இரசியாவில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த சார் அரசனுடைய ஆட்சியைத் தொழிலாளர்கள், உழவர்கள், பெண்கள், படை வீரர்களுடைய ஒரு பரந்துபட்ட கிளர்ச்சியாகிய பிப்ரவரி புரட்சி தூக்கியெறிந்தது. அப்படிப்பட்ட ஒரு புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவந்த அந்த முக்கியமான 8 நாட்கள், 1917 மார்ச் 8 (இரசியாவின் அப்போதை நாள்காட்டியின் படி, பிப்ரவரி 23) அன்று துவங்கியது.

இரசியாவின் எல்லா முக்கிய நகரங்களிலும், பேரூர்களிலும் நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான தொழிலாளர்களின் மாபெரும் வேலை நிறுத்தங்களோடு, 1917 ஆண்டு துவங்கியது. அந்த ஆண்டின் பெண்கள் தினத்தன்று, அதுவரை கண்டிராத அளவில் பெண்களும், ஆண்களும் வீதிகளுக்கு வந்தனர். அடுத்த சில நாட்களில், அரசியல் வேலை நிறுத்தங்களும் ஆர்பாட்டங்களும் ஒரு பரந்துபட்ட புரட்சிகர கிளர்ச்சியாக வெடித்தன. அதில் “சாரின் முடியாட்சி ஒழிக!”, “போருக்கு முடிவு கட்டு!”, “எங்களுக்கு உணவு கொடு!” என்பன போன்ற முழக்கங்கள் பொறித்த செவ்வண்ணத் தட்டிகளை ஏந்தியவாறு அவர்கள் போராடினர்.

மார்ச் 12 அன்று, தலைநகராகிய பெட்ரோகிராட் வீதிகளில் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த படை வீரர்கள் மறுத்துவிட்டனர். படை வீரர்களை, ஆர்பாட்டங்களில் கலந்து கொள்ளுமாறு அவர்களை சம்மதிக்கச் செய்வதில் பெண் ஆர்பாட்டக்காரர்கள் முக்கிய பங்காற்றினர். படை வீரர்கள், துப்பாக்கிச் சூடு நடத்த மறுத்துவிட்டனர் என்ற செய்தி நாடெங்கிலும் பரவியது. அது நாடெங்கிலும் நூற்றுக் கணக்கான ஆயிரகணக்கான தொழிலாளர்களையும், உழவர்களையும் கிளர்ச்சியில் ஈடுபட ஆர்வமூட்டியது.

அங்கு, தொழிற்சாலைகள், ஆலைகள், கிளர்ச்சியில் எழுந்த போர் வீரர்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் குழுக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்து எனப்படும் தொழிலாளர்களுடைய குழு, இரசியாவின் தலைநகரில் தோன்றியது. இந்த சோவியத்து, பெட்ரோகிராட் நகரின் வட்டங்களில் மக்களுடைய அதிகாரத்தை நிறுவுவதற்காகப் பொறுப்பாளர்களை நியமித்தது. தலைநகரின் மக்கள் அனைவரையும், தத்தம் வட்டங்களில் வட்டாரக் குழுக்களை நிறுவி, அப்பகுதியின் பிரச்சனைகளின் நிர்வாகத்தை உங்களுடைய கைகளில் எடுத்துக் கொள்ளுங்களென கேட்டுக் கொண்டன. தொழிலாளர்களும் கிளர்ச்சியில் எழுந்த போர் வீரர்களும் சாரின் அமைச்சர்களையும், இராணுவ உயர் அதிகாரிகளையும் கைது செய்யத் தொடங்கினர். அவர்கள் அரசியல் கைதிகளை சிறைகளிலிருந்து விடுவிக்க, அவர்களும் புரட்சியில் கலந்து கொண்டனர். பெரும் நிலவுடைமையாளர்களின் தானிய கிடங்குகளை உழவர்கள் தம் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளத் தொடங்கினர்.

மார்ச் 15 அன்று, இரண்டாவது சார் நிக்கோலஸ், தன்னுடைய எல்லா அதிகாரத்தையும் கைவிடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். சாரின் அதிகாரம் தூக்கியெறியப்பட்டு அது, இரசியப் பாராளுமன்றமாகிய டுமா-வில் பிரதிநிதித்துவம் பெற்ற கட்சிகளால் உருவாக்கப்பட்ட தற்காலிக அரசாங்கத்தினால் மாற்றியமைக்கப்பட்டது.

