சமமற்ற பரிவர்த்தனை:

சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பதை சரிசமமான பரிவர்த்தனை என்று சொல்ல முடியுமா? அதை மீன்வேட்டை என்றுதானே சொல்ல முடியும்? வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் / ஏழை நாடுகளுக்கும் இடையிலான சர்வதேசப் பரிவர்த்தனைகளும் இப்படித்தான் உள்ளன.

சர்வதேசப் பண நிதியமும், உலக வர்த்தக அமைப்புகளும் சர்வதேச அளவிலான பரிவர்த்தனைகளால் அனைத்து நாடுகளும் பயனடையும் என்றும் உலகெங்கும் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஏற்பட வழிவகுக்கும் எனவும் பரிந்துரைக்கின்றன. வளரும் / ஏழை நாடுகள் சர்வதேச வர்த்தகத்திற்குத் தங்கள் சந்தையை முற்றிலும் திறப்பதன் மூலம் காலப்போக்கில் தொழில்நுட்ப வளர்ச்சி மேம்படும், பொருளாதாரச் சமத்துவமின்மை குறையும் என்றும் பரிந்துரைக்கின்றன.

ஆனால் சர்வதேசப் பரிவர்த்தனைகள் வளர்ந்த நாடுகளுக்கே சாதகமானவையாக உள்ளன, வளரும் நாடுகள் அதனால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. தடையற்ற சர்வதேசப் பரிவர்த்தனைகளே வளரும் / ஏழை நாடுகளின் உள்நாட்டுத் தொழில்களின் வளர்ச்சியைத் தடுப்பதுடன் அவை சிதைவடையவும் காரணமாக உள்ளன என்பதே நடைமுறை உண்மையாக உள்ளது.

முதலாளித்துவப் பொருளாதார அமைப்பானது முரண்பாடுகளையே வளர்ப்பதால், இந்த அமைப்பின் மூலம் உலகெங்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சமத்துவத்தையோ பொருளாதாரச் சமத்துவத்தையோ ஏற்படுத்த முடியும் என்பது அறிவியல் அடிப்படையற்ற வாதமே. சர்வதேசப் பரிவர்த்தனைகள் சமமற்றவை என்பதைப் பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதில் பெரும்பாலானவர்கள் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அவர்களது அனுபவ அறிவின் அடிப்படையில் பெறப்பட்ட உண்மைகளே காரணமாக இருக்கலாம்.

பெரும்பாலான மேற்கத்திய பொருளாதாரவியலாளர்கள் இதை ஏற்க மறுக்கிறார்கள். காலனியாதிக்கத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தானே அதன் உண்மையான தாக்கத்தைப் புரிந்து கொள்ள தெரியும்? முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வடிவமே காலனியாதிக்கம்.

முதலாளித்துவம் சர்வதேச அளவில் ஏகாதிபத்திய / பேரரசிய வடிவத்தின் மூலமே உலகெல்லாம் அழிவை ஏற்படுத்துவதன் மூலம் தன்னை அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்கிறது. காலனியாதிக்கம் என்பது நேற்றைய வரலாறு மட்டுமல்ல, இன்றைய நிஜமாகவும் உள்ளது.

நவீன தாராளமயம், புதிய காலனியாதிக்கதின் மூலம் தேச அரசுகளின் இறையாண்மையைப் பறித்து அவற்றை அதிகாரமற்ற கைப்பாவைகளாக்கியுள்ளது. உலக வங்கி - சர்வதேச நாணய நிதியம் தலைமையிலான அமைப்பு மாற்ற திட்டங்களால் (SAP) வளரும் நாடுகளில் சிக்கன நடவடிக்கைகளின் மூலம் அரசின் சமூக நலத் திட்டங்களுக்கான செலவினம் முற்றிலும் குறைக்கப்பட்டுக் கட்டற்ற தனியார்மயமும், தாராளமயமும் ஊக்குவிக்கப்படுகின்றன.

வளரும் நாடுகள் தங்களது உள்நாட்டுத் தேவைகளைக் கருதாமல் உலகச் சந்தைக்காகவே உற்பத்தி செய்யும் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகளைச் சார்ந்து அவற்றைச் சுற்றிவரும் துணைக் கோள்களாக வளரும் நாடுகள் மாற்றப்பட்டுள்ளன.

முன்னர் காலனி நாடுகளாக இருந்த தற்போதைய வளரும் / ஏழை நாடுகள், அரைக் காலனிகளாக்கப்பட்டுள்ளன. தடையற்ற வர்த்தகத்தால் அந்நாடுகளின் விவசாயமும் உள்நாட்டுத் தொழில்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையிலான ‘தடையற்ற’ சர்வதேசப் பரிவர்த்தனைகள் சமமற்ற பரிவர்த்தனைகளாகவும், இதனால் அதிகம் பாதிக்கப்படுவது மூன்றாம் உலக நாடுகளே, வளரும் / ஏழை நாடுகளே என்பதும், ஏதோ உணர்ச்சி வயப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு என்றோ அறிவியலுக்கு புறம்பானது என்றோ புறந்தள்ளி விட முடியாது.

சர்வதேச அளவிலான பரிவர்த்தனைகள் ஏன் சமமற்றவையாக இருக்கின்றன? இதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன? என்று பரிசீலிக்கும் போது ஐந்து முக்கியக் காரணிகளை அடையாளம் காண முடியும். இக்காரணிகள் ஒன்றிற்கொன்று இடைத் தொடர்பும், தாக்கமும் கொண்டுள்ளன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். சமமற்ற பரிவர்த்தனைக்கான ஐந்து முக்கியக் காரணிகள் பின்வருமாறு:

1. முதன்மைப் பொருட்களின் விலை குறைப்பு,
2. அதிகார உறவுகளில் ஏற்றத்தாழ்வு,
3. கூலி ஏற்றத்தாழ்வுகள்,
4. மூலதனத்தின் அங்கக மதிப்பிலான ஏற்றத்தாழ்வுகள்,
5. நாணய மதிப்பிலான ஏற்றத்தாழ்வுகள்.

