காஷ்மீரில் தொடர்ந்து நீடிக்கும் பதட்டம், அமைதியை விரும்பும் மக்கள் அனைவரையும் கவலை கொள்ள வைப்பதாக உள்ளது. காஷ்மீர் கலவரங்களின் அடிப்படைக் காரணமாக இருப்பது அம்மக்கள் வெறுக்கும் ராணுவத்தினரின் அடாவடிகளும், அதிகார துஷ்பிரயோக‌ங்களும்தான் என்பதை இந்திய அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டு துணை ராணுவத்தினரால் துப்பாக்கிச் சூட்டில் காயம்பட்ட இளைஞன் கடந்த 9ந் தேதி இறந்து விட்டதைத் தொடர்ந்து பொது மக்கள் மீண்டும் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் எனக் கிளம்ப - மறுபடியும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அங்கே இயல்பு வாழ்க்கை திரும்ப, அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை என்ற பெயரில் நேரத்தை வீணடித்து வருகிறது மத்திய அரசு.

காஷ்மீர் எதிர் கட்சிகளும், பொது மக்களும் துணை ராணுவப் படையினரை திரும்பப் பெற வேண்டும். ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள தனிச் சிறப்பு சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும், அப்பாவி மக்களை படுகொலை செய்த ராணுவ அதிகாரிகள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை உள்வாங்காமல் வழக்கமாக பாகிஸ்தானுடன் நடத்தும் பேச்சு வார்த்தைகளைப் போலவே காஷ்மீர் விஷயத்தையும் அணுகுகிறது மத்திய அரசு.

காஷ்மீர் மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக இருக்கும் ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஜிலானியை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங், ஆனால் ராணுவத்தை வாபஸ் பெற்றால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என நெற்றிப் பொட்டில் அறைந்தாற் போல் பதில் சொல்லி காஷ்மீர் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார் ஜிலானி.

காஷ்மீர் நிர்வாகம் முதல்வர் உமர் அப்துல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை காஷ்மீரில் நிலை கொண்டுள்ள மத்திய ரிசர்வ் படையினரும், துணை ராணுவத்தினரும் அதிகார துஷ்பிரயோகம் மூலம் நிரூபித்து வருகின்றனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவப் படையினர் நடத்தி வரும் மனிதப் படுகொலைகளை தடுத்து நிறுத்தாமல், அதனை கட்டுக்குள் கொண்டு வராமல் பேச்சுவார்த்தை எனப் பிதற்றுவதன் மூலம் மத்திய அரசுக்கு உண்மையாகவே காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியை ஏற்படுத்தும் எண்ணம் இல்லை என்பதையும், காஷ்மீர் பகுதியை ராணுவ மயமாக்க அது விரும்புகிறது என்பதையுமே காட்டுகிறது.

தங்களது குடும்பத்தினர், ரத்த உறவுகள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்படுவதை பார்க்கும் எவரும் போராட்டத்தை நோக்கித்தான் தள்ளப்படுவர். இதுதான் காஷ்மீரில் நிதர்சனமாக நடந்து வருகிறது. ஆனால் காஷ்மீர் மக்கள் அமைதியை விரும்பாதவர்களாகவும், இந்திய அரசுக்கு எதிரானவர்களாகவும், வன்முறையாளர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.

காஷ்மீரில் நிலவி வரும் மனித உரிமை மீறல்களும், நீதி நிலைமைகளும் குறித்து சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

நவம்பர் 2006க்கும் 2009க்கும் இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் தீர்ப்பாயம் நடத்திய ஆய்வில், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியின் பண்டிபூரா, பாரமுல்லா, குப்வாரோ ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 52 கிராமங்களில் அடையாளம் காணப்படாத 2943க்கும் அதிகமான சடலங்களைக் கொண்ட புதைகுழிகள் இருப்பதாக சுட்டிக் காட்டுகிறது.

நீதிக்குப் புறம்பாகவும், ஒருதலைப்பட்சமாகவும், முகாந்திரம் ஏதுமின்றியும் ராணுவத்தினராலும், துணை ராணுவப் படையினராலும் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களின் சடலங்கள் இப்புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருப்பதை தீர்ப்பாயம் ஆவணப்படுத்துகிறது.

