tcs layoff
வேலை பாதுகாப்பிற்காகவும், நீதிக்காகவும் தொடர்ந்து நடைபெற்றுவரும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) ஊழியர்களுடைய போராட்டத்தின் ஒரு அங்கமாக இந்தியாவின் பல நகரங்களிலும் பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போராட்டத்தின் தற்போதைய நிலை குறித்து விளக்குவதற்காக, தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுக்கான அமைப்பு (F.I.T.E) சென்னையில் ஒரு கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் டிசிஎஸ் மற்றும் பிற தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த, தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் பங்கேற்றனர்.

வேலை நீக்கம் செய்யப்பட்ட டிசிஎஸ் ஊழயர்களுக்காக தற்போதைய போராட்டத்தின் பின்னணியைத் தோழர் தமிழ் நாசர் எடுத்துக் கூறினர். பெரும் எண்ணிக்கையில் டிசிஎஸ் வல்லுனர்களை வேலை நீக்கம் செய்வது குறித்து கவலையடைந்து டிசிஎஸ் “வேலை நீக்கத்தை நாங்கள் எதிர்க்கிறோம்” (“We are against TCS lay off”) என்ற தலைப்பில் முகநூலை இளந்தமிழகம் இயக்கம் உருவாக்கியது. இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. டிசிஎஸ்-இன் இந்த அநியாயமான வேலை நீக்கத்தால் வேலை நீக்கத்தால் பாதிக்கப்பட்ட வல்லுனர்கள் பலரும் தொடர்பு கொண்டனர். பாதிக்கப்பட்ட ஊழியர்களை ஒருமுகப்படுத்தவும், இந்தியாவெங்கிலுமுள்ள தகவல் தொழில் நுட்ப ஊழியர்களை ஒருங்கிணைக்கவும், தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுக்கான அமைப்பு (F.I.T.E) டிசம்பர் 2014-இல் உருவாக்கப்பட்டது. சென்னையில் மட்டுமின்றி, தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுக்கான அமைப்பின் கிளைகள் டிசிஎஸ் ஊழியர்கள் பாதிக்கப்பட்ட பெங்களூரு, ஐதிராபாத், பூனே, மும்பை, தில்லி, கொச்சி, புவனேஸ்வர், கொல்கொத்தா போன்ற நகரங்களிலும் நிறுவப்பட்டன.

பல்வேறு நகரங்களில் நடைபெற்ற மனித சங்கிலி, தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுடைய உரிமைகள் பற்றிய கருத்தரங்கு, ஆர்பாட்டங்கள் போன்ற பல நடவடிக்கைகளில் டிசிஎஸ் ஊழியர்கள் மட்டுமின்றி பல தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களும் தொடர்பு கொண்டு பங்கேற்றனர். தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுடைய அமைப்பு, நியாமின்றி பணி நீக்கம் செய்யப்பட்ட டிசிஎஸ் ஊழியர்களை மீண்டும் வேலைக்கு எடுக்கக் கோரி பல நகரங்களிலும் வழக்குகளைத் தொடுத்திருக்கின்றனர். தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு நீதி கிடைக்க, மத்திய மாநில அரசாங்கங்கள் இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட வேண்டுமெனவும் தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுக்கான அமைப்பு கோரி வருகிறது.

அதிக இலாபம் சம்பாதிக்க வேண்டுமென்ற பேராசையே டிசிஎஸ் மற்றும் பிற தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், வல்லுனர்களுடைய உழைப்பையும், இளமையையும் முதல் சில ஆண்டுகளிலே கசக்கிப் பிழிந்து உறிஞ்சி விட்டு தூக்கியெறிந்து வருகிறார்கள் என்பதை செயல் வீரர்கள் புள்ளி விவரங்களையும் உண்மைகளையும் கொண்டு நிறுவினார்கள். அதே நேரத்தில் இதே நிறுவனங்கள், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக வேலை செய்து வருவதாக, கொஞ்சமும் வெட்கமின்றி கூறி வருகின்றனர்.

