[1939-1949 காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிப்போக்குகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்ட சோவியத்து இந்தியவியலர்களில் முதன்மையானவர் ஏ.எம். தியாக்கோவ். அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் 1952இல் சோவியத்து (குமுகியக் குடியரசுகள்) ஒன்றியத்தின் (USSR) கீழையியல் ஆய்வுக் கழகத்தால் வெளியிடப்பட்டன. இவற்றில் ஒன்றுதான் ”இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தேசிய இனச் சிக்கல் பற்றி” தியாக்கோவ் எழுதிய கட்டுரை. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான காலத்தில் இந்தியாவின் தேசிய இனச் சிக்கல் குறித்து அவர் செய்த முகன்மையான ஆய்வின் முடிவுகள் இந்தக் கட்டுரையில் இடம்பெறுகின்றன. தியாக்கோவின் கருத்துரைகளை இந்தியப் பொதுமை இயக்கம் பொருட்படுத்தாமல் விட்டு விட்டது. இப்போதும் கூட இந்தியத் துணைக்கண்டத்தில் தேசிய இனச்சிக்கலைப் புரிந்து கொள்ள தியாக்கோவின் பார்வைகள் துணைசெய்யக் கூடியவை என்பதால் அவரது கட்டுரையை இங்கு தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம். இந்தக் கட்டுரையின் முதல் மூன்று பகுதிகளை 2021 நவம்பர், திசம்பர், 2022 சனவரி இதழ்களில் வெளியிட்டோம். இதோ அதன் தொடர்ச்சி:]

பாகிஸ்தானில் தேசிய இனச் சிக்கல்

தேசிய இனச் சிக்கலானது இந்திய ஒன்றியத்தில் போலவே பாகிஸ்தானிலும் முகமை வாய்ந்ததாகும். பாகிஸ்தான் உருவான போதே, இந்தியாவின் ஆஃப்கானிய ஆள்புலங்களை இணைத்துக் கொள்ளும் சிக்கலில் முசுலிம் லீகுக்கும் ஏனைய அரசியல் அமைப்புகளுக்கும் இடையே கூரிய முரண்பாடு வெளிப்பட்டது. மேற்கூறியது போல, செஞ்சட்டை அமைப்பும் அதன் நேச அமைப்புகளும் தங்களின் ஆள்புலங்களைப் பாகிஸ்தானில் இணைத்துக் கொள்வதை எதிர்த்ததோடு, இந்தியாவின் ஆஃப்கானிய ஆள்புலங்களிலிருந்து ஒரு தற்சார்பான பத்தானிய அரசு – புஷ்தூனிஸ்தான் அல்லது அல்லது பத்தானிஸ்தான் – அமைக்குமாறு கோரின. .

ஆகவே வட மேற்கு எல்லை மாகாண ஆள்புலங்களை பாகிஸ்தானில் இணைத்துக் கொள்ளும் சிக்கல் குறித்து 1947இல் நடைபெற்ற பொதுவாக்கெடுப்புக்கான வினாக்களின் பட்டியலில் பத்தானிஸ்தான் அமைக்கும் வினாவைச் சேர்த்துக் கொள்ள பிரித்தானிய அரசாங்கம் மறுத்து விட்டதால் ஆஃப்கானிய அமைப்புகள் அந்தப் பொதுவாக்கெடுப்பைப் புறக்கணித்தன. தற்சார்பான ஆஃப்கானிய அரசு வேண்டுமென்னும் கோரிக்கை வசீர்கள், அஃப்ரிதிகள் போன்ற பழங்குடிகள் வாழும் எல்லைப் பகுதியில் பேராதரவு பெற்றிருந்தது. பிரித்தானிய ஆட்சியாளர்களும் முசுலிம் லீகும், பிறகு பாகிஸ்தான் ஆட்சியாளர்களும் எல்லா வகையிலும் சூழ்ச்சிகள் செய்த போதிலும் பத்தானிஸ்தான் அமைப்பதற்கான இயக்கம் புதிய அரசியங்கள் ([இந்தியா, பாகிஸ்தான் ஆகிய] டொமினியன்கள்) உருவான பிறகுங்கூட ஓயவில்லை. இந்த இயக்கத்துக்கு ஆஃப்கானிஸ்தான் ஆட்சியாளர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக எல்லைப் பழங்குடிகளை பாகிஸ்தானில் இணைத்துக் கொள்வதற்கு வெகுவலுவாக எதிர்ப்புத் தெரிவித்தனர். எல்லைப் பழங்குடிகள் வதியும் நிலப்பரப்பைக் கட்டுப்படுத்த ஆங்கில-அமெரிக்கப் படைக்கு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் வழி விடுமாறு கட்டாயப்படுத்துவதற்குப் பத்தானியர் இயக்கத்தை பிரித்தானிய, அமெரிக்க வல்லரசியர்கள் ஓரளவு பயன்படுத்திக் கொண்டனர் என்பதில் ஐயமில்லை. ஆனால் முதன்மையாக இந்த இயக்கம் இந்தியாவைப் பிரிவினை செய்யும் பிரித்தானியத் திட்டத்துக்கு மட்டுமன்று, பாகிஸ்தானை பிரித்தானியரின் ஏவலாளாகப் பயன்படுத்துவதற்கும் எதிராக நடத்தப்பட்ட மக்களியக்கம் ஆகும்.

