பாஜக கட்சி கடைபிடிக்கும் இந்துத்துவா கொள்கையால் அக்கட்சியின் மீது நடுநிலையாளர்களும், சிறுபான்மையினரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதன் காரணமாக ராஜஸ்தான், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்தது பாஜக.

ஒரிசா போன்ற மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகள் தேர்தலின் போது பாஜகவை கழட்டி விட்டு விட்டன. விரைவில் வரவிருக்கின்ற பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் இந்நிலை நீடிக்கும் என்று எதிர்பார்த்து கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் பாஜகவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

சில நாட்களுக்கு முன் பீகாரில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக குஜராத் அரசு நிதி உதவி வழங்கியது. இது தொடர்பான விளம்பரங்கள் பீகார் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. அந்த விளம்பரப் படங்களில் பீகார் முதல் நிதீஷ் குமார் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் சேர்ந்து இருப்பது போன்ற படங்கள் வெளியிடப்பட்டன.

இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த நிதீஷ்குமார் குஜராத் அரசு கொடுத்த நிதியை திருப்பி அனுப்பினார். இதனால் கூட்டணி உடைந்து பீகார் ஆட்சி கலையும் நிலை உருவானது.

ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவின் முயற்சிகளால் கூட்டணி உடைவது தடுக்கப்பட்டு ஆட்சி கவிழாமல் காப்பாற்றப்பட்டது. வரவிருக்கின்ற பீகார் சட்டமன்றத் தேர்தல் குறித்த முடிவுகளை எடுப்பதற்காக ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழு புது தில்லியில் 2 நாட்கள் நடைபெற்றது.

தேசிய செயற்குழு முடிந்தவுடன் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் சரத் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "சென்ற தேர்தலில் பாஜகவிற்கு பங்கீடு செய்யப்பட்ட தொகுதிகள் தான் இந்தத் தேர்தலிலும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்திற்கு நரேந்திர மோடி அழைக்கப்படுவாரா என்ற கேள்விக்கு, "பிரச்சாரம் செய்வது தொடர்பாக பழைய ஒப்பந்தமே தொடரும்" என்று தெரிவித்தார்.

சென்ற சட்டமன்றத் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற மக்களைத் தேர்தலிலும் பீகாரில் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்யவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

வாஜ்பாயும், அத்வானியும் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் நரேந்திர மோடியை தேசியத் தலைவராகக் காட்ட பாஜக கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பீகார் பிரச்சாரத்திற்கு மோடி வரக் கூடாது என்று பழைய ஒப்பந்தத்தைக் காட்டி ஜனதா தளம் கூறியிருப்பது பாஜகவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கூட்டணிக்கு இணக்கமான தலைவர் என்று அடையாளம் காணப்பட்ட சரத்யாதவே இப்படிக் கூறியிருப்பது அக்கட்சித் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாது செய்தியாளர் கூட்டத்தில் சரத் யாதவ்விடம் "பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருண் காந்தி வருவாரா" என்று கேட்டபோது யார் இந்த வருண் காந்தி என்று நக்கல் அடித்திருப்பது பாஜகவினர் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் புறக்கணித்துள்ள நிலையில் கூட்டணி கட்சிகளும் பாஜகவை உதாசீனம் செய்வது கண்டு பாஜக தலைவர்கள் ஆட்டம் கண்டுள்ளனர். பாஜக கடைபிடிக்கும் இந்துத்துவா கொள்கைதான் தங்களை இந்நிலைக்குத் தள்ளியுள்ளது என்பதை கூட்டணி ஆட்சியினர் உணர்ந்து அதிலிருந்து மீளாதவரை பாஜகவுக்கு இந்த நிலை தொடரும் என்பது உண்மையானது மட்டுமல்ல, மாற்ற முடியாததும் கூட!

- அபு லியாகத்