மனிதனுக்கும் மனுசிக்கும்
பிறந்தவன்
சாதியில்லாமல் பிறந்தான்!
மனிதனுக்கும் மதத்துக்கும்
பிறந்தவன்
சாதியோடு பிறந்தான்

மதம்
நெற்றியில் புணர்ந்து
சிலரை
தோளில் புணர்ந்து
சிலரை
வயிற்றில் புணர்ந்து
சிலரை
பாதத்தில் புணர்ந்து
பலரைப்
பெற்றது!

மதப் புணர்ச்சியில்
மதம் பிடித்த
மானுடன்
பிளவுகளில் தன்னை
அயணப்படுத்திக் கொண்டது!

சாதிகள்
ஒவ்வொரு குடும்பத்திலும்
வேர் கொண்டபோது,
தமிழகம் தடுமாறி விழுந்தது!

வேகவைக்கப்பட்ட
தமிழும்
வைக்கத்திற்கு
விருந்தாகப் பரிமாறப்பட்டது!

இராமனுசரும்
இராமலிங்கமும்
இராமல் ஒழியுமா
சாதிப்பேய் என்று ஏங்கினர்!

இராமசாமிப் பெரியார்
கைத்தடி தாக்கி
மனுதர்மம் பின்வாங்கியபோது
சாதி கலப்புக்குத்
தாழ் திறக்கப்பட்டது!

சாதி மறுத்து
மணந்தவர்கள் மானுட
நீதி காத்த
நேர்மையாளர்கள்!
அவர்களின் குழந்தைகள்
புதிய
பூபாளத்தின்
அலாபனைகளாகப்
புறப்பட்டு வந்தனர்!
ஆனால்
மாறாத சமூக அமைப்பு
அவர்களை இன்னும்
மதிக்கவில்லையே!

அரசின்
அலுவல் நாற்காலிகளில்
ஐம்பது விழுக்காடு
சாதி மறுத்தவர்
சந்ததிக்கென்றே
சட்டம் செய்ய வேண்டும்!

சாதி மறுத்தவர்
சந்ததிக்கென்றே
கல்வி நிறுவனங்கள் –
இடங்களை
ஒதுக்கிக்
காத்திருக்க வேண்டும்!

குடும்பத்தில்
சாதி மறுப்பை உறுப்பினர்
எவரேனும்
சாதித்திருந்தால் மட்டுமே
மின் இணைப்பும் குடி நீர்
இணைப்பும்
உண்டென்று
சொன்னால் என்ன?
சாதியம்
கடந்த சாதனையாளரைத்
தேர்தல் களங்களில்
நிறுத்தினால் என்ன?

உறவுப் புறக்கணிக்கும்
கலப்பு மணங்களை
உலகம் கடைக்கணிக்க
வேண்டும்!
உறவினால்
அரும்பும் அன்பைவிட
அன்பினால் மலரும் உறவே
நிரந்தரம்
இதம் தரும்!

கலப்பு மணங்களை
வளர்க்கத் தனியே
கழகங்கள் உருவாக்கும் போது
தான்
சாதிச் சங்கங்களை
ஒழித்திடவும் முடியும்?
சாதிகளின் ஒழிப்பில் மட்டுமே
தமிழன் மீண்டும்
பிறக்க முடியும்!
பிறப்பானா?