இரட்டை அதிகாரம் என்ற வழக்கத்திற்கு மாறான ஒரு சூழ்நிலை அங்கு உருவாகியிருந்தது. ஒரு பக்கம், ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடைபெற்று வந்த போரில் இரசியா தொடர்ந்து பங்கு பெற வேண்டுமென விரும்பிய முதலாளி வகுப்பு இருந்தது. இன்னொரு பக்கம், போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனக் கோரும் பிரதிநிதிகளுடைய சோவியத்துகளாக அணி திரண்டிருந்த தொழிலாளி வகுப்பும், பெரும்பான்மையான உழைக்கும் மக்களும், படை வீரர்களும் இருந்தனர்.

சோவியத்துகளை அழிப்பதற்குத் தேவையான அரசியல் பலம் முதலாளி வகுப்பிற்கு இல்லை. அதே நேரத்தில், அந்த தற்காலிக அரசாங்கத்தை ஒழிப்பதற்கு சோவியத்துகள் தயாராக இல்லை. இவ்வாறு, ஒரு தற்காலிக இக்கட்டான நிலை அங்கு நிலவியது.

வரலாற்றுப் பின்னணி

1905-07 இல் இரசியா ஒரு புரட்சிகர காலக் கட்டத்தில் இருந்தது. மன்சூரியாவின் போர்க்களத்தில் தோல்வியடைந்த சார் ஆட்சியின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தொழிலாளி வகுப்பும், உழவர்களும் ஒன்றன் பின் ஒன்றாக பல சலுகைகளைப் பெறுவதில் வெற்றி கண்டனர். சப்பானோடு ஒரு அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்ட பின்னர், பரந்துபட்ட கிளர்ச்சியை நசுக்குவதற்காக ஒரு எதிர்ப் புரட்சித் தாக்குதலை சார் துவங்கினான். 1908-12, புரட்சிக்குப் பின்னடைவான ஒரு காலமாக இருந்தது.

இரசியாவில் அந்த நேரத்தில், பெரும் பண்ணையார்களின் அரை நிலபிரபுத்துவ உறவுகளால் உழவர்கள் சுரண்டப்படுவதோடு, தொழில் துறைகளிலும், வேளாண்மையிலும் முதலாளித்துவம் வளர்ச்சி பெற்று வந்தது. அப்போது அங்கு மூன்று முக்கிய அரசியல் சக்திகள் இருந்தன. நிலபிரபுத்துவ நிலக்கிழார்கள், அதிகார மற்றும் இராணுவ சாதியின் மேல்குடியினருடைய அங்கமாக சார் முடியாட்சி இருந்தது. கான்ஸ்டிடியூஷ்னல் டெமாக்கிரடிக் கட்சி (Constitutional Democratic Party) என்று பின்னர் அழைக்கப்பட்ட கேடட்டுகள் மற்றும் அக்டோபரிஸ்டு கட்சிகள், தொழில் துறை முதலாளி வகுப்பினரையும், முதலாளித்துவ நிலவுடமையாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தியது. இதற்கு ஆங்கிலேய, பிரஞ்சு ஏகாதிபத்தியர்கள் ஆதரவு அளித்தனர். இரசிய சமூக சனநாயக தொழிலாளர் கட்சியில் (RSDLP) அணி திரண்டிருந்த கம்யூனிஸ்டுகள், பெருகி வருகின்ற பாட்டாளி வகுப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். பாட்டாளி வகுப்பினருக்கும், முதலாளி வகுப்பினருக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்த சோசலிச புரட்சிகரக் கட்சி (Socialist-Revolutionary Party) போன்ற இடைப்பட்ட பிரிவினருடைய சில கட்சிகளும் இருந்தன.

சாரினுடைய ஆயுதப் படைகள், லினா தங்கச் சுரங்கத்தில் 500 தொழிலாளர்களைச் சுட்டுக் கொன்றதற்கு எதிராக ஏப்ரல் – மே மாதங்களில் மாபெரும் அரசியல் வேலை நிறுத்தங்கள் வெடித்த போது, 1912-இல் புரட்சி அலை மீண்டும் உயர்வதற்கான அறிகுறிகள் தோன்றின. அந்த ஆண்டு நடைபெற்ற மேதின வேலை நிறுத்தங்களிலும், ஆர்பாட்டங்களிலும் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் ஒரு சனநாயக குடியரசு, 8 மணி நேர வேலை நாள் மற்றும் நிலக்கிழார்களுடைய பண்ணைகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் ஆகிய முழக்கங்களை எழுப்பினர்.

