தாலிபான் தலைவர் முல்லா முஹ்ம்மது உமர் கொல்லப்பட்டு விட்டதாக சில தினங்களுக்கு முன் வெளியான செய்தி பரபரப்பாக்கியது. இந்தச் செய்தி வெளியானபோது பாகிஸ்தானின் கராச்சியில் அமைந்துள்ள அந்நாட்டு கப்பற்படைத் தளத்தில் புகுந்த தாலிபான் போராளிகள் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தனர்.

12 போராளிகளை சமாளிக்க முப்படைகளையும் களமிறங்கினார் பாக் பிரதமர் கிலானி. அந்தப் படைகள் கடற்படைத் தளத்தை முற்றுகையிட்டு தாக்குதலை ஒடுக்கி முற்றிலும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர 15 மணி நேரங்கள் போராடினர். அதற்குள் கடற்படைத் தளத்திற்குள்ளிருந்த இரண்டு அமெரிக்க தயாரிப்பு போர் விமானங்களான பி3சி ஓரியனை அழித்து, பாகிஸ்தான் இராணுவத்தினர் 15 பேரின் உயிரையும் பறித்திருந்தனர் தாலிபான் போராளிகள். போராளிகள் தரப்பில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு - 7 பேர் பிடிபட்டுள்ளனர்.

உஸôமா பின்லேடனை அமெரிக்கா கொன்றதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இத் தாக்குதலை மேற்கொண்டோம் என்று தாலிபான்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில்தான் முல்லா உமர் கொல்லப்பட்டு விட்டதாக ஆப்கான் தொலைக்காட்சியான டோலா டி.வி. செய்தி வெளியிட்டது.

பாகிஸ்தானில் அமெரிக்க மற்றும் நேட்டோ படையினர் முகாமிட்டு தாலிபான் போராளிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் நேட்டோ படையினரையும் மீறி அதிமுக்கிய இடமான கடற்படைத் தளத்தில் நுழைந்து தாலிபான்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த செய்தி - நேட்டோ படைகளுக்கு தலைமை தாங்கும் அமெரிக்காவிற்கு உலக அரங்கில் கேவலத்தை ஏற்படுத்தியது.

இதனால் என்ன செய்யலாம் எனத் திணறிய அமெரிக்கா - தாலிபான் போராளிகளின் மனவலிமையை குறைத்து - தாக்குதல் முயற்சிகளில் தொய்வை ஏற்படுத்தவே முல்லா உமர் படுகொலை என அவசர அவசரமாக செய்தி பரப்ப ஆப்கானுக்கு உத்தரவிட்டது.

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு வசிரிஸ்தான், குவெட்டா ஆகிய பகுதிகளில் முல்லா உமர் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக அமெரிக்கா சொல்லி வந்தது. பாகிஸ்தான் எல்லையோரப் பழங்குடி மக்கள் மத்தியில் தாலிபான்களுக்கு செல்வாக்கு இருப்பதால் அமெரிக்கப் படைகள் அங்கே உள்ளே நுழைய முடியவில்லை.

முல்லா உமரை பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ அமைப்பின் முன்னாள் தலைவர் ஹமீத் குல் குவெட்டாவிலிருந்து வடக்கு வசிரிஸ்தானுக்கு அழைத்துச் சென்றதாகவும், அப்போது பாகிஸ்தான் இராணுவப் படையினர் முல்லா உமரை சுட்டுக் கொன்ற தாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு மற்றும் செய்தி இயக்குநரகம் தெரிவித்திருந்தது.

உஸôமா பின்லேடனுக்கு தற்போதைய ஐஎஸ்ஐயின் தலைவர் சுஜா அஹ்மது பாஷா அடைக்கலம் தந்து ஆதரவளித்து வந்ததாக அமெரிக்கா சொல்லி வருகிறது. அதேபோல முல்லா உமருக்கு முன்னாள் ஐஎஸ்ஐ தலைவர் ஹமீது குல் ஆதரவளித்ததாக இப்போது செய்தியை பரப்புவதன் மூலம் - பாகிஸ்தான் உளவுப் பிரிவு போராளித் தலைவர்களை பாதுகாத்து வருவதாக சொல்கிறது.

ஆனால் இதற்கு மாற்றமாக பாகிஸ்தான் மக்களும், தாலிபான் அமைப்பினரும் உஸôமாவை காட்டிக் கொடுத்தது பாகிஸ்தான் உளவு அமைப்புதான் என நம்புகின்றனர். அதற்கு காரணமாக 8 வருடங்களாக தங்கியிருந்த உஸôமாவை பாகிஸ்தான் இராணுவத்திற்கு கூட தெரியாமல் அமெரிக்கப் படைகள் நெருங்கியதைக் காட்டுகிறார்கள் அவர்கள்.

பாக். உளவுத்துறையின் நாலெட்ஜ் இல்லாமல் அமெரிக்கப் படைகள் உஸôமாவை நெருங்க முடியாது என்பது அவர்களின் வாதம். எப்படியிருப்பினும் அமெரிக்கா கிளப்பிய செய்தி வதந்தி என்பதை தாலிபான் அமைப்பு மறுப்பு வெளியிட்டு வெளிப்படுத்தி விட்டது.

தங்களது தலைவர் பத்திரமான இடத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார். ஆக்ரமிப்பாளர்களுக்கு எதிரான அவரது போர் தொடரும் என தாலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

முல்லா உமர் கொல்லப்பட்டது குறித்த செய்திக்கு ஆப்கானிஸ்தானோ அல்லது பாகிஸ்தானோ இதுவரை விளக்கம் அளிக்காமல் இருப்பதே முல்லா உமர் கொல்லப்பட்டதாக ஆப்கான் அறிவித்தது பொய் என்பதை உறுதிப்படுத்துகிறது.