kuravesam artமாடக்கண் தனது மகள் எழிலாவின் இமையில் வெள்ளையும் சிகப்புமாய் வரிசையாக புள்ளிகள் வைத்துக் கொண்டிருந்தான். அழகான நெற்றிச்சூடி, அதே நிறத்தில் கம்மல், இலை இலைகளாலான நீண்ட காதுமாட்டி, பாசி மாலைகள், பொட்டுகள் என்று வாங்கி வந்து ஒப்பனை போட்டுக் கொண்டு இருந்தான்.

பெரியவனுக்கு பொம்பளைப் பிள்ளையைப் போல அதிகம் வாங்கவில்லை. அவனைப் போலவே, டால்டா டின், பெல்ட், தலைக்கு உறுமால், சின்ன வேட்டி, பாசிமணி மாலை, ரப்பர் கட்டிய கவுட்டை போதுமானது. மற்றவைகள் எல்லாம் வீட்டிலியே இருக்கிறது. பொம்பளைப் பிள்ளைகளுக்கு அதிகமாக ஆபரணங்களும், ஜிகினா, பவுடர், வண்ண உடைகள் எனத் தேவைப்படுகிறது.

நல்ல வேளையாக குட்டைப் பாவாடையை ஒரு வாரத்திற்கு முன்பே தைக்கக் கொடுத்து வாங்கி வந்து விட்டான். அழகான குஞ்சங்கள் நிறைந்த குட்டை பட்டுப் பாவாடை. எழிலாவுக்கு அழகாக இருக்கிறது. உடையை அணிவித்துவிட்டு பார்த்தான். குறத்தி உடையில ஒரு தேவதை வீட்டுக்குள் வந்து நிற்பதைப் போல இருக்கிறது.

அப்படியே ஒரு ஆரத்தி எடுத்து ஊர் முச்சந்தியில் அதைக் கொண்டு போய் கொட்ட வேண்டும். "ஏய்,, கமலா வந்து பார்டி எழிலாவை", என்றழைத்தான் தன் துணைவியை. அடுப்பங்கரையை விட்டு அவள் வெளிவராமல் ஏதோ பதில் சொல்லவும் அவனுக்குள் கோபம் புரண்டு எழுந்தது. ஒப்பனை முடித்தவுடன் அவளை அழைப்போம். அதுதான் அவளுக்கு ஆச்சரியமாக இருக்கும் என்று சமாதானம் செய்து கொண்டான். கைகள் பரபரக்க ஒப்பனையிடுகையில் மகளின் மினுக்கம் கூடிக் கொண்டே போவதை உணர்ந்தான்.

கடைசியாக இமைகளின் மேலே ரோஸ் கலர் மென்தூரிகையால் வைத்தான். அசல் நரிக் குறவச்சியாக மாறி இருந்தாள். அவளை அருகில் இழுத்து உடலை சுழற்றிப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டான். முதுகுப் புறம் மேக்கப் எதுவுமில்லாமல் 'அசல்' குறத்தியாகத் தெரிந்தாள்

பீரோ கண்ணாடியில் பார்த்து விட்டு வருகிறேன் எனறு சொல்லியபடியே எழில் ஓடிப் போனாள். பெண் குழந்தைகள் மனதுக்கும் ஆண் பிள்ளைகள் மனதுக்கும் எத்தனையோ வித்தியாசம் இருக்கிறது. தன்னையே உற்றுப் பார்ப்பதும், தான் அழகாய் இருப்பதில் பெருமை கொள்வதும், தன்னழகில் தானே மயங்குவதும் இயல்பாய் நிகழ்கிறது. வேகமாய் வீட்டுக்குள் ஓடிப் போனவள் மெதுவாக தலையை மட்டும் நீட்டி அறையிலிருந்து எட்டிப் பார்த்து, அவன் பார்த்ததைப் பார்த்தவுடன் நாணிக் கொண்டு மெதுவாக நடந்து.வந்ததை மகிழ்வோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

மனதிற்குள் பளிச்சென்று யோசனை உதித்தது. வருடா வருடம் குறவன் வேடம் போடுறேன். தானும் குறத்தி வேடம் போட்டால் எப்படி இருக்கும்னு எண்ணிப் பார்த்தான். அடுத்த வருடம் அம்மன்ட்ட உத்தரவு கேட்டுட்டுப் போடலாம் என்ற எண்ணிய போதே மனது மகிழ்ச்சியானது. எழிலாவின் அழகில் பாதியாவது இருக்க மாட்டேனா என்று தனக்குள் முணங்கிக் கொண்டான்.

