mariyala casterioஇது வரை நாம் கண்ட கியூபாவின் புரட்சிப் பெண்கள் கியூபப் புரட்சிக்கு முன்னர் பிறந்தவர்கள், கியூபப் புரட்சியின் வெற்றிக்காகத் தம்மை அர்ப்பணித்தவர்கள்… மரியெலா காஸ்ட்ரோ எஸ்பின் அவர்களுக்கு அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்.

பிறகு எதற்காக அவர்களோடு இவரையும் சேர்த்துள்ளோம், இதற்கும் ஒரு முக்கியக் காரணம் உள்ளது. அவர்கள் விட்டுச் சென்ற பணியைத் தொடர்வதோடு விட்டு விடாமல் அதை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுத்துச் சென்றதில் மரியெலா முக்கியப் பங்காற்றியுள்ளார் என்பதை நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.

மரியெலா காஸ்ட்ரோ எஸ்பின் கியூபப் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு 1962 ஜூலை 27இல் ஹவானாவில் புரட்சியாளர் வில்மா எஸ்பானுக்கும், கியூபாவின் முன்னாள் அதிபரான ரவுல் காஸ்ட்ரோவுக்கும் மூன்றாவது மகளாக பிறந்தார். இவருக்கு அலெஜாண்ட்ரோ காஸ்ட்ரோ எஸ்பான் என்ற சகோதரரும் உள்ளார்.

மரியெலா காஸ்ட்ரோ ஹவானாவில் உள்ள "என்ரிக் ஜோஸ் வரோனா" என்ற உயர் கல்வி நிறுவனத்தில் உளவியல், கல்வித் துறையில் பட்டம் பெற்றார்.

கியூபாவில் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு 1960களில் ஓரினச் சேர்க்கையாளர்கள் புரட்சியின் எதிரிகளாகக் கருதப்பட்டு கட்டாயத் தொழிலாளர் உழைப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மறுகல்வி அளிக்கப்பட்டது, 1967இல் தொழிலாளர் முகாம்கள் மூடப்பட்டன. 1993 வரை எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவ முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

2010இல் மெக்சிகன் செய்தித்தாள் லா ஜோர்னாடாவுக்கு அளித்த பேட்டியில் ஃபிடல் காஸ்ட்ரோ ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான தொழிலாளர் முகாம்கள் குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, பெரும் அநீதி என்று கூறி, அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் தப்பெண்ணங்கள் தனக்கு இல்லை என்ற போதும், மற்ற அரசியல் விஷயங்களில் தான் கவனம் செலுத்தியதாகவும், அந்த நிலைமைகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மரியெலா குழந்தைப் பருவத்திலிருந்தே ஓரினச் சேர்க்கையாளர் மீது வெறுப்புக் கொண்ட சமூகச் சூழலில் வளர்ந்ததால் குழந்தையாக இருக்கும் போது தானும் பிரச்சனைக்குரியவராய் இருந்ததாக ஒப்புக்கொள்கிறார். தான் "ஓரினச் சேர்க்கையாளர்களைப் பார்த்துச் சிரித்து கேலி செய்ததாகவும் நினைவு கூர்கிறார்.

அவருடைய ‘எல்ஜிபிடி’ நண்பர்களின் (திருநர், பிற பாலினத்தார், பிற பாலியல் நிலைப்பாடுடையோர் (‘LGBTQ+’) மூலமே அவர்களைப் பற்றியும், அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், போராட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு அடைந்ததாகக் குறிப்பிடுகிறார். ‘எல்ஜிபிடி’ சமூகத்தார்,  அரசின் சட்டம், கொள்கை, சமூகத் தரநிலைகள், பாரம்பரியம் எனப் பல்வேறு அடிப்படையில் இடைவிடாமல் குறிவைக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

மரியெலா சொல்கிறார் “பெற்றோரிடம் கேள்விகள் கேட்க நாங்கள் எப்போதும் அனுமதிக்கப்பட்டதால், நாங்கள் அடிக்கடி உரையாடுவோம். அனைவரின் உரிமைகளையும் பாதுகாக்காதது தீர்க்கப்பட வேண்டிய ஒரு துயரம் என்று பெற்றோர் எப்போதும் எங்களுக்குக் கற்பித்தனர்.

