விடிந்து கொண்டிருந்தது, ஆனால் இன்னமும் முழுமையாக விடியவில்லை. சில்லென்று காற்று வீசிக் கொண்டிருந்தது. ஆரஞ்சும் வெள்ளையும் கலந்து ஒளிரும் பவழமல்லி மரத்தையும் அதன் நறுமணத்தையும் படுக்கையில் படுத்தபடியே உணர்ந்து கொண்டிருந்தாள் ராதா.

மற்ற நாட்களில் வாடிக்கையாக இருந்தது போல் கடந்த இரவு ராதா சண்டையிட்டிருக்கவில்லை, அவள் எவ்விதக் கடுஞ்சொற்களாலும் கணவனுடனோ, மாமியாருடனோ, நாத்தனாருடனோ, வாக்குவாதம் செய்திருக்கவில்லை.

அவளது உடல் இயல்பை மீறி சூடாக இல்லை, அதனால் அவளுக்கு காய்ச்சல் இல்லையென்று சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. அவள் எவ்வகையிலும் சுகமின்மையாகவோ அல்லது சோர்வாகவோ இல்லை.

வெளியே மழை பெய்து கொண்டிருக்கவில்லை. வானம் தெளிவாகவும், அடர் நீலமாகவும் இருந்தது.

அசௌகரியத்தை ஏற்படுத்தும் படியாகச் சீதோஷ்ணநிலை அதிகம் வெப்பமாகவும் இல்லை, அதிகம் குளிராகவும் இல்லை. ராதாவின் ஒரே மகன் சதான் உடல் ஆரோக்கியமாகவே இருந்தான்.

கணவனும் மகனும் அவளுக்கு அடுத்ததாக இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தனர். ஆயினும், இன்று சமைக்கப் போவதில்லை என்று ராதா திடீர் முடிவெடுத்தாள்.

அவள் இன்று கண்டிப்பாய் சமைப்பதில்லை என்று தீர்மானமாய் முடிவெடுத்திருந்தாள். இல்லை, இன்று அவள் சமைக்கப் போவதேயில்லை.

அவள் சூரியனை அழைத்து, 'இன்று நான் படுக்கையில் நீண்ட நேரம் கிடக்க வேண்டும் அதனால் தாமதமாக உதித்தால் போதும்'' என்று சொன்னாள்.

அவளால் இருளுடன் பேச முடியாமல் போய் விட்டது, காரணம் அவன் தனது முடிவை எடுக்கும் முன்னரே அது விலகிப் போய் விட்டிருந்தது.

"உங்கள் காலைப் பாடலை நிறுத்தாதீர்கள். நான் படுக்கையில் விழித்த நிலையில் கிடந்து உங்களின் இசையைக் கேட்க வேண்டும்' என்று பறவைகளைப் பார்த்துச் சொன்னாள்.

அவள் மேகங்களை அழைத்து, ""சூரியனுக்கு உதவுங்கள். பறக்கும் உங்கள் சேலை மடிப்பிற்குள் அவனை மறைத்து வையுங்கள்'' என்று சொன்னாள்.

பவழமல்லி மரத்தைப் பார்த்து, "இன்னும் இருளாக இருப்பதாக கற்பனை செய்து கொள். உனது மலர்களை பூமியின் மேல் தூவாதே' என்று அறிவுரை வழங்கினாள்.

'நீயே துளித்துளியாகிவிடு, பின் மெதுவாய் புல்லின் மேல் சென்று படிந்து விடு'' என்று பனியிடம் சொன்னாள்.

ராதா சொன்னதை சூரியன் கேட்டுக் கொண்டது. அது வெகு நேரத்திற்கு உதிக்கவே இல்லை.

மேகம் தானாகவே சிதறிப் பரவி தெளிந்த நீல வானத்தைப் போர்த்திக் கொண்டது.

பறவைகள் காலையின் முதல் பாடலை மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டிருந்தன.

மலர்கள் தங்கள் காம்புகளிலேயே ஒட்டிக் கொண்டு பவழமல்லி மரத்தை இன்னும் பொலிவாக்கின.