1. முதன்மை பொருட்களின் விலை குறைப்பு:

வேளாண்மை சார்ந்த தொழில்களின் மூலமும், சுரங்கத் தொழிலின் மூலமும் பெறப்படும் பொருட்களே முதன்மைப் பொருட்கள் எனப்படுகின்றன. எடுத்துக்காட்டாக பருத்தி, சணல், உலோகத் தாதுக்கள், தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவை முதன்மைப் பொருட்கள் ஆகும். பருத்தி, சணல், உலோகங்கள் ஆகியவை பல தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களாகவும் உள்ளன. வளரும் நாடுகளின் ஏற்றுமதியில் முதன்மைப் பொருட்களே பெரும் பங்கு வகிக்கின்றன.

ஆனால் இவற்றின் விலையானது தொடர்ந்து குறைந்து காணப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1950இல் ரவுல் பிரபிஷ் மற்றும் ஹன்ஸ் சிங்கர் இருவரும் தனித்தனியே மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் சர்வதேசப் பரிவர்த்தனையின் பலன்கள் மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கும், உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்முமிடையே சமமற்ற முறையில் பகிரப்படுகின்றன என்றும், சர்வதேச வர்த்தகம் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கே சாதகமாக உள்ளது என்றும், மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்குப் பாதகமாக அமைகிறது என்றும் முடிவிற்கு வந்தனர். இது பிரீபிஷ் - சிங்கர் கோட்பாடு எனப்படுகிறது. 1980களின் முற்பகுதியில் இருந்தும் முதன்மைப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.

ஏற்றுமதி சார்ந்த தொழில்மய வளர்ச்சிப் பாதையே நவீன தாராளமயத்தால் முன்னிறுத்தப்படுகிறது. இறக்குமதி மாற்றுத் தொழில்மயமாக்க (ISI) வளர்ச்சிப் பாதையை மேற்கொள்ள மூன்றாம் உலக நாடுகள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் இறக்குமதியைக் கட்டுப்படுத்தி உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாத்து வளர்த்தெடுப்பது தடைபடுகிறது. உள்நாட்டுத் உற்பத்தி வளர்ச்சி தடைபடுவதே அந்நாடுகளின் ஏற்றுமதியில் முதன்மைப் பொருட்கள் பெரும்பங்கு வகிப்பதற்கான முக்கியமான காரணமாக உள்ளது.

அந்நிய முதலீடுகள் பெரும்பாலும் தொழில்நுட்பத்தையும், உற்பத்தித் திறனையும் மேம்படுத்தும் விதமாக உற்பத்தித் துறையில் முதலீடு செய்யப்படாமல் சொத்துக் குமிழிகளை உருவாக்கும் ஊக முதலீடுகளாக நிதித் துறை, ரியல் எஸ்டேட் துறையிலும் மற்றும் சேவைத் துறைகளிலுமே செய்யப்படுகிறது.

வளரும் நாடுகளின் ஏற்றுமதியில் உற்பத்திப் பொருள்களின் அளவு வளர்ச்சியடையாமல் இருப்பதற்கு இதுவும் முக்கியக் காரணமாக உள்ளது. விலைக் குறைப்பு என்பது மூன்றாம் உலக நாடுகளின் முதன்மைப் பொருட்களுடன் நின்று விடவில்லை.

பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளின் பொருட்களும் சேவைகளும் குறைந்த விலையில் கிடைப்பதற்கு அங்கு நிலவும் குறைந்த கூலியே காரணமாகிறது. மூன்றாம் உலக நாடுகளின் பொருட்கள் எதனால் குறைந்த விலைக்குப் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன என்ற கேள்விக்கான விடையாக அடுத்த நான்கு காரணிகளும் அமைகின்றன.

2. அதிகார ஏற்றத்தாழ்வுகள்:

இயற்கையில் எந்தப் பொருளும் விலைக் குறியீட்டுடன் தோன்றுவதில்லை. பொருட்களின் விலையானது சந்தையால் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு பொருளுக்கான வேண்டலும் வழங்கலும் சமமாக இருக்கும் போது சந்தை சமநிலை அடைவதால் பொருள் அதன் உற்பத்தி விலைக்கே விற்கப்படுகிறது.

ஆனால் பொருளின் வேண்டல் வழங்கலை நிர்ணயிப்பது சந்தை ஆற்றல்களே தவிர இயற்கைச் சக்திகள் மட்டும் அல்ல. ஒரு முற்றுரிமை பெற்ற விற்பனையாளர் போட்டியாளர்களை விலக்கிப் பொருளின் விற்கும் விலையை அதன் உற்பத்தி மதிப்பைக் காட்டிலும் பல மடங்கு கூட்டி விற்க முடியும்.

அதே போல் முற்றுரிமை பெற்ற வாங்குபவர் பொருளை அதன் உற்பத்தி விலையைக் காட்டிலும் குறைத்து வாங்க முடியும். பொருட்கள் / சேவைகளின் வாங்கும் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் முற்றுரிமை பெற்ற பன்னாட்டு அமைப்புகளாலும், கூட்டமைப்புகளாலும் (monopolies, oligopolies) கட்டுப்படுத்தப்படுகிறது.

பெரும் வர்த்தக அமைப்புகள் வாங்குவதற்கான முற்றுரிமையைப் பெற்றிருப்பதால் உற்பத்தியாளர்கள் விற்கும் விலையையும் அவையே தீர்மானிக்கின்றன முற்றுரிமைக் கொள்முதலாண்மைகள் (monopsonies). காட்டாக வால்மார்ட், அமேசான்). உழைப்புச் சக்தியும் ஒரு சரக்கு என்பதால் அதன் வாங்கும் விலையும் இவர்களால் குறைக்கப்படுகிறது.