வடமேற்கு எல்லை மாகாணத்திலும், இந்திய மேலுரிமைக்குட்பட்ட ஆஃப்கானிய சமத்தான மாநிலங்களிலும், குறிப்பாகத் தற்சார்புப் பழங்குடிகள் எனப்பட்டோரின் நிலப்பரப்பிலும் பிரித்தானிய எதிர்ப்பியக்கம் அப்பகுதிகள் பிரித்தானிய இந்தியப் பேரரசில் இணைக்கப்பட்ட காலத்திலிருந்து ஓயவே இல்லை. பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதே எப்போதும் இந்திய ஆஃப்கானியர்களது போராட்டத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. 1919ஆம் ஆண்டில் பிரித்தானியருக்கு எதிரான ஆஃப்கானிய விடுதலைப் போரின் போது இந்திய ஆஃப்கானியர்களிடையே ஆஃப்கானிஸ்தான் பால் பரிவு பெருக்கெடுத்தது. ஆனால் 1929இல் ஆஃப்கானிஸ்தானில் பிரித்தானிய வல்லரசியர்களுடன் உடன்பாடு நாடிய ஒரு பிற்போக்கு ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு, இந்திய ஆஃப்கானியர்கள் காலனியாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரான தமது போராட்டத்தில் வேறு கூட்டாளிகளைத் தேடலாயினர். குறிப்பாகச் சொன்னால், இந்திய ஆஃப்கானியர்களது தேசிய இயக்கத்தின் பிரித்தானிய எதிர்ப்புப் பாதைதான் – இந்திய முதலியத் தேசியத்தின் பால், அல்லது இன்னுங்கூட காந்தியத்தின் பால் கொண்ட பரிவு அன்று – ஆஃப்கானியத் தேசிய இயக்கத்துக்கும் தேசிய காங்கிரசுக்கும் இடைப்பட்ட உறவுகளுக்கு விளக்கமாகிறது. .

செஞ்சட்டைப் படையின் தலைவர்களில் உயர் மட்டத்தினர் மட்டுமே – முதன்மையாக அப்துல் காஃபர்கான், கான் சாகிப் போன்றவர்களே – மெய்யான காங்கிரசாராகவும் காந்தி ஆதரவாளர்களாகவும் இருந்தனர். அவர்களைப் பின்பற்றிய செஞ்சட்டைப் படையில் பெரும்பகுதியினருக்கு தேசிய காங்கிரசோடு பெரிதாகப் பொதுத்தன்மை ஏதுமில்லை. காந்தியத்தோடு அந்த அளவுக்குக் கூட இல்லை. இவர்கள் ஆஃப்கானிய உழவர்கள், பிரித்தானியரிடமிருந்து விடுதலை பெற ஆவலுற்றவர்கள், தேசிய காங்கிரசு இந்தியாவின் முழு விடுதலையைத் தன் இறுதியிலக்காகப் பறைசாற்றியதால் மட்டுமே அதனோடு கூட்டாளி ஆனவர்கள். முசுலிம் லீக் எப்போதுமே பிரித்தானிய ஆட்சியாளர்களுடன் நெருங்கிய பிணைப்புடையது, அதே காரணத்தால் இந்திய ஆஃப்கன்கள்-பத்தானியர்கள் போன்ற தீவிர முசுலிம்களிடையே ஒருநாளும் ஆதரவு பெற்றதில்லை. இந்தியாவின் ஆஃப்கானிய ஆள்புலங்களை பாகிஸ்தானுக்குள் சேர்ப்பதெனும் வினா எழுந்த போது ஆஃப்கானியர்களில் பெரும்பான்மையினர் அதனை எதிர்த்து நின்றனர்.

