இந்திய சமூக அமைப்பில் நில வும் தீண்டாமைக் கொடுமைகளை ஒழிக்க ‘குடியுரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1976’ ‘தாழ்த்தப்பட்டோர் மற் றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 1989’ என சில கெடுபிடியான சிறப்புச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டு அவை நடப்பில் செயலாக்கப்பட்டு வந்தபோதிலும் இன்னமும் சமூகத்தில் தீண்டாமைக் கொடுமை முற்றாக ஒழிந்தபாடில்லை.

நகர மற்றும் கிராமப்புறங்களில் அவ்வப் பகுதிகளிலும் நிலவும் சமூகக் கட்டமைப்பிற்கேற்ப அன்றாட வாழ்வில் பல்வேறு வடிவங்கள், முறைகளில் தீண்டாமைக் கடைப்பிடிக்கப்பட்டு வருவது ஒருபுறம் இருக்க, நவீனத் தொடர்பு ஊடகமான இணைய தளங்கள் மூலம் மணத்துணை தேடும் விளம் பரங்களிலும் இவை நேரடியாக அப்பட்டமாக வெளிப்பட்டு வருகின்றன.

சாதிகள் கடந்த முற்போக்காளர்களாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் சிலரே கூட தாங்கள் தரும் விளம்பரங்களில் ‘சாதி தடையில்லை’ என்று தெரிவிக்கும் அதேவேளை, ‘எஸ்.சி., எஸ்.டி.,அல்லாதவராக’ இருக்க வேண்டும், அதாவது ‘Caste no bar (SC/ST excuse)’ என்று கோருகின்றனர்.

நேர்ப்பேச்சில் நண்பர்கள், உறவி னர்கள் மூலமாகத் துணை தேடும் போதுதான் இப்படிக் கூறுகின்றனர் என்றால், அதிகார பூர்வமாக, ஆவண பூர்வமான விளம்பரத்திலேயே, இது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை உணராமலேயே, இதுபற்றி எந்தவிதப் பொருட்பாடும் விழிப்புணர்வும் இல்லாமலேயே இப்படித் தெரிவிக்கின்றனர்.

சாதிகள் நிலவுகிற, மனிதர்கள் சாதிகளாகப் பிளவுண்டு கிடக்கிற ஒரு சமூகத்தில் ஒருவர் தன் இல்வாழ்க்கைத் துணையை சொந்த அல்லது மாற்று சாதியில் தேடுவதோ, எந்த சாதியில் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்வதோ அவரவர் சனநாயக உரிமை, விருப்பம். இதில் போய் எவரும் தலையிட முடியாது. யாரும் தலையிடவும் இல்லை. ஆனால், அப்படித் துணை தேடும் ஒருவர், அத்துணை எந்த சாதி யாக வேண்டுமானாலும் இருக்கலாம், ‘எஸ்.சி., எஸ்.டி.’யாக மட்டும் இருக்கக் கூடாது என்பாரேயானால் அதுதான் குற்றச் செயலாக சாதிகளுக்குள் ஏற்றத் தாழ்வு கற்பிப்பதாக, தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாக, சமூகத்தின் ஒரு பிரிவு மக்களை அவமதிப்பதாக, இழிவு படுத்துவதாக ஆகி விடுகிறது.

சாதி என்பது ஓர் அடையா ளமாக மட்டுமே நோக்கப்படுவது வேறு. அச்சாதிகளுக்குள் பாகுபாடும், உயர்வு தாழ்வும் கற்பிப்பது, தீண்டாமையைக் கடைப்பிடிப்பது என்பது வேறு. முன்னது குற்றச்செயல் ஆகாது. பின்னது குற்றச் செயல். எனினும் இது குற்றச் செயல் என்று அறியாமலேயே தான்பலரும் இப்படிப்பட்ட விளம் பரங்களைத் தந்து கொண்டிருக் கிறார்கள்.

எனவே, சமூகத்தின் ஒரு பிரிவு மக்களை அவமதிக்கிற, மறைமுகமாகத் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிற, சட்டத்திற்குப் புறம்பான இப்படிப் பட்ட விளம்பரங்களை அரசு தடை செய்து, இதற்கு உரிய வழிகாட்டு நெறி முறைகள் வழங்கவேண்டும்.