பனித்துளிகள் தொடர்ச்சியாய் பொழிந்து புல்லை நனைத்து அதை அன்பால் நிரப்பிக் கொண்டிருந்தன.

ராதா சாவகாசமாக படுக்கையில் மேல் புரண்டாள், அங்கேயே படுத்திருந்தாள்.

அதே சமயம், வீடு முழுவதும் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. வீட்டின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இன்று எழுந்திருப்பதில் தாமதமாகி விட்டது.

சதானுக்கு அவனுடைய பெருக்கல் வாய்ப்பாடும் கையெழுத்தும் மறந்து விட்டன; அவன் அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருந்தான் மற்றும் வெளியிலேயே பார்த்துக் கொண்டிருந்தான்.

தற்போது ராதாவின் கணவன் அயனின் முறை, அவனுக்கு கிராமத்து சந்தைக்குப் போக வேண்டியதிருந்தது.

மற்றும் அவளது நாத்தனார் ஒன்று பள்ளிக்குத் தாமதமாகப் போகப் போகிறாள்.

அவளது மாமியார் காலைப் பிரார்த்தனைகளை முடித்திருந்தாள். மேலும் நாளின் முதல் உணவுக்காய் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தாள்.

ஆனால், ராதா இன்னும் படுக்கையில்தான் கிடந்தாள்.

ராதா இன்று சமைக்கப் போவதில்லை.

இல்லை, அவள் இன்று கண்டிப்பாய் சமைக்கப் போவதில்லை.

இன்று, ராதா சமைக்கப் போவதில்லை.

'என்ன கேடு வந்துச்சு? இன்னைக்கு அப்படி என்னாதான் ஆச்சுது?'

"நீ இன்று எங்களையெல்லாம் பட்டினி கிடக்கச் செய்கிறாயா?'

" சரியாச் சொல்லு, என்னதான் நடக்கிறது?'

மகன், அம்மா, மகள் மூவரும் ஒரே குரலில் அவளிடம் கேள்வி கேட்டார்கள்.

ராதா இது பற்றி வருத்தப் படவில்லை.

அவள் தனது படுக்கையை விட்டு எழுந்தாள், மெதுவாக, மிகச் சௌகரியமாகத் தரையில் நடந்து சென்றாள்.

அந்த அறையில் மூலையில் இருந்த பானையைத் தூக்கி தனது இடுப்புக்குக் கொண்டு வந்தாள். ராதா குளத்தை நோக்கி மெதுவாக நடந்தாள்.

"என் மகன் இன்னைக்கு வெறும் வயித்தோடதான் வேலைக்கு போகனுமா?'

ராதா அமைதியாக இருந்தாள். அவள் கணவன் வியப்பில் ஆழ்ந்திருந்தான்.

"நான் பள்ளிக்குப் போக நேரமாயிட்டு, மருமகளே'

ராதா அமைதியாக இருந்தாள். அவளது நாத்தனார் வருத்தமும் கலக்களும் கொண்டாள். ராதா அமைதியாகப் போனாள், தனது பாதங்களை நீரில் அமிழ்த்தி குளத்தை நோக்கிக் கீழிறங்கும் படிகளில் உட்கார்ந்தாள்.

அவளுக்குப் பின்னால் அந்த சத்தம் கோரஸாக இல்லை; அவர்கள் வீடே இடிந்து விழுமளவுக்கு கத்திக் கொண்டிருந்தார்கள்.

அவளது மாமியார் ஏற்கனவே தனது கூச்சலால் அண்டைவீட்டார் பலரைக் கூட்டியிருந்தாள். ராதா அசையாமல் இருந்தாள். அவள் தண்ணீரை உற்றுப் பார்த்தபடி அமைதியாக இருந்தாள். புன்தி, பொஜுரி, காலிஷா, கஜோலி ஆகிய வகை மீன்குட்டிக் கூட்டமொன்று அவளது பாதங்களை மொய்த்தன.

"ஓ, தயவு செய்து தூரப் போங்கள், இன்று நான் உங்கள் யாருக்கும் உணவு கொண்டு வரவில்லை.'

