இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் 21 வது தேசிய மாநாடு உணர்ச்சிப்பெருக்குடன் பீகார் மாநிலத்தின் தலைநகர் பாடரிபுத்திரத்தில் நிறைவுபெற்றது. சுரவரம்சுதாகர்ரெட்டி அவர்களை பொதுச் செயலாளராக தேர்வு செய்து விட்டு, தோழர் ஏ.பி பரதன் ஆற்றிய உரையிலிருந்து யாராலும் விடுபட முடியாத தருணம் அது. மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து தலைவர்களுடன் பங்கேற்றுவிட்டு, பெரும் எண்ணிக்கையிலானப் பிரதிநிதிகள் சங்கமித்ரா விரைவு ரயிலில் புறப்பட்டு, சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். ரயில் புறபட்டு 16 மணி நேரம் கழிந்திருந்தது. காடுகள், மலைகள், நகரங்கள் என்று, வேகமெடுத்து ஓடிய ரயிலில் இடி இறங்கிதைப்போன்ற உணர்வு. தோழர் முத்துக்குமரன் இறந்து விட்டார் என்ற முதல் தகவல் வந்தது. இது நடந்திருக்காது. நடந்திருக்க் கூடாது என்று மனம், பொங்கிய அழுகையை மற்ற தோழர்களுக்குத் தெரியாமல் அடக்கப் பார்க்கிறது. சுற்றியிருந்தவர்கள் என்ன நடந்தது என்று பதட்டமடைந்து கேட்கிறார்கள். வாயிலிரிருந்து வார்த்தைகள் வர மறுக்கிறது.

அழுகையை மறைக்கலாம். நடந்ததை யாரால் தான் மறைக்க முடியும். புதிய தலைமுறையின் பத்திரிக்கையாளர் தியாகச் செம்மல், அலை பேசியில் தொடர்பு கொண்டு முத்துக் குமரனின் மரணத்தை உறுதி செய்தார். ரயில் ஓடியது. எல்லாமும் சுழன்றது எங்களுக்கு. வானம், பூமி, ஆறுகள் என்று எல்லாமும் சுழலுகின்றன. மரண அதிர்ச்சி சில தருணங்களில் நம்மை மரணமடைய வைத்துவிடுகின்றன. முத்துகுமரா, நம் தேசத்து, சிட்டுகுருவிகள் மறைந்து போனதைப்போல நீயும் மறைந்து போனாயா? ஒரு இடத்தில் உட்காராமல் சுற்றி சுற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ளும் வித்தையை, சிட்டுக் குருவிகளிடமிருந்து கற்றுக் கொண்டவன் நீ. அதனால் தான், எங்கள் சிவப்பு தேசத்தின் தேசியப் பறவையாய் உன்னை நினைத்து மகிழ்ச்சிக் கொண்டோம்.

எங்கள் செல்லப் பறவை, சட்டமன்ற பறவையானது. சட்டமன்றத்தின் வான்வெளியில் பறந்து காட்டினாய். உன் திறமைகண்டு எத்தனைமகிழ்ச்சி அடைந்திருந்தோம். தாய் வயிற்றிலிருந்த பத்து மாதத்தைப்போல, நீ சட்டமன்றத்தில் இருந்த பத்து மாதத்தைப் பற்றி எல்லோரையும் பேச வைத்துவிட்டாய். சட்டமன்றத்தில் உன்னைத் தெரியாதவர்கள் என்று யாருமே இல்லை என்கிறார்கள். உன்னைப் போல் இந்த குறுகிய காலத்தில் இத்தனைக் கேள்வி கேட்டவர்கள் இல்லை என்பது உண்மையிலும் உண்மை. சட்டமன்றத்தில் வாழ்ந்த 300 நாட்களில் 2 ஆயிரம் கேள்விகள் கேட்டிருக்கிறாய்.