இவ்வாறு பொருட்கள் / சேவைகளின் வழங்கலையும் வேண்டலையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதால் பெரும்பாலான மக்களின் நுகர்வும் இவற்றின் கையில் உள்ளது. பெரும்பாலான மக்களின் நுகர்வுப் பற்றாக்குறைக்கு நவீன தாராளமய அமைப்புகளே காரணமாகவுள்ளது.

அவற்றின் அதிகார முற்றுரிமை கூடுதல் லாபம் பெறுவதற்கும், அதன் மூலம் அதிகார முற்றுரிமையை நிலைநாட்டுவதற்கும் காரணமாகிறது. உலக வர்த்தக அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளிலும் பன்னாட்டுத் தீர்ப்பாயங்களிலும் வளர்ந்த நாடுகளே அதிக அதிகாரம் கொண்டிருப்பதால் அவற்றில் வளரும் நாடுகள் பிரதிநிதித்துவம் பெறுவதில்லை என்பதுடன் அவற்றின் வளர்ச்சிக்குத் தடையாகவே அமைந்துள்ளன.

தடையற்ற வர்த்தகம் என்பது பெயரளவிற்கு மட்டுமே உள்ளது. வளரும் நாடுகள் ஏற்றுமதி செய்வதற்குப் பல்வேறு தடைகள் நிலவுகின்றன. வளர்ந்த நாடுகள் தங்கள் சந்தைகளை வளரும் நாடுகளுக்கு முற்றிலுமாகத் திறப்பதில்லை. காப்பு வரிகள் மற்றும் வரியல்லாத தடைகளின் மூலம் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து செய்யப்படும் ஏற்றுமதிகளைத் தடுக்கின்றன,

3. கூலி / ஊதியங்களில் ஏற்றத்தாழ்வுகள்:

லாபத்தை நோக்கிய மூலதனம் தடைகளின்றி எல்லையில்லாமல் உலகெங்கும் பயணிக்கிறது. ஆனால் உழைப்பாளி உயர்ந்த ஊதியம் பெற தேச எல்லைகளைத் தாண்டுவதற்கு தேசியம் / மொழி / கல்வி / தொழில்நுட்ப அறிவு / பொருளாதாரம் எனப் பல்வேறு தடைகள் உள்ளன. உழைப்பாளரின் வெளியானது ஒரு தேசத்திற்குள் குறுக்கப்பட்டுள்ளது. அறிவியல் தொழில் நுட்பத் துறைகளில் சிறந்து விளங்கும் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களையும், நிபுணர்களையும் வளர்ந்த நாடுகள் இறக்குமதி செய்கிற போதிலும் இவர்கள் தேசங்களின் மொத்த மக்கள் தொகையில் ஒப்பளவில் சிறுபான்மையினரே.

ஆனால் இதனாலும் மூன்றாம் உலக நாடுகளின் அறிவுவளமானது அந்நாடுகளுக்குப் பயன்படாத வகையில் கடத்தப்படுவதால் (brain drain) அந்நாடுகளின் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கடுமையாக பாதிக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் போது உபரிமதிப்பாக்கம் அதிகமாவதால் லாபத்தின் அளவைப் பாதிக்காமலே அதிகரித்த உற்பத்தித் திறனுக்கு நிகராக கூலியையும் அதிகப்படுத்த முடியும்.

ஆனால் லாபத்தையும், மூலதன திரட்டலையும் அதிகரிக்கும் பொருட்டு, கூலி குறைக்கப்படுகிறது. ஒரே உற்பத்தித் திறனைக் கொண்ட நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் ஊதியம் வளர்ந்த நாடுகளில் அளிக்கப்படுவதை விட வளரும் நாடுகளில் மிகக் குறைவாகவே உள்ளது.

சர்வதேச வர்த்தகத்தில் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஏற்றுமதியை அதிகப் படுத்துவதற்கான போட்டியில் தங்கள் லாபம் குறையாமல் பாதுகாக்கக் கூலியை மேலும் குறைக்கவும் காரணமாகிறது. ஊதியம் / கூலி வேறுபாடுகளிலிருந்து ஏகாதிபத்திய நாடுகள் கூடுதல் லாபங்களைப் பெறுகின்றன.

வளரும் நாடுகளில் கூலி குறைவாக இருப்பதால் இங்கிருந்து குறைந்த விலையில் ஏற்றுமதி செய்யும் சலுகையை வளர்ந்த நாடுகள் பெற்றுள்ளன. உலகளவில் நிதி மூலதனம் உலகமயமாக்கப்பட்டுள்ளது, கூலியானது உலகமயமாக்கப்பட்டுள்ளதா என்றால் இல்லை. அவ்வாறு உலகளவில் கூலி சமமாக்கப்படுமானால் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து மலிவாகப் பொருட்களையும், மூலப் பொருட்களையும், சேவைகளையும், வளர்ந்த நாடுகள் பெற முடியாது. மூன்றாம் உலக நாடுகளில் உழைக்கும் மக்கள் கூலிக் குறைவினாலும், விலை உயர்வாலும் பணவீக்கத்தாலும் கூடுதலாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

4. மூலதனத்தின் சராசரி அங்கக மதிப்பிலான ஏற்றத்தாழ்வுகள்: வளர்ந்த பொருளாதாரங்களின் மூலதனங்களில் தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக, சராசரி அங்கக மதிப்பு, வளரும் பொருளாதாரங்களின் சராசரி அங்கக மதிப்பை விட அதிகம், ஆகவே தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்றத் தாழ்வுகளுடைய நாடுகளிடையே நடக்கும் வர்த்தகப் போட்டியில், சர்வதேச லாப சராசரியாக்கத்தால் -- தொழில்நுட்ப வசதி வளர்ந்த நாடுகளுக்குச் சாதகமாவதால் --- வளர்ச்சி குன்றிய நாடுகளிடமிருந்து பெறப்படும் உபரி கூடுதல் லாபமாக - ஏகாதிபத்திய லாபமாக (super profit / imperialist profit) வளர்ந்த நாடுகளை அடைகிறது.