எல்ஜிபிடி, எச்.ஐ.விஆல் பாதிக்கப்பட்ட நபர்களையும் உள்ளடக்கியதே "அனைவர்” என்ற பதம் என்று அவர்களிடமே கற்றுக் கொண்டோம்.” தான் குழந்தையாக இருந்த போது ஒரு நபர் தனது பாலியல் நிலைப்பாடு காரணமாக அவரது தந்தையால் நிராகரிக்கப்பட்டதையும் அதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதையும் கேட்டு அதிர்ச்சியடைந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

வரலாற்று ரீதியாக, கியூபாவில் திருநர் விடுதலைக்கான  இயக்கம் விரிவு பெற்று எல்ஜிபிடியினரின் விடுதலை இயக்கமாக வளர்ச்சி பெறுவதற்கு வழிவகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் மகளிர் கூட்டமைப்பைத் தலைமை தாங்கிப் பெண்களை "உற்பத்தியிலும், புரட்சிகர" வேலைகளிலும் ஒருங்கிணைத்த பெருமைக்குரிய மரியெலாவின் தாய் வில்மா எஸ்பின் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநர், மாற்றுப் பாலினத்தார், மாற்றுப் பாலியல் நிலைப்பாடுடையோரின் (LGBTQ+) சம உரிமைகளுக்காகப் போராடினார்.

1988இல் தேசிய சுகாதார சேவையில் பாலின - மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகளை சேர்க்க வில்மா போராடினார். ஆனால் அது பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்படாததால் சட்டமாக நிறைவேறவில்லை. தாய் விட்டுச் சென்ற பணியை மகள் மரியெலா முன்னெடுத்தார். 2008இல் அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. வில்மாவிடம் ஊக்கம் பெற்று மரியெலா அவரது பணியைத் தொடர்வதன் மூலம் தாய்க்குப் பெருமை சேர்த்து வருகிறார்.

ஏற்கனவே உணர்திறன் கொண்ட ஒருவர் (வில்மா) கிடைத்தது எங்களுக்கு  நல்வாய்ப்பாக அமைந்தது என மரியெலா கூறுகிறார். தந்தை ராவுல் ஆரம்பத்தில் அமைதி காத்த போதும்,  எப்போதுமே தன்னையும், தனது உடன்பிறப்புகளையும் அவர்களது  நம்பிக்கைகளுக்காகவும், அவர்களுக்கு ஏற்புடைய விசயங்களுக்காகவும், காரணங்களுக்காகவும் போராட ஊக்குவித்ததாகவும் கூறியுள்ளார்.

தன் தந்தை ராவுலும் தன் தாயால்தான் உணர்திறனும், கல்வியும் பெற்றதாகவும் அதனால்தான் ஒருமித்த கருத்தை அடைவதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டதாகவும், கியூபக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இது குறித்த புரிதலை ஏற்படுத்தியதாகவும் சொல்கிறார் மரியெலா.

என் வாழ்க்கையில் எழுச்சியூட்டும் முன்மாதிரியாக இருந்த ஒரு மிக முக்கியமான கல்வியாளரை நான் வாழ்த்த விரும்புகிறேன், உங்கள் குடும்பத்தைக் கைவிடாமல் நீங்கள் புரட்சியை நேசிக்க முடியும் என்றும், புரட்சியைக் கைவிடாமல் உங்கள் குடும்பத்தை நேசிக்க முடியும் என்றும் எனக்குக் கற்றுக் கொடுத்தவர். ஒரு தந்தையாகவும், ஒரு புரட்சியாளராகவும் உங்கள் உதாரணத்திற்கு நன்றி எனத் தன் தந்தை ராவுல் காஸ்ட்ரோவை பற்றி கூறியுள்ளார்.

