.

பாஜகவும், சிபிஎம்-உம் முக்கியமாக பங்கேற்கும் எதிர்க்கட்சி முகாம், இந்தக் கொள்கைத் திட்டத்தின் காரணமாக கோடிக்கணக்கான சில்லறை வணிகர்கள் மற்றும் விவசாயிகளுடைய வாழ்வாதாரம் அழியுமென்று கூறுகின்றனர். வணிகத்திற்காக வந்த ஆங்கிலேய கிழக்கிந்திய கும்பெனி, நமது நாட்டை வெற்றி கொண்டு அடிமைப்படுத்தியதோடு அவர்கள் இதை ஒப்பிடுகிறார்கள்.

உண்மை என்ன? இந்த இரண்டு சண்டையிடும் குழுக்கள் யாருடைய நலன்களைப் பாதுகாக்கிறார்கள்? அவர்களுடைய நிலைப்பாடுகள் யாரை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன?

ஆளும் கட்சி முகாமின் நிலைப்பாடு

காங்கிரசு கட்சி கூறுவதில் ஓரளவிற்கு உண்மையிருக்கிறது. ஆனால் அது அவர்கள் கூறும் அண்டப் புளுகுகளின் காரணமாக மறைந்து விடுகிறது.

நமது நாட்டினுடைய வர்த்தக அமைப்பானது, நவீன மயப்படுத்தப்பட வேண்டுமென்பதும், கெடக்கூடிய உணவுப் பொருட்கள் பெரிய அளவில் வீணாவதைக் குறைக்கக் கூடிய குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் போன்றவற்றின் மூலம் பெரிய அளவில் அது மேலாண்மை செய்யப்பட வேண்டுமென்பதும் உண்மையாகும். இப்படி வீணாவது, சமுதாயத்திற்கு விலையை உயர்த்தவும், உழைக்கும் மக்கள் செலவு செய்ய வேண்டிய தொகையைக் கூட்டவும் செய்கிறது.

ஆனால் வர்த்தகத்தை நவீனப்படுத்த நல்ல அல்லது ஒரே வழியானது, அதைத் கொள்ளை இலாபத்திற்காக இயங்கும் தனிப்பட்ட நிறுவனங்களின் கைகளில் ஒப்படைப்பதாகும் என்பது ஒரு மிகப் பெரிய பொய்யாகும். தர்க்க ரீதியான தீர்வும், சரியான மாற்றும், செயல்பாடுகளின் அளவு மட்டுமின்றி, அதன் உடமையையும், வர்த்தகத்தின் மீதான கட்டுப்பாட்டையும் சமூக மயமாக்குவதாகும். இதற்குப் பொருள், மொத்த விலையில் வாங்குவதற்கும் வினியோகிப்பதற்கும் சமுதாய மையங்களை நிறுவுவதும், அவற்றின் விற்பனைக்காக பல்வேறு பொது மற்றும் தனிப்பட்ட சில்லறை கடைகளை நிறுவுவதும் அவசியமாகும்.

எங்கெல்லாம் வால்மார்ட்டும் பிற நிறுவன வர்த்தக ஏகபோகங்களும் நுழைந்தார்களோ அங்கெல்லாம் வாழ்வாதாரம் பெருமளவில் சீரழிக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக இருக்கும் வர்த்தக இடையாளர்கள் விரைவாக நவீன ஏகபோக முதலாளித்துவ இடையாளர்களால் மாற்றப்பட்டுள்னர். மிகப் பெரிய சந்தை சக்தியைக் கொண்டு, இவர்கள் உற்பத்தியாளர்களையும், நுகர்வோரையும் பிழிவதற்காக மொத்த விற்பனையிலிருந்து சில்லறை வணிகம் வரை அனைத்தையும் ஒருங்கிணைக்கிறார்கள்.