"அப்பா, அப்பா அம்மாட்ட காட்டிட்டு வாரேன்", ஓடியவளின் காலில் கட்டியிருந்த சின்ன சலங்கைகள் அவள் குதித்து ஓடுவதற்கு ஏற்ப சல் சல்லென ஒலித்தன.

பிள்ளைகளை ஆசை தீரப் பார்க்கிற போது அவர்கள் வேறு ரூபம் கொண்டு விடுகிறார்கள். தன் தாயைப் போலவே, அல்லது மனைவியின் சாயலிலோ அவர்கள் ரூபம் ஆகி விடுகிறது. வேடம் புனைந்தவுடன் குழந்தை முகம் மாறி, அவன் அம்மாவைப் போல குச்சி முடியும் வட்டமுக வடிவமும் கொண்டு விடுகிறது.

மகிழ்ச்சியோடு மகளைப் பார்த்த மாடக்கண்ணின் பார்வை அப்படியே சோகம் கட்டியதைப் பார்த்து மிரண்ட மகள் "என்னப்பா." என்றது பரிதாபமான முகத்துடன். "ஒண்ணுமில்லப்பா", என்று துண்டால் கண்களைக் கசக்கிக் கொண்டவன். "பாட்டியை நினைக்கத் தோணுச்சும்மா."

"போங்கப்பா, எப்பப் பாத்தாலும் பாட்டி, பாட்டினிட்டு. நல்லவேளை ராக்கம்மா ன்னு பேரு வைக்காமெ எழிலரசின்னாவது வச்சீங்களே." சிரித்துக் கொண்டே சொன்னாள் எழிலா. "நீ தானே என் அம்மா", என்று தனக்குள் இழுத்து நெற்றியில் முத்தினான்.

"ஏலே, முத்து, லுங்கிய கட்டிட்டியா வா, மேக்கப் போட்டுட்டு சாமி கும்பிட்டு வெளியே நேர்ச்சைக் கேட்கப் போவலாம்". மகனின் ஒப்பனை எளிதானது. முகத்தில் ரோஸ் பவுடர் பூசி கரும்புள்ளி செம்புள்ளி வைக்க வேண்டியது. இடுப்பில் ஒரு டால்டா டின், கையில் கவுட்டை அவ்வளவுதான். எளிதாகக் குறவனாகினான் மகன அவனைப் போலவே.

மீண்டும் அவன் மனதிற்குள் பெண்குறத்தி வந்து நின்றாள். மாடக்குளத்தில் அவன் மச்சினன் மார் அம்புட்டு பேரும் காளி வேடம்தான் போடுவார்கள். ராமு மாமா மொவன் வெள்ளப்பாண்டி பச்சைக் கலர் காளி ரூபம் தரிப்பான். அவன் சூடனெ உள்ளங்கையில் கொளுத்தி அப்படியே எரிய விட்டு வாயில் போட்டுக் கொள்வான்.

உள்ளங்கை கொளுத்திக் கொளுத்தி வெந்து போயிருக்கும். ஆனா வாயில ஒண்ணும் ஆகாது. இவன்தான் இப்படிப் பண்றான்னா கண்ணையத் தேவர் மகன் சொடலை நாக்குல வச்சி சூடனக் கொளுத்துவானாம். அவன் நாக்கை அரைஅடி நீளம் நீட்டி அதில் சூடனை வச்சி கொளுத்தி எரிய விட்டு முழுங்குவானாம். அவென் நாக்க வெளியே நீட்டும் போது அம்மனே நேரில் நாக்கை தொங்கப் போட்டபடி இருக்குமாம்.

