Paintingஏழாவது வகுப்பு இறுதித் தேர்வில் தோற்று
ஊதாரியாய் ஊர்சுற்றி வந்த போது
எனக்குள்ளிருக்கும் ஓவியனை
நானுணர்ந்து கொண்டேன்.
நெல்லவிக்க அம்மா பயன்படுத்திய
உடைமரங்களின் எஞ்சிய கரித்துண்டுகள்
என் தூரிகைகளாயின.
சாணிகறை படிந்திருந்த
மாட்டுத் தொழுவத்து சுவர்களிலும்
கழிவறையின் பின்புற சுவர்களிலும்
என் ஓவியங்களை அரங்கேற்றினேன்
வால்தூக்கி சிறுநீர் கழிக்கும் எருமைகளுக்கு
மிரட்சியை ஏற்படுத்தியிருந்தன
என் கறுப்பு கோட்டோவியங்கள்.
இரண்டாம் தாரமாக வாக்கப்பட
முப்பத்திரெண்டாவது வயதில் மூத்தவளுக்கு
திருமணம் நிச்சயிக்கப்பட்ட போது
தீட்டு கழிக்கும் பொருட்டு
கந்து வட்டிக்கு வாங்கி
வீட்டுச் சுவர்களில் அண்ணன் அடித்த
வண்ணக்கலவைகளில் அழிந்து போயின
என் அத்தனை கறுப்பு ஓவியங்களும்.
அதோடு எனக்குள்ளிருக்கும்
ஓவியனும் மரித்துப் போனான்

 

Pin It