உலக பொருளாதார நெருக்கடி காரணமாகவும், வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தீவிரமடைந்து வரும் பொருளாதார வீழ்ச்சி காரணமாகவும், வால்மார்ட், கேர்போர், மெட்ரோ, டெசுகோ போன்ற பெரும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் இந்திய சந்தையில் ஊடுருவ மிகவும் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். அவர்கள் நமது நாட்டை, மேலும் அதிகமாக கசக்கிப் பிழியக்கூடிய பகுதியாகவும், பெரும் அளவில் நவீன சில்லறை வர்த்தக மையங்களை நிறுவவும், அதிகபட்ச இலாபத்தை அறுவடை செய்வதற்கும் ஏற்றதொரு இடமாகவும் அவர்கள் நமது நாட்டைப் பார்க்கிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் ரிலையன்சு, டாட்டாக்கள், பிர்லாக்கள், பாரதி மற்றும் பிற இந்திய நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். சந்தையில் 5 சதவிகிதத்திற்கும் குறைவான அளவையே அவர்களால் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடிந்திருக்கிறது. அவர்கள் அனைவரும் இதுவரை தங்களுடைய வர்த்தகத்தை அந்நிய போட்டியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, அந்நிய நேரடி முதலீட்டை ஒற்றை நிறுவன பொருள் விற்பனையில் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென்றும், பல நிறுவன பொருள் சில்லறை வணிகத்தில் அனுமதிக்கக் கூடாதெனவும் விடாப்பிடியாகக் கூறி வந்திருக்கின்றனர். ஆனால் அவர்களில் பெரும்பான்மையோர், உலகப் பெரும் நிறுவனங்களோடு 49 சதவிகித பங்காளிகளாக ஆவதே நமது நாட்டின் சில்லறை சந்தையை தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான விரைவான வழியாகுமென இன்று உணர்ந்திருக்கிறார்கள்.

எதிர் கட்சிகளின் முகாமின் நிலைப்பாடு

குறிப்பாக ஒரு உலக வர்த்தக ஏகபோகத்தின் நுழைவுதான் இந்தியா அடிமைப்படுத்துவதற்கு வழி வகுத்தது என பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் கூறுவதில் ஓரளவு உண்மை இருக்கிறது. ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் உள்ள பெரும்பான்மையான நாடுகளை சிறுபான்மையான ஏகாதிபத்திய சக்திகள் நவீன காலனிய முறையில் கொள்ளையடிப்பதற்கு, இன்றைய மிகப்பெரிய உலகளாவிய வர்த்தக ஏகபோகங்கள் ஒரு முக்கிய பங்காற்றுகின்றன.

இந்த உண்மையை சுட்டிக்காட்டுகின்ற அதே நேரத்தில், இரண்டு முக்கிய உண்மைகளை எதிர்க்கட்சிகள் மறைக்கின்றனர். நமது நாட்டில் வர்த்தக சங்கிலியை ஏற்கெனவே நிறுவியிருக்கின்ற இந்திய நிறுவன ஏகபோகங்களும் தம் ஏகாதிபத்திய போக்கை விரிவுபடுத்தி வருகிறார்கள் என்பது ஒன்று. வர்த்தகத்தைத் தம் கட்டுப்பாடின் கீழ் கொண்டு வருவதற்காக ஏகபோக முதலாளித்துவம் தொடுக்கும் தாக்குதலில் இவர்கள் 49 சதவிகித கூட்டாளிகளாக இருப்பார்கள். எனவே அந்நிய நேரடி மூலதனத்தை மட்டுமின்றி, சில்லறை வணிகத்தில் உள்ள இந்திய நிறுவன ஏகபோகங்களையும் எதிர்த்துப் போராடுவது அவசியமாகும்.

இரண்டாவது உண்மையானது, ஏகபோக முதலாளித்துவ தாக்குதலானது சில்லறை வணிகர்களை அச்சுறுத்துவது போலவே வேளாண்மை மற்றும் தொழிற்சாலை உற்பத்தி சந்தையில் பாரம்பரியமாக ஈடுபட்டு வந்துள்ள முதலாளித்துவ மொத்த வணிகர்களையும் அச்சுறுத்துகிறது. முதலாளி வர்க்கத்தின் இப்பிரிவினர், அந்நிய நேரடி மூலதனத்தை தடுப்பதன் மூலம், தங்களுடைய சொந்த நிலையையும் சந்தை சக்தியையும் வலுப்படுத்தி, உற்பத்தியாளர்களையும் நுகர்வோரையும் பிழிய விரும்புகிறார்கள்.