சொடலை உக்ரகாளி வேடம் தான் போடுவான். உடம்பெல்லாம் சிவப்பு பவுடர்ல விளக்கெண்ணெய் தேங்கா எண்ணெய் கலந்து உடம்பே ரத்த சிவப்புல இருக்குற மாதிரி இருக்கும். முதுகிலிருந்து இரண்டு பக்கமும் பன்னீரண்டு கைகள் அதே வண்ணத்தில் இரு புறமும் மாட்டியிருப்பான். தலைமுடிக்கு நீளச்சடைக் கொண்டு மாட்டி அப்படியே உக்கிரக் காளியாகவே மாறியிருப்பான்.

அத்தோட அவன் ஆடுற ஆட்டத்துல உடம்பெல்லாம் ரத்தம் வழிவது போல இருக்கும். உச்சபட்ச கோபம் அவன் முகத்தில் இருக்கும். உள்ளூர் முத்தாரம்மன் கோவில் ராப்பூசை முடிக்கிற வரைக்கும் இப்படி கோர முகத்தை எப்படி வைத்துக் கொண்டிருக்கிறான் என்பது பெரிய ஆச்சரியம்தான்.

எல்லாம் சாமியோட கைங்கரியம். மனுசன் மேல அம்மன் ஏறி விட்டால், அவனால் எதையும் செய்ய முடியும் என்று பேராசிரியர் பரமசிவம் சென்னது ஞாபகத்தில் வந்தது. மாடக்குளத்தில் எட்டுக் கலர் காளி வேடத்திற்கும் எட்டு பேர் உண்டுமாம். அட்டகாளி எட்டு பேரும் எண்திசையிலும் நின்றபடி ஆடுவார்களாம்.

ஆயிரம் கைகளோடும் எண்திசையிலும் நின்று பூமி அதிர ஆடுவது போல இருக்குமாம். அத்தோட குரங்கு, கரடி, முயல் என்றும் குறவன் குறத்தி. கள்ளன், போலீஸ், பொம்பளை, பேய்கள் என்று எத்தனையோ வேடங்களைப் போட்டபடி சாமிகள் ஊரையே வலம் வருவார்கள். சிலர் வேனில் முத்தாரம்மன் சிலை வைத்து அலங்கார ஆராதணையோடும் வேசங்களோடும் குலசேகரப் பட்டினத்துக்கு நடந்தே போவார்கள்.

சில ஊர்களில் முத்தாரம்மன் ஆடல் பாடல் குழுவில் எல்லா வேசக்காரர்களும் அவர்களோடு சில திருநங்கைகளும் பெரிய லாரியில் வருவார்கள். அப்படியே பெருந்தனக்காரர்கள் வீட்டு முன்பு செண்டை, உடுக்கை மேளத்துடன் இறங்கி ஆடுவார்கள். அப்படியே உறுமி செண்டையும் ஒன்றொன்று மோதி அதிர வேடக்காரர்கள் வட்டமாய் கூடி அட்ட அசைவு போட்டு ஊரே அதிர ஆடுவார்கள்.

அட்டகாளிகளும் நாக்கை நீட்டி எல்லா துர்ப்பகைகளையும் விழுங்குவது போல இருக்கும். செல்லாத்தா, செல்ல மாரியாத்தா பாட்டுக்கு எல்லோரும் குதித்து ஆட செண்டையும், தவில்களும் வெடிக்க ஈரேழு.லோகங்களும் பொடிபடுவது போல இருக்கும். அதை அவன் பார்த்தால் சிரித்துக் கொள்வான்.

குலசேகரப்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் முன்னுக்கு இப்படி ரெண்டாயிரத்துக்கு மேற்பட்ட செட்டுகள் ஒட்டுமொத்தமாய் ஆடுவது கண்ணில் தோன்றும். கற்பனைக்கும் எட்டாத.அந்த நிகழ்வை வாயால் சொல்லி விட முடியுமா என்ன என்று திணறுவான்.

