"கற்றுக் கொடுப்போருக்கே முதலில் கற்றுக்கொடுக்கவேண்டும்" மார்க்ஸ்

"எப்போதுமே வரலாறாக்குக!" பிரெட்ரிக் ஜேம்ஸன்.

போராட்டங்களே வழக்காறாகிவிட்ட இன்றைய உலகமயமாக்கல் காலகட்டத்தில் வர்க்கப் போராட்டங்களே வரலாறாகிறது. தத்துவத்தில் வரலாற்று உத்தரவாதம் என்பதே வரலாற்றினுடைய அடிப்படைகருத்தாக்கமாகும் / இருப்பியல் வாதமும் காலம் குறித்த கருத்தாக்கமும் சந்திக்கும் புள்ளியாகும் / வரலாற்றுவரைவியலாகும். வரலாற்றுவரைவியல் = வரலாறு எழுதுவது, வரலாறு எழுதுவது குறித்த ஆய்வு வரலாற்றுவாதம் = சமூக கலாச்சார நிகழ்வுகள் வரலாற்றால் தீர்மானிக்கப்படுகின்றன என்ற கோட்பாடு.

ஆங்கில வரலாற்றறிஞர் பேராசிரியர் எட்வர்டு ஹாலெட் கார், ரஷ்யப் புரட்சி மற்றும் சோவியத் ரஷ்யாவின் வரலாற்றை பதினான்கு நூல்களைக் கொண்ட மாபெரும் தொகுதியாக படைத்துள்ளார். வரலாற்றுத் தத்துவம் / வரலாற்றுவரைவியல் கோட்பாடு குறித்த தர்க்கப் பூர்வமான ஆய்வை / அரிச்சுவடியை எழுதி சாதனை படைத்துள்ள இ.ஹெச்.கார் (1961)இனுடைய, What is History?, என்ற புகழ்பெற்ற நூலை தோழர் நா.தர்மராஜன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். (வரலாறு என்றால் என்ன?(Author: Edward Hallett Carr அலைகள் வெளியீட்டகம், 2004) 

வரலாற்றுவரைவியலுக்கான கோட்பாடுகளைத் தந்தவர் இ.எச்.கார்.

· வரலாற்றாய்வுக் கொள்கைகள் / கோட்பாடுகள் குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இ.ஹெச்.கார் (1961) ஆற்றிய உரையின் தொகுப்பே "வரலாறு என்றால் என்ன?' என்ற நூலாகும். இன்றைக்கும் சரித்திரவியல் தேர்ச்சி கொள்ள பட்ட மேற்படிப்பு பாடத்திட்டத்தில் வரலாறும் அதன் கோட்பாடுகளும் என்ற மைய தேர்வு வினாத்தாளுக்கு வரலாற்றாசிரியரும் வரலாற்றாதாரங்களும் / சமூகமும் தனி நபரும் / வரலாறு, அறிவியல் மற்றும் அறவொழுக்கம் / வரலாற்றில் காரண காரியம் / வரலாறு என்பது முன்னேற்றம் / விரிவடையும் வானம் என்ற உட்பிரிவுகளில் வரலாற்றுவரைவியலுக்கான முக்கிய பாடமாக இந்நூ ல் விளங்குகிறது. ஐ.ஏ.எஸ். படிப்புக்கு இந்நூல் முதல் பாடப்புத்தகமாகும்.

· 1960களில் பிரிட்டனில் வரலாற்றுவரைவியலில் ஒரு புரட்சியையே இந்நூல் உண்டுபண்ணியது. ஒரு முறை இ.எச்.கார், டோரிக்கள் உட்பட அனைத்து பிரிட்டஷ் வரலாற்றாசிரியர்களுமே பழைமைவாத கட்சிக்கு எதிரானவர்கள்தான் என்று குறிப்பிட்டார்; இ.ஹெச்.காரினுடைய சார்புவாதம் குறித்தும்; திடீர் சம்பவங்களை தற்செயல் நிகழ்வுகளை வரலாற்றாய்வுக்கான முக்கிய காரணியாகக் கொள்வதை வன்மையாக எதிர்த்ததையும் தொடர்ந்து காரசாரமான விவாதங்கள் எழுந்தன. பல எதிர்வினை விமர்சன நூல்கள் எழுதப்பட்டன. "முறையியலே அடிப்படை'என வாதிக்கும் வரலாற்றாசிரியர் பிரிவினர் பல வருடங்களாக இ.ஹெச்.காரினுடைய சார்புவாதத்தைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் இன்றைக்கு அவருடைய ஆய்வைத்தான் மொத்த பிரிட்டிஷ் வரலாற்றாசிரியரும் பின்பற்றுகின்றனர்.

