இந்தியாவை 800 ஆண்டுகள் முகலாயர்கள் ஆண்டனர். சிறுபான்மையினரான முஸ்லிம்கள் பெரும்பான்மை இந்துக்கள் மீது ஆட்சி நடத்தினார்கள். அதுவும் 8 நூற்றாண்டுகள். எப்படி முடிந்தது?

மக்களை பாதிக்காத ஆட்சி. மக்கள் நல ஆட்சி. அதனால்தான் முகலாய ஆட்சிக்கு எதிராக பெரும்பான்மை இந்து சமூகம் கலகம் செய்யவில்லை; புரட்சியை ஏற்படுத்தவில்லை. ஆங்கிலேய வருகையும் - அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியும், தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்கிற வெறியும்தான் முகலாய ஆட்சிக்கு முடிவுரை எழுதியது. இந்த வரலாற்றை தற்போதைய லிபியாவுடன் பொருத்திப் பார்க்கலாம்.

லிபியாவில் ஒரு ரொட்டியின் விலை 0.15 அமெரிக்க செண்ட். இந்திய மதிப்பில் வெறும் 68 பைசா. அங்கே சொந்த வீடு இல்லாத குடும்பமே இல்லை. தெருவில் வசிப்பவர்கள் இல்லை. வங்கிகளில் கடன் வாங்கினால் வட்டி இல்லை. கடனை நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொண்டு திருப்பிச் செலுத்தலாம்.

புதிதாக திருமணம் செய்து கொள்ளும் லிபியர்களுக்கு 50 ஆயிரம் டாலர்களும், ஒரு வீடும் அன்பளிப்பாக கிடைக்கும். கல்விக்கேற்ற ஊதியம் மாணவர்களுக்கு வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்வரை மாதந்தோறும் ஊக்கத் தொகை. வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் மாணவர்களுக்கு 2500 யூரோ, தங்குமிட வசதி, கார் வாங்கிக் கொள்ள தொகை கொடுக்கப்படும்.

லிபியா நாட்டுத் தயாரிப்பில் உருவாகும் வாகனங்கள் தயாரிப்பு விலைக்கே கொடுக்கப்படும்; வரி கிடையாது. உலக நிதி அமைப்புகளிடமிருந்து கடன் பெறாத நாடு லிபியா. உலகின் வளர்ந்த நாடுகளில் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை போட்டு வைத்திருக்கிறது லிபியா. குடிமக்களுக்கு தரமான கல்வி - மருத்துவ வசதி இலவசம்.

வருடந்தோறும் போடும் பட்ஜெட்டுகளில் உபரியாக பட்ஜெட்டை வைத்திருக்கும் உல கின் ஒரே நாடு. மக்கள் தொகை 65 லட்சம் தான். ஆனால் வெளிநாட்டினருக்கு அதிக வேலை வாய்ப்பு தரும் நாடு. இந்நாட்டோடு அமெரிக்காவை ஒப்பிட்டால் வறுமையில் வாடுவோர் அமெ ரிக்காவில் பல மடங்கு அதிகம்.

இந்த விபரங்கள் எல்லாம் உலகின் சுதந்திரமான பன்னாட்டு ஆய்வு நிறுவனங்கள் லிபியா பற்றி எடுத்திருக்கும் புள்ளி விபரங்களின் ஆய்வு. இப்படி நம்புவதற்கே ஆச்சரியமாக உள்ள - குடிமக்களை மகிழ்ச்சியாக வைத்துள்ள ஒரு நாட்டின் அதிபருக்கு எதிராக கிளர்ச்சி ஏன்?

நாற்பதாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வருகிறார் அதிபர் முஅம்மர் கடாஃபி. அங்கு ஒடுக்குமுறை- மக்கள் விரோதப் போக்கு என்பது போன்ற செய்திகள் கடந்த மார்ச் மாதம் வரை ஊடகங்களில் வெளிவந்ததில்லை.

டுனீசியா, எகிப்து மக்கள் புரட்சியைத் தொடர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் திரைமரைவில் உருவாக்கப்பட்ட லிபிய கலகத்திற்குப் பின்தான் லிபியாவைப் பற்றி ஊடகங்கள் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடத் துவங்கின.