மாடக்கண்ணுவின் ஊரில் அப்படி நிறைய பேர் வேடம் போடுவதில்லை. மாடக்கண்ணு இப்படி வேசம் போட்டு போவோர்களைக் கேலிச் செய்திருக்கிறான். இப்ப அவனே குறவன் வேசம் போட்டுக்கிட்டு போறத ஊரே ஆச்சரியமா பார்க்கிறது.

அவன் வீராவரம் பழக்கமிசன் மண்டியில் வேலைக்குச் சேர்ந்து அங்குதான் பல வருடங்களாக வேலை பார்த்து வந்தான். பின்னாடி ஆரஞ்சு, ஆப்பிள் தள்ளு வண்டியில் எடுத்துப் போட்டுக்கிட்டு விற்கவோ ஜூஸ் அடித்துக் கொடுக்கவோ போவான். தள்ளு வண்டிக்கும் பழச்சாறு மிசினுக்கும் வாடகை கொடுக்கணும். தள்ளு வண்டியை முதலாளிட்ட சொல்லிட்டு ப்ரீயா எடுத்துக் கொள்வான்.

அப்படியே ஹைகிரவுண்டுல வாகைமரத்துக்கு கீழே வண்டியை நிறுத்துவான். வெயிலில் களைத்துப் போயி வருகிறவனுக்கு பழச்சாறு போட்டுக் கொடுப்பான் அந்தப் பக்கம் ஓரளவிற்கு வசதியானவர்கள் அதிகம் சீனி கலக்காத பழச்சாறுதான் அதிகம் விற்பனையாகும்.

அவனுக்கான மனம் வியாபாரிக்கானதல்ல. சற்று விசாலமானதுதான். ஒரு கிளாஸ் சாறு கேட்டால் பிழிஞ்ச சாறு காக்கிளாஸ் கூட இருந்தால் கூட அதையும் திரும்ப ஊத்திக் குடிக்கக் கொடுப்பான். அப்படிப்பட்ட உதார குணத்தில் அவனது தொழிலும் நன்றாக நடந்தது. மதியம் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் மரத்தடியில் தலைவைத்துத் தூங்குவான்.

வாடிக்கையாளர்கள் சாறு வாங்க வந்தால் அவனது கோழித் தூக்கத்தைக் கலைக்காமல் அப்படியே நின்று கொண்டிருப்பார்கள். அந்த கண நேரம்தான் அவனது தூக்கம் என்பதும் எல்லோருக்கும் தெரியும். அவனும் யாரும் வந்தது தெரிந்தால் உடனே எழுந்து விடுவான்.

வியாபாரம் செய்பவனுக்கும் வாடிக்கையாளனுக்கு எப்போதும் ஒரு இனிமையான பிணைப்பு இருக்க வேண்டும். அதில் ஒருவருக்கொருவர் லாபத்தை விட்டுக் கொடுத்தல் இருக்க வேண்டும். மாடக்கண் அப்படிப்பட்ட நல்ல வியாபாரியாக இருந்தான்.

யாரும் வரவில்லையென்றால் ஸடூலில் அமர்ந்து வாகைமரத்தின் ஊடாக வானத்தைப் பார்ப்பான். குளிர்காலத்தில் வானம் என்ன எதுவும் தெரியாது. ஆனால் வேனில் காலம் துவங்கியவுடன் கொஞ்சம் கொஞ்சமாக வானம் தெரிய ஆரம்பிக்கும். அக்னிநட்சத்திர காலத்தில் அந்தக் கறுத்த சிறிய கிளைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இலையும் தனித்தனியாகத் தெரிய ஆரம்பிக்கும்.

பின்வரும் மழைக்காலத்தில் இடைவெளிகளை புதிய இளம்பச்சைக் கலரால் இழுத்து மூடிக் கொள்ளும். எந்தக் காலத்திலும் வாகைமரம் வெயிலை விரட்டிக் கொண்டிருக்கும். அதனால்தான் அவனை எட்டு ஆண்டுகளாக அங்கேயே நிலைகொள்ள வைத்திருக்கிறது.

