மகாபாரத நாடக விமர்சனம்

கெளரவர்கள் ஒருபுறம் பாண்டவர்கள் மறுபுறம் இருபிரிவினருக்கு இடையில் நிகழும் வாரிசு உரிமை, ஆட்சியுரிமை, போராட்டங்கள் அதன் விளைவாக உண்டாகும் சிக்கல்கள், வெற்றிகள், வீழ்ச்சிகள் இவையாவும் இக்காவியபுராணத்தை விறுவிறுப்பாய் கொண்டு செல்வதை அறியலாம்.

இந்தப் பெருங்காவியத்தில் இருந்து காந்தாரியை மையப்படுத்தி கார்முகில் கலை மன்றம், திருச்சி ரசிக ரஞ்சன சபாவுடன் இணைந்து ""காந்தாரி'' எனும் பெயரில் நல்ல நாடகத்தை அண்மையில் வழங்கியது.

புகழ்மிக்க தன் நாடகங்களால் பெல்ஜியம் நாட்டுக்குப் பெருமை சேர்த்த இலக்கிய மேதை மாரிஸ் மேட்டர் லிங்க், தான் எழுதிய "குருடர்'' என்ற நாடகத்தில் ஆறு பெண் பாத்திரங்கள் முக்கியமானவை. அவர்கள் அனைவரும் குருடர்கள். அதில் அவர்களின் பரிதாபம் பதிவு செய்யப்பட்டு பார்வையாளர்களின் அனுதாபத்தை பெற்றது. இதுவும் இயற்கை செயற்கை இணைந்த இரண்டு குருடர்களை உள்ளடக்கிய புராண நாடகம்.

காந்தாரி தன் கணவனுக்கு பார்வை இல்லை என்ற காரணத்தால் கணவன் காணாத உலகத்தை தானும் காணவிரும்பவில்லை என்று தியாக உள்ளத்தோடு தன் கண்களை கட்டிக்கொண்டாள். இதுதான் காந்தாரியைப் பற்றி மகாபாரதத்தை படித்த, கேட்ட மக்களின் பொதுவான பார்வை. ஆனால், நாடக ஆசிரியர் முத்து வேலழகன் தன் கண்களை காந்தாரி கருப்புத் துணியால் கட்டிக் கொண்டதற்கு புதிய காரணத்தை காந்தாரியின் வாக்குமூலமாக வைக்கிறார்.

காந்தாரத்தில் இருந்து பரிவாரங்களுடன் பல்லாக்கில் அஸ்தினாபுரத்திற்கு வந்திறங்கும் காந்தாரிக்கு அவள் தோழி மாலினி, இந்திய மண்ணின் பெருமைகளை எடுத்துரைக்கும்போது: கதாசிரியர் முத்துவேலழகனின் தேசப்பற்றும், நம்நாடு குறித்து அவர் கொண்டுள்ள பெருமையும் அறியமுடிகிறது. எனது இளவரசியே! நிலவினை ஒத்த மதிமுத்தின் நீலிமைத் தோய்ந்த விழிகளில் ஆவலைத் தேக்கி நீ தேடி வந்திருக்கும் பாரதம் இதோ என் கண்முன்னால் விரிந்து கிடக்கிறது. வேதங்கள் பூத்த ஞானபூமியை, மலைகளும், மகாநதிகளும் நிறைந்த மகாபாரதத்தை வந்தடைந்துவிட்டோம்! எழில்மிகு காந்தாரியே இறங்கிவா! உன் எதிரே விரிந்து கிடக்கும் உன் கனவு பாரதத்தை விழிகாளல் தழுவி விரல்களால் வருடி இதழ்களால் முத்தமிடு!

வசீகரமான வசனத்தின் வலிமையோடும், அடர்த்தியான கதையின் ஆளுமையோடும், வண்ணமயமான உடைகளோடும் உலவிய கதாபாத்திரங்கள் ஒரு எதிர்பார்ப்பை முதல் காட்சியின்போதே உருவாக்கியது. அடுத்தடுத்து விரிந்த காட்சிகள் நாடகத்தின் தரத்தையும், உழைப்பையும் உணர்த்திக் கொண்டிருந்தன. ஒளிச் சிதறல்களில் நாடக ஒப்பனையும், திரைச்சீலைகளும் ஆவலைத் தூண்டி பார்வையாளர்களை ஆசனத்தில் தக்க வைத்திருந்தது.