முதல் உலகப் போர், 1914-இல் வெடித்தது. அது எதிரெதிரான ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான போராகும். ஒரு பக்கத்தில் ஆங்கிலேய, பிரஞ்சுக் காலனிய சக்திகளின் கூட்டணி இருந்தது. அதற்கு இலட்சக் கணக்கான போர் வீரர்களை சாரிச இரசியா கொடுத்து வந்தது. போரின் இன்னொரு பக்கத்தில், ஆஸ்திரிய-ஹங்கேரிய மற்றும் துருக்கி பேரரசுகளோடு உயர்ந்து வருகின்ற செர்மன் ஏகாதிபத்தியத்தின் கூட்டணி நின்றது. இந்தப் போரானது, பகுதிகளையும், சந்தைகளையும், செல்வாக்கு செலுத்தும் பிராந்தியங்களையும் தங்களுக்கிடையே மறுபங்கீடு செய்து கொள்வதற்காக, உலகின் மிகப் பெரிய கொள்ளைக்காரர்களுக்கு இடையில் நடைபெற்ற மோதலாகும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், உழவர்களும் அவர்களுடைய சுரண்டல் அதிபர்களுடைய நலனுக்காக ஒருவரை ஒருவர் கொல்லுமாறு ஏவிவிடப்பட்டனர். போரின் உண்மையான நோக்கங்களை ஒவ்வொரு நாட்டின் முதலாளிகளும் மூடி மறைத்தனர். ஒவ்வொரு ஏகாதிபத்திய அரசாங்கமும், அது தன்னுடைய நாட்டைப் பாதுகாப்பதற்காகவே போரில் ஈடுபட்டு வருவதாக அறிவித்துக் கொண்டன.

இரசியாவில், 1 கோடியே 10 இலட்சம் உழவர்களும், 40 இலட்சம் தொழிலாளர்களும் அவர்களுடைய பொருளாதார வாழ்க்கையிலிருந்து பிடுங்கி, இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். பல ஆலைகளும், தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. உழவுத் தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக பயிர்ப் பரப்பு குறைந்தது. மக்களும், போர்முனையில் இருந்த படை வீரர்களும் பசியிலும் பட்டினியிலும், உடலை மூடுவதற்கு ஆடை இல்லாமலும், காலில் அணிய செருப்பு கூட இல்லாமலும் போக நேரிட்டது. நாட்டின் வளங்களைப் போர் விழுங்கி வந்தது. சாருக்கு எதிராக இருப்பது போல கான்ஸ்டிடியூஷ்னல் டெமாக்கிரடிக் கட்சி வேடம் போட்டு வந்தாலும், அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையை அது ஆதரித்து வந்தது. தொழிற்சாலை முதலாளிகள் போரிலிருந்து மிகக் கொள்ளையான இலாபத்தைக் குவித்து வந்தனர். அது போலவே, உணவு பற்றாக்குறையைப் பயன்படுத்தி முதலாளித்துவ நிலவுடமையாளர்களும் செல்வங்களைச் சேர்ந்து வந்தனர்.

அந்த நேரத்தில் சமூக சனநாயக தொழிலாளர் கட்சிகளென தங்களை அழைத்துக் கொண்ட கம்யூனிஸ்டு கட்சிகளுடைய சர்வதேச அமைப்பு இரண்டாவது அகிலமாக இருந்து வந்தது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான இந்தப் போரில், தத்தம் சொந்த முதலாளி வகுப்பை ஆதரித்த கட்சிகள், இரண்டாவது அகிலத்தில் ஆதிக்கம் செலுத்தின. பிரிட்டன், பிரான்சு, செர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்த இப்படிப்பட்ட கட்சிகள், அவர்களுடைய தொழிலாளர்களை, “தந்தை நாட்டைப் பாதுகாப்பதற்காக”, போரை ஆதரிக்குமாறும், தங்கள் வகுப்பைச் சேர்ந்த உடன்பிறப்புக்களைக் கொல்லுமாறும் அழைப்பு விடுத்தன. செர்மன் சமூக சனநாயக கட்சி, “இரசிய காட்டுமிராண்டிகளிடமிருந்து” செர்மனியைப் பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்டது.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இரசிய சமூக சனநாயக தொழிலாளர் கட்சி (போல்ஷவிக்), இரண்டாவது அகிலத்தின் சமூக வெறிக்கு எதிராக எழுந்து நின்றது. எல்லா நாட்டுத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்! என்ற கம்யூனிஸ்டு கட்சியின் அறிக்கை முழக்கத்தைப் பாதுகாத்து போல்ஷவிக்குகள் எழுந்து நின்றனர். முதலாளி வகுப்பின் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையில் நடைபெறும் எந்தக் கொள்கையும் அற்ற கொள்ளைகார போரை, முதலாளி வகுப்பின் ஆட்சிக்கு எதிரான ஒரு புரட்சிகர உள்நாட்டுப் போராக மாற்றுமாறு இரசியாவின் தொழிலாளர்கள், உழவர்கள் மற்றும் போர் வீரர்களுக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