ஐமுகூ-யில் உள்ள முக்கிய கட்சியான திமுக-வின் தலைவர் மு.கருணாநிதி, நவம்பர் 25 அன்று, "தமிழ்நாட்டிலுள்ள எங்களுடைய அரசியல் தொகுதியில், சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு எதிராக கடுமையான எதிர்ப்பு உள்ளது" என்று கூறியிருக்கிறார். தனது கட்சியின் முக்கிய ஆதரவாளர்களாக பல்வேறு நகரங்களிலுள்ள முதலாளித்துவ மொத்த வியாபாரிகளும், கிராமப்புறங்களிலுள்ள பாரம்பரியமாக வர்த்தகம் செய்யும் இடைப்பட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். இதே நிலைமைதான் மேற்கு வங்கத்தில் உள்ள திருனாமுல் காங்கிரசுக்கும், உத்திரபிரதேசத்தில் உள்ள சமாஜ்வாத கட்சிக்கும், பீகாரில் உள்ள ஜெடியு, போன்றவர்களுக்கும் இருக்கிறது.

மாநில அரசாங்கங்கள் மீது முதலாளித்துவ வியாபாரிகள் கணிசமான செல்வாக்கைக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாகவே பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் நுழைவை பல பிராந்திய கட்சிகள் எதிர்க்கின்றன. இந்த கொள்கை மாற்றத்தை எதிர்க்கும் இந்தக் கட்சிகள் வேறு மாற்று திட்டம் எதையும் முன்வைக்க வில்லை. இது, இன்றுள்ள நிலைகளோடு மகிழ்ச்சியடைந்துள்ள, அதில் மாற்றம் எதுவும் வரக்கூடாதென விரும்பும் முதலாளி வர்க்கத்தின் ஒரு பிரிவினரை இந்தக் கட்சிகள் பிரதிபலிக்கிறார்கள் என்பதை இது வெளிக் காட்டுகிறது.

மக்களுடைய தேவை

பண்டைய காலந்தொட்டு, தட்டுப்பாடுகளை தனிப்பட்டவர்கள் தங்களுடைய சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வதை அரசு தடுக்க வேண்டுமென்ற சிந்தனையின் அடிப்படையில் நமது பண்பாடு வளர்ந்து வந்திருக்கிறது. இந்திய அல்லது அந்நிய தனிப்பட்ட ஏகபோகங்கள் வர்த்தகத்தை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கும் முதலாளி வர்க்கத்தின் திட்டமானது சமுதாயத்தின் பொதுவான நலன்களுக்கு எதிரானதாகும். சமுதாயத்திற்கு ஆதரவான, மக்களுக்கு ஆதரவான திட்டமானது, வர்த்தகத்தை சமூக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதாகும்.

வாங்குவதும், விற்பதுமான வர்த்தகம், பொருட் செல்வத்தை எந்தவகையிலும் கூட்டுவதில்லை. அது ஒரு குழுவினருடைய கைகளிலிருந்து இன்னொரு கைகளுக்கு, உற்பத்தியாளர்களிடமிருந்து இறுதி நுகர்வோர்களுக்கு சரக்குகளை வினியோகிக்கும் வழிமுறையாகும். அப்படி இருக்கையில், இந்தத் துறையில் தனிப்பட்ட இலாபம் சம்பாதிப்பதை ஏன் அனுமதிக்க வேண்டும்? தனிப்பட்ட வணிகர்கள் சம்பாதிக்கும் எல்லா இலாபமும் உற்பத்தியாளர்களிடமிருந்தோ நுகர்வோரிடமிருந்தோ அல்லது இருவரிடமும் இருந்தோ மதிப்பைத் திருடுவதன் மூலம் வர வேண்டியுள்ளது.

மொத்த வர்த்தகத்தை உடனடியாக தேசியமயமாக்க வேண்டுமென்றும், தொழிலாளி-விவசாயிகளின் மேற்பார்வையின் கீழும், கட்டுப்பாட்டின் கீழும் ஒரு நவீன பொது வினியோக அமைப்பு முறையை நிறுவ வேண்டுமென்றும் கோருவதற்காகவும், அதற்காகப் போராடுவதற்காகவும் சமுதாயத்திலுள்ள தொழிலாளிகளும், விவசாயிகளும், பிற நடுத்தட்டு மக்களும் ஒன்றுபட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி கருதுகிறது. விவசாயிகளுடைய குழுக்களும், கூட்டுறவுகளும், விவசாய விளை பொருட்கள் நியாயமான முறையில் வாங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இறுதியில் பொருட்கள் விற்கப்படும் நியாய விலைக் கடைகளை நகரங்களில் உள்ள மக்கள் குழுக்கள் மேற்பார்வையிட வேண்டும். மொத்த வர்த்தகத்தின் மேல் அரசின் கட்டுப்பாடு, எல்லா சில்லறை கடைகளும் தங்களுடைய சரக்குகளுக்கு இந்த ஒரே மூலத்தைச் சார்ந்திருப்பதை உறுதி செய்யும்.