பன்னெடுங்காலத்திற்கு முன்பே சூது பாண்டவர் சாம்ராஜ்ஜியத்தை எப்படி சரித்துப்போட்டது என்பதற்கு உதாரணமாக மகாபாரதம் விளங்கியது என்றாலும், கௌரவர் பாண்டவர்கள் மோதல்களில் பெண்களின் பாதிப்பையும், அவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வியல் எப்படியயல்லாம் பாதிக்கப்பட்டது என்பதை கதாசிரியர் இயக்குநர் முத்துவேலழகன் தனிக் கண்ணோட்டத்துடன் அனுகியுள்ளார். பெண்கள் கேட்க மறந்த, கேள்விகளை, அல்லது ஆணாதிக்க மற்றும் அரசவை மரபுகளுக்கு கட்டுப்பட்டு மௌனமாய் நின்ற பெண்களின் உரத்தக்குரலாக நாடகம் விளங்கியது. காந்தாரி கருப்புத்துணியால் கண்களை கட்டிக்கொள்ள முடிவெடுத்தபோது அந்த முடிவு குஷீத்து ஒரு ஆண்குரலும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

தன்பிள்ளைககளை நன்கு வளர்க்கவும்; தனக்கு உற்ற துணையாய் விளங்கி உதவிட காந்தாரியின் சுடர் கண்கள் மிக முக்கியம், ஆகையால் இந்த அரண்மனையில் ஒரு குருடன் போதும் நீ ஏன் வலிய கண்களை கட்டி குருடாக வாழ நினைக்கிறாய் என்று திருதராட்டினன் கேட்கவில்லை. பீஷ்மர் கேட்கவில்லை! என்று காந்தாரியின் மீது பரிதாபமாகமட்டுமல்ல... தேவையின்றியே அவள் தனக்கு கொடுத்துக்கொண்ட தண்டையை எந்தவித சலனமின்றி வருத்தமின்றி குருகுலம் அனுமதித்த கொடுமையை நாடக ஆசிரியர் கண்டிப்பது கதையில் புலப்படுகிறது. ராஜமாத கனவுடன், நிறைவான புருசனே தனக்கு அரசன் என்று நினைத்த காந்தாரிக்கு அரண்மனையில் அதிர்ச்சி காத்திருந்தது. மண்ணிருந்தும், மணிமுடியற்றவன், கண்ணிருந்தும் பார்வையற்றவன் தன் மணாளன் திருதராஷ்டிரன் என்கிற வருத்தம் காரணமாக காந்தாரி உலகை காண விரும்பவில்லை என்ற புதிய காரணத்தை முன் வைக்கிறார். இந்தக் காரணம் எடுபடுமா எனத் தெரியவில்லை. பீஷ்மர் வகையறாக்களால் திட்டமிட்டு சிறையில் அடைக்கப்பட்ட சகுனி சகோதரர்கள் நேரம் பார்த்து பாண்டு மக்களை பழிவாங்க எண்ணுகின்றனர். ஆவேசமான சகுனியின் தம்பி அர்ஜவா விரல்களை வெட்டித்தர பகடை காய்களோடு சகுனி திருதராஷ்டிரனால் அரண்மனைக்கு அழைத்து வரப்படுகிறான்.

குருகுல வம்சத்திற்கு யார் வாரிசை முதலில் பெற்றுத்தருவது என்ற போட்டியில் பாண்டு மனைவி குந்தி வெற்றிபெற, இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த காந்தாரி பத்துமாதம் தாண்டியும் பிறக்காத தன் வயிற்றில் உள்ள கருவை தோழிமூலம் தடியால் அடிக்கச் சொல்லுகிறார். பிண்டம் நூறு பிள்ளைகளாய் உருவாக, முதலில் பிறந்த துரியோதனன் வரவு அஸ்தினாபுரத்தின் அழிவுக்குரியது, குருகுலம் நாசமடையும் என்று அரசவை குருநாதர் கொல்லச் சொல்கிறார். பிள்ளைப்பாசம் தடுக்க துரியோதனனுடன் கௌரவர்கள் வளர்ந்து நிற்கிறார்கள். ஏற்கனவே ஆட்சி மகுடம் இல்லாமல் வாழும் கௌரவர்கள் நேரம்பார்த்து பாண்டவர்களை சூது விளையாட அழைக்க, எல்லாவற்றிலும் நியாயம் பார்க்கும் தர்மர் மரபு கருதி சூதாடுகிறார். பொருள் பூமி, யாவும் இழந்து, ஐவர் மனைவி பாஞ்சாலியையும் பறிகொடுத்து நிற்கிறார். சூது காட்சியில் பரபரப்பும் எதிர்பார்ப்பும் காணப்பட்டது.

