cororna migrant workers 340இந்திய அரசு அமைப்புசாராத் தொழில்கள் என்று 60 வகையான தொழில்களை வரையறை செய்துள்ளது. அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல வாரியத்தையும் அமைத்துள்ளது. ஆனால் அந்த அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல வாரியம் என்பது முழுக்க முழுக்க மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. தற்போது தொழில்துறை அமைச்சராக இருப்பவர் நிலோபர் கபில், இவரின் அமைச்சகத்தின் கீழ்தான் இந்த அமைப்புசாராத் தொழிலாளர் நலத்துறை வருகிறது. இதில் என்னென்ன துறைகள் வரும் என்று பார்க்கலாம்.

1. விவசாயத் தொழிலாளர் நல வாரியம்
2. மீனவர் நல வாரியம்
3. கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம்
4. சீர்மரபினர் நல வாரியம்
5. பழங்குடியினர் நல வாரியம்
6. ஆட்டோ ரிக்க்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுநர் நல வாரியம்
7. பனைமரத் தொழிலாளர் நல வாரியம்
8. காலணித் தொழிலாளர் நல வாரியம்
9. மாற்றுத்திறனாளிகள் நல வாரியம்
10. திருநங்கைகள் நல வாரியம்
11. முடிதிருத்துவோர் நல வாரியம்
12. தையல் தொழிலாளர் நல வாரியம்
13. ஓவியர் நலவாரியம்
14 கைத்தறி மற்றும் கைத்தறி நெசவுத் தொழிலாளர் நல வாரியம்
15. தூய்மைப் பணியாளர் நல வாரியம்
16. நரிக்குறவர் நலவாரியம்
17. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்
18. கிராமக் கோவில் பூசாரிகள் நல வாரியம்
19. நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம்
20. அருந்ததியர் நல வாரியம்
21. கட்டிடத் தொழிலாளர் நல வாரியம்
22. புத்தகப் பதிப்பாளர், விற்பனையாளர் மற்றும் பணியாளர் நல வாரியம்
23. அச்சகத் தொழிலாளர் நலவாரியம்
24. கேபிள் டிவி ஆபரேட்டர் நலவாரியம்
25. தமிழ்நாடு வணிகர்கள் நல வாரியம்
26. தமிழ்நாடு வீட்டுப் பணியாளர் நல வாரியம்
27. பொற்கொல்லர் நல வாரியம்
28. தொழிலாளர் நல வாரியம்

அமைப்புசாராத் தொழிலாளர்களாகப் பதிவு செய்வதற்கான தகுதிகள் அல்லது வரையறைகள் என்று அரசு சில வரையறைகளைத் தந்திருக்கிறது. அவையாவன:

  1. 18 முதல் 60 வயது வரை இருக்க வேண்டும்
  2. வாக்காளர் அடையாள அட்டை
  3. குடும்ப அடையாள அட்டை (ரேஷன் கார்டு)
  4. அரசு மருத்துவரிடம் பிறப்பு தொடர்பான கையொப்பமிட்ட சான்றிதழ் 5. தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு
  5. தொழில் வகைச் சான்று (தொழில் வழங்குபவரிடமிருந்து கையொப்பம்)

இவ்வாறு பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் இதனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். இவர்கள் அரசின் ஊழியர்களாகவோ அல்லது வேறு ஏதாவது அரசின் உதவி திட்டத்தில் சேர்ந்தவராகவோ இருக்க கூடாது.

60 வயதிற்கு மேற்பட்ட ஒருவர் தனது தேவைகளுக்காகத் தொழிலில் ஈடுபடுவராக அல்லது பணி செய்பவராக இருந்தால் அவர் இந்தத் திட்டத்தில் பதிவு பெறத் தகுதி பெற்றவர் அல்லர். இத்தகையவர்களுக்கு ஓய்வூதியத் திட்டமாக ரூபாய் 200 முதல் 500 வரை வழங்கப்படும். இந்தத் தொகையை வைத்துக் கொண்டு ஒருவர் எவ்வாறு தன் தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியும்? இந்தத் தொகையைப் பெறுவதற்கு தேசிமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும். ஆனால் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச வைப்புத் தொகையாக 500 முதல் 1000 ரூபாய் இருக்க வேண்டும். இது எந்த வகையில் சாத்தியம் என்பதற்கு அரசுதான் விடை சொல்ல வேண்டும். மேலும் இசுலாமிய உலமாக்களுக்கும் கோவில் பூசாரிகளுக்கும் இடமளிக்கும் இந்தத் திட்டத்தில் கிறித்தவ மற்றும் பிற மதப் பரப்புரை பணியாளர்களுக்கு இடமளிக்காதது அப்பட்டமான மதப் பாகுபாடே ஆகும்.