பாகிஸ்தானில் அப்துல் காஃபர் கான் அவர்களைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பெற்ற கட்சி பாகிஸ்தானை ‘குமுகியக் குடியரசுகளின்’ (குமுகியம் = சோசலிசம்) கூட்டாட்சியாக மாற்றியமைப்பதே இலக்கென்று பறைசாற்றியது. இந்த வேலைத்திட்டம் வெறும் வாய்வீச்சுதான் என்பதில் ஐயமில்லை. அப்துல் காஃபர் கானுக்கும் குமுகியத்துக்கும் எக்காலத்தும் எவ்விதப் பொதுத்தன்மையும் இருந்தில்லை. ஆனால் அவர் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்தார். விரைவில் அவரும் அவரை ஆதரித்தோரும் – ஆஃப்கானிய தேசியர்கள் – சிறையிலடைக்கப்பட்டனர். இதற்குப் பிறகும் கூட பத்தானிஸ்தானுக்கான இயக்கம் தொடர்ந்தது. ஆனால் அடக்குமுறை காரணமாக, இயக்கத்தின் மையம் எல்லைப் பழங்குடிகளின் நிலப்பரப்புக்கு, குறிப்பாக வசிரிஸ்தானுக்கு மாறியது. நன்கறியப்பெற்ற ஃபக்கிர் இப்பி பத்தானிஸ்தான் அமைப்பதற்காக முனைந்து பாடாற்றினார். 1951இல் பத்தானியச் சிக்கல் பாகிஸ்தானில் நீடித்த கடுஞ்சிக்கல்களில் ஒன்றாகவே இருந்து வந்தது..

1948இல் பாகிஸ்தானில் சிந்துச் சிக்கல் தலைதூக்கிற்று. கராச்சி நகரம் பாகிஸ்தானின் இடைக்காலத் தலைநகரமாக்கப்பட்டது. கராச்சி நகரம் பாகிஸ்தானின் இடைக்காலத் தலைநகரம் ஆக்கப்பட்டது. பிறகு அதையே நிலையான தலைநகரம் ஆக்கவும் முடிவெடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் ஆகப் பெரிய நகரமும் பஞ்சாபின் வரலாற்று மையமும் ஆன லாகூர் 1947 ஆகஸ்டு-செப்டெம்பர் கலவரங்களின் போது பெரிதும் பாதிப்புற்றதோடு, மிகவும் கொந்தளிப்பான இடமும் ஆயிற்று. கராச்சியை பாகிஸ்தானின் தலைநகரமாக அறிவிப்பதோடு, சிந்து மாகாணத்திலிருந்து பிரித்து ஒரு தன்னாட்சி அலகும் ஆக்கும் திட்டம் சிந்து மக்களைச் சீற்றங்கொள்ளச் செய்தது. ஏனென்றால் சிந்திகள் கராச்சியைத் தங்கள் தேசியத் தலைநகராக மதித்தார்கள். சிந்து நிலத்தை பஞ்சாபில் சேர்க்கும் நகர்வு தங்கள் தேசிய வேணவாவிற்கு ஊறு செய்யும், தங்களைப் பஞ்சாபியரைச் சார்ந்து நிற்கும் நிலைக்கு உள்ளாக்கும் என்று எண்ணியதால் எப்போதும் இவ்வாறான எல்லாத் திட்டங்களும் அவர்களைக் கொதிப்புற செய்தன.