சூது களக்காட்சியில் சகுனியாக நடித்த கதிர் அர்சுணன், அந்த பாத்திரத்தை உணர்ந்து நடித்தார். நாடகத்தின் வேகத்திற்கும், வெற்றிக்கும் சகுனியின் சதுரங்க ஆட்டம் மட்டுமல்ல, அவரின் நடிப்புச் சதிராட்டமும் ஒரு காரணம். தோற்றம், உடை, பாவனை யாவும் பொருத்தமாக அவருக்கு அமைந்திருந்தது. நீங்கள் பட்ட அவமானங்களுக்கெல்லாம் பழிதீர்க்கத்தான் இந்த சகுனி மாமனின் சதுரங்கப்படை இவளைச் சிறை பிடித்து இங்கே கொண்டு வந்து வீழ்த்தி இருக்கிறது! இனி இவள் உங்கள் அடிமை! என்று பாஞ்சாலியைப் பார்த்து கொக்கரிக்கும் காட்சி பார்வையாளர்களின் மனதை படபடக்க வைத்தது. சகுனி இல்லையயன்றால் துரியோதனக் கூட்டம் வாழ்நாள்முழுவதும் ஆட்சி சுகம் காணாமல் போயிருக்கும். கவனக்குறைவாக கண் கண்ணாடியுடன் காட்சியில் நுழைந்து, பின் சுதாரித்து அதை அகற்றிவிட்டார்.

வஞ்சகம், கொடுமை, இரக்கமின்மை, திறமை இவைகளின் மொத்த உருவமாக விளங்கினார். முத்துவேலழகன் எதிர்பார்த்த புதிய சகுனியை அவர் வெளிப்படுத்தினார். போடு பனிரெண்டு! என்று தர்மர் சொல்ல, போட்டேன் பனிரெண்டு! என்று அதிரடியாக அடுத்தடுத்து வெற்ஷீயின் உச்சிக்கு சகுனியும் துரியோதனக் கூட்டமும் சென்றுவிட, பரிதாபத்துடன் நிற்கும் தர்மர் பாத்திரத்தில் ஜெயக்குமார்.

சூதின் உச்சபட்ட போதையில் தர்மர் இருந்தபோதும், பிராமணர்களையும், அவர்தம் சொத்துக்களையும் தவிர எல்லாவற்றையும் சூதில் வைக்கிறேன் என்றபோது அதிர்ச்சியாக இருந்தது. எந்த நிலையிலும் பிராமணர் அடிமைப் பொருளாக இருக்க கூடாது என்பதில் தர்மன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. எவ்வளவு பேர் இதன் நோக்கத்தை புரிந்து கொண்டார்கள் எனத் தெரியவில்லை.

பாண்டு மன்னனாக கவிஞர் இந்திரஜித். இவர் பங்குபெற்ற ஒவ்வொரு காட்சியும் வியப்பும், திகைப்புமாய் இருந்தது. நான் பார்த்த எந்த நாட்களிலும் இவர் நாடக ஒத்திகையில் இல்லை. தன் கட்சிப் பணிக்கே எல்லா நேரத்தையும் செலவிடும் இவர் எப்படி அற்புத நடிகராய் விளங்குகிறார் என எண்ணவைத்தார். கனீரென்ற குரல், உடல் அசைவின் வெளிப்பாடு, பின் சோக நிலைப்பாடு என்று தன் பாத்திரத்தை பட்டை தீட்டி படையலிட்டார். வீர வேட்டையால் பல நாட்டை கைபற்றி, விலங்கு வேட்டையால் காட்டில் சாபம் பெறுகின்றார்.