தேனீக்களைப்போல சுறுசுறுப்பானவனே, உன்கால்கள் ஓரிடத்தில் நின்று நாங்கள் பார்த்ததில்லை. நீ பதவி ஏற்றவுடன் புதுக்கோட்டை மக்களுக்காக ஓடினாய். உன் காலடிபடாத அமைச்சர் அலுவலகமும் இல்லை. அரசு அலுவலகமும் இல்லை. இந்த ஓட்டத்திலும் முயற்சியிலும் தான், இந்தக் குறுகிய காலத்தில், புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 20 லட்சம் பெற்று சிறப்பு மருத்துவமனை அமைத்தாய். பலகாலம் காமராஜ் நகரில் பட்டா பெற முடியாமல் துயருற்ற மக்களுக்கு பட்டா பெற்றுக் கொடுத்தாய். சீர் கெட்டுக்கிடந்த புதுக்கோட்டை நகரின் சாலை சீரமைக்கென்று, 33 கோடி. காந்தி நகர், பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க 81 லட்சம். காவிரி குண்டாறு திட்ட அமலாக்கப் பெரும் முயற்சி.

என் இனியத் தோழனே இத்தனை வேகம் கொண்டு ஓடினாய்? வாக்களித்த மக்களுக்கு, நன்றி தெரிவிக்கவா? பத்து மாத்தில் போய்விடப் போகிறோம், அதற்குள் வாக்குறுதி கடனை செலுத்த வேண்டும் என்பதற்காகவா? அந்த ஓட்டத்தின் அர்த்தம் இப்பொழுது தான் புரிகிறது எங்களுக்கு.

செல்லப்பிள்ளையாய், கட்சியின் மடியில் விளையாடி திரிந்த எதை நாங்கள் நினைப்பது எதை நாங்கள் மறப்பது. புதுக்கோட்டை அரசர் கல்லூரியில் மாணவனாகி, விடுதியில் தங்கி ஒவ்வொரு மாணவனையும், கம்யூனிஸ்டாக மாற்றிய அந்த கல்லூரி காலத்தை நினைப்பதா? மாணவனாக இருந்த போதே தினமணியில் உனது கட்டுரை வெளிவந்த போது, தோழரே அதைபடித்தீர்களா என்ற ஆர்வமுகத்தை நினைப்பதா? மாணவர் பருவத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின், மாநிலத் தலைவர் வரை வளர்ச்சி பெற்றாய். கம்யூனிஸ்டு கட்சியின் எந்த தளத்தில் தான், நீ செயல்படவில்லை. அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்திலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்திலும் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றினாய். பின்னர் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர், செயலாளர் என்று கட்சியின் மாவட்டத் தலைமை பொறுப்புகளை ஏற்று செயல்பட்டாய். 43 வயதில் இத்தனை பொறுப்புகளை ஏற்று செயல்படுத்திய அந்த அரிய உழைப்பை எப்படி மறக்க முடியும்? இன்று நினைத்து நினைத்து அழுகின்றோம்.

புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய அரசோடு வேறுபட்டிருந்த காலம் ஒன்றிருந்தது. மன்னனின் சுகதுக்கங்கள் தான் மக்களின் சுகதுக்கங்கள். மன்னனுக்காக மட்டுமே மக்கள் சிரித்தார்கள் அழுதார்கள். இன்று அந்த புதுக்கோட்டையின் மண் மரஞ்செடி, கொடி ஆகிய அனைத்தும், உனக்காக கண்ணீர் விட்டு கதறி அழுததை தோழர்கள், ரயிலில் வந்து கொண்டிருந்த எங்களுக்குத் தெரிவித்தார்கள். துயரம் சுமந்த மக்கள் பெருங் கூட்டம் நகரெங்கும் பெருக்கெடுத்து நின்றதையும், கட்டுகடங்காத மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை தினறியதாகவும், வேறு வழில்லாமல், திருச்சி மாவட்டத்திலிருந்து பாதுகாப்பிற்கு காவல்துறை பிரிவுகள் தருவிக்கபட்டதாகவும் தோழர்கள் கூறினார்கள். மக்கள் சேவையின் பெரும் பயன் என்ன என்பதை உன் மரணத்தின் மூலம் மக்களுக்கே நீ உணர்த்தி விட்டாய்.