இப்போது திம்மராஜபுரத்தில் ஒரு சின்ன ஓட்டு வீடு வாங்கி அதை இழுத்துக் கட்டி மேல்மாடியில ஒரு அறையும் கட்டியுள்ளான். அதற்கெல்லாம் காரணம் அவனது அம்மாதான். அவன் அப்பா இவன் பிறந்த இரண்டாம் வருசம் செத்துப் போனாராம். அன்னையிலேர்ந்து அவன் அம்மா அவனுக்காக எல்லா வீட்டு வேலையில் இருந்து எல்லா ஈனச்சோலியும் பாத்து காப்பாத்தியது தான் காரணம்.

அப்படிப்பட்டவளுக்கு ஏழு வருசத்துக்கு முன்னாடி வயிறு உப்பிப் பசியில்லாமல் போனது. ஐகிரவுண்டு, பால் ஆசுபத்திரி அங்க இங்கன்னு எல்லா மருத்துவமும் பார்த்தாச்சு. குணமாகுற மாதிரி தெரியல. யாரோ ஒரு தொள்ளாளியை கூட்டிட்டு வந்து மந்திரிச்சிப் பாரு சொன்னாங்க. அவன் வந்து என்னல்லாமோ பரிகாரம் பார்த்தான். ஒண்ணும் வேலைக்காகலை.

அப்பதான் மாடக்குளத்து மச்சான் வந்தார். அவருதான் முத்தாரம்மன் சந்நிதிக்கு வேசம் கட்டி வாரேன் நேந்துக்க என்று, மஞ்சள எடுத்து வரச் சொல்லி கையில காப்பு கட்டி விட்டான். குலசேகரத்து அம்மை அவன் ஆத்தாவை கண் விழிச்சி பார்த்தாள். அம்புட்டுதேன். வயிறு சரியாகி அம்மா பழைய நிலைக்கு வந்து விட்டாள்.

அந்த வருசத்துல போட்ட குறவன் வேசம் இன்னிக்கு வரைக்கு தொடர்ந்து கிட்டே இருக்கிறது. இந்த வருசம் என்னமோ புதூசா ஆசை வந்துட்டது. அப்படியே புள்ளகளையும் வேசம் போட்டு அம்மன் முன்னாடி அவள் பார்வையில நிறுத்திடணும்னு ஆசை. அதான் அவன் பிள்கைகளுக்கும் குறவன், குறத்தி வேசம் போட்டு இருக்கிறான். இன்னும் கொஞ்ச நேரத்துல சாமி கும்பிட்டுவிட்டு அப்படியே தெருவுக்கு கையேந்தப் போகணும்.

மூவரும் ரெடியாகி திம்மராஜபுரத்திலிருந்து பேருந்து ஏறி புதிய பேருந்து நிலையம் போய் அங்கிருந்து எங்கு செல்லலாம் என முடிவு செய்து கொள்ள முடிவு செய்தான். பேருந்து நிலையத்தில் கூட்டம் சலசலவென்று ஏறியும் இறங்கியும் வழிந்தோடினார்கள்.

பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன் தோள்ப்பையிலிருந்து மூன்று சிறிய எவர்சில்வர் தட்டுக்களை எடுத்து அதில் வேப்பிலை, மஞ்சள், திருநீறு, காசுகள் எனப் போட்டு மகளையும் மகனையும் முக்கியமான இடத்தில் நிற்க சொல்லி, வந்தவர்களிடம் தட்டை நீட்டி காணிக்கை கேட்கச் சொன்னான். மகன் காளிமுத்து தன் தங்கையை கையில் பிடித்துக் கொண்டு சரியாகவே வருகிற பயணிகளைப் பார்த்து விட்டு அவர்களருகில் தட்டையை நீட்டிக் காணிக்கை கேட்டான்.

சிறிது நேரத்தில் மகள் எழிலாவுக்கும் காணிக்கை கேட்கும் லாவகம் தெரிந்து விட்டது. எழிலும், முத்துவும் வருகிற மக்களிடம் ஓடிச் சென்று கேட்பதும் அவர்கள் குழந்தைகளைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியோடு ஏதாவது தட்டில் போடுவதுமாக இருந்தார்கள்.

