நக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (8)

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் நக்வெய்ன் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளின் சமூகப் பொருளாதார நிலைமை குறித்து ஒரு நாள் கள ஆய்வை நாம் மேற்கொள்ளப் போகிறோம். கள ஆய்வு செய்வதற்கான திட்டமிடலையும், அதற்கான வழிகாட்டலையும் இப்பொழுது பார்ப்போம்.

vikash rawalகள ஆய்வுக்கான திட்டம்:

மூன்று வேறுபட்ட இடங்களில் களஆய்வு மேற்கொள்ளப் போகிறோம். அவை பின்வருமாறு:

1. ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கினி கிராமத்தில் 50 ஏழை விவசாயிகளின் வீடுகளில் கள ஆய்வு செய்தல்.

2. ஜ்வலபுரில் உள்ள ஆப்பிள் பழத் தோட்டங்களில் கள ஆய்வு செய்தல்

3. சம்ரதாவில் சுரங்கச் சாலை வேலையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் கள ஆய்வு செய்தல்.

அனைவரும் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மேற்குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று கள ஆய்வை மேற்கொள்ள வேண்டும். மூவர் அல்லது நால்வர் சேர்ந்த குழுக்கள் விவசாயிகளின் வீடுகளைத் தேடிச் சென்று, அவர்கள் செய்யும் விவசாயம் குறித்தும், இதர தொழில்கள் குறித்தும் கேட்டறிந்து, அப்பகுதியின் சமூகப் பொருளாதார நிலைமைகளையும், அவற்றில் காணப்படும் பிரச்சனைகளையும் கண்டறிய வேண்டும். பொருளாதார அடிப்படையில் பாலியல் வேறுபாடுகள், சாதி வேறுபாடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் கண்டறிய வேண்டும். குறிப்பாகக் கீழ்காணும் முக்கிய வினாக்களுக்கு கள ஆய்வின் மூலம் விடை காண வேண்டும்.

வினாக்களின் பட்டியல்:

அங்கு வாழ்வாதார விவசாயம் கடைபிடிக்கப்படுகிறதா, அதாவது அவரவர் குடும்ப உணவு நுகர்வுக்குத் தேவையானவற்றை மட்டும் விளைவித்துக் கொள்ளும் விவசாயம் நடைபெறுகிறதா? அல்லது விளைபொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான விவசாயம் நடைபெறுகிறதா? எல்லா விவசாய விளைபொருட்களும் நுகர்வுக்காக பயன்படுத்தப்படுகின்றனவா? அல்லது பகுதியளவு நுகரப்பட்டு, பகுதியளவு சந்தையில் விற்கப்படுகிறதா?

விவசாயத்தின் மூலம் அவர்களால் போதுமான வருவாய் பெற முடிகிறதா?

விவசாயத்தில் உற்பத்தி உறவுகள் எத்தகையவை? அங்கு காணப்படும் நில உறவுகள் / குத்தகை முறைகள் எத்தகையவை?

அங்கு செயல்படுத்தப்படும் விவசாய மூலதனத்தின் தன்மையும் கூலி உழைப்பின் தன்மையும் எத்தகையவை?

விவசாய வேலையாட்களை எங்கிருந்து எவ்வாறு வேலைக்கு அமர்த்துகிறார்கள்?

அங்குள்ள நிலத்தின் தன்மை எவ்வாறு உள்ளது? அது வளமான நிலமா, நிலத்தை மேம்படுத்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா?

விவசாய மூலப்பொருட்களை எங்கிருந்து பெறுகிறார்கள்?

விவசாயம் செய்வதற்கான நீர்ப்பாசன வசதிகளின் நிலைமை எவ்வாறுள்ளது?

விவசாயிகள் வெளிவேலைகளுக்குச் செல்கிறார்களா? வேறு தொழில்களில் ஈடுபடுகிறார்களா?