நெடுவாசல் கிராமம் தஞ்சைக்கு அருகில் அமைந்தது. உழைப்பையும் நேர்மையையும் தவிர வேறு எதையுமே அறியாத கிராமம் அது. தகிக்கும் வெயிலில் தன் வியர்வையை மண்ணுக்கு நீர் பாய்ச்சி உழுது உழைக்கும், அனல் தேசத்து மக்கள் அவர்கள். அவர்களில் பிறந்து, அவர்களைப் போலவே, சமுதாயத்திற்காக கடுமையாக உழைத்து, மக்கள் தலைவானாக முகிழ்ந்தவனை திடீரென்று மரணம் அழைத்துக்கொண்டால், அவர்கள் துயரத்திற்கு யாரால் சமதானம் சொல்ல முடியும். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக வென்று ஊர் திருப்பிய போது, ஊராரும் சுற்றுப்புறத்தாரும் கூடி, வான வேடிக்கை மேளதாளங்களுடன் வரவேற்றதை நாங்கள் அறிவோம். இன்று அந்த வெற்றித் திருமகனின் வெற்றுடலைப் பெறுவதற்கு அவர்கள் முட்டி மோதி வெளிபடுத்தும் வேதனை பிரபஞ்சப் பெரும் துயரமாகிவிட்டது.

உன்னையும் என்னையும் நன்கு அறிந்த பத்திரிக்கையாளர் சரவணன் அலைபேசியில் கண்ணீருடன் மரணத்துயரத்தைப் பகிர்ந்து கொண்டார். தேர்தல் காலத்தில் வீட்டிற்கு வந்த போது சைக்கிளை தவிர வேறு எதையும் பார்க்கவில்லை என்று என்னிடம் கூறியிருக்கிறார். இப்படி எளிய வாழ்க்கை நடத்தும் ஒரு வேட்பாளரை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியால் மட்டும் தான் தேர்வு செய்ய முடியும் என்றும் கூறினார். இன்று நான் நெடுவாசல் சென்றிருந்தேன் என்று பேசத்தொடங்கியவரை, துயரக்குரல் வார்த்தைகளை வெளியே வரவிடாமல் தடுத்துவிட்டது. முத்துக்குமரனின் உடலை வைப்பதற்கு கூட, வீட்டில் இடம் இல்லை.சிறிய வீடு என்றார். தேம்பல் சத்தம் மட்டுமே எனக்கு கேட்டது. இது தான் கட்சிக்கு நீ தேடித் தந்த சொத்தாகக் கருதுகிறேன்.

என் இனியத் தோழனே, சட்டமன்றத்தை விட்டுப் பிரிந்தாய், தோழர்களை விட்டுப் பிரிந்தாய் தொகுதி மக்களை விட்டுப் பிரிந்தாய். சகித்து கொள்கிறோம். எங்களுக்கு நாங்களே சமாதானம் தேடிக்கொள்கிறோம். உன் அன்பு மனைவியையும், பாசமிகுந்த இரண்டுக் குழந்தைகளையும் ஏன் விட்டுப் பிரிந்தாய்? அவர்களின் கதறல் உனக்கு கேட்காது. எங்களுக்கு கேட்கிறது. அன்பு தங்கை சுசிலாவின் அவலம் மிகுந்த துயரக்குரலும், குழந்தைகள் அழுகுரலும் மனக்குகையில் மோதி, நினைவோட்டத்தையே நிறுத்திவிட்டது. இதயத்தை பல்வேறு துகள்களாக தகர்த்து காட்டும் கொடுமை அந்த துயரத்தில் இருக்கிறது. எங்களால் என்ன செய்யமுடியும்.

முத்துக்குமரா முத்துக்குமரா

எங்கள் மீது உனக்கென்ன கோபம்

அனைவரையும் தவிக்கவிட்டு ஏன் சென்றாய்.

Pin It