· "வரலாற்றாசிரியரும் வரலாற்றுண்மைகளை, ஆதாரங்களை தரவுகளைச் சேகரிப்பவரும் எதில் வித்தியாசப்படுகிறனரென்றால் பொதுமைப் படுத்துவதில்தான்'' இ.ஹெச்.கார் (1961)

· ''ஒரு வரலாற்றாசிரியன் கடந்த காலத்தில் வீழ்ந்து கிடப்பதோ, கடந்த காலப்பிடியிலிருந்து மீள்வதோ கூடாது; ஆனால் கடந்தகாலத்தை தீர்க்கமாக உள்வாங்கிக்கொண்ட பிறகு, நிகழ்காலத்தைப் புரிந்துகொள்வதற்கான முக்கியமான கருவியாக அதைக் கையாளவேண்டும்'' இ.ஹெச்.கார் (1961)

· இ.எச். கார் குறிப்பிட்டதுபோல், கடந்த காலத்தைப் பற்றிய வரலாற்றாசிரியனின் பார்வை நிகழ்கால முரண்பாடுகள் பற்றிய ஆழ்ந்த அறிவில் இருந்து விளக்கப்படும்போது ஒரு "பெறுமதியான வரலாறு உருவாகிறது".

· மார்க்ஸ் சொன்னபடி: "மனிதர்கள் தமது வரலாற்றைத் தாமே உருவாக்குகிறார்கள். ஆனால் தமது விருப்பத்திற்கேற்ப அதை அப்படியே உருவாக்குவதில்லை; அவர்களே தேர்ந்தெடுத்துக்கொண்ட ஒரு சூழலில் அவர்கள் அதை உருவாக்குவதில்லை. ஆனால் கடந்தகாலத்திலிருந்து நேரடியாக வந்து சேர்ந்த, கொடுக்கப்பட்ட, கடத்தப்பட்ட சூழலில் அதை உருவாக்குகிறார்கள்". வரலாற்றுக்கு எவ்வித அர்த்தமுமில்லை என்பதல்ல இதற்குப் பொருள்; அரசியல் பொருளாதாரம் வரலாற்று விஞ்ஞானமாகக் கருதப்பட்டது. மதவாத, சட்ட வாத, அரசியல் வாதமாக வரலாற்றை உடைப்பதை தனித்தனிப் பிரிவுகளாக்குவதை ஏங்கல்ஸ் வன்மையாக எதிர்த்தார்.

· வரலாற்றாசிரியரும் வழக்காற்றாய்வாளரும் மூன்று காலகட்ட உறவுகளைக் கடந்து வந்துள்ளனர். முதலாம் உலக யுத்தத்திற்கு முன், 1846 இல் வழக்காறு ஓர் கருத்தாக்கமாக (வெகுஜன புராதனங்களுக்குப் பதிலாக) முன்வைக்கப்பட்டதிலிருந்து 1920கள் வரை. இருசாரரும் தோழமையுடன் இணக்கமாக இருந்த காலம் இரு துறையினரும் அப்போது தான் உலகைப்பார்க்கத் தொடங்கும் குழந்தைப்பருவத்திலிருந்தனர். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வரலாறு போலவே மானுடவியலும் சமூகவியலும் தொழில்முறை'த் துறைகளாக மாறிக்கொண்டிருந்தன.

· அடுத்து, 1920 1970 கள் வரை சந்தேகத்தின் காலம் இருவரும் தத்தமது துறையின் முக்கியத்துவத்தை / தனிப்பட்ட செயலுரிமையை வரையறை செய்து கொண்டதன் மூலம் ஒருவரையொருவர் சந்தேகித்துக்கொண்டனர் "தேசஅரசின் வளர்ச்சிக் கு கர்த்தாவே தாங்கள்தானென்றும் சமகால ஆவணத் தரவுகள் வரை சான்றாதாரம் காட்டும் ஓர் விஞ்ஞான முறையியலாக்கும் வரலாற்றாய்வு' என்றும் வாதிட்டனர். எல்லா வரலாற்றாசிரியர்களும் வர்க்கம் பற்றியோ, நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவம் நோக்கிய மாற்றங்கள் பற்றியோ பேசிக் கொண்டிருப்பதில்லை. வரலாற்றாசிரியரும் வழக்காறு ஆய்வாளருக்குமான உறவுகள் உலகப்பார்வை இப்படித்தானிருக்க வேண்டுமெனச் சொல்வதல்ல நோக்கம். ஆனால் மார்க்சிய வரலாற்று வரைவியல் கொள்கையில் இருவரின் சந்திப்பும் பிரிதலுமான புள்ளி குறித்த ஆய்வுதான் நோக்கம்இலக்கியவாதிகள், கலாச்சார உற்பத்திகளைப் பற்றி இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளும்பொருட்டு வரலாற்றையும் வரலாற்று ஆவணங்களையும் படிக்க ஆரம்பித்திருக்கின்றனர்; மானுடவியலாளர்கள் தமது துறை உருவான வரலாற்றைப் படிக்க ஆரம்பித்திருக்கின்றனர்; ஆனால் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் வரலாற்றாசிரியரோ, சமூக கோட்பாட்டின் வரலாற்றாய்வை விட்டுவிட்டு கலாச்சார மானுடவியல் மற்றும் இலக்கிய விமர்சனம் போன்ற கருத்தாக்கங்களைப் படிக்க ஆரம்பித்துவிட்டனர்.

