சென்னையில் நடந்த கார்ப்போரேஷன் தேர்தல்களின்போது, கலவரங்களும், பலாத்காரச் செய்கைகளும் நடந்ததாக அவ்வப்போது பத்திரிக்கைகளில் காணப்பட்டு வந்தன. ஆனால் அவற்றின் உண்மையை ஜனங்கள் அறியாதபடி ஓர் கக்ஷியாரைப் பற்றியே குற்றமாய் நினைக்கும்படி சென்னை பிராமணப் பத்திரிக்கைகளும், சுயராஜ்யக் கக்ஷி பிராமணர்களும், சூழ்ச்சிப்பிரசாரம் செய்து வந்தனர். அதன்பின் இது சம்பந்தமாய் ஏற்பட்ட நீதிஸ்தலத்தின் விசாரணையின் போக்கைக் கவனித்தவர்களுக்கு பலாத் காரத்துக்கும், குழப்பத்திற்கும் யார் பொறுப்பாளிகளாயிருந்தார்களென்பது விளங்கியிருக்கும். சுயராஜ்யக் கட்சியார் மீது, மற்ற கக்ஷியார் சென்னை பிரசிடென்ஸி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடரப்பட்டிருந்த இரண்டு மூன்று விவகாரங்களின் முடிவினால் சுயராஜ்யக் கட்சியார்தான் அதற்குப் பொறுப் பாளிகளென்பதை விளக்கியிருக்கிறது.
அதாவது:- கொஞ்ச நாளைக்கு முன் பைசலான ஒரு வழக்கில் சுயராஜ்யக் கட்சியார் ஒருவர் மற்றக் கட்சியாரைப் பிடித்துத் தள்ளியதும், திட்டியதும் ருஜுவானபோதிலும், தேர்தல்களில் இவைகளெல்லாம் நடப்பது சகஜந்தானென தீர்ப்புச் சொல்லப்பட்டுவிட்டது.
மற்றொன்றில், அடைத்து வைத்தது பற்றி விஷயங்கள் தெளிவான போதிலும், அதுவும் அவ்வளவு பெரிய குற்றமல்லவென்று தள்ளிவிடப்பட்டது. மற்றொன்றில், எதிரிகள் தங்கள் நடவடிக்கைக்கு வருத்தப்படுவதினால் வழக்குத் தொடர்ந்தவர் வாபீஸ் வாங்கிக்கொள்ளவே எதிரிகள் விடுவிக்கப் பட்டனர்.
இவ்விஷயங்கள் இப்படியிருக்க, பொது ஜனங்களுக்கு ஒரே கட்சியார் பேரில் குற்றம் காணும்படியாக பிரசுரஞ் செய்த பிராமணப் பத்திரிகைகளின் சூழ்ச்சிகளை நினைக்கும்போது அவைகளுக்கு நம் நாட்டை ஆக்கவும், அழிக்கவும் சக்தியிருக்கின்றதென்பதை மறுக்க முடியாது. ஆதலால், பொது மக்கள் பிராமணப் பத்திரிக்கைகளின் விஷமப் பிரசாரங்களைக் கண்டு திடீரென்று ஒரு முடிவுக்கு வந்துவிடாமல், நிதானமாய் யோசித்து உண்மை அறிய பிரயத்தனப்பட வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம்.
(குடி அரசு - கட்டுரை - 20.12.1925)