அவர்களுக்கு எதிர்த்த வரிசையில் இரண்டு கரடி வேசம் போட்டவர்கள் கரடித் தலையை முதுகில் தழுவ விட்டபடி போய்க் கொண்டிருந்தார்கள்.

சணல் சாக்கில் செய்யப்பட்ட கரடி உடையில் தேங்காப்பூ டவலில் பூ நீட்டிக் கொண்டிருப்பது.போல இருந்தது. இரு பிள்ளைகளும் அவர்களை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.வேசம் கட்டிய பிள்ளைகள் தட்டோடு ஓடி வருவதைப் பார்த்தார்கள் கரடி வேசக்காரர்கள். பின்னால் வந்தக் கரடிக்காரன் வாயில் வைத்திருந்த பீடியை தரையில் வீசி காலால் நசுக்கினான். இருவரும் கரடித்தலைப் பொம்மையை தலைக்குள் பொருத்தி விட்டு இருவரையும் பார்த்து உறுமினார்கள். பிள்ளைகள் இருவரும் பயந்து பினவாங்கினார்கள். பிள்ளைகளின் பயத்தை உணர்ந்த கரடிகள் நின்றபடி இருவரையும் கைநீட்டி அழைத்தார்கள். எழிலா மிகவும் பயந்தாள்.

"தங்கங்களே. நாங்களும் குலசேரம் கோவிலுக்குத்தான் வேசம் கட்டி இருக்கோம் பயப்படாதீங்க, உங்க அப்பா அம்மாவெ எங்க", என்று கேட்டார்கள். முத்து மேற்கு திசை நோக்கு கை நீட்டி அங்கு நிற்பதாகச் சொல்லவும், அவர்கள் தோளில் தட்டிக் கொடுத்தபடி போய்க் கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்த எழிலா அண்ணனைப் பார்த்து, "அய்யோ நானும் கரடியைத் தொட்டுப் பார்த்திருப்பேனே", என்றாள்.

"கரடி கறுப்பால்லா இருக்கும், இது என்ன சாணிக் கலர்ல இருக்கு என்று எழில் கேட்ட கேள்விக்கு முத்து, "இது நிசக்கரடி இல்ல எழில். இது வேசக்கரடி". என்றான். அவனது பதில் அவளுக்கு விளங்கவில்லை. அவளுக்குள் கரடி குறித்து ஒரு உருவம் மனதில் பதிந்து கொண்டிருந்தது.

வானம் கூராப்பு போட்டிருந்தது. மேற்கே சூரியன் மங்க, மேகங்கள் உறுமிக் கொண்டிருந்தது. வெயில் காலத்து மழை, பெய்தால் பெரும் பாட்டமாய் பெய்யும். இல்லாட்டி உறுமி விட்டு ஒன்றுமில்லாமல் போய்விடும்.

மாடக்கண்ணு பேருந்து நிலையத்தை ஒரு சுற்று சுற்றியிருந்தான். வானத்தைப் பார்த்த போது மேகமில்லாமல் திரைந்த பாலைக் கொண்டியது போலிருந்தது. வேகமாகப் பிள்ளைகளைப் பார்க்க விரும்பினான். மணி ஐந்து கூட ஆகவில்லை.

அவனது பிள்ளைகள் ஓடியோடி காணிக்கை கேட்டார்கள். ஒரு வளர்ந்த மனிதரின் அருகில் சென்று வானத்தை ஏறிடுவது தலை உயர்த்திப் பார்த்தாள். அவர் சிரித்துக் கொண்டே, "குலசை கோயிலுக்கா என்று சொல்லியபடி மணிப்பர்ஸ்லிருந்து பத்து ரூபாயை எடுத்துப் போட்டார். முத்து அருகில் சென்று தட்டை நீட்டிய போது, அவனை அணைத்துப் பிடித்து உச்சி மோர்ந்து மீண்டும் பணத்தை எடுத்துத் தட்டில் வைத்து திருநீறு எடுத்துப் பூசிக் கொண்டார்.

எழிலாவைப் பார்த்து சிரித்து விட்டு காணிக்கைகளைத் தாராளமாகப் போட்டார்கள். முத்துவுக்கும் சில சமயம் யோகம் அடித்தது போலக் கிடைத்தது.

