பிஞ்சு மனதிலும் ஜாதி நஞ்சு!

மரத்தில் இருந்து உதிர்ந்து விழுந்த நாவல் பழத்தை எடுத்துச் சாப்பிட்ட குற்றத்திற்காக, பத்து வயது தலித் சிறுவன் கருணாகரன் கழுத்தில் கயிற்றைக் கட்டி, மாட்டை வைத்து இழுத்துச் செல்லப்பட்டுள்ளான். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட குரங்குப்பேட்டை என்ற கிராமத்தில்தான் இக்கொடுமை நடைபெற்றுள்ளது. கருணாகரனின் தந்தை பாலு கூறுகிறார் : “கடந்த 31 ஆம் தேதி பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்த கருணாகரனிடம் என் மனைவி, காட்டில் மேய்ந்து கொண்டிருக்கிற ஆடுகளை ஓட்டி வரச் சொல்லியிருக்கிறார்.

காட்டிற்கு செல்லும் வழியில் மரத்தில் இருந்து உதிர்ந்து கிடந்த சில நாவல் பழங்களை எடுத்து கருணாகரன் சாப்பிட்டிருக்கிறான். அந்த மரம் மேல் சாதியை சேர்ந்த சப்பாணி என்பவருக்கு சொந்தமானது. என் மகன் பழத்தை சாப்பிட்டதை சப்பாணியின் மகன் மருதை பார்த்து விட்டான். "என் பழங்களை சாப்பிட்டதுக்கு காசு கொடு' என்று மருதை என் மகனிடம் கேட்டிருக்கிறான். பயந்து போன என் மகன் வீட்டிற்குப் போய் வாங்கி வருகிறேன்; என்னிடம் காசில்லை என்று கூறியிருக்கிறான். கோபமான மருதை, "உன்னை மாதிரி ஒரு சாதிக்காரன் என் பழத்தை சாப்பிடக்கூடாது' என்று கூறி, மரத்தில் கட்டியிருந்த மாட்டைப் பிடித்து வந்து கயிற்றின் மறுமுனையை என் மகனின் கழுத்தில் கட்டி, மாட்டை ஓடவிட்டிருக்கிறான். என் மகன் கதறக் கதற, மாடு அவனை இழுத்துக் கொண்டு காடெல்லாம் ஓடியிருக்கிறது.

“இதைப் பார்த்த எங்கள் பக்கத்து வீட்டுப் பெண், மாட்டை இழுத்துப் பிடித்து என் மகனைக் காப்பாற்ற முயல, மருதை அந்தப் பெண்ணையும் அடித்திருக்கிறான். இதில் அந்தப் பெண்ணின் பல் உடைந்து விட்டது. உடல், முகமெல்லாம் காயமடைந்து மூச்சுத் திணறி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த என் மகனை 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து, மருத்துவமனையில் சேர்த்தோம்.'' கருணாகரன் தற்பொழுது உடல் முழுவதும் காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறான். காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்துள்ளார் பாலு. வழக்குப் பதிவு செய்த போலிசார், மருதைக் கைது செய்து, சிறார் சீர்திருத்த மய்யத்திற்கு அனுப்பியுள்ளனர் ("குமுதம் ரிப்போர்ட்டர்', 19.9.2010). பிஞ்சுகளின் மனங்களிலும் ஜாதிய நஞ்சு எவ்வாறு ஏற்றப்பட்டுள்ளது என்பதற்கு, இக்கொடுமை ஒரு சிறு எடுத்துக்காட்டு.

சாதியை சமன்படுத்தும் காவல் துறை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் உள்ள கொந்தகை கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவர், தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளுக்காக சுவரொட்டி அடித்து ஒட்டியிருக்கிறார். இதைக் கண்டித்த சாதி இந்துக்கள், “உன் தலைவன் நினைவு நாளுக்கு போஸ்டர் ஒட்டினால், அதற்கு முன்னதாகவே உனக்கு நினைவு நாள் வந்துவிடும்'' என்று மிரட்டியுள்ளனர். அதேபோல, ஆகஸ்ட் 29 அன்று சாதி இந்துக்கள் நயவஞ்சமாக அரிகிருஷ்ணனை அழைத்து, கொலை செய்து கிணற்றில் போட்டு விட்டனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அதை சமன்படுத்த, சாதி இந்துக்கள் சிலரின் வீட்டை தலித்துகள் சேதப்படுத்தி இருக்கிறார்கள் என்று கூறி, சில தலித்துகள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது காவல் துறை ("குமுதம் ரிப்போர்ட்டர்', 12.9.2010). சாதி இந்துக்களின் பிரதிநிதிகளாக காவல் துறை செயல்படும் வரை, வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்கள் நாக்கு வழிக்கவே பயன்படும்.

