ஜூன் 24 அன்று, அமெரிக்காவின் வாஷிங்டனில் மோதல்களை/ சச்சரவுகளைத் தீர்ப்பதற்கான அமைதியான வழிமுறையாக நேரடி ஜனநாயக முறைகளைப் பயன்படுத்துவதை முன்னிலைப்படுத்துவதற்காக “சண்டையிடுவதை நிறுத்துங்கள் வாக்கெடுப்பைத் தொடங்குங்கள்” என்ற சர்வதேச அளவிலான விழிப்புணர்வுப் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இந்த விளம்பர வடிவிலான விழிப்புணர்வுப் பிரச்சாரம் மோதலைத் தீர்ப்பதற்கான அமைதி வழிமுறையாக நேரடி ஜனநாயகத்தை ஊக்குவிக்கிறது.

இவ்வியக்கம் நீண்டகாலமாக நீடிக்கும் மோதல்களை அமைதியாகத் தீர்க்க உதவும் ஒரு முக்கியமான கருவியாக நேரடி ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்துகிறது- ஹாங்காங், கட்டலோனியா, தைவான் மற்றும் இலங்கை தமிழர் பிரச்சனை- என நீண்ட கால பிரச்சனைகளை சுமுகமான முறையில் தீர்ப்பதற்கான வழிமுறையாக நேரடி ஜனநாயகம் முன்னிறுத்தப்பட்டுள்ளதாக இது குறித்து குடிமக்கள் பொறுப்பு அறக்கட்டளையின் தலைவர் பால் ஜேக்கப் தெரிவித்துள்ளார்..

"சண்டையிடுவதை நிறுத்துங்கள் வாக்கெடுப்பைத் தொடங்குங்கள்” பிரச்சாரம் என்பது பொறுப்புக் குடிமக்கள் என்ற இலாப நோக்கற்ற அறக்கட்டளையால் உலகெங்கிலும் உள்ள நேரடி ஜனநாயக வல்லுநர்கள், ஆய்வாளர்கள், வழக்கறிஞர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள்- மற்றும் அமைப்புகளின் ஆதரவுடன் தொடங்கப்பட்டது.

இந்த பிரச்சாரம் மோதல்களுக்கான அடிப்படை பிரச்சினைகளுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாதிடாமல், இந்த மோதல்களுக்கு நேரடி ஜனநாயக முறைகளை பயன்படுத்துவதன் மூலம் அமைதியான தீர்வை அடைய முடியும் என்ற கருத்தை முன்வைக்கிறது. நேரடி ஜனநாயகத்தின் வடிவங்களான – முன்னெடுப்புகள்(initiatives) மற்றும் பொது வாக்கெடுப்பு (referendum ) ஆகிய கருவிகளை பரவலாக பயன்படுத்துவதன் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளின் கீழ் தீர்வை காண இயலும் என்ற கருத்தை முன்னிலைப்படுத்துகிறது.

"நேரடி ஜனநாயகத்தின் பயன்பாடானது மக்கள் விருப்பத்தின் நியாயமான வெளிப்பாடாக சர்வதேசிய கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் அவை சர்வதேச சட்டக் கட்டமைப்பிற்குள் அமைய வேண்டும் என்று குடிமக்கள் முன்னெடுப்பை ஊக்குவிக்கும் பல்கேரிய கூட்டமைப்பின் தலைவர் டேனீலா போஷினோவா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தனித்த தமிழ்த் தாயகத்தை நிறுவுவது குறித்தும் ,ஹாங்காங்கில் தீர்க்கப்படாத மோதல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலகளவிலான சமூக இணைய தளங்களில் 60 வினாடி காணொளி விளம்பரத்துடன் சண்டையிடுவதை நிறுத்துங்கள் வாக்கெடுப்பைத் தொடங்குங்கள்” என்ற இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் நேரடி ஜனநாயகத்தின் மூலம் சமாதானமாக தீர்க்கப்படக்கூடிய உலகெங்கிலும் உள்ள மோதல்களை முன்னிலைப்படுத்தத் தொடர் காணொளிப் பிரச்சாரங்களை உருவாக்க இருக்கிறது.