குந்தி, மாதுரியுடன் உரையாடும் காட்சியில், வீரத்தையும், பரிதாபத்தையும் பதிவு செய்கிறார். டெஸ்ட் டியூப் பேபிக்கான மூல விதை மகாபாரத காலத்தில் பாண்டு குந்தியின் மூலமாக தூவப்பட்டதை அறிய முடிகிறது. உணர்ச்சிபூர்வமாக அழுத்தம், திருத்தமாக வசனத்தை மறக்காமல், அழகியல் கலந்த சுவையுடன் யார் பேசினாலும் அது படைப்புக்கும் படைப்பாளனுக்கும் பெருமை சேர்க்கும். இந்திரஜித் இப்பெருமையை முத்துவேலழகனுக்கு வழங்கினார்.

இனி எனக்கு மரணத்தைத் தவிர வேறு கதியில்லை! நான் வடக்கிருந்து உயிர்விடப் போகிறேன்! பிள்ளைப்பேறு இனி என் வாழ்க்கையில் இல்லாத ஒன்றாகிவிட்டது. இனி உயிர் வாழ்ந்து என்ன பயன்? என்று குந்தியிடம் கூறும் போதும், தனக்கு சாபம் நேர்ந்ததை விவரிக்கும்போதும் சோகம், துக்கம், அவலம், அனைத்தையும் பிரதிபலித்தார். மக்களுக்கான இந்தப் போராளி, மூன்றாம் தமிழ் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டிய திறமையான நடிகர் என்பதை இவரது பாத்திரமும் பங்களிப்பும் நிருபித்தது!

குருகுலத்தில் பாண்டு, திருதராட்டினன், விதுரர் யாவருமே அடிப்படையில் நல்ல மனிதர்களாக, வீரம் அறிவு செரிந்தவர்களாக விளங்குகின்றனர். பாண்டுவின் பிள்ளைகள் மதிக்கத்தக்கவர்களாக விளங்குவதை காணலாம். பாண்டு மட்டுமல்ல அவனது பிள்ளைகளும் நல்லவர்களே. ஆனால் பாண்டுவை குந்தியின் வாயால் நபும்சகர் என்று நாடக ஆசிரியர் சொல்ல வைத்திருப்பது ஏற்கதக்கதல்ல!. புலன் விசாரனை போல் புராண விசாரணையும் நடத்தப்படவேண்டிய அளவிற்கு மூலக் கதையின் உள்புகுந்து பிரச்சனைக்குரிய பலசெய்திகளை கதாசிரியர் திணித்துள்ளார். பாண்டுவின் மனைவியர்களாக குந்தி, மாதுரி வேடத்தில் நடித்த சாந்தி, கலாவதி ஆகியோர் பர்ணசாலையில் உரையாடும் காட்சியில் தங்களின் பொருத்தமான நடிப்பை தந்தனர்.

நாடகத்தின் கதை நாயகி காந்தாரியாக ராணி ஜெயாவின் நடிப்பு தனிமுத்திரை பதித்தது. தனது உடை அலங்காரத்தில் தனிக்கவனம் செலுத்தி துவக்கத்தில் வான தேவதையாய் வலம் வந்தார். மகாபாரத கதைப்படி எதிர் குரல் கொடுக்காத, அமைதியான எதிலும் மூக்கை நுழைக்காத தர்மபத்தினியாய் திகழ்ந்தவர். முத்துவேலழகனால் இதில் முற்றிலும் மாறுபட்ட காந்தாரி வன்மம் கொண்டவளாக சித்தரிக்கப்பட்டதை தன் பண்பட்ட நடிப்பால் மேன்மையாக்கினார்.

துரியோதனனால் அவமானப்படுத்தப்பட்ட பாஞ்சாலியைக் கண்டு காந்தாரி பேசும் காட்சி விறுவிறுப்பானது. நாடகத்திற்காக தன்னை முழுமையாக அர்பணித்துள்ள அரசங்குடி ஜோதி காந்தாரியில் தன் திறத்தை நிலை நாட்டினார்.