விவசாயத்தில் உழைப்புப் பிரிவினை எவ்வாறு உள்ளது? அங்குள்ள பெண்களின் உழைப்பு எத்தகையது?

விவசாயத்தில் உழைப்புப் பரிவர்த்தனைகள் எவ்வாறுள்ளன, வேலைகள் அவர்களுக்குள்ளே பகிரப்படுகின்றனவா? கூலியுழைப்பு பயன்படுத்தப்படுகிறதா?

விவசாயத்தில் வரலாற்று வழியில் அங்கு காணப்படும் மாற்றம் எத்தகையது?

விவசாய செலவுகளுக்கு அவர்களுக்கு வங்கிக் கடன் கிடைக்கிறதா?

கள ஆய்வின் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்:

நாளைய கள ஆய்வை இன்னொரு வகுப்பறையாகப் பாருங்கள். நீங்கள் கள ஆய்வை வீடுகளில் மேற்கொண்டாலும், அதுதான் உங்கள் வகுப்பறை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், நாம் அங்கு செல்வது அவர்களுக்கு கற்றுக் கொடுக்க அல்ல, அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளப் போகிறோம், ஆகையால், பணிவுடன், மரியாதையாகவும், கண்ணியமாகவும் பழகுங்கள். பிறகு அவர்கள் உங்களிடமிருந்தும் கற்றுக் கொள்வார்கள்.

நீங்கள் அங்கு செல்வது உங்கள் கோட்பாடுகளை நிரூபிக்க அல்ல, அவற்றுக்கான தரவுகளைப் பெறுவதற்கே என்பதை மனத்தில் கொள்ளுங்கள். அவர்கள் எவ்வாறு விவசாயம் செய்கிறார்கள்? எப்படி அவர்கள் சோளம் பயிரிடுகிறார்கள்? என்பதை அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள். அதே நேரத்தில் அவர்கள் நேரத்தையும் விரயம் செய்யாதீர்கள். அங்கு கூச்சலிடாமல், உங்களின் இருப்பு அவர்களின் சூழலை பாதிக்காதவாறு செயல்படுங்கள்.
அவர்கள் உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். உங்களின் கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். அவர்களை விடையளிக்குமாறு வற்புறுத்தாதீர்கள். கேள்விகள் கேட்கும் போது உணர்திறன் மிக்கவர்களாக செயல்படுங்கள், அவர்கள் மனத்தைப் புண்படுத்தும்படியான கேள்விகளைக் கேட்காதீர்கள். காட்டாக, அவர்களுக்கு எவ்வளவு கடன் உள்ளது என்பதையோ, யாரிடமிருந்து பெற்றார்கள் என்பதையோ சொல்ல அவர்கள் தயங்கலாம், சொல்ல விருப்பமில்லாமலும் இருக்கலாம்.உங்களிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு எந்தப் பலனுமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் பேசவோ, விடையளிக்கவோ மறுத்தால் அந்த இடத்தை விட்டு வந்து விடுங்கள்.அவர்களது தனிப்பட்ட விசயங்களில் தலையிடாதீர்கள். நீங்கள் அங்கு போராளியாகச் செயல்படச் செல்லவில்லை, கள ஆய்வு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

களஆய்வில் அறியப்பெற்றவை:

1. கினி கிராமத்தின் விவசாயப் பொருளாதாரம்:

நாங்கள் ஆய்வு மேற்கொண்ட பகுதியில் சிறு நிலவுடைமையாளர்களே இருந்தனர். அவர்கள் பழைய விவசாய முறைகளையே பின்பற்றி வருகின்றனர். பழைமையான உற்பத்தி உறவுகளே அங்கு இன்னும் நீடித்துள்ளன. விவசாயத்திற்குத் தேவையான பணத்தை உறவினர்களிடமிருந்தே பெறுகிறார்கள். அவர்கள் வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதில்லை. முதலாளித்துவ விவசாய முறை அங்கு காணப்படவில்லை. வாழ்வாதார விவசாயமே அங்கு செய்யப்படுகிறது. விவசாயம் பெருமளவில் அவர்களது உணவுத் தேவைகளுக்காகவே செய்யப்படுகிறது.

