‘மாப்பிள்ளை என்ன தொழில் பண்ணிக்கிட்டிருக்காரு?’

‘நட்டமில்லாத தொழில்’

‘நகை வியாபாரமா? அதிலேதான் வாங்குனாலும் லாபமாம். விற்றாலும் லாபமாம்.’

‘அந்தத் தொழில் இல்லீங்க’

‘அப்படின்னா, டாஸ்மாக் கடையில் பார் நடத்திக்கிட்டிருக்காரா? அதுதான் எந்த சீசனிலும் டல்லடிக்காத வியாபாரம்.’

‘அதுவும் இல்லீங்க’

‘வேற என்ன? அரசியல் கட்சியில பொறுப்பிலே இருக்காரா?’

‘அதிலே கூட அஞ்சு வருஷம் லாபம். அப்புறம் அஞ்சு வருஷம் நட்டம். நம்ம மாப்பிள்ளை செய்றது நட்டமில்லாத தொழில்.’

‘அப்படியென்ன தொழில் செய்றாரு’

‘ஸ்கூல் நடத்திக்கிட்டிருக்காரு. இங்கிலீசு மீடியம். மெட்ரிகுலேஷன் படிப்பு’

‘உடனே தாம்பூலத் தட்டை மாத்துங்க. அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை முடிச்சிடலாம்.’

‘பொண்ணு வருகிற ராசியில மாப்பிள்ளை சீக்கிரமா இன்ஜினியரிங் காலேஜ், மெடிக்கல் காலேஜெல்லாம் ஆரம்பிச்சிடணும்.’

‘நட்டமில்லாத தொழிலாக' வருமானத்தை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கிறது கல்வி வியாபாரம். நர்சரி பள்ளிகளில் தொடங்கி மருத்துவக் கல்லூரிகள் வரை சரஸ்வதியை இலட்சுமியாக்கி வியாபாரம் ‘செய்து கொண்டிருக்கிறார்கள் ‘கல்வி வள்ளல்கள்.'

கல்வி வள்ளல்களின் பழைய வரலாற்றைப் புரட்டினால் அரசியல்வாதியாகத் தெரிவார்கள். இன்னும் சில பக்கங்களைப் புரட்டினால் சாராய வியாபாரியாகவோ, கந்து வட்டிக்காரர்களாகவோ, உள்ளூர் ரவுடிகளாகவோ இருந்தது தெரியவரும். வரலாற்றின் பக்கங்களை மாணவர்களே புரட்ட விரும்பாத இந்த தொழில் நுட்ப யுகத்தில், தங்களின் பழைய வரலாறு வெளியே வராமல் வியாபாரத்தை சிறப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் கல்வி வள்ளல்கள்.

‘அனைவருக்கும் கல்வி' என்றொரு திட்டம் இருக்கிறது. ‘சர்வ சிக்ஷ அபியான்' என்ற பெயரில் அது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வியைக் கட்டாயமாக அளித்தாக வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். ஆனால், நடைமுறையில் அனைவருக்கும் சமச்சீரான கல்வி கிடைக்கிறதா? பிளாக் போர்டு மட்டுமே இருக்க வேண்டிய பள்ளிக்கூடங்களில் ஸ்டேட் போர்டு, சென்ட்ரல் போர்டு என புடவைக் கடைபோல ரக ரகமான கல்வி வியாபாரங்கள், பட்டுப்புடவை கட்டுகிற பெண்மணி பணக்காரர் என்றும், சாதாரண நூல் புடவை கட்டுகிறவர்கள் ஏழைகள் என்றும் தரம் பிரிக்கப்பட்டிருப்பது போல, சென்ட்ரல் போர்டில் படிப்பவர்கள் உசத்தியானவர்களாகவும், ஸ்டேட் போர்டில், அதுவும் தமிழ் மீடியத்தில், அதிலும் மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளில் படிப்பவர்கள் என்றால் ரொம்பவும் தாழ்ந்தவர்களாகவும் வேறுபடுத்திப் பார்க்கப்படுகிறார்கள்.

‘உங்கள் பையன் எங்கே படிக்கிறான்? டி.ஏ.வியிலா, கேந்திரிய வித்யாவிலா, வேலம்மாள் ஸ்கூலா?’

‘இல்லீங்க. வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு நல்ல பள்ளிக்கூடம் இருக்கு. அங்கேதான் படிக்கிறான்.’

‘அய்யய்யோ... அவனை பாழாக்கிடாதீங்க.’