பொது வழி யாருக்கு?

“இரு சக்கர வண்டிகளை தலித்துகள் எங்கள் தெருப்பக்கம் ஓட்டக் கூடாது'' என்று, மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகில் உள்ள கள்ளிக்குடி வட்டத்தில் உள்ள வில்லூர் கிராமத்தின் சாதி இந்துக்கள், நீண்ட நாட்களாக தடை விதித்துள்ளனர். இத்தடையை மீறும் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தி, ஊரைவிட்டே ஒதுக்கி வைத்து விடுகின்றனர். அண்மையில் ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு நகர்ப்புறத்தில் வசித்து வந்த ஜி. தங்கபாண்டியன் (24) என்பவர், சாதி இந்துக்களின் தெருவில் (பெரிய சாமி கோயில் தெரு) இரு சக்கர வண்டியில் வந்ததால், அவர் சாதி இந்துக்களால் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றவரையும் தடுத்துள்ளனர். இதற்குப் பிறகு ஓர் அமைதிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

சாதி இந்துக்கள் ஏற்பாடு செய்த இக்கூட்டத்திற்கு தங்க பாண்டியனின் சகோதரர் ஜி. முருகன் அழைக்கப்பட்டுள்ளார். தானும் தாக்கப்படுவோம் என்பதால், அவர் கூட்டத்திற்கு வரவில்லை. இதனால் கோபமடைந்த சாதி இந்துக்கள், தலித்துகள் பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும் என்று கூறி, செப்டம்பர் 4 அன்று நகரப் பேருந்து ஊருக்குள் வருவதைத் தடுத்தனர். அதன் பிறகு சாதி இந்துக்கள் காவல் துறையினரின் துணையுடன், தலித்துகள் மாற்றுப் பாதையில் இரு சக்கர வண்டியை ஓட்டிக் கொள்ளட்டும் என்று தெரிவு செய்துள்ளனர். இந்நிலையில் இரு வழிகளை வருவாய்த்துறை அடையாளம் காட்டியுள்ளது. தீண்டாமையை நியாயப்படுத்துவதற்கு ஓர் அரசுத்துறை துணிந்திருக்கிறது! பொது வழியில் செல்லும் உரிமைதான் தலித்துகளுக்கு வேண்டும்; தனி வழி அல்ல. பொது (வழி) என்பது, இங்கு சாதி இந்துக்களுக்கு உரியதாக ஆக்கப்பட்டுள்ளதை இனியும் அனுமதிக்க முடியாது. சாதி இந்துக்கள் வேண்டுமெனில், தனி வழியில் பயணம் செய்யட்டும்.

மரண தண்டனையைவிட கொடியது!

மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள செக்கிப்பட்டி என்ற கிராமத்தில் கே. அழகு என்பவருடைய குடும்பமே கடந்து 6 ஆண்டுகளாக ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், அக்குடும்பம் தங்களுக்குரிய 13 புளியமரங்களைக் கொண்ட நிலத்தை, பொதுபயன்பாட்டுக்கு தர மறுத்ததுதான் காரணம். இதற்காக ஊர் கூட்டம் கூட்டப்பட்டு, அழகு குடும்பத்துடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும், அப்படி அவர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் சாதி இந்துக்கள் தீர்மானித்திருக்கின்றனர். அழகு அவர்களின் தாயார் இறந்தபோது கூட, யாரும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கவில்லை.

மேலும் மளிகைக் கடையில் அவர் குடும்பத்தினருக்கு யாரும் எந்தப் பொருளையும் தரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இக்குடும்பத்திற்காக பரிந்து பேசிய பெரியவர் ஒருவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். தான் கிராம மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டிருப்பது தனக்கு பழகிப் போய்விட்டது என்றாலும், தன்னுடைய குழந்தைகள் சந்திக்கும் மனவேதனை கொடுமையானது என்கிறார் அவர். இக்குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ("இந்தியன் எக்ஸ்பிரஸ்' 23.8.2010).தீண்டத்தகாத மக்களை சமூகத்திலிருந்து வெறுத்து ஒதுக்குவது, மரண தண்டனையைவிட கொடியது என்றார் அம்பேத்கர். மரண தண்டனைக்கு எதிராக குரல் எழுப்புகின்றவர்கள், மேலூர் தலித்துகளுக்காகவும் குரல் கொடுப்பார்களா? 

