rajiv case victimsபேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, இரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய தமிழர் எழுவர் விடுதலைக்காகத் தமிழகம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அவர்களின் விடுதலைக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று பெற வேண்டிய தீர்ப்பனைத்தும் பெற்றாகி விட்டது.

அரசமைப்புச் சட்டம் உறுப்பு 161இன் படி இந்த எழுவரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநர் உரியவாறு முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் (நீதியர் இரஞ்சன் கோகோய் தலைமையிலான ஆயம்) 2018 செப்டெம்பர் 6ஆம் நாள் தீர்ப்பளித்து விட்டது. உறுப்பு 161இன் படி ஆளுநருக்குள்ள அதிகாரம் என்பது மாநில அரசுக்குள்ள அதிகாரம்தான், மாநில அரசின் முடிவைத்தான் ஆளுநர் ஏற்று ஆணையிட வேண்டும் என்பது சட்டத்தில் திட்டவட்டமாகத் தீர்ந்து போன செய்தி. 1980 ஆம் ஆண்டின் மாருராம் தீர்ப்பு உள்ளிட்ட பல வழக்குகளில் இந்திய உச்ச நீதிமன்றம் இதைத் தெளிவாக்கி விட்டது.

இந்த அடிப்படையில்தான் 2018 செப்டம்பர் 9ஆம் நாள் தமிழக அமைச்சரவை கூடி இந்த எழுவரையும் விடுதலை செய்ய முடிவெடுத்து ஆளுநருக்கு அறியத்தந்தது. இந்த முடிவை ஏற்று எழுவர் விடுதலைக்கு ஆணையிடுவது ஆளுநரின் சட்டக் கடமை. தவிர்க்கவோ தட்டிக் கழிக்கவோ முடியாத கடமை. காரணமே சொல்லாமல் தள்ளிப்போடவும் முடியாத கடமை.

எழுவர் விடுதலைக்கு எதிராகக் கடைசியாகத் தொடரப்பட்ட வழக்கை 2019 மே 9ஆம் நாள் தீர்வு செய்யும் போதும் நீதியர் ரஞ்சன் கோகோய் “nothing survives in this case” என்று சொல்லிப் பழைய தீர்ப்பையே உறுதி செய்தார். இத்தனைக்குப் பிறகும் ஆளுநர் அசைய மறுக்கிறார். அவர் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் கருத்துக் கேட்டிருப்பதாகச் செய்தி வந்த போது ஆளுநர் அலுவலகமே அதை மறுத்து விட்டது. சட்ட வல்லுநர்களைக் கலந்தாய்வு செய்வதாகச் சொல்லப்படுமானால் எவ்வளவு காலம்? எந்தச் சிக்கல் குறித்து? என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

குடியாட்சிய முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவை -- அதிலும் 28 ஆண்டுகளாகச் சிறைப்பட்டிருப்பவர்களின் விடுதலை தொடர்பாக அரசமைப்புச் சட்டப்படியும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படியும் எடுத்த முடிவை -- ஏற்காமல், எந்த விடையும் சொல்லாமல் காலவரையின்றி கிடப்பில் போடுவது சட்டத்தின் ஆட்சியையே கேலிக்கூத்தாக்குவதாகும். ஆளுநர் அரச மாளிகையின் தந்தக் கோபுரத்திலிருந்து இறங்கி வரட்டும். தமிழகத்தின் வினாக்களுக்கு விடை சொல்லட்டும். அமைச்சரவை முடிவை ஏற்பதில் ஏன் இத்துணைக் காலத்தாழ்வு என்பதற்கு வெளிப்படையாக விளக்கமளிக்கட்டும். ஏற்க முடியாது என்றால் அதற்குக் காரணம் சொல்லட்டும். காலந்தாழ்த்துவது ஆளுநர் உரிமை என்று வாதிடுவது குடியாட்சியத்தையே இழிவுபடுத்துவதாகும். முடியாட்சி செய்யும் மன்னர் கூட இப்படிச் சொல்ல மாட்டார். உறுப்பு 72இல் குடியரசுத்தலைவரோ உறுப்பு 161இல் ஆளுநரோ காரணமின்றிக் காலந்தாழ்த்த உரிமை இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவாக்கி விட்டது. காலந்தாழ்ந்த நீதி மறுக்கப்பட்ட நீதியே [Justice delayed is justice denied] என்ற கொள்கை ஆளுநருக்கும் பொருந்தும். அளவுமீறியதும் காரண விளக்கமற்றதுமான காலத்தாழ்வு (inordinate and unexplained delay) அரசமைப்புச் சட்டத்தின் 21ஆம் உறுப்பின் படியான ”right to life and personal liberty” வாழ்வுரிமையையும் ஆள்வகைத் தன்னுரிமையையும் மீறுவதாகும்.

அளவுமீறியதும் காரண விளக்கமற்றதுமான காலத்தாழ்வு அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது [Inordinate and unexplained delay is unconstitutional] என்பதை இதே வழக்கில் கொலைத் தண்டனையைக் குறைத்துத் தீர்ப்பளித்த போது உச்ச நீதிமன்றம் தெளிவாக்கி விட்டது.