“உலகம் மோதல்களால் நிறைந்துள்ளது. இரத்தக் களரிகளால் மட்டுமல்லாமல் பிரிவினைவாதத்தைத் தீவிரமாக்கும் சொற்களாலும், செயல்பாடுகளாலும் இவற்றுக்குத் தீர்வு காண இயலாநிலை ஏற்பட்டுள்ளது. சண்டையிடுவதை நிறுத்துங்கள், வாக்கெடுப்பைத் தொடங்குங்கள் என்பது நேரடி ஜனநாயகம் குறித்த வல்லுநர்கள் ஒன்றிணைந்து, இந்த மோதல்களைத் தீர்ப்பதற்கான அமைதியான மற்றும் நியாயமான பாதையை ஏற்படுத்தவும், நேரடி ஜனநாயக வாக்களிப்பின் மூலம் தீர்வு பெறும் விதமாக விழிப்புணர்வை அதிகரிப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு பிரச்சாரமாகும்” என்று இது குறித்து தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் முன்னெடுப்பு மற்றும் பொதுவாக்கெடுப்பு நிறுவனத்தின் தலைவர் டேன் வாட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

நேரடி ஜனநாயகத்தின் கருவிகளை மேம்படுத்தவும் கட்டுப்படுத்தவும் அல்லது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளுடன் பொருந்தாத வகையில் அவற்றைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தவும் இந்த பிரச்சாரம் முயலும்.

ருமேனியா, உக்ரைன் இரு நாடுகளிலும் இன்று, நேரடி ஜனநாயகம் முன்மொழியப்பட்டு வந்த போதிலும் அதற்கான நெறிமுறைகளும், ஒழுங்குமுறைகளும், அவை அதிகமாக தேவைப்படும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோதல்களைத் தீர்ப்பதற்கு கிடைக்கா வண்ணம் அவற்றின் பயன்பாடு தடுக்கப்படுகிறது. மேலும், தற்போது திட்டமிடப்பட்ட வாக்கெடுப்புகளில்- உதாரணமாக, ரஷ்யாவில் - அதன் முடிவுகள் அங்கீகரிக்கக் கூடிய தரநிலையில் செய்யப்படாத வண்ணம் உள்ளன.

"இந்த விசயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர நாம் உதவ வேண்டும், அதன் மூலம் ஊடகங்களும், கருத்துரைக்கும் தலைவர்களும் மக்களும் நேரடி ஜனநாயகத்தின் ஒரு குறிப்பிட்ட வடிவம் மற்றும் அதன் பயன்பாடு சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் முறையானதா என்பது எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதை அறிவார்கள்," என்று கோவென்ட்ரி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் மாட் குவார்ட்ரப் குறிப்பிட்டுள்ளார்.

”சண்டையிடுவதை நிறுத்துங்கள், வாக்கெடுப்பைத் தொடங்குங்கள்” இயக்கம் உலகெங்கிலும் உள்ள நேரடி ஜனநாயக வல்லுநர்கள் மற்றும் அமைப்புகளைக் கொண்ட ஒரு ஆலோசனைக் குழுவை நிறுவியுள்ளது. இந்த இயக்கம் குறித்தும் நேரடி ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் தெரிவித்த சில கருத்துகள் இங்கே பின்வருமாறு.

“ஜனநாயகம் என்பது என்றும் முடிவடையாத ஓர் உரையாடல். இத்தகைய உரையாடல்களை அனுமதிக்கும் அரசியல் அமைப்புகளைக் கொண்ட நாடுகள் மோதல்கள் நிரந்தரமாக வளர்வதை அனுமதிக்கும் நாடுகளை விட மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. எனவே, முட்டாள்தனமாகப் பிறர் தலையில் சுத்தியலால் அடிப்பதற்கு பதில், ஒரு சமூகத்தின் பிரச்சனைகளை சரிசெய்யும் திறன்வாய்ந்த திருப்புளிகளாகக் குடிமக்களின் முன்முயற்சிகள், பொதுவாக்கெடுப்புகள் போன்ற நவீன நேரடி ஜனநாயக முறைகளை வடிவமைக்க வேண்டும்.

இன்றைய உலகம் அதிக உரையாடல்களுடனும், குறைந்த மோதல்களுடனும் இருக்க வேண்டியது அவசியம் என்று நவீன நேரடி ஜனநாயகம் குறித்த உலகளாவிய மன்றத்தின் இணைத் தலைவர் புருனோ காஃப்மேன் கூறியுள்ளார்.