‘இல்லையே நல்லா படிக்கிறானே... மார்க்கு வாங்குறானே?’

‘அதைவிட ஸ்கூல் முக்கியம்ங்க. பெரிய ஸ்கூலா சேர்த்துவிடுங்க. அவன் ஃப்யூச்சரை வீணடிச்சிடாதீங்க.’

மாணவர்கள் என்ன படிக்கிறார்கள், எப்படிப் படிக்கிறவர்கள் என்பதைவிடவும் எங்கே படிக்கிறார்கள் என்பதே முக்கியமாகிவிட்டது. ஊடகங்களில் விளம்பரம் செய்கின்ற அளவுக்கோ, கல்வித்துறையில் சரியான ஆட்களைப் பிடித்து பொதுத் தேர்வில் முதலிடம் பெறுகின்ற திறமையோ இருக்குமானால் அது சிறந்த பள்ளி என்கிற பொதுப்புத்தி இங்கே பரவிக் கிடக்கிறது. அதிலிருந்து பெற்றோர்களை மீட்பதே பெரும்பாடாக இருக்கும்போது, மாணவர்களை எங்ஙனம் மீட்பது?

இந்திய அரசாங்கத்தின் காசில் படித்துவிட்டு, வெளிநாட்டுக்குப் போய் கை நிறைய சம்பாதித்தவனின், தேசபக்தியைத் தவிர, வேறெந்த உத்தியும் தெரியாமல் இங்கேயே படித்து, இங்கேயே மூட்டை தூக்கிப் பிழைக்கும் குடும்பத்துப் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு என்றால் ‘சமத்துவம் கெட்டுப் போகும்' என்று புதிய நீதி வழங்குகிறது. ‘ஜாதிகளின் அடிப்படையில் மனிதர்களின் நிலை வகிக்கும் வழக்கம் மட்டும் எந்த நாட்டிலாவது இருக்கிறதா?’ என்று எவ்வளவுதான் நாம் உரக்கக் குரல் எழுப்பியும் காதில் விழப் போவதில்லை.

‘டேய்... அங்கிள்கிட்டே ரைம்ஸ் சொல்லு’

‘டாடி சொன்ன மாதிரி ரைம்ஸ் சொல்லு பாப்பா’

‘சொல்றேன் அங்கிள்... ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’

‘டேய்... அங்கிள்கிட்டே உன்னை தமிழ் ரைம்ஸா சொல்லச் சொன்னேன். இங்கிலீஸ் ரைம்ஸ் சொல்லு.’

‘ஹிக்கிரி டிக்கிரி டாக். த மவுஸ் ரேன் ஆப் த கிளாக்...’

‘வெரிகுட்... வெரிகுட்’

இப்படி சில கிறுக்கு ‘டாடி'களும், கேனை ‘அங்கிள்'களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஓடி விளையாடு பாப்பா பாட்டைவிட, ஹிக்கிரி டிக்கிரி டாக்கில் குழந்தைகளுக்கு என்ன பெரிய கருத்து போதிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. ஆனாலும் தமிழ்ப் பாட்டை பாடிக் காட்டுவதைவிட, இங்கிலீஸ் ரைம்ஸ் மனப்பாடம் செய்து சொன்னால் தான் பெருமை என்று நினைக்கின்ற டாடி, மம்மி, அங்கிள், ஆன்ட்டிகள் நிறையவே இருக்கிறார்கள்.

தாய்மொழிக் கல்வியை தரம் தாழ்ந்ததாக நினைக்கும் மனோபாவம் வேரூன்றியிருக்கிறது. தமிழ் மீடியம் என்றால் அது அரசாங்கம் நடத்துகின்ற பள்ளிக்குரியது என்றும், ஓட்டை பெஞ்ச்சும், ஒற்றை வாத்தியாரும் உள்ள பள்ளிகளில்தான் தமிழில் பாடம் நடத்துவார்கள் என்கிற மனநிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. அரசுப் பள்ளிகளின் அவலமான நிலையினாலும் தாய்மொழிக் கல்வி கற்றவர்களுக்கு எவ்வித முன்னுரிமையும் இல்லாமையினாலும் தமிழில் படித்த மாணவர்கள் ‘தீண்டத்தகாதவர்'களாக ஒதுக்கி வைக்கப்படும் கொடுமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தக் கொடுமையைத் தடுக்க எந்த சட்டதிட்டங்களும் இல்லை.

