கடந்த வாரம் டெல்லியில் டி.ஜி.பிக்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் தில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் “நாட்டில் தற்போது காவி பயங்கரவாதம் மிகுந்த அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது. நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்கள் அனைத்தும் காவி பயங்கரவாதம் காரணமாக இருந்துள்ளது. இதனை தடுத்து நிறுத்தவும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது'' என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

உள்துறை அமைச்சரின் பேச்சு மீடியாக்களில் வெளியான மறுகனமே துள்ளிக் குதிக்கத் துவங்கிவிட்டனர் காவி பயங்கரவாதிகள். உண்மையைச் சொன்ன உள்துறை மத்திரியை கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கின்றனர்.

காவி பயங்கரவாதிகளின் திரைமறைவு திட்டத்தை, அவர்கள் நிகழ்த்தும் பயங்கரவாதத்தை சுட்டிக்காட்டிய ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று பி.ஜே.பி, சிவசேனா உள்ளிட்ட காவிக் கட்சிகள் கொடி பிடிக்கின்றன.

ப.சிதம்ரபம் பதவி விலக வேண்டும் என்ற காவிக் கும்பலின் வாதத்திற்கு சாட்டையடியாக பதிலளித்திருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி. அவர் வெளியிட்டிருக்கிற அறிக்கையில் “உள்துறை அமைச்சர் காவி பயங்கரவாதம் என்று சுட்டிக் காட்டியவுடன் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் அரசியல் வடிவமான பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸின் சுற்றுகோளான சிவசேனா போன்ற கட்சிகளுக்கு ஆத்திரம் பொங்கி, பொத்துக்கொண்டு வருவானேன்?

பாபர் மசூதி இடிப்பு முதல் மாலேகான் குண்டு வெடிப்பு வரை ரணுவத்திற்கு சப்பை செய்யப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள், துப்பாக்கிகளைக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் ஸின் வார்ப்பான அபினவ் பாரத் என்ற பயங்கரவாத அமைப்பினர் காவி உடையனிந்து பயங்கரவதத்தில் ஈடுபட்டது உலகறியும் உண்மையாயிற்றே.

காவி பயங்கரவாதிகள் மீது போடப்பட்ட வழக்குகள் இன்னும் இருக்கின்றன. நீதிபதி லிபராஹான் கமிஷனின் அறிக்கையை ஆளும் காங்கிரஸ் கூட்டணி ஊறுகாய் ஜாடியில் போட்டு வைத்திருப்பதால் பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளும் தைரியம் பெற்று இப்படி கொக்கரிக்கின்றன. மத்திய அமைச்சர் உண்மையைக் கூறியதால் அவர் பதவி விலக வேண்டுமா? இப்படிச் சொல்ல குற்றவாளிகள் பட்டியலில், வழக்கு மன்றத்தில் உள்ள இவர்களுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது'' என்று காட்டமாக பதிலளித்துள்ளார் வீரமணி.

தி.க. தலைவர் வீரமணியின் கூற்று மிகைப்படுத்தல் அல்ல, யதார்த்தத்தைப் பிரதிபலித்திருக்கிறார் வீரமணி.

ஆர்.எஸ்.எஸ்ஸின் சதித் திட்டங்களையும் அவர்களது இயக்கத்தையும் நுட்பமாக தெரிந்து வைத்திருப்பவர்கள் தான் தி.க.வினர் அதனால்தான் உண்மையை அவர்களால் உரத்துச் சொல்ல முடிகிறது.

காவி பயங்கரவாதம் என்று மத்திய அமைச்சர் பேசியிருப்பதில் தவறென்ன? மாலேகான், நான்டென், கோவா புனே, ஜர்டன் பேக்கரி குண்டு வெடிப்புகள் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்புகள் ஆகியவற்றில் காவிகளின் கை படிந்திருப்பதை விசாரணை அமைப்புகள் ஊர்ஜிதப்படுத்தியிருக்கின்றன. வழக்கு மன்றங்களிலும் இவர்களது பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. 

நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் வகையில் காவி பயங்கரவாதிகளின் முக்கியத் தலைவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்படும் போதல்லாம் அரசியல் பேரம் பேசும் பி.ஜே.பி வகையறாக்களுக்கு உண்மையைச் சொன்ன மத்திய உள்துறை அமைச்சரை பதவி விலகச் சொல்லும் அதிகாரம் ஏது? 

குஜராத்தில் ஆயிரக்கணக்கில் முஸ்லிம் இனப்படுகொலை நடந்தபோது இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு உலக நாடுகளுக்கு செல்வேன் என வாஜ்பாய் அரற்றினாரே.. அப்போது குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என உலகமே ஒருமித்த குரல் எழுப்பிய வேளையில் நரேந்திர மோடி அரசை கலைத்திருக்க வேண்டாமா இந்த தேசியவாதிகள்? அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி பதவி விலக வேண்டும் என்று சிவசேனா குரல் எழுப்பியதா? அதன் தலைவர் தனது பத்திரிக்கையில் தலையங்கமாவது எழுதினாரா?

இதுபோன்ற கேடுகெட்ட வரலாற்றுக்குச் சொந்தக்கரர்களான காவி கும்பலின் ஜனநாயக விரோத, தேசிய ஒற்றுமைகெதிரான பயங்கரவாதச் செயல்களை காவி பயங்கரவாதம் என்ற அடையாள மிட்டு அழைப்பதில் தவறேதும் உண்டா?

 - அபு

Pin It