30.11.2019 அன்று தமிழகத் தொழில்துறை அமைச்சர் நிலோபர் கபில் பிரதம மந்திரி தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் குறித்து பேட்டி அளித்திருந்தார், அந்தப் பேட்டியில் இந்த ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 53 ஆயிரத்து 549 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும் சிறு வணிகர்கள் சில்லறை வணிகர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் 213 பேர் இணைந்துள்ளதாகக் கூறினார். தமிழ்நாடு முழுவதும் 213 பேர் மட்டுமே சிறு வணிகர்களாக குறு தொழில் செய்பவர்களாக இருக்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. அப்படி என்றால் இப்படிப் பதிவு செய்யப்படாதவர்களுடைய எண்ணிக்கை மிக மிக அதிகம் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அதுபோல இதுவரையில் அமைப்புசாராத் தொழிலாளர்களாகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 31/10/2019 வரை 74,66,129 பேர். இதில் பயனடைந்தோர் 71,11,397 பேர் என்று கூறினார்.

பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கும் பயனடைந்த தொழிலாளர்களுக்கும் இடையில் 3 1/2 லட்சம் பேர் பயனடையாமல் இருக்கிறார்கள் என்பதை அமைச்சரே ஒப்புக் கொள்கிறார். அப்படி என்றால் பதிவு செய்யப்படாதவர்கள் எண்ணிக்கையை நாம் கணக்கிட்டுக் கொள்ளலாம். தமிழகத்தின் மக்கள் தொகை 8 கோடியாக வைத்துக் கொண்டால், பணிக்குச் செல்லாத பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், வயோதிகர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயுற்றவர்கள், சரிபாதி இருக்கிறார்கள் என்று எடுத்துக் கொண்டால் கூட, மீதம் 4 கோடிப் பேர். அந்த 4 கோடிப் பேரில் அரசு ஊழியர்கள் பதிவு செய்யப்பட்ட அமைப்புகளில் பணிபுரிவோர் நான்கில் ஒரு பங்குதான் இருப்பார்கள். அதாவது ஒரு கோடிப் பேர் இந்த வகை என்று எடுத்துக் கொண்டால் மீதம் இருக்கிற 3 கோடிப் பேர் அமைப்புசாராத் தொழிலாளர்கள். ஆனால் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கை வெறும் 74 இலட்சம் மட்டுமே. அப்படி என்றால் மீதம் இருக்கிற 3 கோடி மக்கள் அரசின் திட்டத்தில் சேராதவர்கள். ஆனால் அரசு இந்த அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியத்தில் இணைந்துள்ள தொழிலாளர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் என்ற அறிவிப்பைச் செய்திருக்கிறது. அப்படி என்றால் இந்தத் திட்டத்தில் இணையாதவர்களின் நிலைமை என்ன? அவர்களுக்கு எப்படி இந்த ஆயிரம் ரூபாயைக் கொண்டு சேர்ப்பது? என்ற கேள்வி எழுகிறது. இல்லை, அவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு இறந்து போகட்டும் என்று அரசு நினைக்கிறதா? என்ற ஐயமும் எழுகிறது.

