வழக்கறிஞர்களையும், பொதுமக்களையும் கொடூரமாகத் தாக்கும் தமிழக அரசின் சீருடைக் குண்டர்கள்,
விசைத்தறி, பட்டறை தொழில்களைக் காலி செய்து பொழப்பக் கெடுத்த ஆர்க்காட்டாரின் மின்வெட்டு,
அம்பானி சகோதரர்களின் சம்பாதனை குறைந்து விடக்கூடாதென நிறுத்தி வைக்கப்பட்ட சிதம்பரத்தின் பெட்ரோல் விலை குறைப்பு,
சிறு வியாபாரிகளை தள்ளுவண்டிக்காரர்களாகவும், தள்ளுவண்டிகாரர்களை நடைபாதை வியாபாரிகளாகவும் தகுதி இறக்கம் செய்து விட்ட ரிலையன்ஸ் ஃபிரெஷ்,
விவசாயிகளை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலம்...
மன்மோகன், கருணாநிதி கும்பலை விரட்டியடிக்க இவை போதுமானவைதாம். கெடுவாய்ப்பாக இவையெல்லாம் இத்தேர்தலில் பின்னுக்குப் போய், கடைசியில் காணாமலே போய்விட்டன.
‘ சமூக விழிப்புணர்வு’ கடந்த சில ஆண்டுகளில் அது குறித்த பல சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டிருப்பதால் தற்போதைய தேர்தலில் முக்கியப் பிரச்சனையாக மாறிவிட்ட ஈழத் தமிழர் பிரச்சனையை ஒரு சிறு விவாதமாக கேள்வி பதில் வடிவில் இங்கே தருகிறோம்.

Jayalalitha and left parties'அன்னைக்குப் பாடம் புகட்ட ’அம்மா’வுக்கு ஓட்டுப் போடச் சொல்கிறார்களே....

தேர்தல் முடிஞ்ச பிறகு ’அம்மா நடத்தப் போகும் பாடத்தை கைகட்டி, வாய் பொத்திக் கேட்கச் செவியுள்ளவர்கள், துணிவுள்ளவர்கள் தாராளமாக அம்மாவுக்கு ஓட்டுப் போடலாம்.

பழசை மறந்தவர்கள் பாடம் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்ள தா. பாண்டியன், வரதராஜன் போன்ற காம்ரேடுகளை அணுக வேண்டும். தற்சமயம் சீட்டுக்காகப் போயஸ் கார்டன் வாசலில் ராப்பகலாய் அவர்கள் படுத்துக் கிடப்பதால் கட்சி அலுவலகத்தில் சந்திக்க இயலாது. ஒரு வாரமோ பத்து நாளோ பொறுத்தபின் முயற்சிக்கவும்.

“கொலைக் குற்றவாளி பிரபாகரனைப் பிடித்து இந்தியா கொண்டு வரவேண்டும்” என ரெட்டைக்குழல் துப்பாக்கியாய் முழங்கிய தங்கபாலுவும், ஜெயலலிதாவும் ஏன் வேறு வேறு கூட்டணிகளாகப் பிரிந்து நிற்கிறார்கள்?

இந்துத்துவா, மதமாற்றத் தடைச்சட்டம், பார்ப்பனியத் திமிர் அனைத்திலும் ஒத்த கருத்தும், ஒரே செயல்பாடும் கொண்ட சங்கராச்சாரி ஜெயேந்திரனும், ஜெயலலிதாவும் எதிரெதிர் முகாம்களில்தானே உள்ளனர்! அஜெண்டாவில் என்ன பின்னடைவு ஏற்பட்டு விட்டது?எதிரெதிராக வெட்டுவதாலேயே அது வேறு, இது வேறென ஆகிவிடாது கத்திரிக்கோல்.

காங்கிரஸ் கூட்டணிக்குப் போன திருமாவளவன் தேர்தல் பிரச்சாரத்தில் எதை பேசுவார்?