அதிகாரமற்ற அரசியல்!

தலித் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை விசாரிக்க, இந்தியாவில் 171 சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. ஆனால், மகாராட்டிரா மக்கள் தொகையில் தலித்துகள் 11 சதவிகிதம் இருப்பினும், தலித்துகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றம் இன்னும் அங்கு உருவாக்கப்படவில்லை. மத்திய அரசு அளித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, 9 மாநிலங்களில் மட்டுமே வன்கொடுமை குற்றங்களை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன: ஆந்திரா, பீகார், சட்டீஸ்கர், குஜராத், கருநாடகம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம்.

தேசிய குற்றப்பதிவு ஆணையம் அளித்துள்ள புள்ளிவிவரத்தின்படி, “2006 முதல் 2008 வரை, நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிரான தாக்குதலில் 35,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2008இல், 30,913 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. தலித் முதலமைச்சராக இருக்கும் உத்திரப்பிரதேசத்தில் மட்டும், தலித்துகளுக்கு எதிரான தாக்குதலில் 7,960 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நாட்டிலேயே முதல் இடத்தில் இருக்கிறது. அரசியல் அதிகாரம் தான் தலித்துகளை அதிகாரப்படுத்தும் என்று தலித் அரசியல் கட்சிகள் இடையறாமல் கூறிவருகின்றன. ஆனால் ஒரு தலித் முதலமைச்சராக, அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்யும் மாநிலத்தில், தலித்துகள் மேலதிகமாக தாக்கப்படுவதற்கான காரணம் என்ன? எத்தனையோ நலத் திட்டங்களை மாயாவதி அறிவித்திருந்தும், தலித்துகளுக்கு எதிரான தாக்குதலை அவருடைய அதிகாரத்தால் தடுக்க முடியவில்லை. எது தலித்துகளை உண்மையில் வன்கொடுமைகளிலிருந்து தடுக்கும்? தலித்துகள் இந்துக்களாக இருக்கும்வரை, அவர்களால் சமூக அதிகாரத்தைப் பெறமுடியாது. அரசியல் அதிகாரம் அவர்களை இந்து அடிமைகளாக வைத்திருக்கவே உதவும்.

தமிழக அரசின் தலித் விரோதப் போக்கு

"பாபாசாகேப் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவையொட்டி, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், மத்திய சமூக நீதித் துறை, மராட்டிய அரசு ஆகியவை இணைந்து – அம்பேத்கர் திரைப்படத்தை இந்தி மொழியில் தயாரித்தன. இப்படத்தை எல்லா மொழிகளிலும் வெளியிட பரிந்துரை செய்து மத்திய அரசு நிதி ஒதுக்கியது. பண்பாட்டைச் சீரழிக்கும் படத்திற்கெல்லாம் வரிவிலக்கு அளித்து வெளியிடும் தமிழக அரசு, அம்பேத்கர் வரலாற்று திரைப்படத்தை வெளியிட மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. மேலும், தி.மு.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்து தலித் அதிகாரிகள் மீதான பழிவாங்கும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 30 பல்கலைக் கழகங்களில் ஒரேயொரு தலித் மட்டுமே துணை வேந்தராக இருக்கிறார்.

திருநெல்வேலியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருக்கும் அவரையும் அண்மையில் மாலை ராஜா என்ற தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். இப்பிரச்சினை குறித்து இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. நேர்மையான அதிகாரி என்று பாராட்டப்பட்ட உமாசங்கரும் பழிவாங்கப்பட்டிருக்கிறார். உள்துறை, நிதித்துறை, கல்வித்துறை, தொழில்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளிலும் தலித் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. மத்திய அரசு தலித்துகளுக்கு வழங்கி உள்ள சிறப்பு உட்கூறு திட்ட நிதி ரூ. 3,828 கோடி, எந்த துறைகளில் எந்தந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற விவரத்தை முதல்வர் வெளியிட வேண்டும். அரசின் தலித் விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்."

– செ.கு. தமிழரசன், இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர், 19.8.2010 அன்று சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்

Pin It