தாய்மொழியில் படிப்பது எளிது என மாணவர்கள் நினைத்தாலும், தாய்மொழியில் படிப்பதற்கு அவர்கள் விரும்பினாலும் பிற மொழிகள் அவன் மீது கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன. அண்மையில் நடந்து முடிந்த ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் தாய்மொழியில் விடை எழுதியவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஆங்கில மொழி தேவைப்படுவது தகவல் தொடர்பிற்காகத்தான். அவருடைய சிந்தனை என்பது தாய்மொழி சார்ந்தே அமையும். அதனால், தாய்மொழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுவதும் எளிதாக இருக்கும் என்கிற நடைமுறை உண்மையில் தாய்மொழியில் தேர்வு எழுதி வென்றவர்களையும், ஆங்கிலத்தில் அடிமை செய்யும் அரசு சேவகர்களாகத்தான் மாற்றப் போகின்றன இங்குள்ள சட்ட திட்டங்கள்.

*******

மொழித் தீண்டாமை மட்டுமின்றி, சாதித் தீண்டாமைக் கொடுமைகளும் இந்தியக் கல்வி நிலையங்களில் தலை விரித்தாடுகின்றன. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி சாவித்திரியின் குடும்பம் ஏழ்மையானதுதான். ஆனால் அவள் தன் பள்ளிக் கல்வியைத் தொடர முடியாமல் கைவிட்டதற்கு காரணம், அந்த ஏழ்மையல்ல. 15 வயதான சாவித்திரியின் படிப்பு தடைப்பட்டதற்கு அவளது சக மாணவிகளும், அவள் படித்த பள்ளியின் ஆசிரியர்களின் நடவடிக்கைகளும்தான் காரணம். அவள் எப்போது வகுப்பறைக்குள் நுழைகிறாளோ அப்போது சக மாணவிகள் தங்கள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, ‘பள்கி என்று அழைத்து, பாட்டுப்பாடுவது ஏன்? மலம் அள்ளும் தொழிலைச் செய்வோரைத்தான் அந்த மாநிலத்தில் பள்கி என்று அழைக்கிறார்கள். சாவித்திரி, அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த மாணவி. வகுப்பில் இருக்கும் மற்ற மாணவிகளில் பெரும்பாலோர், ‘பால்மீகி' என்று சொல்லப்படும் உயர் சாதியினர். அதனால் சாவித்திரியைக் கேலி செய்வது அவர்களின் வாடிக்கை. அதனை ஆசிரியர்களும் கண்டுகொள்ள மாட்டார்கள். அதாவது, அந்தக் கேலியை, மறைமுகமாக ஆதரிப்பார்கள்.

மலம் அள்ளும் தொழிலைச் செய்யும் பங்கி சமூகத்து பெண்கள் தங்கள் புடவைத் தலைப்பால் மூக்கைப் பொத்திக் கொண்டு வேலை செய்வது வழக்கம். எனவே சாவித்திரி வகுப்பறைக்குள் வரும்போது, சக மாணவிகள் தங்கள் கைக்குட்டையை புடவைத் தலைப்பு போலாக்கி, மூக்கைப் பொத்திக்கொண்டு கேலி செய்வார்கள். அதனைத் தாங்க முடியாமல் சாவித்திரி அழும்போது, ஆறுதல் சொல்லக்கூட ஆசிரியர்கள் முன் வரமாட்டார்கள். இதுதான் சாவித்திரி தனது படிப்பை பாதியில் நிறுத்தியதற்கு காரணம் என்கிறார், அப்பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த கல்வியாளர் விமலா ராமச்சந்திரன். சாதித் தீண்டாமை, மொழித் தீண்டாமை, பொருளாதாரத் தீண்டாமை என இந்திய கல்வி நிலையங்கள் மாணவ சமுதாயத்தை பிரித்தாண்டு கொண்டிருக்கின்றன.

அரசுகளின் கல்வித் திட்டங்களாலும், பெற்றோரின் எல்லை தாண்டிய கனவு பயங்கரவாதத்தாலும் பொதி சுமக்கும் கழுதைகளாய் ஆகிப்போன குழந்தைகளை மீட்டு, அவர்கள் விரும்புகிற கல்வியைத் தரமாகக் தருவதற்கான முயற்சிகள் மிகக் குறைந்த அளவிலேயே நடைமுறையில் உள்ளன.

அனைவருக்கும் கல்வி என்பது அனைவருக்கும் சமமான கல்வி, அதுவும் முழுமையாகக் கட்டணமில்லாத கல்வி என்கிற நிலைமை ஏற்படுத்தப்படும்போதுதான் கல்வித் தீண்டாமை களையப்படும்.


Pin It