ஆனால் ஆளுநரின் காலவரையற்ற இழுத்தடிப்பு நீதியைச் சாகடிக்கும் மௌனக் கொலை என்பதை இடித்துரைக்காமல் நீதிமன்றங்கள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்வது வெட்கக்கேடு! ஆளுநர் பதவி உயர்ந்த பதவி என்பதெல்லாம் ஒரு காரணமாக இருக்க முடியாது. மாந்தவுரிமைகளைக் காட்டிலும் எந்தப் பதவியும் உயர்வானதன்று. உயர்வான பதவியில் இருப்பவர்கள் இழிவான தந்திரங்கள் செய்யாதவர்களாகவும் இருக்க வேண்டும்.

சுருங்கச் சொல்லின் 2019 செப்டம்பர் 9இல் தமிழக அமைச்சரவை முடிவெடுத்த பின் ஓரிரு நாளில் அல்லது ஓரிரு கிழமையிலாவது ஆளுநர் முடிவெடுத்திருக்க வேண்டும். அதன் பிறகு இத்துணைக் காலமும் தமிழர் எழுவர் சிறையிலிருப்பது ”illegal custody” என்னும் சட்டப்புறம்பான காவலே தவிர வேறல்ல.

சிறையில் அவர்களும் வெளியில் நாமும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டோம். இனி பொறுத்திடோம். இது தமிழ் மக்களின் கோரிக்கையும் எச்சரிக்கையும் ஆகும்.

ஆளுநரின் அழிச்சாட்டியம் தமிழக இறைமையை மீறுவதாகும் என்ற நிலையிலும் கூட தமிழக அரசு ஆளுநருக்கு எதிராகக் குரல் எழுப்பாமல் ’எங்கள் கடமை முடிந்தது’ என்று நழுவப் பார்ப்பது எல்லாரும் கூடி நாடகமாடுகிறார்களோ என ஐயுறச் செய்கிறது.

அடுத்து என்ன செய்வது? இந்த ஆளுநரிடம் சட்டம் பேசுவதும் சைத்தானிடம் வேதம் ஓதுவதும் ஒன்றுதான் எனத் தோன்றுகிறது. பாஜகவும் காங்கிரசும் தவிர எந்தக் கட்சியும் எழுவர் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இந்த இரு பிற்போக்குக் கட்சிகளும் எழுவர் விடுதலையை எதிர்ப்பதற்காகவே எதிர்த்து வருகின்றன. ஏன் எழுவர் விடுதலை கூடாது என்பதற்கு இந்தக் கட்சிகள் சொல்லும் காரணங்களில் ஏரணம் இல்லை.

இறந்து போன இராசீவ் காந்தி முன்னாள் தலையமைச்சராம்! இருக்கட்டுமே! இது இனி என்றுமே மாறாத உண்மை! இன்னும் ஐம்பது நூறாண்டு ஆனாலும் அவர் முன்னாள் தலைமையமைச்சராகத்தான் இருப்பார். ஆகவே இந்த எழுவரையும் உயிருள்ள வரை விடுதலை செய்யக் கூடாது என்றாகி விடும். அப்படியானால் உயர்பதவி வகித்தவர்கள் கொல்லப்படுவதற்கு வேறு தண்டனைச் சட்டம் தேவைப்படும்.

இவர்கள் விடுதலை செய்யப்படுவது பன்னாட்டு அதிர்வுகளை உண்டாக்குமாம்! இதே வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 26 தமிழர்களில் 19 தமிழர்களை உச்ச நீதிமன்றம் விடுவித்த போது எந்தப் பன்னாட்டு அதிர்வலையும் அடிக்கவில்லை.

காங்கிரசு ஆட்சியாளர்களும் சரி, பாஜக ஆட்சியாளர்களும் சரி, உச்ச நீதிமன்றத்தில் இதே கரடிகளை அவிழ்த்து விடத்தான் செய்தனர். இந்த வழக்கில் கொலைத்தண்டனை குறைக்கப்பட்டதை எதிர்த்து மன்மோகன் ஆட்சி இப்படித்தான் மீளாய்வு விண்ணப்பம் செய்து தோற்றது. பிறகு வந்த மோதி ஆட்சியும் இதே காரணங்களைச் சொல்லியே குறைசீர் விண்ணப்பம் செய்து தோற்றது.

இந்த முட்டாள்தனமான காரணங்களுக்காகவே ஆளுநர் கோப்புகளை வைக்கோற்போரில் போட்டுப் படுத்திருக்கிறார் என்றால் அதை வெளிப்படையாகச் சொல்லட்டும்.

தமிழர் எழுவரின் விடுதலைக்கான ஆணையில் ஆளுநர் உடனே ஒப்பமிடுவது தவிர வேறு வழியில்லை என்பதுதான் சட்டப்படியான நிலை. பன்வாரிலால் புரோகிதரின் உளச்சான்று அதற்கு இடந்தராது என்றால் பதவி விலகிப் போய் விடலாம். இத்துணை நீண்ட ஆண்டுகளுக்குப் பின் எந்தமிழர் இனிய விடுமை கண்கொள்ள விடாமல் வழிமறிக்கும் புரோகித நந்தியே விலகு! என முழங்குவோம்!

- தியாகு