விழிப்புணர்வு இதழ் ஆரம்பித்துச் சரியாக 2 வருடம் நிறைவடையப் போகிறது (2005 - 2006) ஆரம்பத்தில் கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்களிடையே மட்டும் சிறிய அளவில் தனிச்சுற்று முறையில் ஆரம்பிக்கப்பட்ட இதழானது, பின்பு தமிழகத்தின் பிற அரசு சட்டக் கல்லூரி மாணவர்களையும் இணைத்துக் கொண்டு செயல்பட்டது. தமிழகத்தின் பரவலான ஊர்களில் உள்ள கடைகளின் மூலமும், முற்போக்கான எண்ணம் உடைய நபர்கள் மூலம் இதழ் தமிழ்நாட்டில் சந்தைப்படுத்தப்படுகிறது. இருமாத இதழாக ஆரம்பிக்கப்பட்ட இதழ் சில நேரங்களில் தாமதமாகவும், பல நேரங்களில் சரியான நேரங்களிலும் வந்துள்ளது. (மாணவர்களின் தேர்வு காரணமாக ஒரு இதழ் மட்டும் வெளிவரவில்லை) விழிப்புணர்வு இதழை முன்னெடுத்துச் சென்ற மாணவர்களில் பலர், இந்த இதழ் உங்கள் கைகளில் இருக்கும் பொழுது வழக்கறிஞர்களாக மாறி இருப்பர்.

முற்போக்கு இதழ் என்ற பொதுவான அடைமொழிக்குள் விழிப்புணர்வு அறியப்பட்டாலும் தமிழகத்தின் பற மாற்று இதழ்கள் அனுகாத சில விஷயங்களை அணுகியிருக்கிறது. எடுத்துக்காட்டாக விதைச் சட்டம், வங்கிகளில் கடன் வாங்கிச் செலுத்தாத தொழிலதிபர்கள் பற்றிய கட்டுரை, ஈழத்தமிழ் - திபெத் அகதிகள் பற்றிய ஒப்பீட்டு கட்டுரை போன்றவையாகும்.

ஆரம்பத்தில் உள்ளடக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தப்பட்ட இதழானது, தற்பொழுது, வடிவமைப்பு, அச்சு, அச்சிடப்படும் தாள் போன்ற பல விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டு தன்னை மாற்றியமைத்துக் கொண்டுள்ளது. இதழில் அனைவரும் குறைகூறக் கூடிய எழுத்துப் பிழைகளையும் இனி வரும் இதழ்களில் களைய முயற்சிக்கிறோம். இதழ் இணையதளத்திலும் வெற்றிகரமாக தனது தடத்தைப் பதித்துள்ளது.

சிற்றிதழ் நடத்துவது என்பது மிகவும் சிரமமானது, புரவலர்கள் உதவியின்றி இயங்க முடியாது அல்லது மிகப் பெரிய வணிய நிறுவனங்களின் பின்புலம் இருக்க வேண்டும். மேற்கண்ட உதவிகள் இல்லாத பட்சத்தில் இதழ் தொடர்ந்து வெளிவராது போன்ற கருத்துக்களை மீறி விழிப்புணர்வு இரண்டு வருடம் வெளிவந்துள்ளது. இது இன்றைய பத்திரிகை உலகில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் தான். இந்த இரண்டு வருடங்களில் சில சிறிய அளவிலான விளம்பரங்கள் மட்டுமே எங்கள் பயணத்தை சாத்தியப்படுத்தியுள்ளது. புரவலர்கள் என்ற யாரும் இல்லை. ஆனாலும் மாணவர்களின் தன்னலமற்ற உழைப்பு, மற்றும் பங்களிப்பு சில முற்போக்கான நண்பர்களின் நிதி உதவி மட்டுமே இதழை இன்னமும் வெளிவரச் செய்வதில் பங்காற்றியிருக்கிறது. இதழின் விற்பனைத் தொகையானது போக்குவரத்துச் செலவுக்கும், அனுப்பும் கொரியர் செலவுக்கும் சரியாகப் போய் விடுகிறது. இதழுக்கான சந்தாக்களும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை.

இதுவே விழிப்புணர்வின் இன்றைய நிலை. விழிப்புணர்வு இனிவரும் காலங்களில் சென்னையிலிருந்தோ அல்லது கோவையிலிருந்தோ வெளிவரும். இதழ் தொடர்ந்து வலுவுடன் வெளிவருவதற்கு தங்களுடைய பங்களிப்பும் அவசியம். அது சந்தாவாக இருக்கலாம், நன்கொடையாக இருக்கலாம், விளம்பர உதவியாக இருக்கலாம். எதுவாக இருப்பினும் இதழுக்கு அது தேவையான ஒன்றாக இருக்கிறது.

இந்த இதழ் வெளிவருவதில் எங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கிறதோ, அதே மகிழ்ச்சி கண்டிப்பாக உங்களுக்கு இருக்கும். இந்த இதழ் நின்று போகக்கூடாது என்பதில் எந்த அளவு பொறுப்பு இருக்கிறதோ, அதே அளவு கடமை உங்களுக்கும் இருக்கிறது.

எழுத்தாளர்கள், வாசகர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் எங்கள் பயணத்தை சாத்தியப்படுத்திய எல்லோரையும் இந்த கணத்தில் எங்கள் அன்பைத் தெரிவிக்கிறோம்