அவர்களுக்கு பயணிகள் பணம் கொடுப்பதைப் பார்த்த வயதானவர் நடக்க முடியாமல் தவழ்ந்து தவழ்ந்து எழிலாவின் பக்கத்தில் இருந்தபடி பிச்சை கேட்டார். பயணிகள் யாரும் போடாமல் வேகமாகப் பேருந்து ஏறச் சென்றார்கள்.

வயதானக் கிழவரை எழிலா உற்றுப் பார்த்தாள். தோலெல்லாம் சுருக்கம் விழுந்திருந்தது. விரிந்த இரு தோள்கள், தோள்பட்டை. மணிக்கட்டுகளில் தேள், டிராகன், மயில் எல்லாம் பச்சை குத்தப்பட்டு இருந்தன. தலையைச் சுற்றியிருந்த தலைப் பாகையையும் மீறி நீண்ட வெள்ளை மயிர்கள் பரட்டையாய் கிடந்தன. காதுகள், இமைமுடிகள் வெளுத்து நீண்டிருந்தன.

கால்களில் புண் ஏற்பட்டு நடக்க முடியாமல் தவழ்ந்து வந்தார் அவளுக்கு பின்னால் சேலையை முழங்காலுக்கு மேல் கட்டியவாறு உருக்குலைந்த பெண் அவருக்கு பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தாள். அவள் கையில் ஒரு ஸ்குரு டிரைவரும் ஒரு செப்புகம்பியில் பாசிகள் கோர்க்கப் பட்டிருந்தன. மடியில் தொங்கிய பை புடைத்து இருந்தது.

கூர்மையாக இருவரையும் பார்த்த எழிலாவுக்கு அவர்களைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. தனது தட்டில் கிடந்த இரண்டு மூன்று ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தாள்.

"அய்யோ, காணிக்கைப் பணம் சாமிக்கல்லா போடணும்", என்ற முத்துவைப் பார்த்து," அய்யோ, அந்த தாத்தாவும் பாட்டியும் ரொம்ப பாவம்னேன். நீயும் கொடுன்னேன்" என்றாள்.

அவனும் அவர்களைப் பார்த்து விட்டு,"பணம் வேணுமா" என்றான். அவர்கள் ஏதோ பேச, அது விளங்காமல் தட்டில் கிடந்த இருபது ரூபாயைக் கொடுத்தான். அவர்கள் மகிழ்வோடு வாங்கிக் கொண்டு காலைத் தேய்த்துக் கொண்டே திரும்பிப் போவதை இருவரும் பார்த்தபடி இருந்தார்கள்.

கறுத்த வானம் எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்தது. எழில் ஓடிப் போய் காணிக்கை வாங்குகையில் முத்துக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது. அப்பாவிடம் சொல்லி பெண் வேடம் போட்டால் அதிகமாய் கிடைக்குமே என்று எண்ணினான்.

சட்டென இறுகிய வானம் பெருந்தூறல்களை அள்ளி வீச ஆரம்பித்தது. எல்லோரும் ஓடி கட்டிடங்களுக்குள்ளும் பேருந்துக்குள்ளும் மறைந்தார்கள். பிள்ளைகள் இரண்டும் கட்டிடங்களுக்குள் வருவதற்குள் நன்றாக நனைந்து விட்டார்கள்.

சன்னமான இடைவெளிகளில் கண்ணாடி இழைகளாய் இறங்கி மழைகள் பிள்ளைகளுக்குப் பிடித்துப் போயின. கையை நீட்டி மழையை ஏந்திக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் ஒப்பனை முகத்தில் விழுந்த துளிகள் வண்ணமையாய் கழுத்தில் இறங்கிக் கொண்டிருந்தது.