இந்த தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் தொழிலாளர்களா, இந்த நாட்டின் பிற உழைக்கும் மக்களுக்கு உரிய உரிமைகள் இவர்களுக்கும் உண்டா, இல்லையா என்பதே இந்தப் பிரச்சனையின் மையக் கேள்வியாகுமென தோழர் செந்தில் சுட்டிக் காட்டினர். தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள், தொழிலாளர்கள் இல்லையென்றும், தொழிற் தகராறுகள் சட்டம் 1947-உம், இந்த நாட்டின் பிற தொழிற் சட்டங்களும் அவர்களுக்குப் பொருந்தாதெனவும் முதலாளிகளும், நிறுவனங்களும் கூறி வருகின்றனர். தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் பல்வேறு சேவைகளை அளித்து வருகிறார்கள் என்பதும், மென்பொருட்களை உருவாக்கி வருகிறார்கள் என்பதும், இவற்றை உலகெங்கிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு விற்று தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் இலாபம் சம்பாதித்து வருகிறார்கள் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததாகும். ஆனால் இந்தத் தகவல் தொழில் நுட்ப ஊழியர்களின் உரிமைகள் அங்கீகரிக்காமல் மறுக்கப்பட்டு வருகின்றன.

டிசிஎஸ்-உம் பிற தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் பெண் ஊழியர்களை பாரபட்சமாக நடத்தி வருவதை தோழர் பரிமளா குறிப்பிட்டார். குழந்தை பேறு, குழந்தை வளர்ப்பு காலத்தில் பிற நாடுகளில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு கிடைக்கும் உரிமைகள் இங்கு மறுக்கப்படுகின்றன. மகப்பேறு விடுப்பில் செல்லும் பெண்களில் பலர், நன்றாக வேலை செய்யாதவர்களென செயல் மதிப்பீட்டு அமைப்பில் பதிவு செய்து, அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். முதல் சில ஆண்டுகளில் அவர்களுடைய உழைப்பு கடுமையாக சுண்டப்பட்ட பின்னர், பெண் ஊழியர்களை பல்வேறு வழிகளிலும் நெருக்குவதன் மூலம் டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள், பெண்களை தாங்களாகவே வேலை விட்டு விட்டுப் போய் விடச் செய்ய முயற்சிக்கின்றனர். இதையெல்லாம் மீறி அவர்கள் வேலையில் தொடர்வார்களேயானால், அவர்களை வேலையை விட்டுச் செல்லுமாறு நிர்பந்திக்கவும், அல்லது வேலையிலிருந்துத் தூக்கியெறியவும் கூட நிர்வாகம் தயங்குவதில்லை.

நிறுவனத்தின் தேவைகளையொட்டி மிகச்சிறப்பாக பணியாற்றியவர்களையும் மோசமாக வேலை செய்த தாக அறிவிக்கும் தான்தோன்றித்தனமான இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டு அமைப்பை தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மதிப்பீட்டு அமைப்பு அறிவியலற்ற, செயல்பாட்டைக் கணிக்கும் அமைப்பாக இருக்கிறது. அது வலுக்கட்டாயமாக மணி வளையம் (பெல் கர்வ்) என்று கூறப்படுவதை திணிப்பதாகவும், வல்லுனர்களுடைய கடும் உழைப்பையும், செயலாக்கத்தையும் குறைவாக மதிப்பிடுவதற்காக பல்வேறு காரணங்களை உருவாக்குவதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பிற்போக்குத்தனமான வழிமுறைகள் மூலமாகவும், தாக்குதல்கள் மூலமாகவும், பெரும் நிறுவனங்கள் திட்டமிட்ட முறையில் குழு உறுப்பினர்களுக்கிடையே ஆரோக்கியமற்ற, கடித்துக் கொதறும் போட்டிப் பொறாமைகளை வளர்ப்பதன் மூலம், அவர்களை ஒவ்வொரு நாளும் 12-14 மணிநேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் பாடுபடும் நிலைமையை உருவாக்கியிருக்கிறார்கள்.

தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடுபவர்களை, நாஸ்காம் (Nasscom) எனப்படும் தகவல் தொழில் நுட்ப முதலாளிகளுடைய கூட்டு நிறுவனத்தின் விவரத் தொகுப்பின் மூலம் தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களை அச்சுறுத்தியும் அவர்களை கருப்புக் குறியிட்டும் வருகிறார்கள் என்பதை செயல் வீரர்கள் குறிப்பிட்டனர். இந்தச் சட்ட விரோதமான ஆயுதத்தைப் பயன்படுத்தி, எவ்வித எதிர்ப்புமின்றி ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு விலகி விட வேண்டுமெனவும், அல்லது நாஸ்காம் விவரப் பட்டியலில் கருப்பு குறியிடப்பட்டு அவர்களுடைய எதிர்காலத்தையே சீரழித்து விடுவோமெனவும் ஊழியர்கள் மீது நெருக்குதலைக் கொண்டுவருகிறார்கள்.