"ஜனநாயகம் என்பது தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் பொது முடிவுகளில் மக்கள் கருத்திற்கு இடமளிக்கும் எளிய அமைப்பாகும். மோதல்களை அமைதியாகவும் நியாயமாகவும் தீர்க்க இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஆகச் சிறந்த அமைப்பாக இது உள்ளது. இந்தப் பிரச்சார இயக்கம் ஜனநாயகத்தின் மிக முக்கியமான ஆற்றல்மிக்க இரு கருவிகளை -- முன்னெடுப்பு மற்றும் பொது வாக்கெடுப்பு - பரப்புவதையும் முக்கியமான முடிவுகளில் மக்களின் குரலை ஒலிக்கச் செய்ய அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று முன்னெடுப்பு மற்றும் பொது வாக்கெடுப்பின் நிர்வாக இயக்குநர் ஜான் மாட்சுசாகா தெரிவித்துள்ளார்.

"மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அரசியல் திறனில் மன நிறைவு காணப்படாத சூழ்நிலையில், நேரடி ஜனநாயகத்தின் கருவிகளானவை, பிரதிநிதிகளின் சக்தியைக் கட்டுப்படுத்துவதற்கும், மக்களுக்கு இசைவில்லாத முடிவுகளைத் தடுத்து நிறுத்துவதற்கும், கொள்கை வகுப்பதற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்குவதற்கும் உதவும்.

இருப்பினும், நேரடிப் பங்கேற்பு கருவிகளின் ஒழுங்குமுறை மற்றும் நடைமுறை சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு இசைவாக இருக்க வேண்டும். இதனால்தான் "சண்டையிடுவதை நிறுத்துங்கள், வாக்கெடுப்பைத் தொடங்குங்கள்” பிரச்சாரம் மிகவும் முக்கியமானது” என்று யானினா வெல்ப் (ஆல்பர்ட் ஹிர்ஷ்மேன் ஜனநாயக மையம்) தெரிவித்துள்ளார்.

தலைமுறைகளாகத் தொடரும் சண்டை:

பல தலைமுறைகளாகத் தொடரும் சண்டைகள் முடிவுக்கு வர வேண்டும். கொடுங்கோன்மைத் தீ அணைக்கப்பட வேண்டும். மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு, மோதல்களைத் தீர்ப்பதற்கான அமைதியான வழிமுறையாக அரசுகள் இந்த உரிமையை மதிக்க வேண்டும். நேரடி ஜனநாயகத்தின் பயன்பாடு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சட்டக் கட்டமைப்பிற்குள் பயன்படுத்தப்பட வேண்டும், இதனால் மக்களது விருப்பத்தின் நியாயமான வெளிப்பாடாக அவற்றை சர்வதேசக் கூட்டமைப்பால் அங்கீகரிக்க முடியும்.

மக்களுக்குக் கல்வியளித்தல்

”சண்டையிடுவதை நிறுத்துங்கள், வாக்கெடுப்பைத் தொடங்குங்கள்” என்பது மக்களுக்கான சர்வதேச அளவிலான கல்விப் பிரச்சாரமாகும், இது மோதலைத் தீர்ப்பதற்கான அமைதி வழிமுறையாக நேரடி ஜனநாயகத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. பொறுப்புக் குடிமக்கள் அறக்கட்டளையால் நிறுவப்பட்ட இவ்வியக்கம் இப்போது உலகெங்கிலும் உள்ள நேரடி ஜனநாயக வல்லுநர்கள் மற்றும் அமைப்புகளால் ஆதரிக்கப்படுகிறது.

இணையதள முகவரி: https://stopfightingstartvoting.org/

நேரடி ஜனநாயகத்தைக் கைகொள்வோம்:

மக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் ஆட்சி மக்களாட்சி, என்ற ஆபிரகாம் லிங்கனின் ஜனநாயகம் குறித்த பிரபலமான வரைமுறை யாரும் அறியாததல்ல. ஆனால் அத்தகைய மக்களாட்சி இன்றளவும் எட்டப்படாததாகவே உள்ளது. பொதுவாக ஜனநாயகத்தை அதன் பண்பளவில் நேரடி ஜனநாயகம் மற்றும் மறைமுக ஜனநாயகம் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இன்று பெருமளவில் மறைமுக ஜனநாயகமே நடைமுறையிலுள்ளது.