சர்வதேச வர்த்தகத்தில் வளரும் நாடுகள் தங்கள் பொருட்கள் / சேவைகளை உற்பத்தி விலையை விடக் குறைவான விலைக்கு விற்பதற்கும், வளர்ந்த நாடுகள் தங்கள் பொருட்கள் / சேவைகளை உற்பத்தி விலையை விட அதிக விலைக்கு விற்பதற்கும் இது காராணமாகிறது. இவ்வாறு சர்வதேச வர்த்தகப் போட்டியில் நீடிக்கக் கூலியைக் குறைக்கும் போக்கை ஊக்குவிப்பதன் மூலம் கூலி வேறுபாடுகள் அதிகரிப்பதற்கு காரணமாகிறது.

5. நாணயங்களின் மதிப்பில் ஏற்றத்தாழ்வுகள்: நாணயங்களின் மதிப்பில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளால் வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகள் கணிசமான லாபம் பெறுகின்றன. ஆனால் இது குறித்து அதிகம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமலே உள்ளதால் இதன் முக்கியத்துவம் வெளியே தெரியாமல் இருப்பதுடன் இந்தச் சுரண்டல் கேள்விக்குட்படுத்தப்படாமல் நீடிப்பதற்கும் காரணமாகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டியுள்ளது.

இன்று மூன்றாம் உலக நாடுகளின் நாணயங்கள் மதிப்பிழந்ததற்கான முக்கியக் காரணமாக உலக வங்கி-சர்வதேசப் பண நிதியம் ஆகியவற்றின் தலைமையில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் தாராளமய அமைப்பு மாற்றத் திட்டங்களே (SAP-structural adjustment programmes) உள்ளன.

கடன் நெருக்கடியில் உள்ள நாடுகள் நிதியுதவிக்காக சர்வதேசப் பண நிதியத்தை அணுகும் போது பல நிபந்தனைகளைச் செயல்படுத்தினால் மட்டுமே அது கடன் கொடுக்கிறது. அந்த நிபந்தனைகளில் ஒன்றுதான் நாணய மதிப்புக் குறைப்பு.

இதைப் பரிந்துரை செய்வதற்கு கூறப்படும் காரணம் என்னவென்றால், ஒரு நாட்டின் நாணயத்தின் மதிப்பைக் குறைக்கச் செய்தால் ஏற்றுமதி மலிவாக்கப்படுவதால் உலக சந்தையில் அதன் போட்டியிடும் திறன் அதிகரிக்கும், அந்நாட்டின் இறக்குமதிகளுக்கான விலையும் இதனால் அதிகரிப்பதால் இறக்குமதி கட்டுப்படுத்தப்படும், இவ்வாறு வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதன் மூலம் நிதிச் சமநிலையை அடைய முடியும் என்பதே. இது கோட்பாட்டளவில் மட்டுமே உண்மையாகும். நடைமுறையில் நாணய மதிப்பு குறைப்பு அத்தியாவசியப் பொருள்களின் இறக்குமதிச் செலவுகளை அதிகரிப்பதாலும், ஏற்றுமதி வருவாயைக் குறைப்பதாலும் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கவே காரணமாகிறது.

அதிக ஆற்றல் தேவை உள்ள இந்தியா போன்ற நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதன் மூலமே ஆற்றல் தேவையை நிவர்த்தி செய்ய முடியும். ஆனால் நாணய மதிப்பு குறைப்பால் அதற்கான இறக்குமதிச் செலவானது அதிகரிக்கிறது, வளரும் நாடுகள் உள்நாட்டு உற்பத்தித் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்குத் தேவையான இயந்திர பாகங்களை இறக்குமதி செய்வதற்கான செலவும் இதனால் அதிகரிக்கிறது.

இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் திறந்த வர்த்தகத்தில் தடுக்கப்படுகின்றன. திறந்த வர்த்தகத்தின் மூலம் வளர்ந்த நாடுகளின் ஏற்றுமதிச் சந்தையாக வளரும் நாடுகள் மாற்றப்பட்டுள்ளன. தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் தேவையில்லாத வெளிநாட்டுப் பொருட்கள் வளரும் நாடுகளின் தலையில் கட்டப்படுகின்றன.

இதுவும் இந்நாடுகளின் இறக்குமதிச் செலவுகளை அதிகரிக்கிறது. வர்த்தகப் பற்றாக்குறை அதிகமாவதாலும் பணவீக்கம் ஏற்படும். அதாவது பணம் மதிப்பிழக்கும். அது உண்மையான கூலியின் மதிப்பை, கூலியின் வாங்கும் திறனைக் குறைக்கும். வெளிநாட்டுக் கடன் பெற்ற நாடுகள் அவற்றை அடைப்பதற்கும் இதனால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இவ்வாறு சர்வதேசப் பண நிதியம் பரிந்துரைக்கும் நவீன தாராளமயத் தீர்வே பிரச்சனைகளை அதிகப்படுத்துகிறது.

வளரும் நாடுகள் இறக்குமதியைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் அதற்கான காப்பு வரிகள் விதிக்க அனுமதிக்க வேண்டும். அதை விட்டு விட்டு முற்றிலும் இறக்குமதியைத் திறந்து விட்டுச் சமநிலையை ஏற்படுத்துவதற்காக நாணயங்களின் மதிப்பைக் குறைக்கச் செய்தால், தன்னிச்சையாகத் தானாகவே ஏற்றுமதி அதிகரித்து விடுமா?

சென்ற இதழில் பேங்கர் திட்டம் குறைபாடுடையது எனக் குறிப்பிட்டோம். பேங்கர் திட்டம் நிதிச் சமநிலை ஏற்படுத்துவதற்கு நவீன தாராளமயக் கொள்கையையே பரிந்துரைக்கிறது. சர்வதேசப் பரிவர்த்தனையின் போது வர்த்தகப் பற்றாக்குறை கொண்ட நாடுகளின் நாணயம் மதிப்பைக் குறைப்பதால், ஏற்றுமதிக்கான போட்டித் திறன் அதிகரித்து அந்நாடுகளின் ஏற்றுமதி ஊக்குவிக்கப்படும், இதனால் வர்த்தகச் சமநிலை ஏற்படுத்தப்படும் என்று குறிப்பிடுகிறது. வளர்ச்சி குறைந்த நாடுகளில் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமானால் அந்நாடுகளில் தொழில்நுட்ப வளர்ச்சியையும், உற்பத்தித் திறனையும் மேம்படுத்தும் விதமாக முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.