2007இல் வில்மா எஸ்பின் இறந்தார். "நாம் பாலின சமத்துவத்தை அடைய முடியும் என்று நான் அவருக்கு உறுதியளித்தேன், அது இன்னும் நிறைவேறாததால் என்னால் இப்பணியை விட்டு விட முடியாது." என்கிறார்  மரியெலா.

1959இல் கியூபாவில் கருக்கலைப்பு இலவசமாகவும் சட்டப்பூர்வமாகவும் ஆக்கப்பட்டது, ஊதியத்துடன் ஒரு வருட மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டது, கியூப அரசு பொதுக் குழந்தைப் பராமரிப்புச் சேவையைக் குடிமக்களுக்கு வழங்கியது. பாலின வேறுபாடுகளைக் களையும் விதமாக அனைவருக்கும் சம ஊதியம் வழங்கப்பட்டது. ஓரினச் சேர்க்கை குற்ற நடவடிக்கைகளிலிருந்து 1970களில்  நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பண்பாட்டுச் சூழலிலும் மாற்றம் ஏற்பட்டது.

பாலியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் பாகுபாடுத்துவது சட்ட விரோதமாக்கப்பட்டது.  ஓரினச் சேர்க்கையாளர்களையும், திருநர்களையும் அவமரியாதை செய்வதைத் தடுக்கும் விதமாக காவல்துறைக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

கியூபாவில் ஒரு பண்பாட்டுப் புரட்சியை மரியெலா முன்னெடுத்துள்ளார். ‘எல்ஜிபிடி+’ உரிமைகளுக்கான போராளியாகவும் உள்ளார். மரியெலா காஸ்ட்ரோ ’எல்ஜிபிடி+’ சமூகத்தின் வெளிப்படையான ஆதரவாளராக உள்ளார்.

அதற்காகத் தனது சொந்த குடும்பத்திற்கு எதிராகச் செல்வதாக இருந்தாலும் அவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவேன் என்று பகிரங்கமாகக் கூறியுள்ளார். ’எல்ஜிபிடி+’ சமூகத்தின் அங்கீகாரத்திற்கான  போராட்டத்திற்கான முக்கிய இயக்குவிசையாகவும், தூண்டுகோலாகவும் மரியெலா பரவலாக அறியப்படுகிறார்.

லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், கியூபாவிலும் அச்சமூகத்திற்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாகக் காலங்காலமாகப் பரப்பப்படும் தவறான கருத்துகளையும் கலைக்கும் விதமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மரியெலா தனது தாய் வில்மா எஸ்பின் 1960இல் ஏற்படுத்திய கியூபப் பெண்கள் கூட்டமைப்பை மாதிரியாகக் கொண்டு கியூபாவின் பாலியல் கல்விக்கான தேசிய மையத்தை ஹவானாவில் உருவாக்கி, அதன் இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார்.

இவ்வமைப்பு சமூகத்தால் ஓரங்கட்டப்பட்ட விளிம்புநிலை மக்களின் சம உரிமைகளுக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் பணியாற்றி வருகிறது. ‘எல்ஜிபிடி’ சமூகத்தினர் சட்ட உதவி, கல்வி, சுகாதார சேவைகள் பெறுவதற்கு இவ்வமைப்பு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

இந்த வேலையின் முக்கியத்துவத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர் வில்மா என மரியெலா தன் தாயைக் குறிப்பிடுகிறார். கியூபா பாலியல் கல்விக்கான தேசிய மையத்தை (செனெசெக்ஸ்) உருவாக்கும் முன்பு மரியெலா கியூபப் பெண்கள் கூட்டமைப்பில் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் சமூக ஆர்வலராகச் செயல்பட்டார்.