பாகிஸ்தானில் சிந்திகளுக்குப் பெரிய செல்வாக்கு இல்லை. அவர்களுக்கான தலைமையில் இந்திய ஒன்றியத்திலிருந்து வந்து குடிபுகுந்த முசுலிம்களோ பஞ்சாபியர்களோதான் பெரும்படியாக உள்ளனர். உழைக்கும் சிந்து வெகுமக்கள் அவ்வளவாக அமைப்புவழித் திரண்டிருக்கவில்லை. தொழிலாளர் வகுப்பு சிற்றளவாகவே உள்ளது. உழவர்கள் பின்தங்கிய நிலையிலும், நிலக்கிழார்களால் ஒடுக்குண்ட நிலையிலும் உள்ளனர். இந்த நிலக்கிழார்கள் பாகிஸ்தான் ஆட்சியாளர்களோடு எவ்வகையிலும் மோதிக் கொள்ள விரும்பாதவர்கள். முதன்மையாக இந்துக்களான சிந்துநில வணிக முதலாளர் வகுப்பு முன்னர் பஞ்சாபில் சிந்து ஒன்றிணைக்கப்படுவதை வன்மையாக எதிர்த்தது என்றாலும் இப்போது குரலுயர்த்த அஞ்சுகிறது. .

வங்காளச் சிக்கல் பாகிஸ்தானுக்குப் பெரிதும் முகமை வாய்ந்தது. பாகிஸ்தானின் மக்கள்தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் வங்காளிகள். பாகிஸ்தான் தேசிய இனங்களில் ஆகப் பெரிதும் முன்னேறியவர்கள் அவர்களே. கிழக்கு பாகிஸ்தான் வங்காளிகளுக்கு மேற்கு பாகிஸ்தானுடன் பொருளியல் வகையிலோ பண்பாட்டு வகையிலோ எவ்விதப் பிணைப்பும் இல்லை. அதனால்தான் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் வங்காளம் உள்ளிட்ட பாகிஸ்தானில் உருதுவை ஒற்றை அரச மொழியாக நுழைத்தும், அனைத்திசுலாமியப் பரப்புரையைத் தீவிரமாக்கியும் வங்காளத்தை பாகிஸ்தானுடன் கட்டிப்போட விரும்பினார்கள். ஒரு பொது மதமும் ஒரு பொது மொழியும் கிழக்கு பாகிஸ்தானை மேற்கு பாகிஸ்தானுடன் ஒன்றாக்கப் போதுமானதாய் இருக்கும் என்று பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் நினைத்தார்கள். ஆனால் மக்கள் மீது அயல்மொழியைத் திணித்துத் தன்வயமாக்கும் பிற்போக்கு முயற்சி தோற்றுப் போயிற்று. ஜின்னாவின் வாழ்நாளிலேயே, 1948 தொடக்கத்தில், உருதுவை பாகிஸ்தான் முழுமைக்குமான கட்டாய அரச மொழியாக அறிவிக்க பாகிஸ்தான் அரசமைப்புப் பேரவை செய்த முடிவு டாக்காவில் அரசு ஊழியர்களிடையிலும், சிறப்பாக மாணவர்களிடையிலும் பெருங்கிளர்ச்சிகளில் போய் முடிந்தது. வங்க மொழியை கிழக்கு பாகிஸ்தானில் அரச மொழியாக்க வேண்டும், பல்கலைக் கழகங்களில் கல்விபுகட்டுதலும் அரசத் துறைகளிலும் மாகாணத் துறைகளிலும் அலுவலகப் பணியும் வங்க மொழியில் நடத்தப்பட வேண்டும் என்றெல்லாம் அவர்கள் கோரினார்கள்..

வங்காளிகள் மீது உருது மொழியைக் கட்டாய அரச மொழியாகத் திணிக்கும் கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் கண்டனக் கூட்டங்களும் நடைபெற்றன. காவல்துறையோடு மோதல்களும் கூட இடம்பெற்றன. இந்தக் கிளர்ச்சிகளால்தான் ஜின்னா கிழக்கு வங்காளத்துக்குச் சென்று, உருது மொழியை பாகிஸ்தான் முழுவதன் மொழியாக ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டி மாணவர்களிடம் பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அப்போது, இது வங்காள மொழிக்கு ஊறு செய்யாது, அது மாகாணத்தின் ஆட்சிமொழியாக மதிக்கப்படும் என்று ஜின்னா அறிவித்தார்.