எண்ணெற்ற ஐரோப்பிய சமூக சனநாயக கட்சிகளைச் சேர்ந்த மார்க்சிய மேதாவிகள், ஏகாதிபத்தியப் போரை, ஒரு புரட்சிகர உள்நாட்டுப் போராக மாற்றுவது இயலாத காரியம் என்று கருதி லெனினையும், போல்ஷவிக் கட்சியையும் எள்ளி நகையாடினர். ஆனால், அந்த நேரத்தில் சர்வதேச தொழிலாளி வகுப்பு இயக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய சந்தர்ப்பவாதத்திற்கும், சமூக வெறிக்கும் எதிராக நீச்சலிட்டு புரட்சிகர பாதையைக் கை விட்டுவிடாமல், போல்ஷவிக் கட்சி உறுதியாக நின்றது.

தோழர் லெனினுடைய தலைமையின் கீழ், அணிதிரட்டப்பட்ட, அரசியல் விழிப்புணர்வு கொண்ட தொழிலாளி வகுப்பு இயக்கத்திற்குத் தலைமை தாங்குவதில் போல்ஷவிக் கட்சி வெற்றி பெற்றது. இது, சமுதாயத்தின் அடித்தளத்தில் தொழிலாளர் சோவியத்துகளுடைய பிரதிநிதிகள் என்றழைக்கப்படும் ஒரு புதிய அதிகார அமைப்பை நிறுவ வழி வகுத்தது. சாரின் இராணுவப் படை வீரர்களுக்கு இடையில் திட்டமிட்ட பரப்புரையை நடத்துவதற்கும், அவர்களுக்கிடையில் படை வீரர்களின் சோவியத்துக்களுடைய பிரதிநிதிகளை இரகசியமாகக் கட்டும் பணிக்கும் கட்சி தலைமையளித்தது. வேளாண்மைத் தொழிலாளர்களிடையிலும், ஏழை உழவர்களிடையிலும் சோவியத்துக்களைக் கட்டும் வேலையையும் கட்சி வழி நடத்தியது.

தொழிலாளர்கள், உழவர்கள், படை வீரர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுடைய கூட்டு புரட்சிகர சக்தியே, சார் முடியரசனைத் தூக்கியெறிய வழி வகுத்தது. ஆனால், பிரிட்டிஷ், பிரஞ்சு ஏகாதிபத்தியர்களுடைய ஆதரவோடு இரசிய முதலாளி வகுப்பு, சூழ்ச்சியாகச் செயல்பட்டு தற்காலிக அரசாங்கத்தைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

சில சமூக உரிமைகளைக் கொடுப்பதன் மூலமும், முடியரசு சிறைகளில் அடைத்து வைத்திருந்த அரசியல் கைதிகளை விடுவிப்பதன் மூலமும் மக்கள் மீது தன்னுடைய ஆட்சியை நீடித்துக் கொள்ள தற்காலிக முதலாளி வகுப்பு அரசாங்கம் முயற்சித்தது. பாட்டாளி வகுப்பு அரசின் கருவாக சோவியத்துக்களும் தற்காலிக அரசாங்கத்தின் கூடவே நிலவின. அந்த சோவியத்துக்கள் அமைதி, உணவு மற்றும் சுதந்திரத்திற்கான முயற்சி செய்யும் உழைக்கும் மக்களுடைய நலன்களை முன்னெடுத்துச் செல்லும் ஒரு கருவியாக இருந்தது.

அடுத்தக் கட்டத்திற்கான தயாரிப்பு

பிப்ரவரி புரட்சி எதை சாதித்தது மற்றும் எதை சாதிக்கத் தவறியது என நிதானமான அறிவியல் மதிப்பீட்டை போல்ஷவிக் கட்சி செய்தது. சார் முடியாட்சியைத் தூக்கியெறிந்ததை ஒரு முக்கியமான சாதனையாக கட்சி மதிப்பீடு செய்தது. தொழிலாளி வகுப்பு மற்றும் உழைக்கும் பெரும்பான்மையான மக்களுடைய கைகளில் அரசியல் அதிகாரம் வரவில்லை என்பதை அது உணர்ந்து கொண்டது. புரட்சியை ஒரு சரியான முடிவுக்குக் கொண்டு செல்வதற்கான அவசியமான நிபந்தனை நிறைவு பெறவில்லை.