மரியெலா ஒரு நேர்காணலில் கியூப மகளிர் கூட்டமைப்பு "பல அரங்கங்களில் ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராடியதாகவும் கியூப மகளிர் கூட்டமைப்பு நிறுவப்பட்ட பின்னர், கியூபப் பெண்களின் பொது, பொருளாதார சமூக நிலை வியத்தகு அளவில் உயர்ந்தது - பெண்களுக்கு வேலைவாய்ப்பு சம ஊதிய வாய்ப்புகள் மகப்பேறு கால விடுப்பு பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.

மரியெலா திருநர்களுக்கு முழு கவனம் செலுத்துவதற்கான தேசிய ஆணையத்தின் இயக்குநராகவும் செயல்படுகிறார். ‘எல்ஜிபிடி’ உரிமைகளின் அங்கீகாரம், எய்ட்ஸ் தடுப்பு குறித்து திருநர்கள்பால் முழுக் கவனம் செலுத்துவதற்கான தேசிய ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

மரியெலா 2005இல் திருநர்கள் பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை பெறவும், அவர்கள் சட்ட வழியில் பாலினத்தை மாற்றிக் கொள்வதற்குமான ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். அதன் அடிப்படையில் கியூபர்களுக்குப் பாலியல் மாற்ற அறுவை சிகிச்சையைக் கட்டணமில்லாமல் அனுமதிக்கிற சட்டம் ஜூன் 2008இல் நிறைவேற்றப்பட்டது.

1990இல் உலக சுகாதார அமைப்பு (WHO) சர்வதேச நோய்களின் வகைப்பாட்டிலிருந்து ஓரினச் சேர்க்கையை அகற்றியது. அதையொட்டி ஒவ்வொரு மே17ஆம் நாளும் திருநர் வெறுப்புக்கு எதிராகவும், தன்பாலின, இரு பாலினச் சேர்க்கை மீதான வெறுப்புக் கலாசாரத்திற்கு எதிரான சர்வதேச தினமான மே 17ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.

2008ல், பாலியல் கல்விக்கான தேசிய மையமும், திருநர் மீது முழு கவனம் செலுத்துவதற்கான தேசிய ஆணையமும் ‘எல்ஜிபிடி’ சமூகத்தினரின் பிரச்சினைகள் குறித்தும், ஓரினச்சேர்க்கையாளர் மீதான வெறுப்பு, திருநர் வெறுப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான மாதமாக மே மாதத்தை அறிவித்தது. ஒவ்வொரு மே மாதமும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், எல்ஜிபிடி + சமூகத்தினர் கொண்டாடுவதற்கான சூழல் உருவாக்கப்படுகிறது.

1996ல், கியூபா கல்வி அமைச்சகம் (MINED), கியூபாவின் பாலியல் கல்விக்கான தேசிய மையத்துடன் இணைந்து கியூப பள்ளிகளில் குழந்தைகளுக்கு இனப்பெருக்கம், பாலுறவு, பாலின சமத்துவம், பாலியல் வன்முறை பாலுறவு மூலம் பரவும் நோய்த்தொற்றுகள் ஆகியவற்றைக் கற்பிப்பதற்கான ஒரு தேசிய பாலியல் கல்வித் திட்டத்தை உருவாக்கியது. ,

மரியெலா காஸ்ட்ரோ கியூப பன்முக பாலியல் ஆய்வு மையத்தின் தலைவராகவும், பாலின அடையாள பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான தேசிய ஆணையத்தின் தலைவராகவும், எய்ட்ஸ் நோயைத் தடுப்பதற்கான நேரடி நடவடிக்கைக் குழுவின் உறுப்பினராகவும், பாலியல் நலத்திற்கான உலக கூட்டமைப்பின் (WAS) நிர்வாக உறுப்பினராகவும் உள்ளார்.

பாலியல் கல்விக்கான தேசிய மையம் (CENESEX) வெளியிடும் பாலியலும், சமூகமும் என்ற ஆய்வு பத்திரிகையின் இயக்குநராகவும் உள்ளார். மரியெலா 13 ஆய்வுக் கட்டுரைகளையும் ஒன்பது புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.