கடன் சுமையற்ற முதலீடுகளின் மூலம் உற்பத்தித் துறையை மேம்படுத்தி, ஏற்றுமதியை அதிகரிக்க செய்ய முடியும். இதையெல்லாம் செயல்படுத்தாமல் நாணய மதிப்புக் குறைப்பு தானாகவே ஏற்றுமதியை அதிகரித்து விடாது. வளர்ச்சி குறைந்த நாடுகளில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்தும் எந்தத் திட்டமும் பேங்கர் திட்டத்தால் முன்வைக்கப்படவில்லை என்பதே அதன் முக்கியமான குறைபாடு.

சம வளர்ச்சியற்ற நாடுகளிடையேயான வர்த்தகத்தில், நாணய மதிப்பைக் குறைப்பதன் மூலம் ஏற்றுமதியை அதிகரித்து வருவாயை அதிகரிக்கலாம் என்பது முதலாளித்துவ உழைப்புச் சுரண்டலை அதிகப்படுத்தாமல் சாத்தியமில்லை. ஒரு நாட்டின் நாணயம் மதிப்பிழக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்நாட்டில் ஏற்றுமதி செய்யும் முதலாளி நாணயம் மதிப்பிழந்ததால் சரக்குகளை அதன் உற்பத்தி விலைக்குக் கீழேதான் விற்க முடியும்.

அவ்வாறு விற்றால் முதலாளிக்கு லாபக் குறைவுதானே ஏற்பட வேண்டும்? ஆனால் உற்பத்தி விலைக்குக் கீழே விற்கப்பட்ட போதிலும் அதிக வருவாய் பெற முடிகிறது என்றால் அதன் பின்னே என்ன நடக்கிறது? முதலாளி தொழிலாளரிடம் ஊதியம் தராமல் இலவசமாகப் பெறும் கூடுதல் உபரி உழைப்பை மேலும் அதிகப்படுத்துவதன் மூலமே இது சாத்தியமாகும்.

உழைப்புச் சுரண்டலை அதிகப்படுத்துவதன் மூலமே இது சாத்தியமாகிறது என்றால் அங்கே இழப்பவர் யார், தொழிலாளியே. வெளியில் ஏற்றுமதிக்கான போட்டியாக மட்டுமே தெரிவது உள்ளே உழைப்புச் சுரண்டலை அதிகப்படுத்துவதிலான போட்டியாக இருக்கிறது, உழைப்புச் சுரண்டலுக்கான போட்டியில் முதலாளிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம், ஆனால் நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கிடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் குறைக்கவோ சமநிலைபடுத்தவோ முடியாது. மாறாக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரிக்கவே செய்யும்.

(பி.கு.: அடக்கவிலை என்பது பொருட்களை உற்பத்தி செய்யத் தேவையான மூலப்பொருட்கள், உழைப்புச்சக்தி ஆகியவற்றின் கூடுதல். பொருட்கள் அவற்றின் அடக்கவிலையில் (cost price) விற்கப்படுவதில்லை. அவ்வாறு விற்கப்படுமானால் முதலாளிக்கு லாபம் கிடைக்காது. அடக்கவிலையுடன் சராசரி லாபமும் சேர்ந்த உற்பத்தி விலையில் (production price) பொருட்கள் விற்கப்படுகின்றன.

ஆனால் ஒரு நிபந்தனை: பொருட்களின் வழங்கலும் வேண்டலும் சமமாக இருக்கும் போதே பொருட்கள் அவற்றின் உற்பத்தி விலையில் விற்கப்படும், அதாவது சந்தை விலை உற்பத்தி விலைக்குச் சமமாக இருக்கும். அதற்குத் தேவை அதிகரிக்கும் போது பொருட்களின் விலை அதிகமாக்கப்படும். அவற்றின் தேவை குறையும் போது பொருட்களின் விலை குறையும்.)

வளர்ந்த பொருளாதாரங்களின் மூலதனங்களில், தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக, சராசரி அங்கக மதிப்பானது வளரும் பொருளாதாரங்களின் சராசரி அங்கக மதிப்பை விட அதிகமாக இருக்கிறது, ஆகவே தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்றத் தாழ்வுகளுடைய நாடுகளிடையே நடக்கும் வர்த்தகப் போட்டியில், சர்வதேச லாப சராசரியாக்கத்தால் --- தொழில்நுட்ப வசதி வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாவதால் --- வளர்ச்சி குன்றிய நாடுகளிடமிருந்து பெறப்படும் உபரி கூடுதல் லாபமாக / ஏகாதிபத்திய லாபமாக (super profit / imperialist profit) வளர்ந்த நாடுகளை அடைகிறது.

சர்வதேச வர்த்தகத்தில் வளரும் நாடுகள் தங்கள் பொருட்கள் / சேவைகளை உற்பத்தி விலையை விடக் குறைவான விலைக்கு விற்பதற்கும், வளர்ந்த நாடுகள் தங்கள் பொருட்கள் / சேவைகளை உற்பத்தி விலையை விட அதிக விலைக்கு விற்பதற்கும் இது காராணமாகிறது.

வளரும் நாடுகளில் உள்ள முதலாளிகள் உழைப்புச் சுரண்டலை மேலும் அதிகப்படுத்தாமல் சர்வதேசச் சந்தையில் போட்டி போடவோ நீடிக்கவோ முடியாது. இவ்வாறு சர்வதேச வர்த்தகப் போட்டியில் நீடிக்கக் கூலியை குறைக்கும் போக்கை ஊக்குவிப்பதன் மூலம் கூலி வேறுபாடுகள் அதிகரிப்பதற்கும் சர்வதேசப் பரிவர்த்தனைகள் காரணமாகின்றன.