முடிவுரை

தங்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்குத் தொழிலாளி வர்க்கமும், மக்களும் பாராளுமன்ற எதிர்ப்பை நம்பியிருக்கக் கூடாது. சுரண்டப்பட்ட பெரும்பான்மையான மக்களுடைய நலனுக்கான எந்த இடத்தையும் மறுக்கும் அதே நேரத்தில், பாராளுமன்றமானது போட்டியிடும் முதலாளி வர்க்க நலன்கள் தங்களுடைய முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கான ஒரு களமாகும்.

மொத்த வர்த்தகமானது உடனடியாக தேசியமயமாக்கப்பட வேண்டுமென்றும், அத்தியாவசியமான வேளாண்மை மற்றும் தொழிற்சாலை நுகர் பொருட்களைக் கொண்டதாக ஒரு நவீன பொது வினியோக அமைப்பை நிறுவ வேண்டுமென்றும் கோருவதற்கு, ஏகபோக முதலாளித்துவ தாக்குதல்களுக்கு எதிரான அனைவரும் ஒன்றுபட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி அறைகூவல் விடுகிறது.

ஓய்வூதிய நிதி முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதாவையும், காப்பீட்டு குழுமங்களில் அந்நிய முதலீட்டு சதவிகிதத்தை 26-இலிருந்து 51 ஆக உயர்த்தும் மசோதாவையும் பாராளுமன்றத்திலும், வீதிகளிலும் எதிர்க்கவும், ஆர்பாட்டங்களில் ஈடுபடவும், தொழிலாளி வர்க்கத்தின் எல்லாக் கட்சிகளும், அமைப்புக்களும் ஒன்றுபட ஒரு உடனடித் தேவை இருக்கிறது.

நில கையகப்படுத்தும் மசோதா இந்தக் கூட்டத் தொடரில் கொண்டுவர விட்டாலும் கூட, இந்த மசோதாவிற்கு எதிராக தொழிலாளி விவசாய அமைப்புக்கள் ஒன்றுபடுவது மிகவும் முக்கியமானதாகும். நிலத்தை உழுபவர்களுடைய நிலங்களை கட்டாயத்தின் அடிப்படையில் பறிக்கக் கூடாது, ஒரு பொது நலனுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலமானது, தனிப்பட்டவர்களுக்கு விற்கப்படக் கூடாதென்ற கோட்பாடுகளுக்கு ஆதரவாக இந்த இந்த ஐக்கியமானது, கட்டப்பட வேண்டும். 

வர்த்தகத்தின் இன்றைய கட்டுமானமும், முன்வைக்கப்பட்டுள்ள சீர்திருத்தமும்

வர்த்தகம் என்பது சரக்குகள் வாங்கி விற்கப்படும் முழு வழிமுறையையும் உள்ளடக்கியதாகும். வர்த்தகத்தின் மூலம் நாட்டின் ஒரு பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்ற இடங்களிலுள்ள இறுதி நுகர்வோர்களைச் சென்றடைகிறது. இதில் வேளாண்மை மற்றும் தொழிற்சாலை பொருட்கள் வாங்கி விற்பதும் இருக்கிறது.