இலங்கையின் இறையாண்மை குறித்து கண்ணீர் விடும் இந்தியா, சீனாவின் இறையாண்மை எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்பதற்காக தலாய் லாமாவுக்கு தினமும் கிடா வெட்டு விருந்து வைப்பதை ஆதாரங்களுடன் மேடைதோறும் அம்பலப்படுத்துவார். அய்ரோப்பிய ஓடுகாலி என்.ஆர்.ஐ.களின் மயிரைப் பிடுங்குற டர்பன் மேட்டருக்காக, எந்திரிக்க முடியாத நிலையிலும் சர்கோசியைப் பார்த்து பிராது கொடுத்த மன்மோகனை சந்திக்கிழுத்து வசை பாடுவார்.

காங்கிரசுக்காரன் கடுப்பாகி, கட்டையைத் தூக்கிக் குறுக்கே போட்டால் அப்படியே குப்புறப்படுத்துக் கொள்வார். சிறுத்தை பயந்து புதருக்குள்ளே ஓடி பதுங்கி விட்டது என நாம் அவதூறு சொல்லக்கூடாது. 67 இல் காமராசர் சொன்ன ’படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் திட்டமாகவும் இருக்கக்கூடும்.

பாட்டாளி மக்கள் கட்சி அணி மாறியது எதற்காக?

சத்தியமா ஈழத் தமிழர் பிரச்சனைக்காகத்தான். தட்டிக் கேட்காத மன்மோகன், தட்டிக் கொடுக்கும் பிரணாப், கள்ளத்தனமாக வழிநடத்தும் சோனியா, வாய்க்கொழுப்பெடுத்து திரியும் இளங்கோவன், சிதம்பரம்... கும்பலை எதிர்த்து அல்ல; பதவியைப் பறித்துவிடக்கூடாதென நாற்காலிக்குப் பின்னே பம்மிக் கொண்டிருக்கிறாரே... கருணாநிதி! அவரை எதிர்த்துதான் அணி மாறியிருக்கிறது பா.ம.க.

அதாவது, புருசன் அடிச்சது தப்பில்லை; கொழுந்தன் சிரிச்சதுதான் பிரச்சனையாம்! ஈழப் பிரச்சனையில் அய்யா எடுத்திருக்கும் நிலைப்பாட்டின் லட்சணம் இப்படித்தான். எல்லோரும் அம்மணமாக ஓடிக் கொண்டிருக்கும் பந்தயத்தில் கருணாநிதியை மட்டும் ஜட்டி போட்டுக்கொண்டு ஓடச் சொல்கிறார் தமிழ் குடிதாங்கி மருத்துவரய்யா.

‘சேலை கட்டிய முசோலினி சோனியா’ என்பது இறையாண்மைக்கு எப்படி எதிராகும்?

கற்பு, ஒழுக்கம் இவைகளை பெண்களின் சேலைக்குள் ஒளித்து வைத்திருப்பதுதான் நம்ம ’கலாச்சாரமே! தேசத்தை ஒரு பெண்ணாக உருவகிப்பதால் இறையாண்மையும் அங்குதான் இருக்க வேண்டும். அந்த ‘நம்பிக்கையால்’தான் பாவாடை நாடாவை அவிழ்த்து உள்ளே பாரத மாதாவைத் தேடினார் நம் ‘தமிழினத் தலைவர்’. இன்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே போனவர்களில் ஒருவர் ஒரு காலத்தில் அத்தலைவரின் சீடகோடியாக இருந்தவரல்லவா! சகவாச தோஷத்தால் இந்திய இறையாண்மையை சோனியாவின் சேலைக்குள் தேடிவிட்டார்கள்...

கறுப்பைக் கரைத்து காவியாக்கினார் அம்மா. கதராக்கிக் கொண்டிருக்கிறார் கலைஞர்.

தேர்தல் நம்ம உள்ளூர் பிரச்சனை. அதைக் கணக்கில் கொண்டால் இலவச கலர் டி.வியும், ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியும் கொடுத்த கலைஞருக்கு ஏன் ஓட்டுப் போடக்கூடாது? 