கண்ணன் வேடத்தில், நடித்த கனகராமன் எப்போதும் போல் தனது கனமான பாத்திரத்தை மென்மையாக செய்தார். திருதராஷ்டினன் அவையில், நான் இங்கே யாருடைய தூதுவனாகவும் வரவில்லை, மகத்தான குருகுலத்தின் மாவீரர்களும், அதன் மக்களும் ஒரு வீண் அழிவுப் போரில் வீழ்ந்து விடுவதைத் தடுக்க வேண்டும் என்ற எனது மனசாட்சியின் தூதுவனாக மட்டுமே வந்திருக்கிறேன், என்று பேசுகிற போது முடிந்தவரை சமாதானத்தை நிலைநிறுத்தவே தான் பாடுபடுகிறேன் என்பதை வெளிப்படுத்தனார். துரியோதனனை தாயின் முன் நிர்வாணமாக நிற்க கூடாது என்று எடுத்துரைத்து அதனால் பலமில்லாத துரியோதனனின் பாகத்தை அடையாளம் காட்டி பீமனைத் தாக்க சொல்வது கண்ணனின் சதியா? அல்லது மதியா? என்று விவாதிக்கப்பட வேண்டிய சம்பவமாகும். அதேபோல் காந்தாரி தன்பிள்ளைகளை இழந்த சோகத்தால் துடித்து அழ, கண்ணன் துன்பம் நிலையானது அல்ல, வேறு துன்பம் அல்லது வேறு பிரச்சனை வரும்போது முந்தைய துன்பம் காணாமல் போய்விடும் என்று மாம்பழக் காட்சியில் எடுத்துரைக்கும் விதம் அருமை. பொதுவாக கண்ணன் மக்களால் கொண்டாடப்படும் பாத்திரமாக வழிகாட்டுவதற்கு உரிய பாத்திரமாக விளங்குவதை தனது நடிப்பால் உணர்த்தினார் கனகராமன்.

கூர்ந்து பார்த்தால் தர்மரை விட மற்ற நால்வர்களே உயர்ந்தோங்கி பண்பு நலன்களை கொண்டு திகழ்வதை நாடகம் காட்டியது. உச்சபட்ச கோபத்தோடு, பதிமூன்று ஆண்டுகள் காத்திருக்க முடியாது என்று பதிமூன்று நாட்களிலே பீமன் சண்டைக்கு கிளப்புகிறான். காந்தாரி துகில் உரிந்து அவமானப்படுத்தப்பட்டபின்பு பீமன் கர்ஜிக்கிறான். எல்லோரும் கேளுங்கள்! எரிமலைபோல் இடிபோல் புயல்போல் இந்த பீமன் எழுந்து நின்று இருந்தோர், இறந்தோர், இனி இருப்போர் யாவர் மீதும் ஆணையிட்டு, மண் பொதி உலகத்தில் இதுவரை யாரும் கூறி இராத இனி எவராலும் கூற இயலாத ஒரு சபதத்தைக் கூறுகிறேன்! திரவுபதியை தொட்டிழுத்து, துகிலுரித்து அவமானப்படுத்திய துச்சாதனனின் நெஞ்சை இடித்துப் பிளந்து துள்ளிவரும் அவன் செங்குருதியை குடிக்காமல், இப்பிறவி துறந்து என் முன்னோர் சென்ற மேல் உலகம் செல்ல மாட்டேன்! என்று கர்ஜனை புரியும் காட்சியில் ஜோதிமணியின் பண்பட்ட நடிப்பு பரவசப்படுத்தியது. பாண்டவர்களில் பாதரசமாய் கொந்தளித்த இவர் வந்த பல காட்சிகள் நெஞ்சைத் தொட்டன.

பாஞ்சாலியாக நடித்த விஜி ஒரு சிறந்த நடிகை என்ற பெயரைப் பெற்றுவிட்டார். நாடகத்தில் இவர் எழுப்பிய தார்மீகக் கேள்விகள் பாண்டவர்களை மட்டுமல்ல மக்களையும் சிந்திக்க வைத்தது. ஒரு பொருள் யார் யாருக்கு உரியது என்று தெரியாமல் தன்னை பணயம் வைத்த தர்மரையும், அதைப்பெற்ற கௌரவர்களையும் சபையில் சாடினார். துகில் உரியும் காட்சி இன்னும் சற்று சிறப்பாக கையாளப்பட்டிருக்க வேண்டும். தொடர்ந்து சேலை வரும் காட்சியும் எதிர்பார்ப்பை உருவாக்கவில்லை.