1991இல் வர்த்தகப் பற்றாக்குறை அதிகமானதால் இந்தியா சர்வதேசப் பண நிதியத்தின் உதவியை நாடியது. சர்வதேசப் பண நிதியம் இந்தியாவிற்கு அமைப்பு மாற்றத் திட்டங்களான நான்கு நிபந்தனைகளை செயல்படுத்துமாறு கட்டளையிட்டது. அவையாவன:

1. ரூபாயை 20 சதவீதம் மதிப்பிழக்க செய்ய வேண்டும். 2. இறக்குமதிக்கான காப்பு வரிகளை 30 சதவீதமாகக் குறைக்க வேண்டும் 3. அரசின் எல்லா செலவுகளையும் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் குறைக்க வேண்டும். 4. உற்பத்தி வரிகளை 20 சதவீதம் அதிகரிக்க வேண்டும். இந்திய அரசு இந்த நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தியதுடன் பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் துரிதகதியில் தனியார்மயத்தையும், தாராளமயத்தையும் செயல்படுத்தப் புதிய பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைபடுத்தியது.

இன்றும் புதிய பொருளாதாரக் கொள்கைகளே நடைமுறையில் உள்ளன. இவற்றின் விளைவாக 1970இல் 7.5 ரூபாயாக இருந்த டாலரின் மதிப்பு இப்போது 75 ரூபாயாக உயர்ந்துள்ளது. நவீன தாராளமயத்தின் அமைப்பு மாற்ற திட்டங்களே மூன்றாம் உலக நாடுகளின் நாணயங்கள் மதிப்பேற்றம் பெறாமல் வீழ்ச்சியடையவும், வளர்ந்த நாடுகளின் வலுவான நாணயங்களின் மேலாதிக்கம் நிலைநாட்டப்படவும் முக்கியக் காரணமாக உள்ளன.

1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10ரூ என வைத்துக் கொள்வோம். ரூபாயை சர்வதேசப் பண நிதியம் 20% மதிப்பிழக்கச் செய்ய பரிந்துரைக்கிறது. அந்நாட்டின் நாணயம் 20% மதிப்பிழந்தால் விளைவுகள் என்னவாகும்? டாலருடனான அதன் பரிமாற்ற மதிப்பு 12 ரூபாயாக வீழும். இதனால் ஏற்றுமதியின் போது 20 சதவீதம் வருவாய் இழப்பும், இறக்குமதியின் போது 20% கூடுதல் செலவும் ஏற்படும்.

1000 ரூபாய் வர்த்தகத்தில் 200 ரூபாய் இழப்பு ஏற்படும். 100 டாலரின் ரூபாய் மதிப்பு மதிப்புக் குறைப்பின் முன் 1000 ரூபாயாக இருந்தது மதிப்புக் குறைப்புக்குப் பின் 1200 ரூபாயாக வீழும். மதிப்புக் குறைப்புக்கு முன் 1000 ரூபாயாக இருந்த 100 டாலர் மதிப்புள்ள இறக்குமதி சரக்கின் விலை 1200 ரூபாயாக அதிகரிக்கும். அதே போல் 100 டாலர் மதிப்புக்குச் சரக்கை ஏற்றுமதி செய்யும் போது 200 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். 200 டாலர் ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தில் 400 ரூபாய் இழப்பு ஏற்படும்.

சர்வதேசப் பண நிதியத்தின் கோட்பாட்டின் படி நாணய மதிப்புக் குறைப்பினால் ஏற்றுமதி அதிகரிக்கிறது என்றே வைத்துக் கொண்டாலும், 100 டாலரிலிருந்து 105 டாலருக்கு ஏற்றுமதி 5% அதிகரிக்குமானால் அதன் மூலம் 60 ரூபாய் (5 டாலர் X 12 = 60 ரூ) மட்டுமே ஏற்றுமதி வருவாய் அதிகரிக்கும் என்பதால் 140 ரூபாய் இழப்பு ஏற்படும். இது மட்டுமல்லாமல் டாலரில் பெற்ற கடன் மதிப்பும் 20% அதிகரிக்கும் என்பதால் கடனை தீர்க்க 20% கூடுதலாகச் செலவாகும்.

மற்ற நாடுகளுக்குப் பரிந்துரைக்கப்படுவது போல் உலகளவில் நிதிப் பற்றாக்குறை அதிகமாகக் காணப்படும் அமெரிக்காவிற்கு இத்தகைய நாணய மதிப்புக் குறைப்புக் கொள்கையை சர்வதேசப் பண நிதியம் பரிந்துரை செய்திருக்குமானால் டாலர் முன்னிலை உலகப் பணமாக நீடித்திருக்க முடியாது.

வளர்ந்த நாடுகள் தங்கள் பொருட்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு அதிக விலைக்கு விற்பதற்கும், மூன்றாம் உலக நாடுகளிலிருந்து அவற்றின் பொருட்களை மலிவான விலைக்கு வாங்குவதற்கும் நாணய ஏற்றத்தாழ்வுகளும் ஒரு முக்கியக் காரணியாக உள்ளது. ஒரு நாணயத்தின் மதிப்பீட்டிற்கு இரண்டு அளவுகோல்கள் உள்ளன.

ஒன்று அந்த நாணயத்தின் சந்தைப் பரிவர்த்தனை மதிப்பு (MER), ஒரு அமெரிக்க டாலருக்கு சமமான ரூபாயின் பரிவர்த்தனை-மதிப்பு 2019ல் 73.00 ரூபாய். இன்னொன்று நாணயத்தின் உள்நாட்டு வாங்கும் திறன் மதிப்பு (purchasing power parity-ppp). அதாவது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் வாங்கும் திறனின் மதிப்பு. அமெரிக்காவில் ஒரு டாலரில் வாங்கப்படும் பொருட்களை இந்தியாவில் எத்தனை ரூபாயில் வாங்க முடியும் என்பதன் மதிப்பைக் குறிக்கிறது.