பல்வேறு நிறுவனங்களில் எச்.ஐ.வி / எய்ட்ஸை பற்றி நிலவும் களங்கத்தை குறைக்கும் விதமாக மரியெலா மேற்கொண்ட ஆய்வு,பணியின் விளைவாக  கியூபாவில் பாலியல் நலத்தில் பெரும் நேர் நிறையான மாற்றங்களுக்கு வழிவகுத்தன. கியூபாவில் எச்.ஐ.வி தொற்று விகிதம் மிகக் குறைந்த அளவிலே உள்ளது. மேலும் எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டின் சுகாதார அமைப்பு மூலம் இலவச ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகள் கிடைக்கின்றன.

உலக சுகாதார நிறுவனம் ஜூன் 2015ல் தாய் மூலம் குழந்தைக்கு எச்.ஐ.வி, சிபிலிஸ் தொற்று பரவுதலை வெற்றிகரமாக தடுத்த முதல் நாடாக கியூபாவை அங்கீகரித்தது.

2013 மே 5 ல், எல்ஜிபிடி + சமூகத்திற்கான விழிப்புணர்வை மையமாகக் கொண்ட சமூகநீதி மன்றத்தின் விருதை பெறுவதற்காக மரியெலா பிலடெல்பியாவுக்குச் சென்றார், எல்ஜிபிடி சமூகத்தைப் பற்றிய விழிப்புணர்வை பரப்பும் நிறுவனங்களுடன் அவர் பணியாற்றியதற்காக. குழுவின் தலைவரும் நிறுவனருமான மால்காம் லாசின், மரியெலா உண்மையிலே எல்ஜிபிடி சமத்துவத்திற்கான ஒரு சர்வதேச கதாநாயகர் என்றும் எல்ஜிபிடி கியூபர்களுக்காக குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளார்" என்றும் போற்றினார்.

மரியெலா தேசிய மக்கள் அவையின் உறுப்பினராக செயல்பட்டார். 2014ல் வேலைவாய்ப்பில் பாலியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் பாகுபாடு காட்டத் தடை விதிக்க கியூபச் சட்டமன்றத்தில் வாக்களிக்கப்பட்ட போது, மரியெலா பாலியல் நிலைப்பாட்டின் பாலின அடையாளம், பாலியல் சார்புநிலை அடிப்படையில் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை என்று அந்த மசோதாவை எதிர்த்து வாக்களித்தார்.

மரியெலா பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை மேற்கொள்ளாமலே திருநர் தங்கள் பாலின அடையாளத்தை மாற்ற அனுமதிக்கும் சட்ட முன்னெடுப்பையும் செய்துள்ளார். குடும்பச் சூழலில் பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர், வயதானவர்களின் உரிமைகளை மிகவும் வலுவாக உத்தரவாதம் செய்யும் விதமாகவும், பாலினப் பாத்திரங்களை மேலும் ஜனநாயகப்படுத்துவதற்காகவும் குரல் கொடுத்துள்ளார்.

ஒரே பாலினத் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்கத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். கியூப அரசு குடும்ப நெறியில் திருமணத்தின் வரையறையில் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் திருமணம் என்பதை இரண்டு நபர்களின் இணையேற்பாக, அங்கீகரிக்கவேண்டும் என்ற மாற்றத்தை மரியெலா முன்மொழிந்தார்.

2018இல் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் ஒருபாலினத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்குவதற்கு முன்மொழியப்பட்ட போதும், தேவாலயங்களும், பலதரப்பட்ட கியூபர்களும் அதை எதிர்ப்பதால் அதற்கு வெளிப்படையான சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைக்கப்பெறாமல் தடுக்கப்பட்டுள்ளது.