கட்சி இந்த உண்மை நிலையை உணர்ந்து கொண்டது மட்டுமின்றி, சோவியத்துகள் அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளாதற்கு, போதுமான அளவிற்கு வகுப்பு விழிப்புணர்வும், பாட்டாளி வகுப்பினருடைய அமைப்பும் இல்லாததே காரணமென ஆய்வு செய்தது. போரின் போது 40% முறையான தொழிலாளர்கள் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அவர்களுடைய இடத்தில் சிறு உடமையாளர்கள், கைவினைஞர்கள், கடைக்காரர்கள் ஆகியோர் தொழிற்சாலைகளில் சேர்ந்தனர். புரட்சியில் முதலில் பெற்ற வெற்றிகளால் நிலை தடுமாறிய உழைக்கும் மக்களுடைய இந்த சிறு முதலாளித்துவ பிரிவினர்கள், அதிகாரத்தை முதலாளி வகுப்பினரிடம் ஒப்படைக்கச் சம்மதித்தனர். அவர்கள், சிறு முதலாளி வகுப்பு மற்றும் போல்ஷவிக் கட்சியை விட்டுச் சென்ற மென்ஷவிக் அரசியல் தலைவர்களுடைய ஆதிக்கத்தின் கீழ் இருந்தனர். இப்படிப்பட்ட தலைவர்கள், வகுப்பு சமரசத்தை போதித்ததோடு, முதலாளி வகுப்பின் தற்காலிக அரசாங்கத்தைப் பற்றிய மாயைகளையும் பரப்பினர். இந்தக் காரணிகள், தொழிலாளர் சோவியத்துகள் மற்றும் படை வீரர்களுடைய சோவியத்துகளுடைய பிரதிநிதிகள் அதிகாரத்தை முதலாளி வகுப்பினரிடம் ஒப்படைக்க வழி வகுத்தன.

உண்மைகளை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்த இப்படிப்பட்ட மதிப்பீட்டின் காரணமாகவே, அக்டோபர் புரட்சியில் பின்னர் பாட்டாளி வகுப்பு வெற்றி பெறுவதற்கான சூழ்நிலைமைகளை போல்ஷவிக் கட்சியால் உருவாக்க முடிந்தது.

பிப்ரவரி புரட்சியின் விளைவு குறித்த தன்னுடைய ஆய்வின் அடிப்படையில், போல்ஷவிக் கட்சி தற்காலிக அரசாங்கம், முதலாளி வகுப்பு மற்றும் ஏகாதிபத்தியத் தன்மை கொண்டது என்றும், அது அமைதி, நிலம், உணவு ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றாது என்றும் பொறுமையோடு உழைக்கும் மக்களுக்கு விளக்கிச் சொல்லும் வேலையை மேற்கொண்டது. எனவே எல்லா அதிகாரமும் சோவியத்துகளுடைய கைகளில் வர வேண்டும். இதுவே லெனினுடைய புகழ் பெற்ற ‘ஏப்ரல் ஆய்வுக் கட்டுரை’களின் மையக் கருத்தாகும். அதை அவர் 1917 ஏப்ரல் 4 அன்று அனைத்து இரசிய தொழிலாளர் மற்றும் படை வீரர்களுடைய சோவியத்துகளின் பிரதிநிதிகளுடைய கருத்தரங்கில் முன்வைத்தார்.

தன்னுடைய ‘ஏப்ரல் ஆய்வுக் கட்டுரை’களில் லெனின், “தொழிலாளர் சோவியத்துகளின் பிரதிநிதிகள் மட்டுமே புரட்சிகர அரசாங்கத்தின் வடிவமாக இருக்கக்கூடும் என்பதை மக்களை உணரச் செய்ய வேண்டும். எனவே, முதலாளி வகுப்பினுடைய மேலாதிக்கத்திற்கு இந்த அரசாங்கம் இணங்கிப் போகும் வரையில், அவர்களுடைய தந்திரத்திலுள்ள தவறுகளை பொறுமையோடும், திட்டமிட்ட முறையிலும், இடைவிடாமலும், குறிப்பாக பெருந்திரளான மக்களுடைய நடைமுறைத் தேவைகளுக்கு ஏற்ற வகையிலும் விளக்கிச் சொல்லுவதாக நமது கடமை இருக்க வேண்டும்” என்று சுட்டிக் காட்டியிருக்கிறார்.

ஏப்ரல் ஆய்வுக் கட்டுரைகளில் முன்வைக்கப்பட்ட செயல்திட்டத்தின் அடிப்படையில், சார் முடியாட்சியைத் தூக்கியெறிந்துவிட்ட பின்னர், புரட்சியானது உடனடியாகவும், அத்தியாவசியமாகவும், அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்ல வேண்டும் எனத் தொழிலாளர்கள், படைவீரர்கள் மற்றும் உழவர் பிரதிநிதிகளுக்கு விளக்கிச் சொல்லி ஒப்புக் கொள்ள வைப்பதற்காக போல்ஷவிக் கட்சி வேலை செய்தது. ஒடுக்கப்பட்ட மற்றும் பாடுபடும் பெரும்பான்மையான மக்களோடு கூட்டணியாக புரட்சிகர பாட்டாளி வகுப்பு தன்னுடைய அதிகாரத்தை நிறுவ வேண்டியது இந்தக் கட்டமாகும்.