தகவல் தொழில் நுட்ப ஊழியர்களின் அமைப்பும், மற்றவர்களும் மேற்கொண்ட முயற்சிகள் சில நல்ல பயன்களைக் கொடுத்திருக்கிறது. டிசிஎஸ் நிறுவனம் தன்னுடைய மௌனத்தைக் கலைத்துவிட்டு, தாங்கள் இவ்வளவு அதிகமான ஊழியர்களை வேலை நீக்கம் செய்யவில்லையென்றும், 3000 பேரை ‘மட்டுமே’ வேலை நீக்கம் செய்வதாகவும், இது ‘வழக்கமான’ செயல்தானென்றும் கூறியிருக்கின்றனர். தகவல் தொழில் நுட்ப ஊழியர்களின் அமைப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கின் காரணமாக டிசிஎஸ், தாங்கள் வேலை நீக்கம் செய்த பெண் பணியாளரை மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டியதாகியது. டிசிஎஸ் நிர்வாகம், பெண் ஊழியர்களைத் தாக்கி வருவதற்கு எதிராக பெண்களுடைய உரிமையை மையப்படுத்தி நாடு தழுவிய ஒரு போராட்டமாக இது ஆகிவிடக் கூடாதென்ற நிர்வாகத்தின் அச்சத்தை நாம் வெளிப்படையாகக் காணலாம்.

அரசாங்கத்தின் பங்கு என்ன என்றும் பேச்சாளர்கள் கேள்வி எழுப்பினர். அரசாங்கம் கடமை, பெரும் நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் இலாபத்தை அடிப்பதற்காக அவர்களுக்கு வழிவகை செய்து கொடுத்து, பல்வேறு வரி விலக்குகளும், சலுகைகளும் கொடுத்து, வேலைக்குப் பாதுகாப்பும் இன்றி, உழைக்கும் மக்களைச் சுரண்டுவதை அனுமதித்துக் கொண்டிருப்பதா? வேலை வாய்ப்பை உருவாக்குவது, வளர்ச்சி என்ற பெயரில் இவையனைத்தும் செய்யப்படுகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் பெரும் நிறுவனங்களுடைய பாதுகாவலர்களாகவும், ஈவுஇரக்கமற்ற சுரண்டலுக்கு ஆதரவாளர்களாகவும் இருப்பதை நாம் அனுமதிக்க முடியாது. அரசாங்கத்திற்கு, தன்னுடைய குடிமக்களுடைய வாழ்வாதாரத்தையும், வேலைக்குப் பாதுகாப்பையும், நல்வாழ்கையையும் உறுதி செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. இதை நாம் தான் உறுதி செய்ய வேண்டும்.

மோடியும் அவருடைய சகாக்களும் “இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்” என்று பரப்புரை செய்து வருகின்றனர். ஆனால், வேலையில் ஏற்கெனவே இருப்பவர்களைக் கூட வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டு வருகிறார்கள். இதை அரசாங்கம் அமைதியாக வேடிக்கைப் பார்த்து வருகிறார்கள். டிசிஎஸ், நோக்கியா, பாக்ஸ்கான், போன்ற நிறுவனங்கள் பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்களை வேலையிலிருந்து தூக்கியெறிந்து வருகிறார்கள். டிசிஎஸ்-உம் பிற தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் தங்களுடைய இலாபத்தை மேலும் பெருக்குவதற்காக தங்களுடைய அனுவம் வாய்ந்த ஊழியர்களை வேலையிலிருந்து தூக்கியெறிவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள்.

டிசிஎஸ்-உம் பிற தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் வேலை நீக்கம் செய்வதைத் தடுத்து நிறுத்துவதற்காகப் போராடுவதிலும், தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுடைய எல்லா உரிமைகளுக்கும் மனித உரிமைகளுக்கும் சட்ட பூர்வமான அங்கீகாரம் பெறுவதற்காகப் போராவதிலும் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் உறுதியை வெளிப்படுத்தினர். தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் மீது நிறுவனங்களும், அரசாங்கமும் தொடுத்துவரும் கூட்டுத் தாக்குதல்களை எதிர் கொள்ள நம்முடைய ஐக்கியமே அடிப்படை என தோழர் செந்தில் உறுதிபடக் கூறினர். நம்முடைய ஒற்றுமையை வலுப்படுத்துவதன் மூலமும், தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுடைய அமைப்பை வலுவாகக் கட்டியமைப்பதன் மூலமும் நம்முடைய நியாயமான கோரிக்கைகளை நாம் வென்றெடுக்க முடியும்.