KS subramanianவாழ்வதன் முன்னம் நான் செத்திருந்தேன்
செத்ததன் பின்னாலும் வாழ்ந்திருப்பேன்
சோர்வுக்கு முன்னால் நான் சுகித்திருப்பேன்
சோர்வுக்குப் பின்னாலும் சுகித்திருப்பேன்
வித்துக்கு முன்னால் நான் விளைந்திருந்தேன்
விளைவுக்குப் பின்னாலும் வித்தாவேன்
முடிவுக்கு முன்னால் நான் முதலாவேன்
முந்தாலும் முடிவுக்கோர் முதலாவேன்
அசைவுக்கு முன்னால் நான் அணுவானேன்
அணு பிளந்தாலும் பிளவுக்குள் அசைவானேன்.

1970-இல் ஞானரதத்தில் ஜெயகாந்தன் எழுதிய கவிதை இது. ஒரு வகையில் ஜெயகாந்தனின் ஆன்மீகப் பார்வையின் சாரம். இந்தவரிகள் மேலும் ஒருவருக்குப் பொருந்தும் எனில் அது டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியனைச் சாரும்.

டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியனின் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் கருங்குளம் எனும் சிற்றூர். 1937 நவம்பர் பன்னிரண்டாம் நாள் அவர் பிறந்தார்.

அவரது தந்தையார் பிரிட்டிஷ் அங்காடி ஒன்றின் பொது மேலாளரின் காரியதரிசியாகப் பணியாற்றியவர். அதே வேளை கதர் அணிவது, காந்திய ஈடுபாடு, தேச விடுதலை நாட்டம் கொண்டவர். சுப்பிரமணியன் பம்பாயில் பிறந்தார்.

அப்போது அவரது தந்தையார் காசநோயால் பாதிக்கப்படுகிறார். தொடர் நோய்த் தொல்லையில் சில ஆண்டுகளில் காலமாகிறார். கே.எஸ்.எஸ். தாயாரின் அரவணைப்பிலேயே வளர்கிறார்.

பின்னர் குடும்பம் தமிழ்நாட்டுக்கு குடிபெயர்கிறது. கோவில்பட்டியில் ஓரிரு ஆண்டுகளும் தாயார் ஊரான சுத்தமல்லியில் சில ஆண்டுகளுமாக இளமைக் காலம் கழிகிறது.

கே.எஸ்.எஸ்.-ன் பள்ளி வாழ்க்கை சென்னை இராமகிருஷ்ணா மாணவர் இல்லத்தில் தொடங்குகிறது. குடும்ப வறுமைநிலை, வாழ்வில் உயரவேண்டும் என்ற உந்துதலை அளிக்கிறது.

இராமகிருஷ்ண மடத்தின் கட்டுப்பாடுகள், ஆன்மீக நடவடிக்கைகள் கே.எஸ்.எஸ் எனும் ஆளுமை உருவாக்கத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்குகிறது. ஏழ்மையும், வறுமையும், நெருக்கடிகளும்தான் மனிதர்களின் சிந்தனைத் தளத்தைத் தீர்மானிக்கிறது.

கே.எஸ்.எஸ். பள்ளியில் கல்வியில் முன்னிலைப் பெற்றதோடு நற்பண்புகளையும் வரித்துக் கொண்டார். 1958-ல் சென்னை மாநிலக் கல்லூரியின் மாணவர் தலைவராகிறார். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பல பரிசுகளைப் பெறுகிறார்.

அப்பொழுது முதல் முதலாக பொங்கல் விழாவினை மாநிலக் கல்லூரியில் தவத்திரு குன்றக்குடி அடிகளாரை அழைத்து நடத்துகிறார். அடிகளார் பொங்கல் விழாவை ‘முதன் முதலாக’ நடத்தியதற்காகப் பாராட்டுகிறார். கே.எஸ்.எஸ் இயற்பியல் இளங்கலை, வரலாறு முதுகலை, வணிகவியல் நிர்வாகவியல் பயின்று முனைவர் பட்டமும் பெற்றார்.

இந்திய அரசுப்பணியில் IRAS அதிகாரியாக 15 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) யில் பல நிலைகளில் இருபத்தி இரண்டு ஆண்டுகள் பணியாற்றி இயக்குநர் நிலையில் பணி நிறைவு பெற்றார்.

கே.எஸ்.எஸ் இளம் பருவம் தொடங்கி இலக்கிய ஈடுபாடு மிக்கவராக இருந்தார். தமிழ் இலக்கியத்தைப் பாடமாகப் பயிலவில்லையே தவிர, தமிழ் இலக்கியங்களை வாசிப்பவராகவே இருந்தார்.