2019இல் ஒரு டாலருக்கு இணையான ரூபாயின் வாங்கும் திறனின் மதிப்பு 21.1. அமெரிக்காவில் ஒரு டாலரில் வாங்கக் கூடிய பொருட்களை இந்தியாவில் 21.1 ரூபாயில் வாங்க முடியும் என்பதைக் குறிக்கிறது. ஆனால் ஒரு டாலருக்கு இணையான ரூபாயின் பரிவர்த்தனை மதிப்பு 70.4 ரூபாய். ரூபாயின் பரிவர்த்தனை மதிப்பிற்கும் வாங்கும் திறனுக்கும் இடையிலான விகிதம் 3.3. அதாவது ரூபாயின் பரிவர்த்தனை மதிப்பு, அதன் வாங்கும் திறனை விட 3.3 மடங்கு குறைவாகவுள்ளது. ரூபாயின் பரிவர்த்தனை மதிப்பும், அதன் வாங்கும் திறனும் சமமாக இல்லை.

பொதுவாக அதிக வருவாய் பெறும் வளர்ந்த நாடுகளின் நாணயங்களின் பரிவர்த்தனை மதிப்பும், வாங்கும் திறனும் ஏறத்தாழ சமமாகக் காணப்படுகின்றன. ஆனால் வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளின் நாணயங்களின் பரிவர்த்தனை மதிப்புக்கும், வாங்கும் திறனுக்கும், இடையே அதிக வேறுபாடு காணப்படுகிறது.

வளரும் நாடுகள், ஏழை நாடுகள் / குறைந்த வருவாயுடைய நாடுகளில் உழைப்பிற்குக் குறைந்த கூலியே வழங்கப்படும் நிலை உள்ளதால் அங்கே பல பொருட்களையும், சேவைகளையும் மலிவாகப் பெற முடிவதே இதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. சர்வதேச அமைப்புகள் நாடுகளுக்கு இடையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிடுவதற்கு அவற்றின் தேசிய நாணயங்களின் வாங்கும் திறனைப் பயன்படுத்துகின்றன.

சர்வதேச ஒப்பீட்டு அமைப்பு மூலமாக 3,000 முக்கியமான நுகர்வுப் பொருட்கள், சேவைகள், 30 தொழில்கள், 200 வகையான உபகரணப் பொருட்கள், 15 கட்டுமானத் திட்டங்கள் ஆகியவற்றைக் கொண்டு நாணயங்களின் வாங்கும் திறன் மதிப்பு கணக்கிடப்படுகிறது. (விலைக் குறியீட்டின் தலைகீழியே வாங்கும் திறன் ஆகும்). நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான பணவீக்கமும் இதையொத்த முறையிலேயே கணக்கிடப்படுகிறது.

கெர்னாட் கொஹ்லெர் என்ற பொருளாதார அறிஞர் உலகளாவிய அளவில் பண மதிப்பு குறித்து ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளார். பணத்தின் மதிப்பு உலகெங்கும் ஒரே மாதிரியாக இல்லை (அதன் பரிமாற்ற விகிதங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னரும் கூட); (2) குறைந்த வருமானமுடைய நாடுகளின் நாணயங்கள் குறைவாக மதிப்பிடப்படுகின்றனவே ஒழிய பல பொருளாதாரவியலாளர்கள் கூறுவது போல் அதிகமாக மதிப்பிடப்படவில்லை; (3) அதிக வருவாயுடைய நாடுகள், குறைந்த வருவாயுடைய நாடுகளிடமிருந்து மதிப்பைக் கறப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றே பரிமாற்ற விகித முறை என்றும், இதுவே மைய நாடுகளுக்கும் விளிம்புநிலை நாடுகளுக்கும் இடையிலான சமமற்ற பரிவர்த்தனைக்குக் கணிசமாகப் பங்களிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உட்ஸ் பீட்டர் ரெய்ச் என்ற பொருளாதார அறிஞர் 2000ஆம் ஆண்டுக்கான சர்வதேச வர்த்தகத் தரவுகளை ஆய்வு செய்து சமமற்ற பரிவர்த்தனை குறித்து வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் அமெரிக்கா அதன் மொத்த தேசிய வருவாயில் ஏற்றுமதி செய்வதைக் காட்டிலும் 15% கூடுதலாக இறக்குமதிகளைப் பெறுவதாகவும், அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் சர்வதேச வர்த்தகத்தின் மூலம் அவை ஏற்றுமதி செய்வதைக் காட்டிலும் கூடுதலாக 5,116 பில்லியன் டாலர் பெறுவதாகவும் கணக்கிட்டுள்ளார்.

இந்தியா 10,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது என வைத்துக் கொள்வோம் இந்தியாவின் வருவாய் 10,000 / 70.4= 142.04 டாலர்கள். இந்தியாவின் ஏற்றுமதி ரூபாயின் வாங்கும் திறன் அடிப்படையில் மதிப்பிடப்பட்டால் இந்தியா பெறும் வருவாய் 10000 / 21.1 = 473.93 டாலர்கள் (2019இல் ஒரு டாலருக்கு இணையான ரூபாயின் வாங்கும் திறனின் மதிப்பு 21.1).

இந்த ஏற்றுமதியால் இந்தியாவிற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு 331.89 டாலர். அதே போல் இந்தியா 1,000 டாலர் மதிப்பிற்கு இறக்குமதி செய்யுமானால் 70,400 ரூபாய் செலவு ஏற்படும். இறக்குமதி வாங்கும் திறனின் அடிப்படையில் செய்யப்படுமானால் 21,100 ரூபாய் செலுத்தினால் போதும்.