· வரலாற்றுவரைவியல் கோட்பாடு / வரலாற்றின் விமர்சனத் தத்துவம் மூன்று பிரச்சினைகளைக் கொண்டது: வரலாற்று அறிவின் முக்கியத்துவம் என்ன? குறிக்கோள் என்ன? வரலாற்று அறிவிற்கும் பிற அறிவுத்துறைக்குமான தொடர்பு என்ன? கோட்பாடுகளும் கொள்கைச் சொல்லாடலும் வரலாற்றாசிரியரைக் குறித்துதானே தவிர வரலாற்றைக் குறித்தல்ல. வரலாற்று வரைவியலின் தத்துவமே, கொள்கையே வரலாற்றாசிரியர் எப்படி வரலாற்றைப் பார்க்கவேண்டும் எதையும் எதையும் இயங்கியலடிப்படையில் இணைத்துப் பார்க்கவேண்டும் எதை வரலாறாகக் கொள்ளவேண்டும்? வரலாற்றைத் தீர்மானிக்கும் சக்திகள் எவை? போன்றவை குறித்த தர்க்கமேயொழிய வரலாற்றைக் குறித்தல்ல.

· 1930 களுக்குப்பிறகு 1960களில் கிறிஸ்டோபர் ஹில், ரோட்னி ஹில்டன், ஜார்ஜ் ரூத், எரிக் ஹாப்ஸ்வாம், டோரோதி தாம்ப்சன், இ.பி.தாம்ப்சன் போன்ற பிரிட்டிஷ் சமூக வரலாற்றாசிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எழுதத்தொடங்கினர்.

· 1946இல் உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் கம்யூனிஸ்டு கட்சி வரலாற்றாசிரியர் குழுவினர் மார்க்சிய கொள்கையடிப்படையிலான வரலாறு நியதியானது என அரசியல் சமூக பொருளாதார வரலாற்றாய்வை முன்வைத்தனர். ஜெர்மனி தனது பெரும்புகழ்பெற்ற மைந்தர்களில் ஒருவரான மார்க்ஸுடன் ஒரு பிளவுபட்ட முரண்பாடான உறவையே கடைப்பிடித்து வந்த நிலையில் பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் சமூக அறிவியலில் மார்க்ஸிய பார்வை மிகவேகமாக கையாளப்பட்டது.

· 'வரலாற்றுவாதத்தின் வறுமை' (1957) எனும் நூலில் மார்க்சியத்தை எதிர்க்கும் கார்ல் பாப்பர், வரலாறு எனும் பெருங்கதையாடலை மறுத்து: ""வரலாற்றுப் போக்குகளையும் சாய்வுகளையும் சர்வப் பொதுவான விதிகளிலிருந்து உடனடியாக வருவிக்கமுடியும் என்ற நம்பிக்கை வரலாற்றுவாதத்தின் பிரதான தவறு'' என்றும் "வரலாற்றுவாதம் என்பது ஓர் சமூக விஞ்ஞான அணுகுமுறையிலான வரலாற்றுப் பரிணாம வளர்ச்சி விதிகளை விஞ்ஞான துல்லியத்துடன் முன்வைப்பது" என்றும் ""பிரத்யேகச் சூழல், தனிச் சம்பவம் சார்ந்ததே துல்லியமான வரலாறு'' என்ற வாதத்தையும் வைத்தார்.

வழக்காறா? வரலாறா? வழக்காறு வரலாறாகுமா?