இருவகையான அரசு அதிகாரங்களுக்கு இடையிலுள்ள முக்கிய வேறுபாடு குறித்து விளக்கிய லெனின், “ஒரு பாராளுமன்ற முதலாளி வகுப்புக் குடியரசிலிருந்து மீண்டும் முடியாட்சிக்குச் செல்வது, வரலாறு காட்டியிருப்பது போல மிகவும் எளிதானதாகும். ஏனெனில் இராணுவம், காவல் துறை மற்றும் அதிகாரத்துறை ஆகிய ஒடுக்குமுறை இயந்திரங்கள் மாற்றமின்றி நீடிக்கின்றன. ஆனால் கம்யூனும், சோவியத்தும் இந்த இயந்திரத்தை ஒழித்துக் கட்டி அதற்கு முடிவு கட்டி விடுகின்றன.

“பொதுமக்களுடைய தனிப்பட்ட அரசியல் வாழ்க்கையையும், அடிமட்டத்திலிருந்து அரசின் சனநாயக வாழ்க்கை அமைப்பில் நேரடியாக அவர்கள் பங்கேற்பதையும், பாராளுமன்ற முதலாளித்துவ குடியரசு தடுத்து நிறுத்துகிறது. சோவியத்துக்களோ அதற்கு நேரெதிராகச் செயல்படுகிறது”.

கூட்டாக, இரசியாவின் தலைவர்களாகவும், ஆட்சியாளர்களாகவும் ஆக வேண்டிய தேவை குறித்து தொழிலாளர்கள், உழவர்கள் மற்றும் படை வீரர்களில் அரசியல் ரீதியாக செயலூக்கம் கொண்டவர்களை ஒப்புக் கொள்ளச் செய்யும் பொறுமையான, கடினமான வேலையை போல்ஷவிக் கட்சி மேற் கொண்டது. இதன் மூலம், அந்த ஆண்டின் இறுதியில் மாபெரும் அக்டோபர் சோசலிசப் புரட்சியில் எல்லா அதிகாரத்தையும் ஒட்டுமொத்தமாக மாற்றுவதற்கான அகவய நிலைமைகளை அது உருவாக்கியது.

படிப்பினைகள்

சிந்தனை மற்றும் செயல்பாடென்ற தன்னுடைய புரட்சிகர நிலைப்பாட்டில் ஊசலாட்டமற்ற கம்யூனிஸ்டு கட்சியின் முன்னணிப் படையால் வழி நடத்தபட்ட தொழிலாளி வகுப்பு மற்றும் அதனுடைய கூட்டாளிகளின் கூட்டுச் செயல்பாடுகளால் இரசியாவில் பாட்டாளி வகுப்புப் புரட்சியின் வெற்றி நிலைநாட்டப்பட்டது.

சனநாயக மற்றும் சோசலிச புரட்சிக் கட்டங்களுக்கு இடையே எந்த இடைவெளியோ, நீண்ட காலமோ இல்லையென்பதை 1917 இரசிய அனுபவம் நீரூபித்திருக்கிறது. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வழிமுறை மாற்றங்களை இடையிலேயே விட்டுவிடாமல், சமுதாயத்திலுள்ள எல்லா வகையான சுரண்டலையும், வகுப்பு வேறுபாடுகளையும் ஒழித்துக் கட்டும் சரியான முடிவுக்கு கொண்டு செல்வதை புரட்சியில் பாட்டாளி வகுப்பின் தலைமை உறுதி செய்யும்.

புரட்சியானது, முதலாளி வகுப்பு சனநாயகக் கடமைகளிலிருந்து அதனுடைய சோசலிச கடமைகளுக்கு எவ்வளவு விரைவாக முன்னேறிச் செல்கிறது என்பது, பாட்டாளி வகுப்பு எந்த அளவிற்கு தயாராக இருக்கிறது என்பதைத் தவிர வேறு எதையும் பொறுத்ததல்ல. லெனினிசத்தின் இந்த முடிவை, இரசியாவில் முடியாட்சிக்கு முடிவு கட்டிய 1917 முதல் புரட்சியானது விரைவாக முன்னேறி, பாட்டாளி வகுப்பை ஆளும் வகுப்பின் நிலைக்கு உயர்த்தி, மிகவும் முக்கியமான சோசலிச மாற்றங்களைத் துவக்கி வைத்த இரண்டாவது புரட்சிக்குக் கொண்டு சென்றது நடைமுறையில் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