அங்கு இரு போகம் விளைவிக்கப்படுகிறது. ஃபிப்ரவரி முதல் அக்டோபர் வரை சோளம் பயிரிட்டு, ஊடுபயிராக தக்காளி மற்றும் பிற காய்கறிகள் பயிரிடுகிறார்கள். அக்டோபர் முதல் மார்ச் வரை கோதுமை பயிரிட்டு அதனூடே காலிஃபிளவரோ பட்டாணியோ பயிரிடுகிறார்கள். ஆப்பிள் மரம் வளர்க்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் விவசாயத்திற்கான நீர்ப்பாசன வசதிகள் இல்லை. விவசாயத்திற்கு மழை நீரையே நம்பியுள்ளனர். நிலங்களை உழுவதற்கு எருதுகளையே பயன்படுத்துகின்றனர். அவை கலப்பினமில்லை, நாட்டு மாடுகள். பசு மாடுகளிடமிருந்து உபரியாக கிடைக்கும் பாலை விற்கின்றனர். ஆடு வளர்க்கிறார்கள். அவர்கள் விவசாயத்திற்குக் கலப்பு விதைகள் பயன்படுத்தவில்லை, விதைகள், உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளைக் கடைகளிலிருந்துதான் வாங்குகிறார்கள், விளைச்சல் குறைவாகவே உள்ளது. நிலங்களைத் தரிசு போடுவதில்லை.

ஆண்கள் விவசாயச் சந்தைகளில் வேலை செய்யச் செல்கின்றனர் (தேர்ச்சியற்ற உழைப்பு). அதன் மூலம் தினம் 500-600 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். சிலர் கடைகளைப் பராமரித்து வருகின்றனர். அங்கு விவசாயிகளுக்கு வேளாண்மையின் மூலம் போதிய வருமானம் கிடைக்கவில்லை. வெளிவேலைகளில் வருவாய் கிடைத்த போதும் அவர்கள் நிலத்துடன் பிணைந்தவர்களாகவே உள்ளனர். பெண்கள் பெருமளவில் விவசாய வேலைகளிலும், நெய்வதிலும் ஈடுபடுகின்றனர். கால்நடைப் பராமரிப்பு, கால்நடைத் தீவன வளர்ப்பு, களையெடுப்பு, அறுவடை, ஆகியவற்றைப் பெண்களே செய்து வருகிறார்கள். நிலத்தை உழுவது, விதை விதைப்பது ஆகியவற்றை ஆண்கள் செய்கிறார்கள். சிலர் கால்நடைத் தீவனங்களைத் தனியாக விளைவிக்காமல், அறுவடையிலிருந்தே பெறுகிறார்கள்.

போக்குவரத்து வசதிகள் இல்லாததால், பெண்கள் வெளி வேலைகளுக்குச் செல்ல முடியாமல் விவசாய வேலைகளிலே முடங்கிப் போய் உள்ளனர். பெண்களின் உழைப்பு சரியாக அங்கீகரிக்கப்படாமல், குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. அங்குள்ள கிராமங்களில் பெருமளவு முதலீடுகளும் செய்யப்படுவதில்லை.

தங்களுக்குள்ளே விவசாய வேலைகளைப் பகிர்ந்து செய்து வருகின்றனர்.அறுவடை நேரத்தில் வேலைகளைத் தங்களுக்குள் பகிர்ந்தும் செய்கிறார்கள். கூலிக்கு ஆள் வைத்தும் செய்யப்படுகிறது. கூலி உழைப்பு குறைந்த அளவிலே பயன்படுத்தப்படுகிறது.