அவர்கள் மழைக்கு ஒதுங்கி நிற்பவர்களிடம் காணிக்கை கேட்ட போது யாரும் கொடுக்கவில்லை. ஒரு சுற்று சுற்றி விட்டு அப்பாவை எதிர் பார்த்தாள் எழில். அப்பா வேறு எங்கோ ஒதுங்கி இருக்கிறார்." பயப்படாதே. வந்திருவார் அப்பா", என்ற காளிமுத்துவின் குரலில் ஆறுதல் அடைந்தாள். அண்ணனைப் பார்த்து சிரித்தாள். முகத்தில் அப்பாவைக் காணாத வெறுமை நிறைந்திருந்தது.

மழை சட்டென நின்றது. உள்ளங்கையில் ஏந்திய மழைத் துளிகளைப் பொத்தி வைத்துக் கொண்டாள்.

அப்பா தூரத்தில் வருவதைப் பார்த்த காளிமுத்து துள்ளிக் குதித்தான். மழைக்கு ஒதுங்கியவர்கள் இருவரின் ஓட்டச் சாட்டங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

அப்பா வந்தவுடன் இருவரின் தலையையும் தனது துண்டால் துடைத்து விட்டார். மீண்டும் தூறல் விழ ஆரம்பித்தது. அவர்களிடம் பணம் வாங்கிப் போன வயதான கிழவரைத் தோளில் தாங்கியபடி அழைத்து வந்தார் அவரது மனைவி. சரியாக மாடக்கண் அருகில் வந்து பிச்சைக் கேட்கவும், அவன் சட்டை உள்பைக்குள் கைவிட்டு பத்து ரூபாய் நோட்டைப் போடப் போனான். பிள்ளைகள் இருவரும் 'நாங்களும் போட்டோமே' என்றதும் அதிர்ச்சியுடன் பார்த்தான். பின்பு சுதாரித்துக் கொண்டு அவர்களுக்கு போட்டது சரிதான் என்று கொண்டான்.

குறவன்-குறத்தி வேசத்துக்குத் தானே எல்லோரும் காணிக்கை போடுகிறார்கள். வேசத்தை தந்தவர்கள் அவர்கள்தானே. அப்போ அவர்களுக்கும் காணிக்கை வரவில் பங்கு இருக்கிறது தானே என்று எண்ணிக் கொண்டான்.

அப்பா இவுங்க யாருப்பா என்று முத்து கேட்கவும், "இவங்க தாம்பா உண்மையான நரிக்குறவர்கள். இவங்களோட வேசத்தைத்தான் நாமெ போட்டிருக்கோம்", என்றான் மாடக்கண்.

எழிலா மீண்டும் ஒருமுறை அந்த வயதான நரிக்குறவர்களைப் பார்த்தாள். மழை மீண்டும் வருவதற்குள் வீட்டுக்குத் திரும்புவது நல்லது என்று மாடக்கண் நினைத்தார். மழையும் இடியும் கொண்டு ஒன்றையொன்று முறுக்கிக் கொண்டு திமிறின.

"அப்பா அவுங்க உண்மையான குறவன் குறத்தின்னா அவுங்களெ மாரி நாமெ உடை உடுத்தாமெ இப்படி அலங்காரமா ஏன் வேசம் போட்டிருக்கோம்?", என்றாள் எழிலா. சுருக்கென்றிருந்தது அவனுக்கு. அப்பா, இவங்க உடம்புக்கு என்னப்பா, இப்படி இருக்காங்க", என்ற காளிமுத்துக்கு. "எல்லாம் பசிக் கொடுமேதான். நல்லா சாப்பாடு கொடுத்தா நம்ம மாரி நல்லா ஆயிருவாங்க" என்றான் மாடக்கண்.

தூறல் மழை அவர்கள் போட்டிருந்த வேசத்தைக் கலைத்திருந்தது.

"அப்பா, உண்மையான இவுங்களெ ஆஸ்பத்திரியிலெ காட்டி சரியாக்கி அடுத்த வருசம் அவுங்களுக்கு குறவன் குறத்தி டிரஸ் வாங்கிக் கொடுத்து சாமிக்கிட்ட அழச்சிட்டு போவோமாப்பா", என்றாள் எழிலா.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பிள்ளைகளைக் கையில் பிடித்தபடி பேருந்தை நோக்கி விறுவிறுவென நடந்தான் மாடக்கண்.

-எம்.எம். தீன்