போல்ஷவிக்-கள் தீர்த்து வைத்த ஒரு முக்கிய பிரச்சனையானது – முதலாளி வகுப்பின் பாராளுமன்றத்தின் இடத்தில் எதைக் கொண்டு வருவது? அல்லது வேறு வகையில் கூறினால், புரட்சி எந்த நிறுவனத்தின் கைகளில் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதாகும். சமுதாயத்தின் அடித்தளத்தில் பரந்துபட்ட பிரதிநிதித்துவ மன்றங்களைக் கட்டும் நடைமுறை வேலையின் மூலமும், அவற்றிற்கு புரட்சிகர அரசியல் விழிப்புணர்வை ஊட்டுவதன் மூலமும், போல்ஷவிக் கட்சி இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைத்தது. காலம் கனிந்து வந்தபோது, கட்சி அறைகூவல் எழுப்ப, சோவியத்துகள் அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டன.

இரசியப் புரட்சியின் படிப்பினைகளிலிருந்து கற்றுக் கொள்வதென்றால், நமது நாட்டுத் தொழிலாளி வகுப்பு அதிகாரத்தை தன்னுடைய கைகளில் எடுத்துக் கொள்ளும் திறனற்றது என்ற மாயையை இந்திய கம்யூனிஸ்டுகள் நாம் உடைத்தெறிய வேண்டும். தொழிலாளர்கள், உழவர்கள், படை வீரர்கள் இடையில் அவர்களுடைய அரசியல் அதிகாரத்திற்காக குழுக்களைக் கட்டுவதில் முன்னணிப் பங்காற்ற வேண்டும் என்று இதற்குப் பொருள். இந்திய கம்யூனிஸ்டுகள் வீரத்தோடு செயலாற்றுவதற்கு பாட்டாளி வகுப்பின் ஒரு முன்னணிக் கட்சியை, புரட்சிகர லெனினிச வகைக் கட்சியாகக் கட்டி வலுப்படுத்த வேண்டும் என்று பொருள்.

இந்தியா அரசியல் சுதந்திரம் பெற்றதிலிருந்து, முதலாளி வகுப்பின் அதிகாரமே வலுப்படுத்தப்பட்டு வருகிறது என்பதை உண்மைகள் காட்டுகின்றன. அரசியல் அதிகாரமானது 1947-இல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் ஒரு சட்டத்தின் மூலம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியர்களுடைய கைகளிலிருந்து காலனியக் கொள்ளையின் மூலம் இலாபமடைந்த பெரும் நிலக்கிழார்கள் மற்றும் பிற இரத்தம் உறிஞ்சுபவர்களோடு கூட்டணி சேர்ந்துள்ள நமது நாட்டின் பெரு முதலாளிகளுடைய கைகளுக்கு மாற்றப்பட்டது. காலனியர்கள் விட்டுச் சென்ற அரசு, உழைக்கும் மக்களைப் பிரித்தாளும் கருவியாகத் தொடர்ந்து நீடித்தது. பாட்டாளி வகுப்பும், உழைக்கும் பெரும்பான்மையான மக்களும் அதிகாரமின்றி இருந்து வருகின்றனர்.

பாடுபடும் உழவர்கள் மற்றும் பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்களோடு கூட்டாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு பாட்டாளி வகுப்பைத் தயாரிக்கும் லெனினிச பாதையிலிருந்து இந்திய கம்யூனிஸ்டு இயக்கம் விலகி வந்துவிட்டது. அது, குருஷ்சேவ் தலைமையில் இருந்த சோவியத் யூனியனுடைய கம்யூனிஸ்டு கட்சி ஐம்பதுகளில் பரப்புரை செய்து வந்த “சோசலிசத்திற்கு பாராளுமன்றப் பாதை” என்ற திருத்தல்வாத நிலைப்பாட்டிற்கு பலியாகிவிட்டது. இப்படிப்பட்டப் போக்கைத்தான் போல்ஷவிக்குகள் 1917-இல் புறக்கணித்து, தோற்கடித்தனர். தொழிலாளி வகுப்பின் நோக்கங்களை அடைவதற்கான வழி என்று கூறிக் கொள்ளும் இந்தப் போக்கானது, முதலாளி வகுப்பையும், அதனுடைய பாராளுமன்ற சனநாயகத்தையும் சார்ந்திருப்பதாகும். அது, முதலாளி வகுப்பின் சர்வாதிகாரத்தைக் கட்டிக்காப்பதற்கு சேவை செய்கிறது.