அவர்கள் தொடர்வரிசையிலமைந்த வீடுகளில் உறவினர்களோடு கூட்டுக் குடும்பங்களாக வசித்து வருகின்றனர். சிலர் மாவு அரைவை மில் வைத்துள்ளனர். அது வருவாய் பெறுவதற்காக என்றில்லாமல், அங்குள்ளவர்களின் சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகிறார்கள். அதற்கான மின்சாரக் கட்டணத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள். மாவு அரைப்பதற்கு பணத்திற்கு பதில் மாவைப் பெற்றுக் கொள்கிறார்கள். அவரவர் வீட்டில்தான் உண்ண வேண்டும் என்றில்லாமல் பகிர்ந்து உண்கிறார்கள். சமையலுக்கு எல்.பி.ஜி. எரிவாயு பயன்படுத்துகின்றனர். சாண வரட்டிகளையும் அடுப்பெரிக்கப் பயன்படுத்துகின்றனர்.

அங்கு பல வீடுகளில் சால்வை நெய்வதற்கான தறி வைத்துள்ளனர். அதற்கான கம்பளியை வெளியிலிருந்து பெறுகிறார்கள். அந்தச் சால்வையை அவர்களின் பேச்சுவழக்கில் பட்டு என்று அழைக்கிறார்கள். ஒரு பட்டுச் சால்வையை 5000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாய் வரை விற்க முடியும். சிலரே இரு சக்கர மோட்டார் வாகனங்கள் வைத்துள்ளனர். வாகனங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். ஊராட்சி ஏற்பாட்டில் குழாய்களில் தினம் 2 மணி நேரம் குடிநீர் வழங்கப்படுகிறது. காய்கறிகள், உப்பு, துணிமணிகளை கடைகளிலிருந்து வாங்கிக் கொள்கிறார்கள். ஒரு அரசு மருத்துவமனையும்,அரசு பள்ளிக்கூடமும் உள்ளது. அவர்கள் சொந்தத்திற்குள்ளேயே மணம் செய்து கொள்கிறார்கள். வரதட்சணை முறை இல்லை. மணமகன், மணமகள் இருவரின் ஒப்புதலின் மூலமே திருமணம் நடைபெறுகிறது. திருமணச் செலவுகளுக்கும் உறவினர்களிடமிருந்தே பெற்றுக் கொள்கிறார்கள். அங்கு பிள்ளையாரைக் கும்பிடும் வழக்கம் உள்ளது. ராதாஷ்வாமி முறையைப் பின்பற்றுவோர் இறைச்சி உண்பதை நிறுத்தி விட்டார்கள். அங்கு பெரும்பாலானவர்களிடம் குடும்ப அட்டைகள் இல்லை. 100 நாள் வேலைத் திட்டத்தில் சேர ஆர்வம் இல்லை என சிலர் தெரிவித்தனர். அரசின் திட்டங்கள் சரியாகச் செயல்படுத்தப்படாத நிலையே அங்கு காணப்படுகிறது.

ஆவாஸ் யோஜனா போன்ற அரசுத் திட்டங்கள் அரசியல் கட்சி சார்பிலே வழங்கப்படுவதாகத் தெரிவித்தனர். அந்தக் கிராமத்தில் பெரும்பாலும் பிராமணர்கள், தலித்துகள், ராஜபுத்திர சாதியினர் உள்ளனர். ’உயர்சாதி’யினரின் வீடுகள் மலை ஏற்றங்களிலும், தலித்துகளின் வீடுகள் தாழ் நிலத்திலும் காணப்படுகின்றன.