வங்காளச் சிக்கல் என்பது மொழியோடு முடியவில்லை. 1949 மார்ச்சு மாதம், பாகிஸ்தான் அரசமைப்புப் பேரவையில் கிழக்கு வங்காளப் பேராளர்கள் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களில் பாகிஸ்தான் நடுவணரசின் கொள்கைக்கு வலுத்த எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஏனென்றால் கிழக்கு வங்காளத்தை இந்தக் கொள்கை இயற்கை வளங்களைத் தோண்டியெடுக்கும் இடமாகப் பார்த்ததே தவிர, அதன் வளர்ச்சியில் அக்கறை கொள்வதாக இல்லை.

ஒரு 40 ஆண்டுக் காலத்தில் இந்து-முசுலிம் படுகொலைகள் தூண்டி விடப்பட்டதால் செயற்கையாக நலிவுறச் செய்யப்பட்ட வங்காளத் தேசிய வளர்ச்சி மேற்கு பாகிஸ்தானிலும் சரி, கிழக்கு பாகிஸ்தானிய வங்காளத்திலும் சரி, மீண்டும் உந்தம் பெறத் தொடங்கி வருகிறது. வங்காளத்தில் தேசிய மற்றும் உழவர் இயக்கம் தீவிரமடைவதே 1950 பிப்ரவரியில் இரு பகுதிகளிலும் இந்து-முசுலிம் படுகொலைகள் தூண்டி விடப்படுவதற்குக் காரணமாக இருக்கக் கூடும். இந்திய ஒன்றியத்திலும் பாகிஸ்தானிலும் ஆளும் கும்பல்கள் தங்களின் பிரித்தானிய ஆசானை வழிகாட்டியாகக் கொண்டு வங்காளிகளின் மக்கள் இயக்கத்தைக் குருதி வெள்ளத்தில் மூழ்கடிக்க முயன்று வருகின்றன. .

பாகிஸ்தானை ஆளும் கும்பல் தேசிய இன மாகாணங்களின் தன்னாட்சிக் கோரிக்கைகளுக்கும், பத்தானியர்கள், வங்காளிகளின் விடுதலை இயக்கத்துக்கும் எதிராக அனைத்து இசுலாமியக் கொள்கைப் பரப்புரையையும் சரியத்தையும் அனைத்து முசுலிம்களின் ஒற்றுமையையும் பாகிஸ்தான் முழுவதற்கும் அரச மொழியாக உருதுவைத் திணிப்பதையும் முன்னிறுத்த முயன்று வருகிறது. ஆனால் அனைத்து இசுலாமியப் பரப்புரை இப்போதும் பாகிஸ்தானின் தேசிய இனங்களிடையே சற்றே தாக்கம் கொள்கிறது என்றால், உருதுவை பாகிஸ்தான் முழுவதற்கும் அரச மொழியாக்கும் முயற்சி தேசிய இயக்கத்தை வலுவாக்கவே செய்கிறது.

கிழக்கு வங்காளத்துக்கும் மேற்கு பாகிஸ்தானுக்கும் இடையே பண்பாட்டுப் பிணைப்புகளும் பொருளியல் பிணைப்புகளும் இல்லாமையால் பாகிஸ்தான் மிக மிக நிலையற்ற அரசாகியுள்ளது. ஆனால், தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக பாகிஸ்தானின் அண்டை நாடாகிய பர்மாவில் தேசிய விடுதலை இயக்கத்தின் முன்னேற்றம் வங்காளத்தில் தேசிய விடுதலைக்கான மக்களினங்களின் இயக்கத்தைத் தீவிரமாக்க ஒரு குறிகை (சமிக்ஞை) ஆகலாம்.

ஆக, இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இந்திய ஒன்றியத்தில் மட்டுமல்லாமல் பாகிஸ்தானிலும் தேசிய இனச் சிக்கல் அரசியல் வாழ்வின் ஆகப் பெரும் உயிர்ச்சிக்கல்களில் ஒன்றாகியுள்ளது.