இதனால் இந்தியாவுக்கு ஏற்படும் இழப்பு 49,300 ரூபாய். நாணயப் பரிமாற்ற ஏற்றத்தாழ்வுகளால் வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளை விட இறக்குமதிக்கு அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்பதையும், ஏற்றுமதியிலிருந்து குறைந்த வருவாயே பெறுகின்றன என்பதையும் இந்த உதாரணத்தின் மூலம் அறிய முடியும்.

வளரும் நாடுகள் / ஏழை நாடுகள் தொழில்மய உற்பத்தித் திறனை அதிகமாக்க வேண்டுமானால், அவற்றின் ஆற்றல் தேவைகளும் அதிகரிக்கும் ஆனால் சமமற்ற பரிவர்த்தனையால் இறக்குமதிச் செலவுகள் அதிகமாவதால் அவற்றைப் பூர்த்தி செய்ய இயலாமல் போகிறது. இதனால் அந்நாடுகளின் வளர்ச்சியும் தடுக்கப்படுகிறது. சர்வதேச நிதி நிறுவனங்கள் / அமைப்புகள் கடன்களைப் பெரும்பாலும் டாலரிலேயே அளிக்கின்றன.

இந்த நாணயப் பரிமாற்ற ஏற்றத்தாழ்வுகளால் நாடுகள் கடனிலிருந்து மீள முடியாத நிலை உள்ளது. வளரும் நாடுகளுக்கு நிதிப் பற்றாக்குறை / வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டால் தரமதிப்பீட்டு நிறுவனங்கள் அவற்றுக்கான தர மதிப்பீட்டைக் குறைக்கின்றன்றன. இதனால் அந்நாடுகளுக்கு மலிவுக் கடன் மறுக்கப்படுவதால், கூடுதல் வட்டியின் மூலமே கடன் பெற முடியும். இந்தக் கூடுதல் வட்டிச் சுமை அந்நாடுகளின் கடன் சுமையை மேலும் அதிகமாக்கும்.

அந்நிய முதலீட்டாளர்கள் வளர்ந்த நாடுகளின் வலுவான நாணயங்களையே விரும்புவதால் அவை மேலும் மதிப்பு ஏற்றம் பெறவும், வளரும் நாடுகளின் நாணயங்கள் மேலும் மதிப்பிழக்கவும் காராணமாக உள்ளது. அந்நிய நிதி முதலீடுகளைக் கவர்வதற்காக வளரும் நாடுகள் அதிக சலுகைகளை அளிக்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றன.

இதுவும் அந்நாடுகளின் நிதிநிலையைப் பாதிக்கிறது. மூன்றாம் உலக நாடுகளின் வலுவிழந்த நாணயங்கள் அந்நிய முதலீடுகளைச் சார்ந்து ஊசலாடுகின்றன. அந்நாடுகளின் தலைமை வங்கிகள் நாணயம் மதிப்பு ஏற்றம் பெறுவதைத் தடுக்க வெளிச் சந்தை நடவடிக்கைகளின் மூலம் டாலரைப் பெறுமாறும் அதற்கென கூடுதல் அந்நியச் செலவாணி இருப்புகளைப் பராமரிக்குமாறும் நிர்பந்திக்கப்படுவதும் ஒரு தேவையில்லாத நிதிச் சுமையே.

இவை அல்லாமல் மூன்றாம் உலக நாடுகளில் உற்பத்தி அலகுகள், சேவைத் துறை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களைச் செயல்படுத்துவதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யும் லாபங்களையும், அவற்றுக்கு அளிக்கப்படும் வரி வாடகைச் சலுகைகள், அந்நிய நிதி முதலீடுகள் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் லாபங்களையும், நிதியுதவி என்ற பேரில் சுரண்டப்படும் வளங்களையும் கணக்கில் கொண்டால் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து சுரண்டப்படும் ஏகாதிபத்திய லாபங்களின் பரிமாணம் இன்னும் பன்மடங்காகும்.

ஏகாதிபத்திய ஒடுக்குமுறை வடிவங்களில் முக்கியமானதாக இந்த நாணய ஒடுக்குமுறை உள்ளது. வலுவான நாணயங்களைக் கொண்ட வளர்ந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து சமமற்ற பரிவர்த்தனையின் மூலம் கணிசமான அளவில் பொருள்களையும், செல்வங்களையும் சுரண்டுவதற்கான ஆயுதமாக அது செயல்படுகிறது. இதற்குத் துணை புரியவே சர்வதேசப் பண நிதியம், உலக வர்த்தக அமைப்பு ஆகிய நவீன தாராளமய அமைப்புகள் செயல்படுகின்றன.

சர்வதேசப் பண நிதியமும், உலக வர்த்தக அமைப்பும் உலகெங்கும் உள்ள வளரும் / ஏழை நாடுகளில் பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் நவீன தாராளமயக் கொள்கைகளைச் செயல்படுத்தி நாணயங்களை மதிப்பிழக்கச் செய்து, காப்பு வரிகளைத் தடுத்துத் தடையற்ற வர்த்தகத்தை ஊக்குவித்து வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே சாதகமான சமமற்ற பரிவர்த்தனைகளுக்கே பாதை அமைத்துள்ளன.

ஆகவே சமமற்ற பரிவர்த்தனைகளைத் தவிர்க்கும் விதமாக இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் / வளரும் நாடுகள் / ஏழை நாடுகள் (ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகள்) டாலரிலான ஏற்றுமதி இறக்குமதிகளை குறைத்து தங்களுக்குள்ளே ஏற்றுமதி இறக்குமதிகளைச் செய்ய வேண்டும். அது இந்நாடுகளின் பொருளாதாரங்களையும் நாணயங்களையும் வலிமைப்படுத்தி ஒருங்கிணைப்பதுடன் ஏகாதிபத்தியத்தை வலிமையிழக்கச் செய்யவும் நவீன காலனியாக்கத்திலிருந்து விடுதலை பெறவும் வழிகோலும். ஆனால் இந்திய அரசோ வெட்கக்கேடான முறையில் அமெரிக்காவிடம் அடிபணிந்து கிடக்கிறது.

(தொடரும்)

- சமந்தா