· மார்க்ஸ் மூலதன நூலில் கூறிய கருத்தைப் பார்ப்போம்:

"மறைந்து போய்விட்ட மிருக ராசிகளை நிர்ணயிப்பதற்கு புதைபடிவ எலும்புகள் எவ்வளவு முக்கியத்துவமுள்ளவையோ, மறைந்து போய்விட்ட சமூகப் பொருளாதாரக் கருவிகளின் மீதமிச்சங்களும் அதே அளவு முக்கியத்துவமுள்ளவையாகும். வெவ்வேறு பொருளாதார சகாப்தங்களை நாம் வேறுபடுத்திப் பார்க்க உதவுவது தயாரிக்கப்பட்ட பொருட்கள் எவை என்பதன்று, அவை தயாரிக்கப்பட்டது எப்படி என்பதும், எக்கருவிகளால் என்பதுமே. உழைப்புக் கருவிகள் மனித உழைப்பு அடைந்துள்ள வளர்ச்சி நிலைக்கு ஓர் அளவுகோலை வழங்குவது மட்டுமல்லாமல், அந்த உழைப்பு நடைபெறுகிற சமூக நிலைமைகளைச் சுட்டிக் காட்டும் குறிகளாகவும் உள்ளன. ""

· வழக்காறின் வரலாறு குறித்த ருஷ்ய ஆவணத்தை நமக்குச் சொல்லும் விளாதிமிர் பிராப்னுடைய வழக்காறின் வரலாறும் கோட்பாடும்' என்ற நூல் புகழ்பெற்றது. பிராப்பினுடைய கருத்தாக்கங்களை முதன் முதலில் ஆய்வுக்கருவியாகச் செயல்படுத்தியவர் ஆலன் டெண்டிஸ் (1962) ஆவார். பிராப் குறித்து லெவிஸ்ட்ராஸ் வைத்த: நாட்டார் கதைகள் என்பது சின்னஞ்சிறு தொன்மங்களாகும்; இருமை எதிர்வுகள் சிறிய அளவில் அமைக்கப்பட்டிருப்பதால் படிப்பதற்குச் சிரமமாகயிருக்கும். அதனால்தான் ""தொன்மம் குறித்த அமைப்பியலாய்வு, நாட்டார் பழங்கதைகள் குறித்த வடிவவியலாய்வை விட சாலச் சிறந்தது'' என்ற விமர்சன விவாதத்தால் பிரான்ஸில் பிரபல்யமான பிராப், அமெரிக்காவில் தண்டியின் ஆய்வால் புகழ்பெற்றார். அவ்வரலாறு வரலாற்றுக்கு எதிரானது என்கிற வரையறையுடன் தான் அமைப்பியல் ஆய்வு வைக்கப்பட்டது.

லெவிஸ்ட்ராஸ் : அமைப்பியல் கட்டுமானத்தில் தொன்மங்களை மனிதன் எவ்வாறு சிந்திக்கிறான், படைக்கிறான் என்பதல்ல என் விழைவு; மாறாக தொன்மங்கள் மனித மனத்தில் அவர்களை அறியாமலேயே எவ்வாறு வார்த்தெடுக்கப்படுகின்றன என்பதுதான் என் வேட்கை'' என்று கூறி உறுதிப்படுத்துகிறார். அமைப்பிய பொதுத்தன்மையை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு உள்ளடக்கம் சார்ந்த தனித்தன்மையை கைவிடுகிறார். இவரது அணுகுமுறைப்படி நமது புராணங்களில் வரலாற்றுண்மைகள் பொதிந்து கிடக் கின்றன. தொன்மவியல் ஆய்வு முறைப்படி இவற்றை வெளிக்கொணர முடியும். நாட்டார் வழக்காற்றியல் அறிஞருக்கு வரலாற்று அணுகுமுறை தேவைப்படுவதும், வரலாற்றறிஞருக்கு நாட்டார் வழக்காற்றியல் அணுகுமுறை தேவைப்படுவதும் மிகவும் தவிர்க்க முடியாதது. ஏனெனில் வரலாறு எப்போதும் நிகழ்காலத்தில் வந்து முடிய வேண்டும். கடந்த காலமும் நிகழ்காலமும் பொருள் பொதிந்த வகையில் விளக்கம் பெறுதலே வரலாற்றாய்வின் மிக முக்கியமான நோக்கமாகும். பெர்னார்டு எஸ்.கோஹன் அடிப்படையில் ஓர் மானுடவியலாளர். ஆனால் தம்முடைய ஆய்வை வரலாறாக நிலை நிறுத்த பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் குழாத்துடன் வரலாற்றையும் மானுடவியலையும் இணைக்க அரும்பாடுபட்டார்.