2. ஜ்வலபுரியில் இரண்டு ஆப்பிள் தோட்டங்களுக்குச் சென்றோம். ஒரு ஆப்பிள் தோட்டத்தில் 5000 ஆப்பிள் மரங்கள் இருந்தன. அதன் சொந்தக்காரர் காங்கிரசுக் கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒரு பெட்ரோல் நிலையமும், உணவு விடுதியும் சொந்தமாக வைத்துள்ளார். இரண்டாவது ஆப்பிள் தோட்டத்தில் 2000 ஆப்பிள் மரங்கள் இருந்தன. அதன் சொந்தக்காரர் உள்ளூர் சட்ட மன்ற உறுப்பினரின் மகன். ஆப்பிள் தோட்டங்களில் முதலாளித்துவ அமைப்பு போல் காணப்பட்டாலும் நிலக்கிழாரிய முறையே உள்ளது. மூதாதையர்களின் நிலச் சொத்துக்களில் நிலக்கிழார்கள் அரசியல் ஆதரவுடன் லாபகரமான சந்தைப் பொருட்களை விளைவிக்க பயன்படுத்துகிறார்கள். பொருளாதாரச் சரிவில் அழியக் கூடிய விவசாயப் பொருட்களான ஆப்பிள்களின் விலை வீழ்ந்துவிட்டது. காஷ்மீருக்கான வழங்கலும் தடைப்பட்டுள்ளது.

3. சுரங்கசாலை: மண்டி மாவட்டத்தில் சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலையை ஏற்படுத்துவதற்காக மலைகளைக் குடைந்து சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெளியிலிருந்து பார்க்கும் போது அங்கு எந்தப் பிரச்சனையும் இல்லாதது போல்தான் தென்படுகிறது. சம்ரதா பகுதியில் சுரங்கப் பாதை உருவாக்கும் வேலையில் 1,200 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதில் 700 பேர் உள்ளூரை சேர்ந்தவர்கள், 500 பேர் புலம்பெயர் தொழிலாளர்கள். அவர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். இரவு வேலையும் செய்கின்றனர். 20 அறைகளில் 120 பேர் வசித்து வருகிறார்கள்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தனிப்பட்ட சமூக வாழ்வு இல்லாததால், அவர்கள் அதிகம் சுரண்டப்படுகிறார்கள். அந்தத் தொழிலாளர்கள் ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ்/பாஜக சார்ந்த பி.எம்.எஸ் தொழிற் சங்கத்தில் இருந்து தற்பொழுது சி.ஐ.டி.யுவில் இணைந்துள்ளனர். அந்தச் சுரங்க வேலைக்காக அதிக அளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மண்டியில் அந்தச் சுரங்கச் சாலையின் வழியாகச் செல்லும் போது பயணத் தொலைவு 85 கிமீ குறைக்கப்படும் என்ற ஒரே காரணத்திற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அது பெருகிவரும் சுற்றுலாவாசிகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட சாலைத் திட்டம். அது ஒரு பாரபட்சமான வளர்ச்சித் திட்டம். அங்கு உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான வேறு எந்த முதலீடுகளும் செய்யப்படவில்லை. இதனால் அங்குள்ள சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது குடிநீர் மாசு, ஒலி மாசு மற்றும் நில அதிர்வுகளால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆக, புதிய தொழில் நுட்ப முறைகள் அறிமுகப்படுத்தப்படாமல், தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படாமல் உள்ளது. முறைசாராத் தொழில்களில் தொழில்நுட்ப அறிமுகம் குறைவாகவே உள்ளது. பஞ்சாபில் பார்த்தோமானால் அதிக அளவில் விவசாயத் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2000ஆம் ஆண்டு முதல் அங்கு அனைத்து வேலைகளும் எந்திரமயமாக்கப்பட்டுள்ளன. (மேற்கு வங்கத்தில் 1990ஆம் ஆண்டு முதல் நெல் வேளாண்மையில் கதிரடித்தல் கைகளால் செய்யப்படுவதில்லை.) நாங்கள் கள ஆய்வு செய்த இடங்களில் கிராமப் பொருளாதாரம் தொழில்நுட்ப வளர்ச்சியின்றி முடங்கிப் போன நிலையே தெரிய வருகிறது.

(தொடரும்)

(விகாஸ் ராவல் அவர்கள் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் திட்டமிடலுக்கான மையத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.)