மணிலாவில் இருந்த காலங்களில் தம் இந்திய, ஆங்கில நண்பர்களுக்கு தமிழ் நவீன இலக்கியங்களை, குறிப்பாக எழுத்தாளர் ஜெயகாந்தனை அறிமுகம் செய்யத் தொடங்கினார். அவர்கள் இவை ஆங்கிலத்தில் கிடைக்குமா? என வினவ இவரின் பார்வை மொழிபெயர்ப்பு திசை நோக்கிப் பயணித்தது எனலாம்.

1998-ல் மணிலாவில் இருந்து திரும்பிய உடன் முழுநேர இலக்கிய வாசிப்பு, மொழி பெயர்ப்புப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

கே.எஸ்.எஸ் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தார். இது இவரின் தனிச்சிறப்பு; தமிழில் மொழி பெயர்ப் போர் அதிகம்; ஆனால் ஆங்கிலத்துக்குக் கொண்டு செல்வோர் குறைவு: இப்பணி கடினமானதும் கூட. கே.எஸ்.எஸ் இதனைப் புன்முறுவலுடன் ஏற்றார்.

ஜெயகாந்தனைகே.எஸ்.எஸ் கொண்டாடினார், அவரின் சகயிருதயராய் கடைசிவரை இருந்தார் : சபையில் அங்கம் வகித்தார்; நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்துக்குக் கொண்டு சேர்த்தார். ஞானபீடம் ஜெயகாந்தனை நோக்கி வர இவரின் இந்த மொழிபெயர்ப்புகளும் முக்கிய காரணம்.

உ.வே.சாவின் என் சரித்திரம், அசோகமித்திரன் கட்டுரைகள், ம. இராசேந்திரனின் சிறுகதைகள் என நிறைய மொழி பெயர்த்தார்.

இவரின் கவிதை மொழிபெயர்ப்புகள் முக்கியமானவை. தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு, தேர்ந்தெடுத்தக் கவிதைகளை ‘Tamil Women Poets – Sangam to the present’ என ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

கவிஞர் சிற்பி, தமிழன்பன், இளம்பிறை, உமாமகேஸ்வரி என்று தனிக் கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்த்ததுடன் தமிழின் பல கவிஞர்களின் கவிதைகளையும் பல தொகுப்புகளாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

கொரோனா தீநுண்மக் காலக் கவிதைகளை ஓரிரு மாதங்களுக்கு முன்பு சுடச்சுட மொழி பெயர்த்து ‘Lock down Lyrics’ என வெளியிட்டார். இது இவரின் கடைசி வெளியீடாக அமைந்துவிட்டது.

‘சிந்தனை ஒன்றுடையாள்’ எனும் நூல் சமஸ்கிருதம், தமிழ் அறவியல் தெறிப்புகளை மொழிபெயர்ப்பாகத் தந்த நூல். சமஸ்கிருதத்தில் 480 மேற்கோள்களும், தமிழில் 790 மேற்கோள்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

தமிழ், சமஸ்கிருத மொழிகளின் தொன்மைச் சிறப்பையும் பண்பாட்டுச் செறிவையும் அடையாளப்படுத்தக் கூடியவை இவை.

கே.எஸ்.எஸ். தன் மொழிபெயர்ப்புகளுக்காக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருது, பப்பாசி கலைஞர் அறக்கட்டளை விருது, திசையெட்டும் - நல்லி விருது உள்ளிட்ட பல சிறப்புகளைப் பெற்றவர்.

சாகித்திய அகாதமியின் தமிழ் ஆலோசனைக் குழுவிலும், மொழி அறக்கட்டளையிலும், கணையாழி இதழிலும் தம் பங்களிப்பினை ஆற்றியவர்.

கே.எஸ்.எஸ். அற்புதமான மனிதர். இந்திய மரபின் தாக்கமும், உலக நவீனத்துவ நிலைமையின் வீச்சும் அவருக்குள் உண்டு ‘மனித நேயத்தின் கொதிநிலையில் சுருள்சுருளாய் எழும் ஆவியின் நல்மண அரவணைப்பில் சுத்திகரிக்கப் படுவதே ஆன்மீகம்’ என்பது அவரது கருத்து.

இராமகிருஷ்ண இல்லத்தின் வார்ப்பு அவர்; அந்த உணர்வை தன் மூச்சடங்கும்வரை கண்ணிலும் மனதிலும் பொத்திக் காத்தார். அதன் வெளிப்பாடுதான் அவர் செய்த அநேகம் உதவிகள்; உதவி கோராமலே நிலை அறிந்து உதவியவர் அவர். அவர் செய்வதை அவரே ‘அறியாத’ அளவு கண்ணியம் அவருடையது.

பசியின், வலியின், இரணத்தின் ஆழருசி அறிந்தவர் அவர். நிறைய கலைஞர்கள், எழுத்தாளர்கள், முதல் தலைமுறை கல்வி கற்றவர்கள்... எனப் பலர் கே.எஸ்.எஸ்.இன் ஈரம் பற்றி நிற்கிறார்கள்.