மேற்சொன்ன மூன்று மாவட்டங்களிலுள்ள 2373 புதைகுழிகளில் இரண்டுக்கும் மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும், இவற்றில் 23 புதைகுழிகளில் 3லிருந்து 17 வரையிலான சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் கூறும் தீர்ப்பாயம், திரளான சடலங்கள் அடங்கிய புதைகுழி என்பதே தண்டனை ஏதுமின்றி கொலைகளை செய்வதை நோக்கமாகக் கொண்டது என்பதோடு, ஒன்றுக்கு மேற்பட்டவர்களை கொலை செய்வதையும் கொலை செய்யப்படடவர்களின் எண்ணிக்கையை மறைத்து மோசடி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது எனச் சுட்டிக் காட்டுகிறது.

அப்படி என்றால் இந்திய ராணுவமும், துணை ராணுவப் படையும் சேர்ந்து கொண்டு கொத்துக் கொத்தாக செய்த கொலைகளை ஒட்டுமொத்தமாகப் புதைப்பதற்கு பரந்த வெளிகளைத் தேடிப் பிடித்து புதைகுழிகளை உருவாக்கியுள்ளது என்பதற்கு பாரமுல்லா, பண்டிபூரா, குப்வாரோ மாவட்டங்கள் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது.

இந்திய ராணுவமும், காஷ்மீர் காவல்துறையும் இப்புதை குழிகளில் புதைக்கப்பட்டு அடையாளம் தெரியாத சடலங்கள் யாவும் அயல் நாட்டுத் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று வழக்கமாக சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆயுதப் பயிற்சி பெற பாகிஸ்தானுக்குள் புக முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அவர்கள் என கதை கட்டி வருகிறது ராணுவம்.

இதுபோன்று கொடுமைகளை தினமும் சந்தித்து வரும் காஷ்மீர் மக்கள், ஜனநாயக ரீதியில் நிதிகேட்டு வீதிகளில் இறங்கிப் போராடுவதற்கு காஷ்மீர் அரசு தடை விதிப்பதும், துணை ராணுவம் கூட்டத்தைக் கலைப்பதாகக் கூறி பொது மக்களைச் சுட்டுக் கொல்வதும் தொடரும் நிலையில் காஷ்மீரில் பதட்டம் எப்படித் தணியும்?

காஷ்மீர் மாநிலம் - காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக் என மூன்று பிராந்தியங்களாக உள்ளது. இவற்றில் ஜம்முவில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், லடாக்கில் புத்த மதத்தினர் பெரும்பான்மையினராகவும் பள்ளத்தாக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராகவும் உள்ளனர். ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு மட்டும் ராணுவத்தால் குறி வைக்கப்படுவதற்கு என்ன காரணம்? பள்ளத்தாக்கில் மட்டும் ஏன் இந்த பதட்டம்?

காஷ்மீரும் தனது நிர்வாகத்தின் கீழ் தான் இருக்கிறது என உண்மையிலேயே இந்திய அரசு நம்புமேயானால் - இல்லாத ஊருக்குப் போகாத வழியைத் தேடும் பேச்சுவார்த்தை என்கிற நாடகத்தை அரங்கேற்றுவதை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமான தீர்வை நோக்கி நகர வேண்டும்.

காஷ்மீரில் உள்ள 667000 ராணுவ, துணை ராணுவப் படையினரை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். காஷ்மீர் சட்டம் ஒழுங்கை அம்மாநில காவல்துறையிடம் விட்டுவிட வேண்டும். ராணுவப் படையினருக்கான சிறப்புச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும். அப்பாவி மக்களை படுகொலை செய்த ராணுவ அதிகாரிகளைத் தேடிப் பிடித்து தண்டிக்க வேண்டும். இவை காஷ்மீர் மக்களின் நியாயமான கோரிக்கைகளே! இவைதான் அம்மக்களை அமைதிப்படுத்தும்.

- அபு