திருமணம் என்பது ஒரு சமூக, சட்ட அமைப்பாகவும், குடும்ப அமைப்பின் முறைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் அது ஒன்று மட்டுமே குடும்ப அமைப்பு அல்ல எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆணும் பெண்ணும் இணையேற்பது மட்டுமே திருமணமாக அங்கீகரிக்கப்படவும் இல்லை அதே போது, ஒரே பாலினத்தாரின் இணையேற்பு திருமணமல்ல என நிராகரிக்கப்படவும் இல்லை என்பதால் இதை முழுக்கப் பின்னடைவாகப் பார்க்க இயலாது. அதில் எல்லாப் பன்முகத்தன்மை கொண்ட குடும்பங்களும், நேரடியாக இல்லாவிடினும், அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

கியூபாவின் முந்தைய அரசியலமைப்பு இனம், தோல் நிறம், பாலினம், தேசியத் தோற்றுவாய், மத நம்பிக்கை அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடை செய்தது. அந்தப் பட்டியலில் இப்போது பாலினம், பாலியல் நிலைப்பாடு, பாலின அடையாளம், வயது, இனத் தோற்றம், உடல் ஊனம், பிராந்தியத் தோற்றம் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.

1975ஆம் ஆண்டில், கியூபாவில் குடும்ப சட்ட நெறி நிறைவேற்றப்பட்டது, இது குடும்பத்திற்குள் பெண்கள், குழந்தைகளின் உரிமைகளுக்குச் சட்டப் பாதுகாப்பு அளிக்கிறது. வீட்டு வேலைகளிலும், குழந்தை வளர்ப்பிலும் ஆணும் பெண்ணும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தை வளர்ப்பிலும், குடும்ப நிர்வாகத்திலும் ஆண்களின் சமமான பங்களிப்பை ஏற்படுத்த மகப்பேற்றுச் சட்ட மாற்றத்தின் மூலம் பேறுகால விடுப்பு தந்தைக்கும் அளிக்கப்படுகிறது. ஏனென்றால் இதற்கு முன்பு, பெண்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டது. தற்போது ஆண்களுக்கு உள்ள உரிமையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கியூபக் குடும்பத்தின் பரிணாமத்தில் இன்று, நிறையப் பெண்கள் வீட்டுத் தலைவர்களாக உள்ளனர். ஒருபாலினத் தம்பதிகள் குடும்பமாக வாழ்கின்றனர், குடும்பத்தில் மற்றவர்களைக் கவனிக்கும் சுமையிலிருந்து பாட்டிகள் விடுதலை பெற்றுள்ளனர். அதற்கு பதிலாக அவர்கள் தாம் விரும்பித் திட்டமிடப்படி தங்கள் வாழ்க்கையை மேற்கொள்ள முடியும்.

கியூபாவில் வீட்டு வன்முறைக்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்கள் உள்ளன. வீட்டு வன்முறை, பாலியல் வன்கொடுமை மட்டுமல்லாது, பொது இடங்களில் துன்புறுத்தல், பணியிடங்களில் அச்சுறுத்தல் ஆகியவையும் குற்றமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மரியெலாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மரியெலா சிலியைச் சேர்ந்த ஜுவான் குட்டிரெஸ் பிஷ்மானுடனான முதல் திருமணத்தின் மூலம் இரண்டு மகள்களை பெற்றார். அதற்கு பின் இத்தாலியர் பாவ்லோ டிட்டோலோவை மணந்து ஒரு குழந்தையையும் பெற்றுள்ளார்.

மரியெலா தனது பன்முகத் தன்மைச் செய்திகளின் மூலம் ஒரு புதிய, மிகவும் முற்போக்கான கியூபாவை ஏற்படுத்த நாடு முழுவதும் அயராது பயணம் செய்கிறார்.

2009இல், பாலியல் தொடர்பான அறிவியல் ஆய்வுக்கான (SSSS) பொதுச் சேவை விருது மரியெலாவுக்கு வழங்கப்பட்டது, மேலும் 2012இல் உலகப் பல்கலைக்கழக அவையின் (COMAU) கல்விசார் தனிச் சிறப்பிற்கான யுரேகா விருதையும் மரியெலா பெற்றார்.