முத்துவேலழகனின் நீண்ட நெருப்பு வசனங்களை பல்வேறு காட்சிகளில் அழுத்தமாக பேசி வரவேற்பை பெற்றார். 

பாண்டவர்கள் சொர்கத்திற்கு செல்லும்முன் துரியோதனன் சொர்க்கத்தில் இருந்தான். காரணம் கேட்டபோது கொண்ட கொள்கையில் அவன் உறுதியாக இருந்தான் என்று கூறப்பட்டது. காந்தாரி நாடகத்தில் துரியோதனன் வேடத்தில் நடித்த கார்முகில் தன்னால் முடிந்தவரை நன்கு செய்தார். நீ ஏந்தி வந்திருக்கும் தூது என்னும் திருவோட்டில் ஒரு பிடி மண்ணைக்கூட நான் பிச்சை இடத் தயாராக இல்லை. போர்வந்தால் வரட்டும்! நான் சத்திரியன்! அதனை எதிர்கொள்ளத் தயாராகி விட்டேன் என்று கூறும் காட்சியில் எதற்காகவும் பயப்படாத எதனையும் சந்திக்கும் ஆற்றல் மறவனாக துரியோதனன் விளங்கியதை தன் தேர்ந்த நடிப்பால் மேடையில் கொணர்ந்தார். பாண்டவர்களை விட்டால் என்றைக்கும் தனக்கும் தன் அரசுக்கும் ஆபத்து என்பதை அறிந்த காரணத்தினாலேயே... எந்த சமரசத்திற்கும் உடன்பட மறுத்துள்ளான். மகாபாரதத்தைப் பொறுத்தவரை துரியோதனன் என்கிற கதாபாத்திரம் இல்லாமல் இருந்திருந்தால் அது ஒரு நீர்த்துப்போன கதைவடிவமாக இருக்கும். அந்தவகையில் திருப்பம் விறுவிறுப்பு இவைகளுக்கு துரியோதனனின் திட்டமிடலும், திமிரும் ஒரு காரணம். அதை நன்கு செய்தார் கார்முகில்.

துரியோதனனின் தம்பியாக கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்த கார்வேலழகன் கௌரவ கூட்டத்தில் தனி முத்து. நேர்மையற்ற கூட்டத்திடம் இவர் குரல் ஓங்கி ஒலித்தாலும், அது அடிக்கடி ஓரம் கட்டப்பட்டு. கட்டுமஸ்தான உடலமைப்பு, நடிப்பில் தனித்தன்மை இவைகளால் தன் பாத்திரத்திற்கு பெருமை சேர்த்தார். விகர்ணனையாவது விட்டு வைத்திருக்க கூடாதா என்று காந்தாரி எழுப்பிய கேள்வியில் நியாயம் இருந்தது என்று சொல்லும் அளவிற்கு நாணயமானவராக விளங்கியது அருமை. ஆயிரத்தில் ஒருவன் போல் நூற்றில் ஒருவன்.

சகாதேவன் வேடம்பூண்ட ஓமல்ராஜ் பாண்டவர்களுக்கு என்னென்ன நடக்கும் என்பதை கூறும் காட்சியில் அருள்வந்தவர் போல் கூறினார். சகாதேவன் இயல்பாகவே நன்கு நடிக்கக் கூடியவர். அந்த வகையில் பல காட்சிகளில் தனது ஆற்றலை வெளிப்படுத்தினார்.

நகுலனாக நடித்த ஜெய் கணேஷ் தோற்றம் பொலிவுடன் விளங்கியது. இவரது நடிப்பும் கவனிக்க தக்கதாய் விளங்கியது. இனி இவருக்கு காட்சிகள் அதிகமுள்ள வேடத்தை வழங்காலம்.

பலராமன் கதாபாத்திரத்தில் ஆதித்தியன் இளமைத் தோற்றத்தில் வந்தார். ஒரு குரு என்றால் ஐம்பது வயது தாண்டியிருக்க வேண்டும். ஆனால் மிக இளமையாக இவர் தோற்றம் இருந்தது. பீமனை கண்டிக்கும் காட்சி, கதாயுத போர்முறை நெறிகளை எடுத்துக்காட்டும் விதம் ஒப்பனை நன்கு இருந்தது.