ஆனாலும் அவளின் பாதத்தை சுற்றி மகிழ்ச்சியாய் அவை பல்டியடித்துக் கொண்டிருந்தன. தங்களுக்கு அருகில் ராதா இருப்பது அவைகளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவைகள் அதைவிட வேறெதுவும் கேட்கவில்லை.

ராதா வானைத்தைப் பார்த்தாள். சூரியன் அவளைப் பார்த்து ஒரு அர்த்தப்புன்னகையோடு " உனக்கு என் மீது கோபமா?' என்று கேட்டது.

"உன்னால் இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்திருந்திருக்க முடியாதா? ராதா கண்டிப்புடன் கேட்டாள்.

'நீ ஒருமுறை வயற்காட்டைப் பார்த்தால், நான் ஏன் இன்னும் ஒரு நிமிடம் தாமதிக்கவில்லை என்பது புரியும்'

ராதா குளத்தைத் தாண்டி துவண்டு போன வயலைப் பார்த்தாள். " அவை பிழைத்துக் கொள்ளுமா' ராதா கவலையுடன் கேட்டாள்.

"நீ அவைகளைப் பார்த்து ஒருமுறை புன்னகைத்தால் அவை மீண்டும் உயிர்பெற்றெழும்.'

ராதா எழுந்து நின்றாள். கைகளை விரித்தாள், சுற்றிப் பார்த்தாள், சுதந்திரமாகவும் சத்தமாகவும் சிரித்தாள்.

ராதா சிரித்தாள், சிரித்தாள், சிரித்துக் கொண்டே இருந்தாள்.

பச்சை வயல்கள் மீண்டும் ஒருமுறை விழித்துக் கொண்டன; பயிர்கள் தங்கள் தலைகளை நிமிர்த்தின.

ராதாவின் கணவன் அவளது தோளைப் பிடித்து வேகமாக உலுக்கிக் கொண்டிருப்பதை திடீரென உணர்ந்தாள்.

ராதாவின் மாமியார் அவளை நெருப்பு கக்கும் கண்களால் பார்த்தாள், அவளது கூர்மையான வார்த்தை அம்புகள் ராதாவின் உடலெங்கும் குத்திக் கிழித்தன.

அவளது நாத்தனார் கடுமையாக அழுது கொண்டிருந்தாள்.

ஆனால் ராதா இன்னும் சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் சிரித்தாள், சிரித்தாள், சிரித்துக் கொண்டேயிருந்தாள். அவளது சிரிப்பு எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

அவளது சிரிப்பொலி தாளத்துத்துடன் சேர்ந்து சில்லென்ற காற்று வீசிக் கொண்டிருந்தது.

குளத்தின் நீர் சிறிய அலைகளாக உருவாகி, குளத்தின் கரை விளிம்புகளில் மோதிச் சிரித்தது. பறவைகள் ஒரு தாளலயத்தில் பாடிக்கொண்டும் கீச்சிட்டுக் கொண்டும் இருந்தன.

மீன்கள் நீரில் ஆடிக் கொண்டும், தரைக்கும் தண்ணீரின் ஆழத்திற்குமாய் மீண்டும் மீண்டும் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தன.

மலர்கள் இலைகளோடு நட்பாகி ஒருமித்து தங்கள் தலைகளை ஆட்டிக் கொண்டிருந்தன. ராதா சிரித்தாள், ராதா சிரித்தாள், ராதா சிரித்துக் கொண்டேயிருந்தாள்.

சினம் கொண்ட அவளது கணவன் அரிப்பானையை அவளிடமிருந்து பிடுங்கி தரையில் போட்டு உடைத்தான். பின் வாரச் சந்தைக்கும் வெறும் வயிற்றோடு கிளம்பிப் போய் விட்டான்.

அவளது மாமியாரின் சாபங்களும் கத்தலும் இன்னும் கூர்மையாக வீர்வீரென்று ஒலித்துக் கொண்டிருந்தன.