மரியாலா காஸ்ட்ரோ எல்ஜிபிடி சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு ஆர்வலராகப் பணியாற்றியதற்காக குவாடலஜாரா சர்வதேசத் திரைப்பட விழாவில் (எஃப்.ஐ.சி.ஜி) அவருக்கு மேகி பரிசு வழங்கப்பட்டது.

மரியெலா காஸ்ட்ரோவின் நெடும்பயணம் கியூபாவின் எல்ஜிபிடி புரட்சி என்று 2016இல் எச்.பி.ஓ.க்காக இயக்குநர் ஜான் ஆல்பர்ட் ஓர் ஆவணப்படம் வெளியிட்டுள்ளார்.

ஒருவரின் பாலியல் சார்புநிலை அவர் மீதான மதிப்பைக் குறைக்காது, பாலியல் அடையாளம், பாலியல் நிலைப்பாடு என்பது ஒரு மனித உரிமை, இது ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்கிறார் மரியெலா.

கியூபாவில் சுதந்திரமான பேச்சுக்காக யாரும் தண்டிக்கப்படுவதில்லை. சுதந்திரமான, அசௌகரியமான எண்ணங்கள் கியூபாவில் ஒரு குற்றமாக இருக்குமானால் பாலியல் சுயநிர்ணய உரிமைக்கான எனது வாதத்திற்காக நான்தான் சிறையில் இருக்க வேண்டிய நபராக இருந்திருப்பேன். வாஷிங்டனால் இயக்கப்படும்  கூலிப் படையினரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்கிறார் மரியெலா.

சமுதாயத்தில், ஆணாதிக்கம் என்ற பாரம்பரியக் கருத்து ஆண்களின் ஆரோக்கியத்திற்கு உண்மையான ஆபத்தாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார். ஆணாதிக்க மாதிரி நெருக்கடியில் உள்ளது. "நாம் ஆணாதிக்க ஓரினச்சேர்க்கை - வெறுப்பு கலாச்சாரத்தை மாற்றா விட்டால் ... ஒரு புதிய சமுதாயமாக நாம் முன்னேற முடியாது, சோசலிசத்தின் மூலம் விடுதலை ஆற்றல் பெற  நாம் விரும்புகிறோம், "நாம் சமூக நீதி, சமூகச் சமத்துவத்தின் அடிப்படையில் உறவுகளை அமைப்போம்” என அறைகூவல் விடுக்கிறார் மரியெலா.

எல்ஜிபிடி பிரச்சினைகளில் மரியெலா பணியாற்றத் தொடங்கிய போது, நல்வாய்ப்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவைப் பெற்றார்.

ஓரினச் சேர்க்கையினரின் உரிமைகளை முன்னெடுப்பதற்கு கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு அதிகரித்து வருகிறது. கியூபச் சமுதாயத்தில் மீதமுள்ள அனைத்து வகையான பாகுபாடுகளையும் அகற்ற வேண்டும் என்ற அறிக்கைக்குக் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது, இதனை ஓரினச் சேர்க்கைத் திருநர்களுக்குப் பயனளிக்கும் விதமான  கொள்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கப் பயன்படுத்த முடியும் என்று மரியெலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

”கியூபாவிற்கு எதிரான பொருளாதார, நிதி, வர்த்தக முற்றுகை நீக்கப்படும் என்று நம்புகிறேன், கியூபா மீதான முற்றுகை  நீக்கப்பட்டால் கியூபாவின் மீதான பெருஞ்சுமை குறையும், உலகத் தொடர்புடன் நாம் உயிர்வாழ முடியும். இதனால் பொருளாதாரம் வளரவும் ஊதியங்கள் உயரவும் முடியும்.