மறைமுக ஜனநாயகம் என்பது பிரதிநிதித்துவ ஜனநாயகம் ஆகும். இவ்வமைப்பு முறையில் அரசியல் செயல்பாடுகளில், முடிவெடுப்பதில், சட்டம் இயற்றுவதில் மக்கள் நேரடியாகப் பங்கேற்க மாட்டார்கள். மக்களின் சார்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே - சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் -பங்கேற்பார்கள்.

ஆனால் பிரதிநிதித்துவ ஜனநாயகம் அதிகாரக் குவிப்பை, எதேச்சதிகாரத்தை ஏற்படுத்தி அதிகாரப் பரவலை தடுக்கிறது, மேலும் பெரும்பாலான சமயங்களில் மக்களின் உண்மையான நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தாமல், அரசியல்வாதிகளின் - தனிநபர்களின் சுயநலன்களையோ, கட்சியின், நிறுவனங்களின் நலன்களையோதான், மொத்தத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது இவ்வமைப்பின் பெரிய குறைபாடு.

சரியான முறையில் நேரடி ஜனநாயக முறைகளை பயன்படுத்துவதன் மூலம் பிரதிநிதித்துவ அல்லது மறைமுக ஜனநாயகத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய முடியும். நேரடி ஜனநாயகம் தூய்மையான ஜனநாயகம் என்றும் அழைக்கப்படுகிறது. நேரடி ஜனநாயக அமைப்பு முறையில் அரசின் கொள்கைகளை உருவாக்குவதில், முடிவெடுப்பதில், சட்டம் இயற்றுவதில் என எல்லா அரசியல் செயல்பாடுகளிலும் மக்கள் நேரடியாகப் பங்கேற்க முடியும். இதன் மூலம் அதிகாரக் குவிப்பு - அதிகாரம் மையப்படுத்தப்படுவதைத் தவிர்த்து அதிகாரம் பரவலாக்கப்படுகிறது.

ஒவ்வொரு அரசியல் செயல்பாடும் மக்களின் அங்கீகாரத்துடன் நடைமுறைப்படுத்தப்படுவதை நேரடி ஜனநாயகத்தின் மூலம் உறுதி செய்ய முடியும். நேரடி ஜனநாயகத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க எடுத்துக்காட்டாக பாரிஸ் கம்யூன் திகழ்ந்தது. 1871ல் மக்களின் தன்னெழுச்சியான புரட்சியின் மூலம் பாரிஸ் கம்யூன் நிறுவப்பட்ட போது அனைத்து அதிகாரச் செயல்பாடுகளும் ஜனநாயகமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய அளவில் நேரடி ஜனநாயகம் அதன் தூய வடிவில் சுவிட்சர்லாந்தில் அப்பென்செல், இன்னர்ஹோடன் மற்றும் கிளாரஸ் மாகாணங்களில் நடைமுறையில் உள்ளது. சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி அமைப்பில் பகுதியளவிலான நேரடி ஜனநாயகம் நடைமுறையில் உள்ளது. நேரடி ஜனநாயகத்தின் வலுவான கருவிகளைக் கொண்ட பிரதிநிதித்துவ ஜனநாயகமாக சுவிட்சர்லாந்து உள்ளது. நகராட்சியிலிருந்து கூட்டாட்சி மட்டம் வரை சுவிட்சர்லாந்தில் நேரடி ஜனநாயக முறைகள் செயல்பாட்டில் உள்ளன.

இதுவரை மக்கள் தொகையை காரணமாகக் கூறியே நேரடி ஜனநாயக முறையானது புறக்கணிக்கப்பட்டது. மக்கள் தொகை அதிகமுள்ளதால் அனைத்துக் குடிமக்களும் அரசியல் செயல்பாடுகளில் பங்கேற்பது நடைமுறையில் சாத்தியமில்லை, அதனால் மக்களுக்கு பதிலாக பிரதிநிதிகளின் அரசியல் பங்கேற்பின் மூலம் மட்டுமே ஜனநாயகத்தை செயல்படுத்த முடியும் என்று கூறியே இதுவரை நேரடி ஜனநாயக முறைகள் தட்டிக் கழிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இன்றைய நவீன மின்னணு யுகத்தில் இத்தகைய காரணம் அதன் காலப் பொருத்தப்பாட்டை இழந்து விட்டது என்பதால் மீண்டும் அதைச் சொல்லியே நேரடி ஜனநாயகத்தைப் புறந்தள்ளலாகாது. தகவல் தொழில்நுட்ப வசதிகளை அனைத்து மக்கள் தரப்பினருக்கும் கிடைக்கச் செய்வதன் மூலம் அவர்களை நேரடியாக அரசியல் செயல்பாடுகளில் பங்குபெறச் செய்ய இயலும்.