அதற்கு நாம் என்ன சொல்கிறோம் என்றால், இது துயர் தணிப்பு (நிவாரண) நிதி அல்ல. துயர்தணிப்பு நிதி வழங்கும் போது புள்ளிவிவரங்களைக் கணக்கில் கொண்டு துறைவாரியாகப் பட்டியல் தயாரித்து இழப்பீட்டுத் தொகை வழங்கலாம். ஆனால் இப்போதுள்ள சூழலில் அடிப்படைத் தேவைகளுக்கே ஆதாரமில்லாத ஒரு நிலையில் மக்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் நாம் பதிவு செய்தவர்கள், பதிவு செய்யாதவர்கள், அமைப்பு சார்ந்தவர்கள், அமைப்பு சாராதவர்கள் என்ற கணக்கையும் அதற்கான புள்ளிவிவரங்களையும் தேடிச் செல்வது அநியாயமானது. அல்லது அப்படி நீங்கள் அமைப்புசார் தொழிலாளர்களாகப் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு நிதி வழங்குகிறீர்கள் என்றால் இந்த அமைப்பில் அல்லது திட்டத்தில் சேராத தொழிலாளர்களுக்கு என்ன செய்வது? அவர்கள் இந்தத் தொகையை எப்படி பெற்றுக் கொள்வது? என்ற திட்டத்தையும் சேர்த்து அறிவிக்க வேண்டும்.

ஓட்டுநர்கள் 

       உதாரணமாக நான் நான்கு ஆண்டுகளாய் ஓட்டுநராகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் நான் எந்த ஓட்டுநர் சங்கத்திலும் அல்லது அரசின் திட்டத்திலும் இதுவரையில் இணையவில்லை. நான் மட்டுமல்ல தமிழகத்தில் அமைப்புசாராத் தொழிலாளர்களாகத் தங்களைப் பதிவு செய்து கொண்ட ஓட்டுநர்களின் எண்ணிக்கை 83 ஆயிரம். ஆனால் சென்னையில் மட்டுமே ஒரு 2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் இருக்கிறார்கள். ஓட்டுநர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்கள் 72,500 பேர். ஆட்டோ ஓட்டுநர்கள் 2,85,000 பேர். மேலும் இது சார்ந்த தொழிலில் ஈடுபடுவோர் 6,00,000 பேர். ஓட்டுநர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்கள் 45,000 பேர். மொத்தமாக 15,00,000 பேர் தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநராகப் பணிபுரிகின்றனர்.

குறிப்பாகக் கடந்த சில ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரச் சரிவு பற்றி மக்களிடையேயும் சட்டமன்ற, நாடாளுமன்றத்திலும் விவாதங்கள் நடந்து வருகின்றன. மத்திய நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது, வாகனங்கள் விற்பனைக் குறைவுக்குக் காரணம் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களின் வருகை என்று பதில் கூறினார். தற்போது மக்கள் அனைவரும் ஓலா, உபேர் போன்ற சேவைகளை பயன்படுத்தத் தொடங்கி விட்டதால் வாகன விற்பனை வெகுவாகக் குறைந்திருக்கிறது என்று கூறினார். ஆனால் உண்மையில் (commercial vehicle) தொழில்முறை வாகனங்கள் வாங்கும் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்திருக்கிறது. அதற்குக் காரணம் கடந்த 3 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதார வீழ்ச்சியை விட இந்த வாகன சேவைத்துறை அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. அப்படி இருக்க இப்படி ஒரு கூற்றை நாடாளுமன்றத்திலேயே நிதியமைச்சர் அவர்கள் கூறினார்கள்.

இந்த ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் ஓட்டுநர்கள் கூட இந்த நலவாரியங்களில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அல்ல, அதற்கு நானே ஒரு சான்று. நான்கு வருடங்களாக உபேரில் பணிபுரிந்து வருகிற நான் எந்த நலவாரியத்திலும் பதிவு செய்யவில்லை. ஆகவே பதிவு செய்யப்பட்ட ஓட்டுநர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் என்று அறிவிக்கின்ற செயலை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அதற்கு பதிலாக பேட்ஜ் லைசென்ஸ் உள்ள ஓட்டுநர்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கலாம். அதற்கு ஒரு toll-free (கட்டணமில்லாத) எண் கொடுத்து அதன் மூலம் இந்த நிதியைப் பெறுவதற்கு வகை செய்யலாம். ஆயிரம் ரூபாய் என்பது அற்பத் தொகை, அது எந்த வகையிலும் பயன்தராது என்பதையும் அரசுக்குத் தெரிவிக்கிறோம். ஒவ்வொரு துறையிலும் அவர்களுடைய தொழில் முறை சான்றுகளை பயன்படுத்தி, சான்று இல்லாதவர்களுக்கு அரசே உடனடியாக சான்றிதழ் வழங்கி அவர்களுக்கான உதவிகளை செய்ய முன்வர வேண்டும்.