பயந்து போன அவளது நாத்தனார் மெதுவாக பக்கத்து வீட்டிற்கு நகர்ந்து போய்விட்டாள். அவளது மகன் சதான், மெதுவாக வந்து குளத்தின் கரை விளிம்பில் வந்து நின்றான்.

ராதா இன்று சமைக்கப் போவதில்லை.

இல்லை, அவள் இன்று கண்டிப்பாய் சமைக்கப் போவதில்லை.

இன்று, ராதா சமைக்கப் போவதில்லை.

ராதாவுக்கு திடீரென தலை கிறுகிறுத்தது. அவளுக்கு வாந்தி வந்தது ஆனால் அதை அடக்கிக் கொண்டாள்.

அவள் சட்டென உட்கார்ந்து கொண்டாள். பின் மீண்டும் எழுந்து நின்றாள். தான் சுகமின்மையாக இல்லை என்பதை உறுதியாகத் தெரிந்திருந்தாள். வாழ்வின் இயல்பான நடவடிக்கைகளால் கூட தலை கிறுகிறுப்பு உண்டாகும் என்பதை அவள் தெரிந்து வைத்திருந்தாள். அதனால் அவள் பயப்படவில்லை.

'ம்மா, எனக்குப் பசிக்கிறது'

'ம்மா, எனக்குப் பசிக்கிறது' என்ற சத்தம் தூரத்திலிருந்து ஒலிப்பது போலிருந்தது.

ராதா அவளது மனதில் ஏதோ ஒன்று பலமாக உலுக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். அவளது அமைதியான கடல் போன்ற மனதில் கடுமையான புயலும் பெரிய அலைகளும் திடீரென எழுந்தன. தனது மகனைப் பிடித்துக் கொண்டு அவள் தண்ணீரையே நிலைகுத்திப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பின் அவள் வானத்திலிருக்கும் சூரியனைப் பார்த்தாள். மரங்களைப் பார்த்தாள், பறவைகளை, மலர்களை மற்றும் இலைகளைப் பார்த்தாள். அவள் மிகக் கவனமாகச் சுற்றுச் சூழலைப் பார்த்தாள்.

ஒரு காகம் பறந்து போனது. அது ஒரு பழுத்த பப்பாளிப் பழத்தை ராதாவின் மடியில் போட்டுவிட்டுப் போனது. இரண்டு கைகளாலும் அதன் தோலை உரித்தாள். தனது மகனின் வாய்க்குள் கொடுத்தாள். அது சதானின் வயிற்றை நிரப்பப் போதுமானதாக இருந்திருக்காது.

ராதா மீன்கொத்தியைக் கூப்பிட்டாள், அதனிடம் "போ, போய் இந்தக் குளத்தின் நடுப்பகுதியிலிருந்து அல்லித் தாவரத்தின் பருத்த விதையை என் மகனுக்காக பறித்து வா' என்று உத்தரவிட்டாள்.

அது பருத்த விதையாக இருந்தது. பசித்த வயிற்றுக்குப் போதுமானது. ஆனால் ராதாவின் மகன் அதில் கொஞ்சத்தைத்தான் சாப்பிடுவான்.

"அம்மா, எனக்கு ரொம்பவும் பசிக்கிறது. இன்றைக்கு நீ சமைக்க மாட்டாயா?'

சதான் நான்கு வயதுப் பையன். அவன் கொலைப் பசியில் இருந்தான். ராதா அவனுக்கு கொடுத்ததைக் கொண்டு எப்படி பசியாறியிருக்க முடியும்?

"ம்மா, இன்றைக்கு நீ சமைக்க மாட்டீயா?

அவள் தனது இதயமே வெடிப்பதாய் உணர்ந்தாள். அவளால் இப்படியே இன்னும் அதிக நேரம் இருக்க முடியும் என்று நம்பிக்கையில்லை.

ஆனாலும் அவள் "இல்லை' என்று பதிலளித்தாள்.

ராதா இன்று சமைக்கப் போவதில்லை.

இல்லை, அவள் இன்று கண்டிப்பாய் சமைக்கப் போவதில்லை.

இன்று, ராதா சமைக்கப் போவதில்லை.