நேரடி ஜனநாயகத்தின் முக்கியக் கருவிகளாக மக்கள் முன்னெடுப்பும் (Popular Initiative), பொதுவாக்கெடுப்பும் (Referrendum) உள்ளன. மக்கள் முன்னெடுப்பின் மூலம் புதிய சட்ட முன்வரைவுகளை, சட்ட மாற்றங்களைக் கொண்டுவர முடியும், நடைமுறையில் உள்ள சட்டங்களைத் திரும்பப் பெறச் செய்ய முடியும், ஒரு குறிப்பிட்ட பிரச்சனை, கொள்கை, குறித்து மக்களால் அங்கீகரிக்கப்பட்ட முடிவுகளைப் பெறுவதற்காக பொதுவாக்கெடுப்பை முன்னெடுப்புச் செய்ய முடியும்.

நாடாளுமன்றத்தில் / சட்ட மன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள், கொள்கைகள் மக்களின் அங்கீகாரத்தைப் பெறும் வகையில் பொதுவாக்கெடுப்பை முன்னெடுக்க முடியும். இவ்வாறு அனைத்து மட்டத்திலும் அனைத்து தரப்பு மக்களின் பங்கேற்பை நேரடி ஜனநாயகத்தின் மூலம் உறுதி செய்ய முடியும். பிரதிநிதித்துவ ஜனநாயக முறையை விட நேரடி ஜனநாயக முறையின் மூலம் குடிமக்கள் அதிக அதிகாரங்களைப் பெறவும், எல்லா அரசியல் செயல்பாடுகளிலும் மக்களை பங்கேற்கச் செய்யவும், மக்களின் அங்கீகாரத்துடன் செயல்படுத்தும் ஒரு உண்மையான ஜனநாயகத்தை உறுதி செய்யவும் முடியும்.

இன்றைய காலகட்டத்தில் நம்முடைய அனைத்து சமூக அரசியல் பிரச்சனைகளுக்கும் நேரடி ஜனநாயகத்தின் மூலம் தீர்வு பெற முடியும் என்பதால் அதன் முக்கியத்துவத்தையும், அதைப் பற்றிய விழிப்புணர்வையும், பரவலாக்கி ஜனநாயகமாக்க வேண்டும். அவ்விதத்தில் "சண்டையை நிறுத்துங்கள் வாக்கெடுப்பைத் தொடங்குங்கள்” என்ற இந்த சர்வதேசப் பிரச்சார இயக்கத்தை நாம் ஆதரிக்க வேண்டும்.

இன்றைய உலகளாவிய சர்வதேச அரசியல், கட்டமைப்பு முதலாளித்துவ உள்ளடக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. அந்தக் கட்டமைப்புக்குள்ளே பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க முனைவது ஒரு குறைபாடாக இருந்த போதும், எல்லைகளைக் கடக்க எல்லைகளுக்குள்ளிருந்துதானே போராட்டத்தைத் தொடங்க வேண்டும்.

காலப் போக்கில் நடைமுறைச் சிக்கல்களுக்கான தீர்வு மக்களின் கைக்குச் செல்லும் போது இக்குறுகிய வரம்புகளைக் கடந்து, எல்லைகளை விரியச் செய்ய முடியும் என்பதால் ”சண்டையிடுவதை நிறுத்துவோம், வாக்கெடுப்பை தொடங்குவோம்” எனும் பிரச்சார இயக்கத்தை நாமும் ஆதரிப்போம். தமிழ்நாட்டிலும், இந்திய அளவிலும் இந்த இயக்கத்தை வலுப்படுத்துவோம், வளர்த்தெடுப்போம். சண்டையிடுவதை நிறுத்துவோம் என்பது போராட்டத்தைக் கைவிடுவதல்ல. போராட்டத்தை வேறொரு வடிவில் முன்னெடுத்துச் செல்வதையே குறிக்கிறது. போராட்டத்தை முன்னெடுப்போம். நேரடி ஜனநாயகத்தைக் கைக்கொண்டு செயல்படுத்துவோம்.

- சமந்தா