       தற்போது அரசு ஒரு குடும்பத்திற்கு 1000 ரூபாய் என்ற அறிவிப்பை அறிவித்திருக்கிறது. அதாவது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் என்ற அறிவிப்பு! குடும்ப அட்டை இல்லாத பல குடும்பங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த உதவித் தொகையை எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்ற ஏற்பாடுகளையும் செய்ய முன்வர வேண்டும். குடும்பத்திற்கு 1000 ரூபாய் என்ற திட்டம் உண்மையில் பயன் தரக் கூடியது அல்ல. ஒரு குடும்பத்தில் 3 பேர் இருக்கலாம் ஒரு குடும்பத்தில் 7 பேர் இருக்கலாம் மூன்று பேருக்கு 1,000 ரூபாய் போதும் என்றால் ஏழு பேருக்கு அந்தத் தொகை எவ்வாறு போதுமானதாக இருக்கும்? ஆகவே குடும்ப அட்டையில் குறிப்பிட்டுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தத் தொகையை நிர்ணயிக்க வேண்டும். அல்லது ஆதார் அட்டையைக் கணக்கில் கொள்ளலாம்.

கொரோனா பரவாமல் தடுக்க தமிழ்நாட்டிலுள்ள அனைவரையுமே வீட்டில் இருக்க அரசு பணிக்கிறது. அமைப்புசாராத் தொழிலாளர்கள், அமைப்புசார்ந்த தொழிலாளர்கள், பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள், பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள், வேறு மாநிலத்தவர், வேறு மாநிலத்திலிருந்து பயிலும் மாணவர்கள், வேறு மாநிலத்திலிருந்து இங்கே பணி செய்கிற பணியாளர்கள்… என்று அனைவரையும் வீட்டிலிருக்க அரசு பணிக்கிறது. அப்படி இருக்க பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் உதவித் தொகை அறிவிப்பது மோசமான நடவடிக்கை. அரசு தன் திட்டத்திற்கும் தன் அறிவிப்புக்கும் எதிரான வேலையை செய்கிறது. இதனைப் புரிந்து கொண்டு அனைவருக்கும் உதவித் தொகை தருகின்ற வகையில் அரசுகள் திட்டமிட வேண்டும். மேலும் உதவித் தொகைகளை அரசு நேரடியாக வீட்டில் சேர்ப்பிக்க வேண்டும். ரேஷன் கடைகள் மூலமாக அல்லது அரசு அலுவலகங்களில் சென்று மக்கள் இந்த உதவித் தொகைகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இருப்பது மக்கள் வெளிவருவதற்கான வாய்ப்பு வழிகளை அரசே திறந்து விடுவது போல் இருக்கிறது.

பொது சமையல் கூடங்களை ஏற்படுத்துவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது உணவுப் பொருட்களுக்கு மக்கள் வெளியில் வருகின்ற எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்படும். பொதுச் சமையல் கூடங்களை ஆங்காங்கே முடிந்த அளவில் அமைத்து, உரிய நேரத்தில் உணவினை நேரடியாக அவரவர் வீடுகளுக்கு அரசே நேரடியாகக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். அதற்கு குறிப்பிட்ட நபர்களை, தன்னார்வலர்களை பயிற்சி கொடுத்து உரிய பாதுகாப்போடு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள்தான் மக்கள் வெளியில் வராமல் இருப்பதற்கான சூழலை உருவாக்கும் என்பதை புரிந்து கொண்டு அரசு துரிதகதியில் இதனைச் செய்ய வேண்டும்.