இந்திய ஒன்றியத்திலும் சரி, பாகிஸ்தானிலும் சரி, உந்தமும் வீச்சும் பெற்று வரும் தேசிய (இன) இயக்கத்தை ஆராய்ந்து பார்த்தால் நாம் பின்வரும் முடிவுகளை அடையலாம்:

தேசிய (இன) இயக்கம் வளர்ந்து வருகிறது என்றாலும் இது சமச்சீரான வளர்ச்சி இல்லை. மராத்தியர்கள், மலையாளிகளின் ஆள்புலங்களிலும், குறிப்பாக ஆந்திரத்திலும் உழைக்கும் மக்களின் பரந்துபட்ட பிரிவுகள் இவ்வியக்கத்தில் பங்கேற்று வருகின்றன, இது வலுவான பரிமாணங்களை அடைந்துள்ளது. இவ்வியக்கம் வங்காளத்திலும் கர்நாடகத்திலும் தமிழ்நாட்டிலும் சற்றே வலுக்குன்றியுள்ளது. குசராத்தில் இன்னுங்கூட வலுக்குன்றியுள்ளது. ஆகவே நாட்டுப்புறத்தில் கிழாரிய உறவுகளின் எச்சங்கள் கூடுதலாக இருந்தாலும் முதலியம் அதே நேரத்தில் உயர்ந்து வரும் வட்டாரங்களில்தான் இயக்கம் மிகவும் முனைப்பாகச் செயல்படுகிறது. .

நன்கு வரையறுத்த தேசியக் கோரிக்கைகள் கொண்ட வளர்ந்த தேசிய இயக்கம் கண்டுள்ள முழு அளவிலோ கிட்டத்தட்ட முழு அளவிலோ அமைந்த தேசங்கள் எப்போதும் தமக்கென வலுவான தேசிய முதலாளர்களைக் கொண்டிருப்பதில்லை. சரியாகச் சொன்னால், தெலுங்கு, மராத்திய மக்களினங்களிடையே தேசிய முதலாளர்கள் வலுக்குன்றியுள்ளனர், அவர்களால் பொருளியலாகவோ அரசியலாகவோ பிரித்தானிய வல்லரசியர்களோடு பிணைய முடியவில்லை என்னும் நிலையில் அவர்களிடையேதான் தேசிய இயக்கம் மிகவும் முனைப்பான வடிவங்கள் எடுக்கிறது. ஆதலால், முதலியத்தின் பொது நெருக்கடிக் காலத்தில் நடைபெறும் தேசிய இயக்கத்தில் பல்வேறு தேசங்களின் முதலாளர்களிடையிலான போட்டி இரண்டாம் நிலைப்பட்ட பங்கு வகிக்கிறது. தேசிய இயக்கமானது தொழிலாளர்களும் உழவர்களும் நகரங்களின் சிறுமுதலிய அடுக்குகளுமான வெகுமக்கள் இந்தியாவில் அயல் வல்லரசியர்கள், நிலக்கிழார்கள், ஆதிக்க முற்றுரிமை முதலாளர்கள் ஆகியோரின் ஒடுக்குமுறைக்கு எதிராக நடத்தும் போராட்டத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும். 1925இல் யூகோஸ்லாவியாவில் தேசியச் சிக்கல் பற்றி செமிச் எழுதிய கட்டுரைக்கு மறுமொழியாக ஜெ.வி. ஸ்டாலின் எழுதினார்:

காலனிகளையும் சார்புநிலைத் தேசிய இனங்களையும் சேர்ந்த வெகுமக்கள் நிதிச் சுரண்டலுக்கு எதிராக, ஆளும் தேசிய இனத்தைச் சேர்ந்த வல்லரசிய முதலாளர் வகுப்பு அந்தக் காலனிகளையும் தேசிய இனங்களையும் அரசியல் வகையில் அடிமைப்படுத்திப் பண்பாட்டு வகையில் சிதைப்பதற்கு எதிராக நடத்தும் போராட்டத்தில்தான் இன்று தேசியச் சிக்கலின் சாறம் பொதிந்துள்ளது. தேசியச் சிக்கலை அவ்வாறு முன்வைக்கும் போது வெவ்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த முதலாளர்களிடையிலான போட்டிப் போராட்டம் எவ்வகையான முகமையுடையதாக இருக்கக் கூடும்? தீர்மானிக்கும் முகமையுடையதாக இருக்க முடியாது என்பது உறுதி. சில நேர்வுகளில் முகமையுடையதாகவே இருக்க முடியாது. ஈண்டு முதன்மைச் செய்தி என்னவென்றால், ஆளும் தேசிய இனத்தின் வல்லரசியக் குழு காலனி நாடுகளையும் சார்புத் தேசிய இனங்களையும் சேர்ந்த பெருந்திரளான வெகுமக்களை, அனைத்துக்கும் மேலாக உழவர் பெருங்கூட்டத்தைச் சுரண்டியும் ஒடுக்கியும் வருகிறது என்பதும், அவர்களைச் சுரண்டி ஒடுக்குவதன் மூலம் வல்லரசியத்துக்கு எதிரான போராட்டத்துக்குள் இழுத்து விடுகிறது, இவ்வாறு அவர்களைப் பாட்டாளியப் புரட்சியின் கூட்டாளிகளாக மாற்றுகிறது என்பதுமே தவிர, ஒரு தேசிய இனத்தின் முதலாளர் வகுப்பு பிறிதொரு தேசிய இனத்தின் முதலாளர் வகுப்பை முறியடிக்கிறது அல்லது முறியடிக்கக் கூடும் என்பதன்று..