இத்துடன் கூடுதலாக ஒன்று. பொதுவாகவே மணத்துணை தேடுபவர்கள் சொந்த சாதியைக் குறிப்பிட்டு அதே சாதியில் துணை கோரும் விளம்பரங்களே அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. சட்டப்படி இதில் எந்தத் தவறும் இல்லை என்றாலும், சமூக ரீதியில் இது சாதி அமைப்பை இறுக்கவும், புதுப்பிக்கவும், பாதுகாக்கவுமே உதவி வருகின்றன. அதாவது இவ்விளம் பரங்களில் மண உறவு சார்ந்த உரை யாடலைத் தொடங்குவதற்கான அடிப் படையே, நுழைவாயிலே சாதியாக அமைந்துவிடுகிறது.

எனவே, மணத்துணை தேடும் விளம்பரங்களில் எவரும் தன் சாதியைத் தெரிவிப்பதையோ, கோருவதையோ தவிர்த்துவிடலாம் என்று சொல்லத் தோன் றுகிறது. அதாவது சாதி என்பது கடைநிலை மக்களின் கடைத் தேற்ற லுக்கான, கல்வி மற்றும் வேலை வாய்ப் புகளில் இட ஒதுக்கீடு கோருவதற்கான ஓர் அடையாளமாக, சான்றாவணமாக மட்டுமே இருந்தால் போதும். அதைத் தாண்டி அதைப் பொது அறிவிப்பு செய்து பண்பாட்டுத் தளத்தில் அது வேரூன்றி நிலைபெறச் செய்யத் தேவை யில்லை என்பதே வேண்டுகோள்.

இப்படிச் சொல்வதால் மணத் துணை தேடுபவர்கள் எல்லாம் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ள வலியுறுத்துவதாகப் பொருள் கொள்ளக் கூடாது. அவரவரும் அவரவர் விரும்பும் எந்த சாதியிலும் திருமணம் செய்து கொள்வது அவரவர் விருப்பம், உரிமை. இதில் யாரும் போய்த் தலையிடவில்லை.

ஆனால் இந்த விருப்பத்தை அவர்கள் பொது அறிவிப்பாக்கி விளம்பரமாகத் தராமல், கல்வித் தகுதி, ஆற்றும் பணி, மாத ஊதியம் இத்யாதி விவரங்களை மட்டுமே தந்து, தொலைபேசி எண், அஞ்சல்பெட்டி எண், தொலை நகல், மின்னஞ்சல் என இன்றைக்குள்ள நவீன வசதி வாய்ப்புகள் வழி தொடர்பு கொண்டு அவரவர் அவரவர் சாதி விருப்பத்தை நிறைவு செய்து கொள்ளட் டும் என்றே கூறுகிறோம்.அதாவது மண உறவுக்கான உரையாடலைத் தொடங் கும் நுழைவாயிலாக சாதி அல்லாமல், பிற தகுதிகள் முன்னுக்கு வரட்டுமே. அவை நுழைவாயிலாக இருக்கட்டுமே என்கிறோம்.

இந்தப் புரிதலில் மணத்துணை தேடும் விளம்பரங்களில் சாதியைத் தெரிவிப்பதையோ, கோருவதையோ அரசு முற்றாகத் தடை செய்து விடலாம் தான். ஆனால் இது ஆதிக்க சக்திகளிடையே அடிப்படை உரிமையைப் பறிப்பதாக சட்டச் சிக்கல்களை ஏற் படுத்தும்.ஆகவே மக்கள் தாங்களாகவே முன்வந்து, தங்கள் சாதி அறிவிப்புச் செய்து மணத் துணையைத் தேடும் வழக்கத்தைக் கைவிடலாம். விட வேண்டும். சாதியைப் பொதுப் பிரச்சினையாக ஆக்காமல் அதைத் தங்கள் தனிப்பட்ட பிரச்சினையாக வைத்துக் கொண்டு, சாதி மறுப்பு, ஒழிப்பு நோக்கில் சற்றேனும் அதனை மறந்து பிற தகுதிப்பாடுகளில் கவனம் செலுத்தலாம். இதுவே சாதியைப் பாதுகாக்கும், உயிர்ப்பிக்கும் அகமணமுறையிலிருந்து மக்களை விடுபடவைக்கவும் துணை புரிவதாக அமையும்.

Pin It