தாராளமாகப் போடலாம். எண்சாண் உடம்புக்கும் பிரதானம் சிரசு அல்ல; வயிறுதான் என்பதை ஒத்துக்கொண்டால்! 

செருப்பாலடிச்சாலும் வாய்க்கு ருசியா கறியும் சோறும் ஆக்கிப் போட்டாரே ஆண்டை...! அடிமையா தொடர்வதில் என்ன தப்பு எனக் கேள்வி எழுப்பும் பண்ணையடிமைகளின் விசுவாசத்தை ஐந்தாண்டுகளுக்கொருமுறை நிறுத்துப் பார்க்கக் கொடுக்கப்படும் வாய்ப்புதான் தேர்தலென்றால் இது மிகச் சரியே!

தமிழீழ ஆதரவாளர்களை கள்ளத் தோணியில் போய் போர் செய்யச் சொல்கிறாரே முதல்வர்?

இவர் பேச்சை நம்பி கள்ளத் தோணியில் ஏறி படையெடுத்துப் போய் பாளையம் இறங்கும் நம்ம ஆட்கள் அங்கே ராஜபக்சேவின் சிங்கள இராணுவத்தை எதிர்கொண்டால் பிரச்சனையில்லை. ’அன்னை திருட்டுத்தனமாக அனுப்பி வைத்திருக்கும் இந்தியக் கூலிப் படையோடு மோத நேர்ந்தால்...!

சகோதர யுத்தம் அல்லது பங்காளி யுத்தம் வந்து விடுமே! தமிழினத் தலைவருக்கு அது அலர்ஜி ஆச்சுதே!

கடவுளோடும், மக்களோடும்தான் கூட்டணி வைத்திருக்கிறாராமே விஜயகாந்த்?

கடவுளோடு கூட்டணி வைக்க சிதம்பரம் நடராசன் கோயிலுக்குப் போயிருந்தால் நேரடியாக கடவுளுக்கும் கறுப்பு எம்.ஜி.ஆருக்கும் ஒரு கனெக்ஷன் போட்டு காரியத்தைக் கனகச்சிதமாய் முடிச்சுக் கொடுத்திருப்பார்கள் தீட்சிதர்கள். டெல்லிக்குப்போய் காங்கிரசுக்காரன் காலில் ஏன் விழுந்து எழுந்தார்?

Karunanidhi and sonia gandhiசிதம்பரம் போனால் தட்சணை கொடுக்கணும், டெல்லியில் வாங்கலாம் என்பதால் இருக்குமோ!

தமிழ்ப் புத்தாண்டுக்குள் ஈழத் தமிழர்களின் கதையை முடித்துவிட ‘அன்னை’ உத்தரவிட்டிருக்கிறாராமே...?

‘மந்திரி குமாரி என்றொரு படம். கட்டிய மனையாளை மலையுச்சியில் தள்ளிக் கொலை செய்ய’வாராய் நீ வாராய் என பாடியபடியே கூட்டிச் செல்வான் கணவன் என்ற உறவு கொண்ட காதகன் ஒருவன். எதிர்பாராத திருப்பம் அங்கே. கொலைகாரனே கொலையாகிப் போவான்.

பதவிக்காலம் முழுக்க கடிதங்கள் வரைந்தே பிரச்சனைகளை தீர்த்துக் கட்டும் கலைஞர் இந்த விசயத்தில் மட்டும் தனது வழியை மாற்றி, ஒரு காலத்தில் தான் வசனம் எழுதிய மந்திரி குமாரி படப்பெட்டியை பார்சல் செய்து டெல்லிக்கு அனுப்பி வைக்கலாம். வேடிக்கைக்காகச் சொல்லவில்லை. மகாத்மா காந்தியின் வாழ்க்கையை திசை திருப்பியதாம் அரிச்சந்திரா நாடகம். சோனியா காந்தியின் பாதையை ஏன் மாற்றாது மந்திரி குமாரி?