ஆடைகள், பேனாக்கள், கடிகாரங்கள் போன்ற உற்பத்தி செய்யப்படும் நுகர்பொருட்கள் இறுதி நுகர்வோர்களுக்கு மூன்றடுக்கு வர்த்தக இடையீட்டாளர்கள் மூலமாக சென்றடைகிறது. அனைத்திந்திய மட்டத்தில் செயல்படுகின்ற உற்பத்தி செய்யும் ஒரு கம்பெனிக்கு 40-இலிருந்து 80 மறு வினியோகர்கள் இருப்பார்கள். இந்த ஒவ்வொரு வினியோகரும் தங்களுடைய பொருட்களை 100 இலிருந்து 450 மொத்த விற்பனையாளர்களுக்கு விற்பார்கள். மறு வினியோகர்களும், மொத்த விற்பனையாளர்களும் சேர்ந்து நாடெங்கிலும் உள்ள 2.5 இலிருந்து 7.5 இலட்சம் சில்லறை வணிகர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் இயங்குகின்ற தொழிற்சாலைகளுடைய உற்பத்திப் பொருட்கள் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை வணிகர்கள் என்ற இருவகையான இடையீட்டாளர்கள் மூலம் செல்கின்றன. வேளாண்மைப் பொருட்கள், பல்வேறு இடையீட்டாளர்கள் மூலம் செல்கிறது. பாரம்பரிய கிராமப்புற வணிகர்கள், மொத்த வர்த்தகர்களுடைய தரகு முகவர்கள், இந்திய உணவு நிறுவனத்தினுடைய முகவர்கள், அதிகாரபூர்வமான பொது வினியோக கடைகள், குடும்பங்கள் நடத்தும் கோடிக்கணக்கான சில்லறை கடைகள், தள்ளுவண்டி விற்பனையாளர்களும் இதில் அடங்குவர்.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் அதிகாரபூர்வமான பொருளாதார புள்ளிவிவர கணக்கெடுப்பின்படி நாட்டில் சில்லறை வர்த்தக நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 2005-இல் 1.5 கோடியாக இருந்தது. மொத்த விற்பனை நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 8.5 இலட்சமாக இருந்தது.

சில்லறை வர்த்தகத்தில் பெரிய அளவிலான அங்காடிகள் 5 சதவிகிதமாகவே இருக்கின்றன. மீதமுள்ள 95 சதவிகித விற்பனை குடும்பங்கள் நடத்தும் கடைகள், தனிப்பட்ட கடைக்காரர்கள், தள்ளுவண்டி விற்பனையாளர்கள் ஆகியோர் அடங்கிய "அமைப்புசாரா" துறையினர் மூலமாக நடைபெறுகிறது.

மொத்த வர்த்தகத்தில் வட்டார மட்டத்திலும், மாநில அளவிலும் கணிசமான அதிகாரம் கொண்டுள்ள பாரம்பரிய முதலாளித்துவ வியாபாரிகள் மேலாதிக்கம் செலுத்துகின்றனர். இதில் விவசாய உற்பத்தியாளர்களிடம் அதிகாரபூர்வமான மற்றும் பிற கிராமப்புற மண்டிகள், சந்தைகள், நாட்டின் வெவ்வேறு இடங்களிலிருந்து தொழிற்சாலை சரக்குகளை வாங்கி ஒரு குறிப்பிட்ட மாநிலத்திலுள்ள சில்லறை வணிகர்களுக்கு வழங்குகின்றவர்களும் அடங்குவர்.

பல நிறுவன சில்லறை வணிகம் என்பது, பல்லாயிரக்கணக்கான சதுர அடி பரப்பில் அமைக்கப்படும் பெரிய அளவிலான அங்காடிகளைக் குறிக்கிறது. அங்கு பல்வேறு நிறுவனங்களுடைய பொருட்கள், பல்வேறு உற்பத்தியாளர்களிடமிருந்தும், வினியோகிப்பவர்களிடமிருந்தும் பொருட்கள் பெறப்பட்டு விற்கப்படுகின்றன. ரிலையன்சு பிரஷ், ரிலையன்சு மார்ட், ஸ்டார் பசார், இசிடே, மோர், பிக் பசார் மற்றும் நிறுவன ஏகபோகங்களுக்குச் சொந்தமான பிற பெரிய அங்காடி சங்கிலிகள் இப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு எடுத்துக் காட்டுகளாகும். இவை உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்கி இறுதி நுகர்வோருக்கு விற்பனை செய்யும் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக சங்கிலிகளாகும்.

ஒற்றை நிறுவன சில்லறை வணிகம் என்பது நைக், ஆப்பிள், பிளாக்பெரி போன்று ஒரு நிறுவனத்தின் பொருட்களை மட்டும் விற்கின்ற அங்காடிகளைக் குறிக்கும். ஒரு நிறுவன சில்லறைக் கடைகளை அயல்நாட்டு கம்பெனிகள் நமது நாட்டில் நிறுவுவதற்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த அந்நிய கம்பெனிக்கும் பல நிறுவன சில்லறை அங்காடிகளை ஏற்படுத்த அனுமதிக்கப்படவில்லை. செப்டெம்பர் மாதத்தில் அமைச்சரவை எடுத்த முடிவு, இதை அவர்களுக்கு திறந்து விட்டிருக்கிறது.