ஆனால், நாங்கள் நமது சுதந்திரத்தைச் சமரசம் செய்து பலவீனமடைய மாட்டோம். சமத்துவம், சமூக நீதி குறித்த நமது கொள்கைகளை நாங்கள் ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டோம் என்று நம்புகிறேன். இதற்காகவே எங்கள் பெற்றோர் போராடினார்கள், நாங்கள் அவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம் என்கிறார் மரியெலா.

ஆனால் முற்றுகையை நீக்குவது மட்டுமே வளர்ச்சியைத் தூண்டாது. நமது சமூக அமைப்பை மேம்படுத்த வேண்டும். முதலாளித்துவத்திற்கு மாற்றான ஒரு முரணற்ற முற்போக்கான மாற்றான மார்க்சியத்தால் கியூபப் புரட்சி கியூப மக்களை விடுவிக்க முயன்றது.. "இந்த அடிப்படையில், எல்லா விதமான பிரிவினைவாதங்களையும், பாகுபாடுகளையும், சமூக விலக்கல்களையும் அகற்ற வேண்டும்." என்பதை உயர்த்தி பிடிக்க வேண்டிய வரலாற்று, சமூகப் பொறுப்பை புரட்சி கொண்டுள்ளது.

“புரட்சி ஆதிக்கத்தின் பல வழிமுறைகளை அகற்றுவதில் வெற்றி பெற்றது, ஆனால் உலகின் பிற நாடுகளைப் போலவே எல்ஜிபிடி சமத்துவ பிரச்சினையில் தெளிவு இல்லை, ஆனால் நாம் சோசலிசத்தை வலுப்படுத்த விரும்பினால் [அதுமே நம் நோக்கம்] இப்பிரச்சனையைத் தீர்ப்பதில் முன்னேற வேண்டும்.. உலகளாவிய உணர்திறனை மாற்றுவதன் மூலமும், அனைவருக்கும் கல்வி கற்பிப்பதன் மூலமும் நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

மரியெலா காஸ்ட்ரோ இயங்கியல் அடிப்படையில் மிகவும் நியாயமான, மக்களின் நேரடிப் பங்கேற்பை உறுதி செய்யும், அனைவரையும் அரவணைக்கும் வகையான சோசலிசத்தை ஆதரிக்கிறார் கியூபாவில் பாலியல் பன்முகத் தன்மைக்கான உரிமைக்காகப் போராடுகிறார்.

50 ஆண்டுக்காலப் புரட்சியில், முழுமையான இறையாண்மையுடனும், சமூக நீதிக்கான தேடலுடனும் எட்டப்பட்ட அனைத்தையும் பார்ப்பது மிகவும் ஆர்வமூட்டுபவை, ஆனால் பரந்துபட்டு நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது,

இயங்கியல்  அடிப்படையில் சமூகத்தில் தொடர்ந்து எழும் அனைத்து முரண்பாடுகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் வளர்ச்சிக்குத் தேவையான மாற்றங்களை அடையாளங்காண வேண்டும் என்றும் சொல்கிறார் மரியெலா.

பாலினச் சமத்துவத்திற்கான போராட்டம் என்பது பெண் விடுதலையுடன் முழுமை பெறுவதில்லை. இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் ஒடுக்கப்படுபவர்கள் பெண்கள் மட்டுமல்ல, பிற பாலினத்தினரும், பிற பாலியல் சார்பு கொண்டவர்களும் கடுமையான ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பெண் விடுதலைக்கான போராட்டங்கள் பாலியல் சமத்துவத்திற்கான வெளியை விரிவுபடுத்தட்டும். பெண்கள், பிற பாலினத்தினர், பிற பாலியல் சார்பு கொண்டவர்களின் விடுதலையின் மூலம் பாலினச் சமத்துவமுள்ள சமூகத்தைக் கட்டமைப்போம். பெண்களின் புரட்சியையும், பாலினச் சமத்துவத்துவத்துக்கான புரட்சியையும் அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுத்ததில் முக்கியப் பங்கு வகித்த மரியெலாவின் முன்னுதாரணத்தை நாமும் பின்பற்றி முன்னேறுவோம்.