சோவியத் திருத்தல்வாத உடும்புப் பிடியிலிருந்தும், சோசலிசத்திற்கு பாராளுமன்றப் பாதை என்பதிலிருந்தும் மீண்டு வெளிவர அறுபதுகளில் இந்திய கம்யூனிஸ்டுகளில் இருந்த புரட்சியாளர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களுடைய இந்த முயற்சி, உழவர்களைச் சார்ந்து நின்று, நகர்ப்புறங்களைச் சுற்றி வளைப்பதற்காக கிராமப்புறங்களில் இரகசிய கொரில்லா போர்முறையைக் கையாளும் சீன திருத்தல்வாத நிலைப்பாட்டால் திசை திருப்பப்பட்டது. இதன் காரணமாக முதலாளித்துவ பாராளுமன்ற மாயைகளின் ஆதிக்கத்தின் கீழ் பாட்டாளி வகுப்பு கை விடப்பட்டது.

எப்படிப்பட்ட வீராதி வீரர்களாக இருந்தாலும், ஒரு சில தலைவர்களுடைய செயல்களால் முதலாளி வகுப்பின் அதிகாரத்தைத் தூக்கியெறிய முடியாதென்பது இரசியப் புரட்சியின் ஒரு முக்கியமான படிப்பினையாகும். போல்ஷவிக்-களுடைய வீரதீரமானது, பாட்டாளி வகுப்பிற்கு விழிப்புணர்வை உருவாக்கி, பாடுபடும் உழவர்கள் மற்றும் எல்லா பிற ஒடுக்கப்பட்டவர்களுடன் கூட்டணியாக பாட்டாளி வகுப்பு அதிகாரத்தைத் தன் கைகளில் எடுத்துக் கொள்வதை வெற்றிகரமாக நிறைவேற்றியதில் இருக்கிறது.

இரசியப் புரட்சியின் படிப்பினைகளிலிருந்து கற்றுக் கொள்வதென்றால், இந்திய கம்யூனிஸ்டுகள் நாம், முதலாளி வகுப்பின் பாராளுமன்றப் பாதையையும், தனிப்பட்ட பயங்கரவாதத்தையும், கிராமப்புறங்களிலிருந்து நகரங்களைச் சுற்றிவளைப்பது என்ற நிலைப்பாட்டையும் புறக்கணிக்க வேண்டும். தொழிலாளர்கள், உழவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களிடையே குழுக்களைக் கட்டும் வேலையை, அரசியல் விழிப்புணர்வைக் கொடுக்கவும், ஒன்றுபடுத்தவும், அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளவும் தயாரிக்கும் கண்ணோட்டத்தோடு நாம் முன்னின்று மேற்கொள்ள வேண்டும்.

இரசியப் புரட்சியின் படிப்பினைகளிலிருந்து கற்றுக் கொள்வதென்றால், போல்ஷவிக்-கள் 100 ஆண்டுகளுக்கு முன்னர் செய்தது போல, சமூக சனநாயகத்தோடும், தேச வெறியோடும் எந்த வடிவத்திலும் சமரசம் செய்து கொள்வதற்கு எதிராக விட்டுக் கொடுக்காமல் போராட்டத்தை நடத்துவதாகும். நமது “சொந்த” முதலாளி வகுப்பின் போர்த் திட்டங்களையும், பாகிஸ்தானுக்கு எதிராக அதனுடைய வெறிப் பரப்புரையையும் நாம் எதிர்க்க வேண்டும். “தேச ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது” என்ற முழக்கத்தோடு எந்த வடிவிலும் சமரசம் செய்து கொள்வதை நாம் எதிர்க்க வேண்டும். இந்த முழக்கத்தின் அடிப்படையில் தான், நாட்டில் நடைபெறும் அரசு பயங்கரவாதத்தையும், காட்டுமிராண்டித்தனமாக சனநாயக, மனித மற்றும் தேசிய உரிமைகள் நசுக்கப்படுவதையும் ஆளும் வகுப்பு நியாயப்படுத்தி வருகிறது.  

தொகுத்துக் கூறுகையில், வரலாற்றுப் படிப்பினைகளால் வழிநடத்தப்பட வேண்டுமென்றால், பாட்டாளி வகுப்பின் ஒரு புதிய சர்வாதிகார அரசை நிறுவ வேண்டும் என்பதற்கு குறைவாக எதையும் நம்முடைய அரசியல் நோக்கமாக முன்வைக்க கூடாது. அது மட்டுமே, ஏகாதிபத்திய அமைப்பிலிருந்தும், முதலாளித்துவத்திலிருந்தும், காலனியம், நிலவுடமை மற்றும் சாதி அமைப்பின் எல்லா மிச்சங்களிலிருந்தும் இந்தியாவை விடுதலை செய்யும்.