இந்திய நாட்டுப்புறத்தில் ஆதிக்கநிலையில் இருக்கும் கிழாரியச் சுவடுகளுக்கு எதிரான – கிழாரிய நிலவுடைமைக்கும் குறுநில மன்னர்களின் ஆட்சிக்கும் கடுவட்டி அடிமைப்படுத்தலுக்கும் எதிரான – உழவர் வெகுமக்களின் போராட்டம் இந்திய ஒன்றியத்திலும் பாகிஸ்தானிலும் தேசிய இயக்கங்களின் முதன்மை உள்ளடக்கமாக அமைகிறது. தேசிய முதலாளர் வகுப்பு தேசிய இயக்கத்திலும் ஓரளவு தீவிரமாகப் பங்கேற்றது; ஆனால் இந்த இயக்கம் மிகவும் கூரிய வடிவம்கொண்ட வட்டாரங்களில் மட்டும் அது இயக்குவிசையாக இல்லாமற்போனது.

இந்த ஒளியில்தான் ஆந்திர மகாசபை, மகாராட்டிர மாநாடு போன்ற தேசிய அமைப்புகளின் வகிபாகத்தை மதிப்பாய்வு செய்ய வேண்டும். அவை முதன்மையாக உழவர்களாலும், அறிவாளர்களில் குடியாட்சிய அடுக்கினராலும், நகர்ப்புற ஏழைகளாலும் ஆனவை. ஆனால் அவற்றில் உயரடுக்குக் குத்தகையாளர்கள், தேசிய முதலாளர்கள் ஆகியோரின் பேராளர்களும் (பிரதிநிதிகளும்) உள்ளனர். இந்த ஒளியில், இந்த அமைப்புகளைக் காட்டிலும் வகுப்பு (வர்க்க) உள்ளடக்கத்தில் ஒருபடித்தான தன்மை கொண்ட உழவர் சங்கங்கள், தொழிலாளர் சங்கங்கள் போன்றவற்றோடு அவற்றை நிகர்ப்படுத்தலாகாது. இந்த அமைப்புகள் இந்திய ஒன்றியத்திலும் பாகிஸ்தானிலும் மைய அரசின் தேசிய இனக் கொள்கையை எதிர்த்துப் போராடிக் கொண்டே, ஒருவிதத்தில் முற்போக்குப் பங்கு வகிக்கின்றன, தெலங்கானாவில் போன்று, உழவர் எழுச்சியில் முனைப்புடன் கலந்து கொள்ளவும் செய்தன.

ஆனால் பிற்போக்கு ஆற்றல்களின் ஒடுக்குமுறை கூடுதலாகும் நிலையில் அவை எப்போதுமே உடைந்து சிதறக் கூடும், தலைமையில் உள்ள முதலாளர்-குலாக்குப் பிரிவினர் இயக்கத்துக்கு இரண்டகம் செய்யக் கூடும். இந்தியா, பாகிஸ்தான் அரசுகள் பிரித்தானிய வல்லரசியத்திடம் கட்டுண்ட நிலவுடைமையாளர்கள், குறுநில மன்னர்கள், பெருமுதலாளர்களின் அரசுகளாக இருப்பதன் விளைவே அந்த அரசுகளின் பிற்போக்கான தேசியக் கொள்கை ஆகும்.