· வரலாற்றாசிரியர் சமீபகாலங்களில் கலாச்சாரத்தின் மீது பண்பாட்டின் மீது அதிக ஆர்வம் காட்டத்தொடங்கிவிட்டனர். இதுவும் மானுடவியல் சிந்தனைகளின் தாக்கத்தால் ஏற்பட்டதே. என்ற கட்டுரையில் வழக்காறுகளுக்கு வரலாற்றுச் சிறப்பு அளிக்கப்படுகிறது. பண்பாட்டு வடிவத்தில் வர்க்கப் போராட்டத்தைக் காண முடிவதில்லை. இதுவே பண்பாட்டு நடவடிக்கைகளின் முக்கியக் கூறு ஆகும். எங்கே கதையாடல் இல்லையோ அங்கே வரலாறும் இல்லை. வரலாற்றுப் பொருள்முதல்வாதம் மீது கருத்துமுதல்வாத வழக்காற்றாய்வாளரால் வைக்கப்படும் தாக்குதலே எதிர்ப்பே மறுப்பே இது எனலாம்.

· எது உண்மை? இரண்டும் எதிரும் புதிருமானது. வரலாறு உண்மை; வழக்காறு பொய்யான உண்மை. நாட்டார் வரலாறு ஓர் கற்பிதம். முன்னர் பொய்யானது என்று வரையறை கொடுக்கப்பட்ட நாட்டார் வரலாறு உண்மையென நம்பப்படுகிறது.

 ஒரே சமயத்தில் இருவரின் அணுகுமுறையும் மாறிடுமென்பதில்லை. இருவரும் எந்தப் புள்ளியில் வேறுபடுகின்றனர் என்றால் "வர்க்கப் போராட்டம்' நோக்கத்தில் எதிரும் புதிருமாகிவிடுகின்றனர். . மார்க்ஸின் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கொள்கையே வரலாற்றாசிரியருக்கு மிகுந்த பயனுள்ள பகுப்பாய்வுக் கருவியாக செயல்பட்டது என்பதில் ஐயமில்லை.

.ஹெச்.காரின் இன்றைய பொறுத்தப்பாடும் பின்நவீனத்துவ தாக்குதலும்

· வரலாற்றுண்மை என்பதே தேவைக்கேற்ப நோக்கத்திற்கேற்ப வரையறை செய்துகோள்கிறோம் என்ற நீட்ஷேயின் கருத்தை வெற்றிகரமாக முறியடிக்கும் இ.ஹெச்.கார், வரலாற்றில் அனுபவவாதமே உண்மையைத் தரமுடியுமென ஆணித்தரமாக நம்பும் இ.ஹெச்.கார் புறவய வரலாற்றுண்மை என்று எதுவுமிருக்கமுடியாது என்று அறுதியிட்டுச் சொல்கிறார். ""வரலாற்றாசிரியன் இறுதியில் ஆதாரங்களுக்குத்தான் வக்காலத்து வாங்குகிறானேயொழிய மாற்றியல்ல. இத்தகைய கொள்கை வழிகாட்டுதலால் 'இந்த விளக்கத்தைவிட அந்த விளக்கம் நன்றாகயிருக்கிறதே' என்கிற பிரச்சினைக்கே இடமில்லை. புறவய அல்லது உண்மையான (வரலாற்று) விளக்கமிது என்று உறுதியாக நம்மால் சொல்லவும்முடியாது''. ஆனால் இதையேத்தான் பின் நவீனத்துவவாதிகளும் சொல்கின்றனர்.

· வரலாற்று விளக்கத்துக்கு அறிவுத்தோற்றவிய மாதிரியை கார் ஏற்றுக்கொண்டாரா? வர்க்கங்களற்ற வர்க்க முரண்பாடில்லாத சமுதாயம் உருவாகும் காலகட்டத்தோடு வரலாறு முடிவு நிலைக்கு வந்துவிடுமென்ற நம்பிக்கைக்கு எதிராக ""சோவியத்தின் வீழ்ச்சியானது மொத்த மனிதகுல வரலாற்றை முடிவுக்கு கொண்டு வந்தது மட்டுமல்ல, தாராளவாத முதலாளித்துவத்தின் வெற்றியே மொத்த உலக இயங்கியல் இயக்கத்தை தீர்மானிக்கும் சக்தியாகிவிட்டது.'' என்று முழக்கமிடும் பிரான்சிஸ் பூகுயாமா "வரலாற்றின் முடிவும் இறுதி மனிதனும்" எனும் நூலில்தமது வாதத்தை வெளியிட்டார்.

