இசாக்
பிரிவு: தாமரை - ஏப்ரல் 2012

ஒரு கவிதை
எழுதி முடித்துவிட்டேன்
இனி
என்னை
மாபெரும் கவிஞனாக
இலக்கிய உலகம் அங்கீகரித்தாகவேண்டும்

கவிதையின் சாரம் பற்றி
மொழி, சமூகம் பற்றி
எனக்கு எந்த அக்கறையுமில்லை
கவிதையில்
ஒற்றுப்பிழை
இலக்கணப்பிழைகள் பற்றியெல்லாம்
யோசிப்பது பிற்போக்கானது

யாருடைய
கவிதைத்தொகுப்பையும்
இதுவரை படித்துப்பார்த்ததில்லை
இனி படிக்கப்போவதுமில்லை
ஏனெனில்
நான் சுயம்புக்கவிஞன்

நான் எழுதிமுடித்துள்ள
ஒரு கவிதையும்
குறுந்தகடு நிறைய
என் புகைப்படங்களும்
ஆயத்தமாக உள்ளன
நல்ல இதழ்களை பரிந்துரையுங்கள்
நண்பர்களே!
ஏனெனில்
இதழ்களை
வாசிக்கும் பழக்கமும் எனக்கில்லை