உருசியாவில் தேசிய ஒடுக்குமுறைக்கான காரணங்கள் பற்றி 1917ஆம் ஆண்டு தோழர் ஸ்டாலின் எழுதினார்:

இதற்குத் தலைக் காரணம் என்னவென்றால், நிலம்படைத்த உயர்குலம் தன் நிலையினாலேயே தேசியத் தன்னுரிமை உட்பட அனைத்துத் தன்னுரிமைக்கும் மிக உறுதியான, விட்டுக்கொடுக்காத பகை ஆகும் (அப்படி இல்லாமல் இருக்க முடியாது!); பொதுவாகத் தன்னுரிமையும், குறிப்பாகத் தேசியத் தன்னுரிமையும் நிலம்படைத்த உயர்குலத்தினது அரசியல் ஆளுகையின் அடித்தளங்களையே ஆட்டங்காணச் செய்கிறவை ஆகும் (அப்படி இல்லாமல் இருக்க முடியாது!).

ஆக, தேசிய ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் தேசியத் தன்னுரிமைக்கும் தேவைப்படும் உள்ளபடியான நிலைமைகளைத் தோற்றுவிப்பதற்குமான வழி… கிழாரிய உயர்குலத்தை அரசியல் அரங்கிலிருந்து விரட்டுவதாகும், அதன் கையிலிருந்து அதிகாரத்தைப் பறித்தெடுப்பதாகும்.

இந்திய நாட்டின் நிலக்கிழார்களும், குறுநில மன்னர்களும், முற்றுரிமை முதலாளர்களும், பிரித்தானிய, அமெரிக்க வல்லரசியர்களும் தேசிய ஒடுக்குமுறையின் ஏந்திகளாவர். இதனால், மெய்யாகவே தற்சார்பும் குடியாட்சியமும் கொண்ட இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான போராட்டத்தில் தேசிய இயக்கங்களின் முகமைப் பங்கு உறுதியாகிறது.

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தேசிய இயக்கமும் உழவர் இயக்கமும் உறுதி செய்யும் உண்மை என்னவென்றால், இந்த நாடுகளில் தேசிய இயக்கத்தின் புரட்சிய உள்ளாற்றல் அடியோடு ஒழிக்கப்பட்டு விடவில்லை, தேசிய இயக்கமானது மக்கள்-குடியாட்சியத்துக்கான போராட்டத்தில் பாட்டாளி வகுப்பின் வலுவான கூட்டாளியாக இருக்க முடியும். சீனத்தில் புரட்சியின் கடமைகள் பற்றிப் பேசுகையில் ஜே.வி. ஸ்டாலின் லெனினியத்தின் தந்திரவுத்திக் கொள்கைகளின் அடிப்படையில் எழுதினார்:

லெனினியத்தின் இவ்வாறான தந்திரவுத்திக் கொள்கைகளை நான் மனத்திற்கொண்டுள்ளேன்.

அ) ஒவ்வொரு தனி நாட்டின் தொழிலாளர் வகுப்பு இயக்கத்துக்கான வழிகாட்டு நெறிகளையும் வரைகையில் பன்னாட்டுப் பொதுமையமைப்பு (கொமிண்டர்ன்) அந்தந்த நாட்டிற்கே உரிய தனிச்சிறப்பான, குறிப்பான தேசியத் தன்மைகளைத் தவறாமல் கணக்கில் கொள்ள வேண்டும் என்ற கொள்கை;

ஆ) ஒவ்வொரு நாட்டின் பொதுமைக் கட்சியும் பாட்டாளி வகுப்புக்குப் பெருந்திரள் கூட்டாளியை --- இடைக்காலமான, ஊசலாடும் தன்மையுள்ள, நிலையற்ற, நம்பகமற்ற கூட்டாளி என்றாலும் கூட --- ஈட்டும் ஆகச் சிறு வாய்ப்பையும் கூட தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கொள்கை;

இ) பரந்துபட்ட வெகுமக்களின் அரசியல் கல்விக்குக் கொள்கைப் பரப்புரையும் கிளர்ச்சிப் பரப்புரையும் போதுமானவை அல்ல, வெகுமக்களுக்கு அரசியல் பட்டறிவு தேவைப்படும் என்ற கொள்கை.

தோழர் ஸ்டாலின் முன்னிறுத்திய இந்தக் கடமைகள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் முழுமையாகப் பொருந்தும்.

[அடுத்த இதழில்: முடிவுரை]