· இ.ஹெச்.கார் சொன்ன கடுமையான விமர்சனம்: "வரலாற்றாசிரியனைப் பல சுமைகள் அழுத்துகின்றன. அவற்றின் தேவைகளினால் வரலாற்றாசிரியன் எழுத்தாளன் என்பதற்குப் பதிலாக கலைக்களஞ்சியத்தைத் தொகுப்பவனாக மாறக்கூடிய அபாயம் எழுந்துள்ளது. எங்கோ தவறு நடைபெற்றிருக்கிறது. சோர்வில்லாமல், முடிவில்லாமல் விவரங்களை சேகரிப்பதுதான் வரலாற்றுக்கு அடிப்படை என்ற நம்பிக்கையில், விவரங்களே உண்மையைப் பேசிவிடும், அதனால் அதிகமான விவரங்களை நாம் கொள்ளக்கூடாது என்ற நம்பிக்கையில்தான் தவறு இருக்கிறது. அந்த நம்பிக்கை உச்சத்திலிருந்தபடியால் வரலாறு என்றால் என்ன? என்ற கேள்வியைக் கேட்க வேண்டும் என சில வரலாற்றாசிரியர்கள் கூட நினைக்கவில்லை. அது தேவையில்லை என்றுகூட சிலர் கருதுகிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெய் விவரங்களை வழிபாடு செய்தார்கள். பிறகு ஆவணங்களின் வழிபாட்டில் அது முழுமையாக்கப்பட்டு நியாயப்படுத்தப்பட்டது. மெய்விவரங்கள் என்ற கோவிலில் ஆவணங்கள் நோவாவின் தோணியாக இருந்தன. ஆவணங்களை வரலாறாக்க முயன்றார்கள்."

· அமெரிக்காவும் அதன் கூட்டாளி மேற்கு நாடுகளும் போட்டிருந்த "பொய் ஜனநாயகப் பாதுகாவலன்' என்ற முகமூடியைக் கிழித்தெறிந்துவிட்டார். பின் நவீனத்துவ வாதிகள் இ.ஹெச்.காரின் இம்முயற்சியைக் குறித்து: ""வரலாற்றாய்வைத் தொழிலாகக் கொண்டிராத ஒருவரால், பரீட்சார்த்தமாக அனுபவமற்ற விதத்தில் முதன்முதலாக வரலாற்றுப் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்ல வரலாற்றுவரைவியலாய்வு கையாளப்பட்டது'' என்று குற்றஞ்சாட்டினர். இதனால் உணர்வுப்பூர்வமான ஏகோபித்த சரியான, உறுதியான, அமெரிக்க வரலாற்றைத் தக்கவைத்துக்கொள்ள அமெரிக்கா இ.ஹெச்.காரையும் மற்ற தொழில்வரலாற்றாசிரியரையும் இணைக்க வேண்டியதாயிற்று.

· 1960-70களில் கொள்கையிலும் அரசியலிலும் சித்தாந்தத்திலும் வளர்ச்சியடைந்ததையொட்டி புதிய இடதுசாரிகளின் வரவால் மார்க்சிய வரலாற்றுவரைவியலில் மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. "முழுமுதல் வரலாற்றுவாதமுடையது மார்க்சியம்' என்று விமர்சித்த கிராம்சியை மறுக்கவும், பிரதானமாக வரலாற்றுவாதத்தையும் மனிதமையவாதத்தையும் எதிர்க்கவும் அல்தூஸ்ஸர் "மூலதன'த்தை வாசித்தல்" என்ற நூலைப் படைத்தார்.

· "நுண்வரலாறு எழுதுதல்' என்பது 1970களில் இத்தாலியில் தோன்றிய ஒரு வகையாகும். சிறிய அலகைப் பற்றிய மிக நுட்பமான, ஆழமான தேடுதல் என்பது அப்போது சமூக வரலாறு, பண்பாட்டு வரலாறு பற்றியதாக அமைந்தது. 1970களுக்குப்பிறகு மீண்டும் "தோழமையும் இணக்கமும்'. ஏனெனில் "வெகுமக்கள் கலாச்சாரம்', "நுண்வரலாறு' "கீழிருந்து வரலாறு' "அடித்தள மக்கள் வரலாறு', "விளிம்பு நிலையினர் வரலாறு' போன்ற சமூக விஞ்ஞான முறைகளைப் பின்பற்றி பழைய வரலாற்றுத் தடத்திலிருந்து விடுபட்டு "மாற்று வரலாறு' ஒன்றை உருவாக்கும் புதிய தளங்களுக்கு வரலாற்றாசிரியர் நகர்ந்துவிட்டனர்.

· 1980 - 90 களில் பெர்னான்டு பிராடெல் மற்றும் பிரான்சின் "அன்னல் பள்ளி', வரலாற்றாசிரியர் பரப்பிய "புதிய வரலாற்றுவாதம்', விமர்சனக்கோட்பாடு அடிப்படையிலான இலக்கிய கொள்கையாகும். வரலாற்றுச் சூழலோடு கலாச்சார பண்பாட்டையும் அறிவுஜீவித வரலாற்றையும் இலக்கியத்தின் மூலமாக உள்வாங்குவது விளக்கமளிப்பது புதிய வரலாற்றுவாதிகளின் குறிக்கோள் ஆகும். ஜெர்மனியில் வரலாற்று மானிடவியல் ஆகிய சிந்தனைக் குழுவினரைச் சார்ந்து இம்முறை வளர்த்தெடுக்கப்பட்டது.

