சில வாரங்களுக்கு முன் காஷ்மீரில் ஏற்பட்ட கலவரத்தின் சூடு தணிவதற்குள் அங்கே மீண்டும் பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறது கலவரத் தீ. கடந்த 30ந் தேதி ஹுரியத் அமைப்பின் சார்பில் காஷ்மீர் அரசின் மக்கள் விரோதப் போக்கையும், துணை ராணுவப் படையை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியும் ஊர்வலம் நடத்த ஏற்பாடாகியிருந்தது. இந்த ஊர் வலத்திற்கு காஷ்மீர் அரசு தடை விதித்தது. அதோடு, தடை உத்தரவு அமலில் இருப்பதால் ஊர்வலம் செல்ல முடியாது என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

ஆக்ரோஷமான கோஷங்களை எழுப்பியவாறே முன்னேறிய ஊர்வலத்தினர், தடையை மீறி ஊர்வலம் செல்ல முயல.. தடியைச் சுழற்றியது பாதுகாப்புப் படை. தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகளை பெயரளவில் பயன்படுத்திய பாதுகாப்புப் படையினர், வழக்கம் போல துப்பாக்கி சூடு நடத்தியதால் முஹம்மது இக்பால் என்ற இளைஞரின் கழுத்தில் குண்டு பாய்ந்து கவலைக்கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நவுகஸம் என்ற பகுதியில் ஊர்வலம் செல்ல முயன்றவர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் மீது குண்டுகள் பாய்ந்து அவர்களது நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதால், கலவரம் தீயெனப் பரவி காஷ்மீர் பள்ளத்தாக்கில் சூட்டைக் கிளப்பியுள்ளது. இப்படி காஷ்மீரின் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 25 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். பாதுகாப்புப் படையினரின் வெறித்தனமான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வரும் பொது மக்கள் ஆயுதம் தாங்கியுள்ள பாதுகாப்புப் படையினரை நோக்கி சரமாரியாக கற்களை வீசித் தாக்கி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன் நடந்த காஷ்மீர் கலவரத்தின் மூலம் மத்திய அரசும், காஷ்மீர் அரசும் பாடம் படித்ததாகத் தெரியவில்லை. 

கலவரம் உச்சநிலையை அடையும்போது கலவரப் பகுதிகளுக்கு சென்று பார்வையிடுவதும், அப்போதைக்கு மக்களை சமாதானப்படுத்தும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளைப் போல அந்த சட்டம் மாற்றி அமைக்கப்படும், இந்தச் சட்டம் திருத்தி அமைக்கப்படும், பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அறிக்கை வெளியிடுவதையே வழக்கமாக வைத்துள்ளனர் காஷ்மீர் முதல்வரும், மத்திய அமைச்சர்களும்.

அன்றாட வாழ்க்கையை போராட்டத்தினூடே கழிக்கும் காஷ்மீர் மக்களோ எதையும் மறந்துவிடும் நிலையில் இல்லை. அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்காமல் அரசுகள் கிலுகிலுப்பை காட்டுகிறார்கள் என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். காஷ்மீரைப் பொறுத்தவரை துணை ராணுவத்தினரின் அத்துமீறல்கள் நின்றபாடில்லை. உண்மையைச் சொல்லப் போனால் துணை ராணுவப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தும் சூழ்நிலை வரும் பொழுது, எந்த விதமான ஒழுங்கு முறைகளையும் பின்பற்றுவதில்லை. 

போர் சூழலில் எதிரிகளை சுட்டுக் கொல்வதற்கும் அல்லது பயங்கரவாதிகளோடு நேருக்கு நேர் நிகழும் மோதலின்போது அவர்களைச் சுட்டுக் கொல்வதற்கும் - அப்பாவி பொது மக்கள் கலவரத்தில் ஈடுபடும்போது அவர்களை கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு.

கூட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தும்போது முதலில் வானத்தை நோக்கிச் சுட வேண்டும் என்ற விதி - கலவரக்காரர்களை அச்சத்திற்குள்ளாக்கி அவர்களை கலைந்து போகச் செல்வதற்குத் தான்! கடைசி நிமிடம் வரை தம் கண் முன் இருப்பவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. பொது மக்கள் என்கிற சிந்தனை ராணுவத்தினர் மத்தியில் இருக்க வேண்டும். எல்லையைக் காப்பது மட்டும் தியாகம் இல்லை. கலவரச் சூழலில் மனிதாபிமானத்தோடு செயல்படுவதும் ஒரு வகைத் தியாகமே!

ஆனால் காஷ்மீரில் நிலை கொண்டுள்ள துணை ராணுவத்தினர் பெரும்பாலும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் காஷ்மீர் மக்களை பாகிஸ்தான் ஏஜென்டுகளாகவும், பிரிவினைவாதிகளாகவும், ஜிஹாத் என்ற பெயரில் யார் மீதும் தாக்குதல் நடத்துபவர்களாகவுமே பார்க்கிறார்கள். இந்தப் பார்வை தான் கலவரச் சூழல்களில் வெளிப்படுகிறது என்பது முக்கியமான காரணம். ராணுவத்தினருக்கு மனிதாபிமானத்தைப் போதிக்க வேண்டும். மனித உரிமை அமைப்புகளைக் கொண்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

கலவரம் இல்லாத அமைதியான காஷ்மீரைக் காண வேண்டும் என்றால், உடனடியாக துணை ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரத்தை ரத்துச் செய்து மாநில காவல்துறையிடம் கூடுதல் அதிகாரங்கள் சிறப்புச் சட்டங்கள் மூலம் இயற்றப்பட்டு வழங்கப்பட வேண்டும். அடுத்து, காஷ்மீரில் ஜனநாயகத் தன்மை இல்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. காஷ்மீரின் எதிர்க் கட்சிகளோ, சமுக அமைப்புகளோ ஒரு சம்பவத்தைக் கண்டித்து பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தவோ, காவல் நிலையம் சென்று புகார் மனு அளிப்பதற்கு ஊர்வலமாக செல்வதையோ தொடர்ந்து தடை செய்து வருகிறது காஷ்மீர் அரசு.

பாதிக்கப்படும் மக்கள் தங்களது கோபத்தை, கொந்தளிப்பை, வெளிப்படுத்த நியாயம் கேட்டுப் போராட அறப் போராட்டங்களையும், ஜனநாயக வழியில் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்த அரசியல் சாசனம் அனுமதிக்கிறது. அதற்கு அரசாங்கம் தடை செய்வது சட்ட விரோதம், ஜனநாயக உரிமை மறுப்பு என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், ஒரு அடிப்படை விஷயத்தை இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.

தங்களது உரிமைக்காகவோ, நியாயம் கேட்டோ மக்கள் ஜனநாயக போராட்டத்தைத் தேர்ந்தெடுக்கும்போது பொது நலன் கருதி சில நிபந்தனைகளோடு கூடிய அனுமதியை வழங்க வேண்டும். மக்களின் ஆற்றாமை, கோப உணர்வுகளுக்கு இந்த அனுமதி வடிகாலாக அமையும், இதை விடுத்து மக்கள் போராட்டங்களை நசுக்க அடக்குமுறைகளையும், அதிகார பலத்தையும் பிரயோகித்தால் மக்கள் போராட்டம் வேறு திசையின் பக்கம்தான் மாறும். அதற்கான நிதர்சன சான்றுகளைத்தான் காஷ்மீர் கலவரங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நமது அரசாங்கமோ எப்போதும் தும்பை விட்டு வாலைப் பிடிப்பதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறது.

- ஃபைஸ்