தற்போது உணவுப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் போக்கு வரத்திற்கும் அவற்றின் விற்பனைக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. மருத்துவ உதவிகளுக்காகவும் வாகனங்களைப் பயன்படுத்தலாம், வேறுபல அவசர உதவிக்காகவும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கிறது. அதற்காக அரசு உரிய அனுமதிச் சீட்டையும் வழங்குகிறது. இது வரவேற்கத் தக்கது. இதுபோன்ற பல்வேறு அத்தியாவசியத் தேவைகள் மக்களுக்கு இருப்பதைப் புரிந்து கொண்டு இவ்வாறான துறைகளை இனங்கண்டு அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடுவோரையும் அனுமதிக்க வேண்டும். இதுவே பெருந்திரளான மக்கள் தொடர்ந்து வீட்டில் இருப்பதற்கு அடிகோலும். ஆனால் அனைத்து தரப்பினருக்கும் உரிய பாதுகாப்புக் கருவிகளை 100 விழுக்காடு உறுதி செய்ய வேண்டும்.

சிறு குறு தொழில்கள்

இந்தியப் பொருளாதாரத்தில் (GDP) விவசாயத்திற்கு அடுத்தபடியாக பெரும் பங்கு வகிப்பவை சிறு குறு தொழில்கள். ஒன்றரைக் கோடி அளவில் விற்று முதல் (turnover) காணும் தொழில்களை சிறு குறு தொழில்கள் என நிர்ணயம் செய்கிறார்கள். இந்த தொழிலில் ஈடுபடுவோர் பெருபாலும் அமைப்புசாராத் தொழிலாளர்களாக இருக்கின்றனர். நகர்ப்புறங்களில் இருக்கும் வெகு சிலர் மட்டுமே சங்கமாகவோ அல்லது இது போன்ற திட்டங்களிலோ இணைந்துள்ளனர். இவர்களுக்கு எந்த ஏற்பாட்டையும் அரசு முன்னெடுக்கவில்லை. இவர்கள் வாங்கும் ஊதியத்திற்கு முறையான வங்கிக்கணக்கோ நிலையான ஊதியமோ கிடைப்பதில்லை. எனவே வருமான அடிப்படையில் வங்கிகள் இவர்களுக்கு கடன் வழங்கவும் முன்வருவதில்லை. இந்தச் சூழலில் கந்துவட்டிக்குக் கடன் வாங்கும் நிலை உருவாகியிருக்கிறது. ஆனால் அதையும் எவ்வாறு திருப்பி செலுத்துவது என்ற மன உளைச்சல் ஏற்படுகிறது. சிலர் பயந்து கொண்டு வயிற்றைக் கட்டிக்கொண்டு வீட்டில் இருக்கின்றனர்.

சிறு குறு தொழிலில் முதலீடு செய்துள்ள தொழில்முனைவோரின் நிலை இன்னும் மோசமான நிலையில் உள்ளது. பெருநிறுவனங்கள் போலப் பெருநிதியைக் கையிருப்பு வைத்துக்கொண்டு தொழில் செய்வதில்லை. இவர்கள். தங்களை நம்பியுள்ள ஊழியர்களுக்கும் ஊதியம் கொடுக்க வேண்டியுள்ளது, கடை வாடகை, மின்கட்டனம் GST வரி உள்ளிட்ட தங்களின் தேவையையும் நிறைவு செய்ய வேண்டியுள்ளது. ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தும் அரசு அந்தத் தேவையை எவ்வாறு நிறைவு செய்வது என்பதற்கு எந்த உத்தரவாதமும் தரவில்லை. கடன் தவணை மற்றும் GST க்கு மூன்று மாத ஒத்திவைப்பு என்று அறிவித்திருந்தாலும் வங்கிகள் கணினிமயமாகி விட்டதால் auto credit முறையில் தவணைகள் எடுத்துக் கொள்கின்றன. வங்கியில் பணம் இல்லாதவர்களுக்கு தண்டத் தொகையோடு தவணை செலுத்தும் படி குறுஞ்செய்தி வருகிறது. ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமாக மக்களுக்கும் வாடிக்கையாளருக்கும் வழிமுறை சொல்லி அறிவுறுத்துகிறது. இது மக்களுக்குப் பெரும் குழப்பம் ஏற்படுத்துகிறது. மேலும் மூன்று மாதம் தாமதமாகத் தவணை செலுத்தினால் அந்த மூன்று மாதத்தை தவணைக் காலத்தில் நீட்டித்து அதற்கும் சேர்த்து வட்டி வசூலிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே மக்களுக்குப் பயன்படும் வகையில் முறையான அறிவிப்பை RBI அறிவிப்பதோடு வங்கிகள் அதனை நடைமுறைப்படுத்தவும் அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