· இதனை எங்கெல்ஸ் கூறுகிறார்:

வரலாற்றின் உந்து விசையைப் பற்றிய மாபெரும் விதியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் மார்க்ஸ். வரலாற்று ரீதியான அனைத்துப் போராட்டங்களும், அவை அரசியல், மத, தத்துவஞான அல்லது வேறு ஏதாவதொரு சித்தாந்தத் துறைக்குள்ளாக முன்னேறிய போதிலும், உண்மையில் அவை அநேகமாக சமூக வர்க்கங்களின் போராட்டங்களின் தெளிவான வெளியீடுகள் மட்டுமே, இந்த வர்க்கங்கள் இருப்பதும் அதன் காரணமாக இவற்றுக்கிடையே ஏற்படுகின்ற மோதல்களும் கூட அவற்றின் பொருளாதார நிலைமையின் வளர்ச்சியின் தரத்தினால், அவற்றின் உற்பத்தி முறையினாலும் அதனால் நிர்ணயிக்கப்படுகின்ற பரிவர்த்தனை முறையினாலும் நிலைப்படுத்தப்படுகின்றன என்பது அந்த விதியாகும். இயற்கை விஞ்ஞானத்தில் சக்தியின் உருமாற்றம் பற்றிய விதிக்கு உள்ள அதே முக்கியத்துவம் வரலாற்றில் இந்த விதிக்கு உண்டு.''

· பிற்கால வரலாற்றறிஞர் வர்க்கப்போராட்டம் என்பதிலிருந்து விலகி சமூக வரலாறு, பொருளாதார வரலாறு ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் தந்தனர். இதனால் வட்டார ரீதியாக ஆராய வேண்டிய திருந்தது ""வட்டார வரலாறு'' "உள்ளூர் வரலாறு' "தல வரலாறு' கூட்டு மரபு தனி மரபு தொல்குடிகளின் பூர்வ இனவரலாறு என வேறுபாடுகள் உண்டு. . வரலாற்று வழக்காறு மரபை விட்டுக்கொடுக்காத வரலாற்று அணுகுமுறையே' இத்தாலிய வரலாற்றுவாதத்தின் கலாச்சாரம்' என்றனர். அதேபோல் ஜெர்மானிய வரலாற்றுவாதக் கலாச்சாரப்படி சீர்திருத்தக்கால வழக்காற்றாய்வு மாணவர் பத்தொன்பதாம் நூற்றாண்டு பொருளாதார மாற்றங்களைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டனர். சமூக வர்க்கங்களையும் வர்க்க உறவுகளையும் முதன்முதலில் வரலாற்றாய்வு செய்வதால் மார்க்சிய வரலாற்றுப் பகுப்பாய்வுக் கொள்கையானது வெறும் பொருளதார அடிப்படையிலான வரலாற்று நிர்ணயக் கொள்கையிலிருந்து வேறுபடுகிறது.

· "ஹெகலின் வரலாறு மற்றும் சமூகம் குறித்த கருத்தாக்கங்கள் யாவும் ஒருங்கிணைந்த வளர்ச்சியுறும் மொத்தத்துவம்'' என்று கூறி நிராகரிக்கும் பூக்கோ; மையச் சாரத்தையும் இருப்பியலையும், பொருளாதார வளர்ச்சி விதிகளைச் சுற்றிவரும் எவ்வித உடோப்பிய சிந்தனைகளையும் நிராகரித்து: "வரலாற்றில் பாட்டாளியின் பங்கு ஒன்றுமில்லை. புரட்சியைவிட மொத்தத்துவ செயல்திட்டங்களைவிட தனிப்பிரதேச வாரியான எதிர்ப்புகளே உள்ளூர் போராட்டங்களே ஜனநாயக ஏற்றத்துக்கான குறிப்பிட்ட சிலவடிவங்களே சமூக மாற்றத்துக்கான அடிப்படை அம்சங்களாகும்'' என வாதிடுகிறார் பூக்கோ.