 

கர்ணன் தியாகராசனின் ஒப்பனையும் நடிப்பும் காட்சிகளில் நன்கு அமைந்திருந்தது. அனுபவம், ஆவேசம், முதிர்ச்சி இவைகளின் கலவையாக காட்சிகளில் தன் திறமையை கொண்டு வந்தார். வில்லாளி அர்சுணன் வீரத்தின் வெளிப்பாடாய் திகழ்ந்தான். சொல்லுங்கள் பிதாமகரே! நாங்கள்தான் அண்ணனின் ஆணைக்கு கட்டுண்டோம்! பொறுத்திருந்தோம்! காத்திருக்கிறோம்! ஆனால் பாஞ்சாலியின் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்! கட்டிய மனைவி கணவன் உடமைக்குள் அடங்கிய ஒரு பொருள் என்றுதானே உங்கள் சாஸ்திரம் சொல்லுகிறது? என்று கேள்வி எழுப்பும் காட்சி அறிவுப் பூர்வமாக விளங்கியது.

சுதிர்செந்திலின் அர்சுணன் கதாபாத்திரம், நடுவை துரைராஜ் ஏற்ற பீஷ்மர் கதாபாத்திரம் அதற்கேற்ற தன்மையோடு விளங்கின. சமாதானத்தை அலட்சியப்படுத்திய துரியோதனனிடம் போருக்கான சத்தியத்தை கண்ணன் கேட்க, துரியோதனனின் தூணில் அடித்து சத்தியம் செய்த பின்பு, பீஷ்மர், திருதராஷ்டினனைப் பார்த்து, கேட்டாயா? உன் செவிகளில்! நீ பெற்ற மகன், எத்தனையோ தியாகங்களுக்கு இடையில் நான் கட்டிக்காத்த அஸ்தினாபுரத்து சாம்ராஜியத்தை அழிக்கத் துணிந்துவிட்டான். மரண தேவதைக்கு மாலையிட்டு, நம் எல்லோரையும் போர்க்களத்தில் பலி கொடுக்க தீர்மானித்துவிட்டான்! என்று பீஷ்மரின் வருத்தத்தை நடுவை துரைராஜ் தன் அனுபவத்தால் நன்கு பதிவு செய்தார்.

துச்சாதனன் ராஜாமான்சிங் தன்னால் இயன்றவரை செய்தார். துரியோதனனின் கட்டளையை பாஞ்சாலி துடிக்க துடிக்க நிறைவேற்றினார். பெண்ணின் அவமானம் இவருக்கு பெரும் ஆனந்தம்.

சித்திரசேனனாக சில காட்சிகள் வந்தாலும் வி.ஏ.பேட்ரிக் தனது காட்சிகளை சுவைபடச் செய்து பேர் பெற்றார். அரங்கப் பொருட்களை உருவாக்குவதில் இவரது செயல்பாடு குறிப்பிடத்தக்கதாகும். சகுனத் தொல்லை ஜாதகக்கேடு! என்று துரியோதனனைச் கொல்லச் சொல்லும் கிருபாச்சாரியார் மாரிமுத்து, தனது சொல் எடுபடாமல் தவிக்கும் விதுரர் சிவப்பிரகாசம் ஆகியோர் அளவுடன் சரியாகச் செய்திருந்தனர்.

வேடன் முருகவேல் ஒப்பனை நன்கு இருந்தது. துரியோதனனை காட்டிக் கொடுக்கும் காட்சியில் மட்டுமல்ல கண்ணனை கொல்ல அம்பு விடும் காட்சியில் கூர் அம்பு இல்லாதது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இவருடன் நடித்த அஞ்சனக்குமாரி நன்கு நடித்தார். கட்டியக்காரன் மோகனரங்கன் வளர்ந்துவரும் நாடகக் கலைஞர் பாராட்டுக்கள். யதுகுல வாசிகள் கொண்டாட்டம் நாடக இறுக்கத்தை குறைத்து மனங்களை இலேசாக்கியது. இதில் நடித்த கார்த்திகேயன், மோகன், சேவகர்களாக வருகைதந்த எஸ்.ராஜீ, குருசாமி ஆகியோர் பாராட்டப்பட வேண்டியவர்கள். அனைத்து நாடகக் காட்சிகளும் காண்பதற்கு, சுவைப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருந்தன.