ஜெ.கே.போலவே நடை உடையில் மிடுக்கு; ஜெ.கேவிடம் ஒருவித செருக்குத் தோற்றம்; கே.எஸ்.எஸ் அதற்கு நேர் எதிர் குழைவு. புன்னகை, மெல்லிய, மனதைத் தொடும் வார்த்தைகள், காலம் தவறாமை, கண்டிப்புமிக்க ஒழுங்கு, நட்பை உறவாய்க் கொண்டாடும் குதூகலம் இதுதான் கே.எஸ்.எஸ்.

கே.எஸ்.எஸ் தன் வாழ்வின் சிறுதுளிகளை எழுதிய அனுபவச் சுவடுகள், ஜெயகாந்தன் ஒரு பார்வை, பாரதியார் பன்முகங்கள் பல் கோணங்கள், இலக்கிய ஆளுமைகள் முதலான நூல்கள் அவரின் தமிழ்ப் படைப்புகளுக்கு சான்று தருவன.

2005ல் ‘Tamil New poetry’ எனும் தொகுப்பில் (கதா வெளியீடு) என், ‘ஙப்போல் வளை’ கவிதைகள் சிலவற்றையும் மொழி பெயர்த்தார். அப்பொழுது எழுத்தாளரும் முன்னைத் துணைவேந்தருமான ம.இராசேந்திரன் என்னை கே.எஸ்.எஸ்க்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் ம. ரா. அவர்கள் துணைவேந்தரான பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஜெயகாந்தன் பெயரிலும், சி.சுப்பிரமணியன் (மேனாள் மத்திய அமைச்சர்) பெயரிலும் அறக்கட்டளைகளைத் தொடங்கினார். ஜெயகாந்தனுக்கு மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கப்பட்டபோது உடன் இருந்தார். தொடர்ந்து பலமுறை பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தார்.

தனிப்பட்ட முறையில் என்மீது பேரன்பு காட்டி வந்தார். எந்த நூல் வெளிவந்தாலும் ‘For the joy of sharing’ என அழகாக எழுதிக் கையப்பமிட்டு அனுப்பி வைப்பார். இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் தொலைபேசியில் அழைத்தார்.

“உங்களை விசாரிக்கத்தான் கூப்பிட்டேன். எப்படி இருக்கீங்க... கவனமா இருங்க...” என்றார். நானும் விசாரித்தேன். உரையாடல் நிறைவுற்றது. மெய்சிலிர்த்தேன். ‘எவ்வளவு பெரிய மனிதர்’ நம்மை விசாரிக்கிறாரே என்று. நண்பர்களிடம் வேறுபாடு கருதாத பேருள்ளம் அவருடையது.

கே.எஸ்.எஸ் தொழில்முறை மொழிபெயர்ப்பாளர் இல்லை. இலக்கியத்தை இரசித்து, உள்வாங்கி, அதை வெளியுலகம் அறிய வேண்டும் என்ற அவாவில் மொழி பெயர்த்தவர். கோட்பாடுகளுக்குள் சிக்காமல் நடைமுறை அறிவைக் கொண்டு செயல்பட்டவர்.

படைப்பாளர்களின் அனுமதி பெறுவது, மொழி பெயர்ப்பைக் காட்டிக் கருத்தறிவது, நூல் அனுப்பித் தருவது என நேர்மையுடன் அவர் செயல்பட்டார். அவரின் மொழிபெயர்ப்பு நுட்பங்கள் குறித்து தனியே பேச வேண்டும். வாழ்வில் மன ஓர்மை கொள்ள அவர் படாத பாடுபட்டார்.

அவருக்குள் இருவித உலகங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. தன்னளவில் நேர்மை, தன் மனச்சான்றின் நெறிப்படி தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். யார்மீதும் காழ்ப்பு, புகார் இல்லை அவருக்கு. தன் ஒதுங்கல் வழித் தன்னை நிறுவிக் கொண்டார்.

நரேன், அஜந்தா ஆகிய தன் மக்கள் இன்று தங்கள் வாழ்வை உலக குடிமக்களாக ஆக்கிக் கொண்டதில் மகிழ்ச்சி அவருக்கு. ஜெயகாந்தனை அவர் கொண்டாடியது போல் கே.எஸ்.எஸ்.ஐ பலர் கொண்டாடினர்.

நீதிநாயகம் சந்துருவும் அவரது துணைவியார் பேராசிரியர் பாரதியும் தனக்கு செய்த உதவிகளை மனம்விட்டுப் பகிர்ந்து நன்றி கூறுவார். அதேபோல் ம.ராவும் தோன்றாத் துணையாகி நின்றார்.

டாக்டர் கே.எஸ்.எஸ் 29.10.2020-ல் தன் வாழ்விலிருந்து விடைபெற்றார் என்றாலும் என்றும் தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நிற்பார்.

- இரா.காமராசு