இந்தியாவில் .ஹெச்.கார்இன் தாக்கம்

· வரலாற்றில் புறவயமான புறப்பொருளை நாடும் வரலாற்றாய்வாளர் ஒரு முடிவான பார்வையின் அடிப்படையில்தான் கோட்பாடுகளை, கொள்கைகளைப் பயன்படுத்த வேண்டும். தனிமுதலானதென்று எதுவுமில்லை எல்லாமே சார்புடையவைதான் என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். "வரலாற்றுண்மைகள் சுத்தசுயம்புவாக நமக்கு வருவதில்லை. ஏனெனில் அவை மெய்யான வடிவத்திலேயே இருப்பதில்லை; எழுதியவருடைய பாடவேறுபாடும் சேர்ந்தே நமக்கு வரும்.'' "ஒரு வரலாறைப் படிப்பதற்கு முன்னர் அதை எழுதிய வரலாற்றாசிரியனைப் பற்றி முதலில் நாம் படிக்கவேண்டும்; வரலாற்றாசிரியனைப் பற்றி படிப்பதற்கு முன்னர் அவனுடைய வரலாற்று சமூகச் சூழலை முதலில் படிக்கவேண்டும்.'' என்று இ.ஹெச்.காரை மேற்கோள் காட்டும் புகழ்பெற்ற இந்திய வரலாற்றறிஞர் ரொமிலா தாபர்.

· வழக்காறு ஆய்வாளருக்கும் வரலாற்றாய்வாளருக்குமிடையிலான வழக்காறு வரலாறு என்கிற இரு கருத்தாக்கங்களுக்குமிடையிலான சில கோட்பாட்டு முக்கியத்துவத்தை இந்திய வராற்றாய்வுச் சூழலில் வைத்துத் தரும், பிரேந்திரநாத் தத்தா. வழக்காறும் வரலாற்று விஞ்ஞானமே என நிறுவுகிறார். "வரலாறும் வரலாற்றுவரைவியலும் அதேபோல் வழக்காறும் வழக்காற்றாய்வும்" என்கிற கட்டுரையில் விளக்குகிறார். தொடக்கத்தில் நிகழ்வுகளையும் செய்திகளையும் கால வரிசையில் உண்மைத் தன்மை மாறாமல் விளக்குவதே வரலாறு எனப்பட்டது. 1908இல் ஜார்ஜ் லாரென்ஸ் காமே என்பார் "வரலாற்று விஞ்ஞானமாக நாட்டார் வழக்காறு' என்ற நூலை எழுதினார். நாட்டார் வழக்காற்றைத் தீவிரமாக வரலாறாகப் பார்க்கப்படவில்லையென்றாலும் இருவகை நாட்டார் வழக்காற்றியல் பள்ளியினரில் அமெரிக்க "வரலாற்றுப் பூகோளவியல் பள்ளியும்' மற்றொன்று "பின்னிஷ் பள்ளியும்' ஆகும். "பரவலாகுதல் கோட்பாட்டின்படி கலாச்சார வடிவங்களைப் போலவே நாட்டார் வழக்காறும் ஓரிடத்தில்தான் உருவாகிறது. பின்னர் அங்கிருந்து மற்ற ஊர்களுக்கெல்லாம் பரவத்தொடங்குகிறது'' என்ற கருத்தாக்கத்தின்படி வழக்காறும் வரலாறே என வாதிட்டனர்.

· "மார்க்சியத்துடன் நெருங்கி வருவதுபோல் இவை காட்சியளித்தாலும் வர்க்கப் போராட்டம் என்பதை இவை மெதுவாகப் புறந்தள்ளிவிடுகின்றன. ஆயினும் இவற்றுக்கிடையில் ஓரளவு ஒற்றுமையுண்டு"(பக்.20) என பேராசிரியர் ஏற்றுக்கொண்டாலும், வரலாற்றுவரைவியலாய்வில் இதுவரை அறியாமலிருந்த புதிதாக ஓருண்மையைக் கண்டுபிடித்தலுக்கும், யூகித்தறிதலுக்குமுள்ள அறிவுத்தோற்றவிய மதிப்பீட்டின் முக்கியமான வேறுபாட்டைத்தான் பின் நவீனத்துவவாதிகள் கவ்விப்பிடித்து பிரச்சினையாக்குகின்றனர்.

· இனிவருங்காலம் வரலாறும் வழக்காறும் இருதுறையினரின் கூட்டுறவுக் காலமாக' அமையும். வரலாற்றுவாதத்தின் குழப்பங்களுக்கெல்லாம் ஒருங்கிணைந்த தத்துவார்த்தப் பார்வையும் வலுவான சித்தாந்தவயப்படுதலுமுடைய மார்க்சியமே தீர்வாகும். வர்க்கப்போராட்டப் பார்வையில் வழக்காறுகளை மானுடவியலாய்வு செய்வதே மார்க்சியத்திற்கு வளம்சேர்க்கமுடியும்.