அமெரிக்க ஏகாதிபத்திய மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் நேட்டோ அமைப்பிற்கு லிபியா மீது பெரும் அதிருப்தி இருந்து வந்தது. தங்களின் கட்டுப்பாட்டிற்கும் உடன்பட லிபியா மறுத்து வருகிறது என்கிற கோபம் இருந் தது.

இந்த கோபத்தை சரியாக அவை பயன்படுத்தின. டுனிஷியாவிலும், அமெரிக்காவின் கூட்டாளியான எகிப்திலும் இயல்பாகவே - மக்களின் கோபக் கனலால் உருவான மக்கள் புரட்சியைத் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டு - லிபியாவையும் பதம் பார்க்கத் துவங்கின அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும்.

ஒரு நாடு நல்லாட்சியைத் தந்தாலும், அந்நாடு தான் போடும் சட்டங்களுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் இணங்க மறுத்தால் அதை அகற்றி விட்டு, அங்கே தான் விரும்பும் பொம்மை அரசை நிறுவுவது அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் பணி. இதனை கச்சிதமாக லிபியாவில் அவை செய்து கொண்டி ருக்கின்றன. இதனால்தான் லிபியாவில் தகுந்த காரணமின்றி அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் குண்டு மழை பொழிந்து வல்லாதிக்க பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு வரு கின்றன.

லிபிய உள்நாட்டு பிரச்சினையில் அமெரிக்க நேட்டோ படைகள் மூக்கை நுழைக்க வேண்டிய தேவையென்ன?

ஐ.நா. மன்றத்தில் சர்வதேச தலைவர்கள் பங்கு கொள்ளும் மாநாடுகளின்போது அமெரிக்காவின் தவறான வெளியுறவுக் கொள்கைகளையும், அடாவடித்தனத்தையும் - அதற்கு ஐக்கிய நாடுகள் சபை அனுசரித்து போவதையும் தயவு தாட்சண்யம் இல்லாமல் விமர்சனம் செய்பவர் முஅம்மர் கடாஃபி.

அவர் கடைசியாக, கடந்த வருடம் கலந்து கொண்ட ஐ.நா. நிகழ்ச்சியின்போது ஐ.நா. அமைப்பை ‘அயோக்கியர்களின் சபை' என முழங்கியவர். இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்கப் பிரதிநிதிகள் அப்போது வெளிநடப்பு செய்த னர். இதுபோன்ற காரணங்கள் தான் லிபியாவின் மீதான நேட்டோ படைகளின் அடாவடித்தனங்களை ஐ.நா.வை வேடி க்கை பார்க்க வைத்திருக்கிறது.

லிபியாவில் மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதாக நேட்டோ நாடுகள் புலம்புகின்றன. ஆனால் கடாஃபிக்கு எதி ரான ஆர்ப்பாட்டத்தை ஒடுக்குவதில் சில ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டிருந்தாலும் அங்கே மனித உரிமை நிலை பிரகாசமாகவே இருக்கிறது என்று ஐ.நா. வின் மனித உரிமை அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டு விட்டு ஒப்புக் கொள்கிறார்.

அதே சமயம், ஐ.நா.வின் மனித உரிமை ஆணைய அறிக்கை, கல்வி மேம்பாட்டிலும், மனித உரிமைக்கு அரசமைப்பு ரீதியாக முன்னுரிமை அளிப்பதிலும் லிபியா முதலிடத்தில் தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

இலங்கையிலே தமிழர்களை கொன்று குவி த்து, தமிழச்சிகளின் மார்பகங்களை அறுத்தெறிந்து மனித உரிமை மீறலின் உச்சத்திற்கு சென்று விட்ட இலங்கை அரசின் ரோமத்தை கூட பிடுங்க முடி யாத அமெரிக்க நேட்டோ -ஐ.நா. வகையறாக்கள் லிபியா மீது மனித உரிமை மீறல் என்று சொல்லிக் கொண்டு வெறிநாய் போல் பாய வேண்டிய அவசியம் என்ன வந்தது?