ஒப்பந்தத் தொழிலாளர்கள்

ஒவ்வொரு தொழிலிலும் ஒவ்வொரு நிறுவனத்திலும் சில குறிப்பிட்ட வேலைகளுக்கு கணிசமான எண்ணிக்கையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகிகிறார்கள். இவர்கள் ஊழியர்களாகக் கருதப்பட மாட்டார்கள் ஆகவே ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் சலுகைகள் எதுவும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அரசுத் துறைகளிலேயே ஒப்பந்த தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மின்வாரியம் போன்றவற்றில் ஒப்பந்தமே இல்லாத ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுகின்றார்கள். இவர்களுக்கு உரிய வழிவகைகளை அரசு அறிவிக்க வேண்டும். குறிப்பாக BSNL ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 20,000 கோடி இன்னமும் வழங்காமல் இருப்பது வேதனை. இந்தத் தொகையினை விடுவிப்பது இந்த நெருக்கடிச் சூழலில் அவர்களுக்கு உதவும். உடனே இதைச் செய்ய வேண்டும். மேலும் விவசாயத் தொழிலாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் தாங்கள் சார்ந்த துறையில் வேலை இல்லாத போது வேறு தொழில்களில் ஈடுபடுவார்கள் இவர்கள் ஏற்கெனவே ஒரு தொழிலில் பதிவு செய்திருப்பதால் இன்னொரு தொழிலில் தொழிலாளராகப் பதிவு செய்ய முடியாது. இது போன்று பல சிக்கல்கள் உள்ளதால் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மட்டும் பணம் வழங்குவதை நம்மால் ஏற்க இயலாது. அனைவருக்கும் உதவி செய்வதே சரி!

கொரோனா நோய்த்தொற்று ஏழை பணக்காரர் வேறுபாடு பார்க்காமல் வருவது போலவே அதனால் ஏற்படும் பொருளியல் பாதிப்பும் வேறுபாடு பார்ப்பதில்லை. அன்றாடங்காய்ச்சிகள் மட்டுமல்லாது பெருமளவில் நிலையான ஊதியம் பெறும் தொழிலாளர்களும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. குறிப்பாக சேவைத் துறை (service sector) மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) பணியில் ஊழியர்களின் வாழ்வு ஆபத்தான நிலையில் உள்ளதாகக் கூறுகின்றனர்.

நாம் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதற்கும் வெளிவராமல் இருப்பதற்கும் சேவைத் துறை பெருமளவில் உதவுகிறது. தொலைத்தொடர்பு ஊடகங்கள், இணையதள வசதிகள் பெருகிவிட்ட இந்த வாழ்வியலில் தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்கு பெரிது. கொரோனா பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், அரசின் திட்டங்கள் எனப் பலவற்றையும் மக்களுக்குக் கொண்டு செல்லும் பணியை இந்த நிறுவனங்கள் செய்கின்றன. ஆனால் இவர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய அரசு பணித்திருப்பதால் இவர்களின் பணிச்சுமை அதிகரித்திருக்கிறது. தொழில்நுட்ப சாதன வசதிக் குறைபாடு, இணைய இணைப்புச் சிக்கல், வீட்டின் சூழல் ஆகியவற்றால் இவர்களின் வேலையில் பல இடையூறுகள் தோன்றுகின்றன. மேலும் நிறுவனங்கள் நிதிச்சுமையைக் காரணங்காட்டி ஊழியர்களைக் குறைக்கும் முடிவை எடுக்க நேரிட்டால், அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்தும் உள்ளது. ஆகவே மக்களின் தேவைகளை நிறைவு செய்ய முன்னுக்கு நின்று பணிபுரியும் தொழில்களை கண்டறிந்து கணிசமான அளவில் அத்தொழில்களில் ஈடுபடத் துணை செய்ய வேண்டும். இதுவே மக்கள் தொடர்ந்து வீட்டில் இருக்கவும், கொரோனா அச்சமின்றி சமூகம் இயங்கவும் வழி செய்யும்.

- மகிழன்