செஞ்சிலுவை சங்கத்தார் போரில் காயம்பட்ட இரு பிரிவினருக்கும் மருத்துவ உதவி செய்வதுபோல் அக்காலத்தில் எப்பக்கமும் சாயாமல் கௌரவர், பாண்டவர் படைக்கு பெருஞ்சோறளித்த நெடுஞ்சேரலாதன் பற்றிய செய்தியும் நாடகத்தில் உள்ளது. தமிழன் பாகுபாடின்றி வள்ளல் தன்மையோடு நின்றமை இதன் மூலம் புலப்படுகிறது.

பாண்டி தமிழரசனின் பொருத்தமான இசை காந்தாரி நாடகத்தை வெற்றியின் வாசலுக்கு விரைந்தோட வைத்தது. காட்சிகளுக்கு தக்கவாறு தன் விரல்களால் வியத்தகு இசை தந்து பார்வையாளர்களுக்கும், நாடகத்திற்கும் பொலிவைத் தந்தார்.

பொதுவாக இந்த நாடகத்தின் பெரும் பலம் என்பது உயிரோட்டமுள்ள வசனமும், காட்சி வரிசைகளும் என்று கூறலாம். தொடர்ந்து வரும் காட்சிகள் அலுப்பூட்டாமல் ஆர்வத்தையூட்டின. நான்குமணி நேரத்திற்கு மக்கள் நகராமல் பார்த்தது அதிசய உண்மை. இரண்டு மணி நேரம் நாடகத்தை முத்துவேலழகணிடம் எதிர்பார்க்க கூடாது என்பதை மீண்டும் செயலாக்கினார். இயக்குநர் கதாசிரியர் என்ற வகையில் காந்தாரி நாடகத்தை ஒரு வெற்றிப்படைப்பாக தந்து தான் புராண நாடகத்தின் ஜாம்பாவான் என்று மீண்டும் நிரூபித்துள்ளார் முத்துவேலழகன். நல்ல முயற்சி, கடுமையான உழைப்பு, பெரும் செலவு, அழுத்தமான கதை, வண்ணமயமான படைப்பு என்று காந்தாரி கவர்ந்துவிட்டாள். இப்படைப்பையும் பள்ளிகளில், பல்கலை கழகத்தில் பாடமாக வைக்கலாம்.

காந்தாரி, பாஞ்சாலி இவர்களின் இதயத்தில் இருந்து எழுப்பப்பட்ட உரத்த குரலின் வலிகள் எல்லாம் முத்துவேலழகன் என்ற எழுத்தாளனின் உள்ளே குமுறி கொண்டிருக்கும் பெண்ணின மேம்பாட்டிற்கான கனல் பொறிகள் என்றால் அது மிகையல்ல!

காந்தாரியின் தோழி மாலினி வேடத்தில் எல்.ஆர்.சுகந்தி நன்கு நடித்திருந்தார். நாடகத்துறையில் நீண்டகாலம் தன் திறமையால் வலம் வரும் இவரின் காட்சிகள் சிறப்பானவை.

நீண்ட நாடக அனுபவம் கொண்ட திறமையாளர் திருச்சி ஜார்ஜ் இணை இயக்கம் புரிந்தார். காட்சி கவனப் பணியை மேற்கொண்ட எஸ்.அண்ணாதுரை, உரையாடல் கவனத்தை செய்த எஸ்.இருதயராஜ், காட்சி ஆடை அணிகலன்களை வசீகரத்துடன் செய்த சேலம் ஆர்.வெங்கடேசன், ஒளிஒலி அமைப்பை கவனித்த சபா சண்முகம், ஒப்பனையால் அழகூட்டிய ரவீந்திரன், நாடக கவனம் புரிந்த வி.மோசஸ், என்.சுப்பிரமணியன், எஸ்.விஜயராகவன், மேடை நிர்வாகம் புரிந்த பி.ஹரிகண்ணன், எம்.தனராஜ், ஏ.ரெங்கராஜ், எஸ்.ஓ.முருகவேல், பி.மூர்த்தி முதலானோர் காந்தாரி நாடகத்தை வெற்றிப்படைப்பாக்கும் முயற்சியில் அருந்தொண்டு ஆற்றியுள்ளனர்.