நடப்பு நிலவரத்தில் எந்த ஒரு நாடும் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தை ஒடுக்குவதற்கு பலப்பிரயோகத்தைத்தான் பயன்படுத்துகின்றன. மயிலிறகால் வருடும் வகையில் மென்மையாகவோ, ஜனநாயக வழிமுறைகளின் அடிப்படையிலோ கலகத்தை ஒடுக்க முற்படுவதில்லை. இந்த வழிமுறையைக் கடைபிடிக்கும் ஒரு நாட்டை உலக வரைபடத்தில் காண முடியாது. பிறகென்ன லிபியாவிற்கு மட்டும் தனி அளவுகோலை வைத்து தாண்டிக் குதிக்கின்றன நோட்டோவும், ஐ.நா.வும்!

லிபியாவிற்கு எதிரான இந்த தாக்குதல் அமெரிக்காவினால் திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்று அமெரிக்க பத்திரிகையாளர்களான எட்மண்ட் எல் ஆண்ட்ரூஸ், கிளிஃப்போர்ட் மார்க்ஸ் ஆகியோர் நேஷ்னல் ஜோர்னல் இதழில் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் லிபியாவின் பங்கு என்பது வெறும் 2 சதவீதம்தான். ஆனாலும் மற்ற நாட்டு கச்சா எண்ணெயைவிட லிபிய நாட்டு கச்சா எண்ணெய் தரம் வாய்ந்தது. அதனால் சர்வதேச சந்தையில் இதற்கு மவுசு அதிகம்; விலையும் அதிகம்.

கச்சா எண்ணெய் ஏற்றுமதியின் மூலம் வரும் வருவாயை லிபியா மிகத் தாராளமாக தன் மக்களுக்கு வாரியிறைத்துள்ளது. ஐ.நா.வின் புள்ளி விபரங்களே இதனை மெய்ப்பிக்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளிலேயே மனித வள மேம்பாட்டுக் குறியீட்டில் முதல் நிலையில் இருப்பதும் லிபியாதான்.

"உலக வங்கி உள்ளிட்ட அனைத்து உலக நிதி நிறுவனங்களுக்கும் ஒரு சவாலாக லிபியாவின் மைய வங்கி எழுந்து நிற்கிறது. இந்தியாவின் ரிசர்வ் வங்கியைப் போன்றது லிபியாவின் இந்த மைய வங்கி. இந்த வங்கி 100 சதவீதம் அந்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது அவ்வங்கி தனது நாட்டிற்கென லிபிய தினார் என்கிற தனித்த நாணயத்தை உருவாக்கியுள்ளது. தனது பொருளாதாரத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் தன்நிறைவோடு லிபியா திகழ்கி றது.

இனி லிபியாவின் தீனார்கள் வழியாகவே உலக வங்கிகூட வணிகம் செய்ய முடியும் என்ற நிலையை இதன் மூலம் உருவாக்கியுள்ளது லிபியா.

சந்தை மட்டத்தில் லிபிய வங்கியை பின்வாங்கச் செய்ய இயலாத காரணத்தால் தங்களுடைய தேவைகளுக்கேற்ப செயல்படும் நாடுகளின் பட்டியலுக்குள் லிபியாவையும் கொண்டு வந்து விட வேண்டும் என்கிற திட்டம் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ளது...'' என்று ‘மார்க்கெட் ஓராகிள்ஸ்' எனும் வணிக இதழில் எழுதியுள்ளார் அமெரிக்கப் பத்திரிகையாளரான பேட்ரிக் ஹெம்மிங்சன் என்பவர்.

பொருளாதார ரீதியாக லிபியாவை பின்னோக்கி இழுத்துச் செல்ல வேண்டும் என்கிற நோக்கில்தான் வெளிநாடுகளில் லிபியா போட்டு வைத்துள்ள பல நூறு பில்லியன் டாலர்களைக் கொண்ட கணக்குகளை முடக்கி வைத்துள்ளன நேட்டோ நாடுகள்.

ஓநாய்கள் சூழ்ந்து கொண்டு ஆட்டை குதறுவதைப்போல் லிபியாவைக் குதறிக் கொண்டிருக்கின்றன நேட்டோ ஓநாய்கள். இதனை ஐ.நா. எனும் பிணந்திண்ணிக் கழுகும் மேலே அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

- ஃபைஸல்