“போர் என்றால் அப்பாவி மக்கள் மேலும் குண்டுகள் விழத்தான் செய்யும்” என ராஜபக்சேவின் கொலைவெறிக்குப் பரணி பாடிய ’அம்மா இன்று ஈழ ஆதரவுப் படைக்கு தளபதியாகப் பொறுப்பேற்றிருப்பது காலம் செய்த கோலமா?

ஈராக்கிலும், ஆப்கானிலும் மிகப்பெரும் மனித உரிமை மீறலை நிகழ்த்தும் அமெரிக்கச் சண்டியரை ஈழப் பிரச்சனைக்குப் பஞ்சாயத்து பண்ண வெத்தல பாக்கு வச்சு அழைக்கிறவர்கள் ’அம்மா தலைமையின் கீழ் அணி திரள்வதில் கேவலம் ஒன்றுமில்லை.

அதே வேளையில் ’ஒரு மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும் என ஒற்றை வரியில் ஐந்தாயிரம் சீக்கியர்களின் படுகொலையை நியாயப்படுத்தி திமிர் கக்கிய ஒருவரின் கோரச் சாவுக்காக ஒரு இனத்தையே காவு வாங்கத் துடிக்கும் போக்கிரிக் கும்பலுக்கும், இந்தத் தள்ளாத வயதிலும் அவர்களைத் தோள்மேல் தூக்கிச் சுமப்பவருக்கும், ‘அம்மா’ ஏற்று நடிக்கும் புதிய பாத்திரத்தை விமர்சிக்கும் யோக்கியதை இல்லை.

'காங்கிரசைத் தோற்கடிப்போம்' வசனம் ’ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடுவோம்' என்பதைத்தானே மறைமுகமாகச் சொல்கிறது?
மறைமுகமாக அல்ல, நேரடியாகவே அதைச் சொல்கிறது. எதிரிகளும், துரோகிகளும் தனித்தனியாக இல்லாமல் ஒன்றாக, ஒரே அணியில் கலந்து விட்டதால் இப்படிதான் சொல்ல முடியும். ஏனெனில் இரு அணிகளிலும் இருக்கிறார்கள் பிள்ளையானும், கருணாவும்.

துரோகிகளாக இருந்தாலும் ’நம்மாளு எனும் இன உணர்வுடன் நெருங்கலாம் என்றால் அங்கே ஒரு ராஜபக்சேவும் இருக்கிறார். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இன்று சிக்கித் தவிப்பவர்கள் ஈழ மக்கள் மட்டுமல்ல, தமிழகத்தின் ஈழ ஆதரவாளர்களும்தான். ‘விடுதலையை வென்றெடுக்க தொடர்ந்து ஏகாதிபத்தியங்களிடம் மண்டியிட்டும், ஓட்டுச் சீட்டையே ஆகச் சிறந்த ஆயுதமாகவும் முன்மொழிபவர்களுக்கு இந்தச் சிக்கல் கண்டிப்பாக வந்தே தீரும்.

கூட்டணியில் வைகோவுக்கு மட்டும் ஏனிந்த இழுத்தடிப்பு?

எடுக்கிறது பிச்சை; அதுல மொறப்பென்ன வேண்டிக் கெடக்கு? ‘கடைசியா வந்தவனுக்கெல்லாம் சுடுசோறு, எங்களுக்கு வெறும் பழையதுதானா?’ன்னு அழுது அடம்பிடிக்காம, நல்ல பிள்ளையா அம்மா போடுறத வாங்கிக்கனும். புது மாப்பிள்ளை கணக்கா வந்தமா சீரு செனத்திய வாங்கிட்டு நடையை கட்டினோமான்னு இருக்கனும், நம்ம ராமராசு அய்யா மாதிரி அத வுட்டுப்புட்டு போன தீபாவளிக்கு சீராட வந்த மருமகப்புள்ள அடுத்த தீவாளி வரைக்கும் அங்கேயே டேரா போட்டுக் கெடந்தா எந்த மாமியாதான் மதிப்பா?