சதானைத் தனது நெஞ்சோடு இறுக்கிக் கொள்கிறாள், குளத்தை விட்டுக் கிளம்பி சோலைக்குள் போய் விட்டாள். புல் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டு தனது மகனை மடியில் படுக்க வைத்துக் கொள்கிறாள். கவனமாகச் சுற்றுமுற்றும் பார்க்கிறாள். யாரும் கண்ணில் படவில்லை. பலா மரத்தின் இலைகளும் ஜாம்ருல் மரத்தின் இலைகளும் காற்றில் அசைந்து கொண்டிருந்தன மேலும் அவை ராதாவைச் சூழ்ந்து கொண்டிருப்பது போல் இருந்தது. அவள் மெதுவாகத் தனது தனங்களை திறந்தாள். தெளிவான வானத்தின் கீழ் அவளது இறுக்கமான மற்றும் வடிவமான தனங்கள் சூரிய வெளிச்சத்தில் பிரகாசித்தன. ராதா தனது இடது தனத்தின் காம்பை மகனின் வாயில் வைத்தாள். தனது வலது கையால் மகன் சதானின் நெற்றி, கண்கள், தலை மற்றும் தலைமுடியை தடவிக் கொடுத்தாள்.

தனத்தில் பால் குடிப்பதை என்றோ மறந்துவிட்டிருந்த சதானுக்கு தனது தாயின் இச்செய்கை கொஞ்ச நேரத்திற்கு குழப்பதை உண்டாக்கியது. மெதுவாக அவன் தனது தாயின் தனக் காம்பை மிகுந்த ஆர்வத்துடன் வாயில் வாங்கிக் கொண்டான். முதலில் மெதுவாக, பின் கொஞ்சம் பலமாக இறுதியாக தனது பலம் முழுவதையும் கூட்டி சதான் தனது தாயின் உடலிருந்து வெளிப்படவிருக்கும் பாதுகாப்பான உணவை உறிஞ்சக் கடும் முயற்சி செய்தான்.

ராதாவுக்கு கவலையாக இருந்தது. எதாவது நடக்குமென்று அவள் ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தாள், ஆனால் எதுவும் நடக்கவில்லை. இனி அவள் என்ன செய்வாள்? தனது முதுகை நிமிர்த்துக் கொண்டு, தனது கால்களை அகல விரித்துக் கொண்டு ராதா இன்னும் சவுகரியமாக உட்கார்ந்து கொண்டால். அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். பற்களை இறுக்கிக் கொண்டு, தனது உதட்டை கடித்தபடி தனது சக்தி முழுமையையும் கூட்டி வேண்டிக் கொண்டாள். அந்த கணம் திடீரென அது நிகழ்ந்தது. மடமடவென பாயும் நீர்வீழ்ச்சியைப் போல் அவளது உடல் மகிழ்ச்சியால் நடுங்கிக் கொண்டிருந்தது. கரையை மோது உடைக்கும் வெள்ள நீர் போல அவளது தனங்களிலிருந்து ஏதோ பெருக்கெடுத்துப் பாய்ந்தது.

ராதா தனது மகனைப் பார்த்தாள். சதான் கலகலவென சிரித்தான்.

நுரை பொங்கும் பால் வேகமாய் உறிஞ்சிக் கொண்டிருக்கும் அவனது இதழ்களிலிருந்து தரையில் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

ராதா சிரித்தாள். சதானும் சிரித்தான்.

மேகம் சூரியனை மறைத்தது. ஒரு மைனா தனது ஒற்றைக்காலில் நின்றபடி ஓய்வெடுத்தது. சில்லென்ற காற்று வீசியது.

ராதா சிரித்தாள்.

சதானும் சிரித்தான்.

இன்று சமைக்கப் போவதில்லை என்று ராதா முடிவெடுத்தாள்.

இன்று அவள் கண்டிப்பாய் சமைக்கப் போவதில்லை என்று தீர்மானித்தாள்.

ராதா இன்று சமைக்க மாட்டாள்.

நன்றி : சொல்வனம்

தமிழில்: மதியழகன் சுப்பையா