உலகமயம், தாராளமயம், தனியார்மயக் கொள்கைகள் இந்தியாவில் கடும் நெருக்கடிகளை சந்தித்துள்ளது. உலகப் பொதுநெருக்கடியும் இதனுடன் இணைந்துள்ளது. இதன் சுமைகள் மக்கள்மீது மிகவும் அழுத்திக் கொண்டிருக்கிறது. இச்சுமைகளின் காரணமாக மக்களின் போராட்டங்கள் நாடெங்கிலும் ஆயிரக்கணக்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இச்சூழலிலேயே பழையமுறையில் இந்த முதலாளித்துவ அதிகார வடிவம் தொடர முடியாத சூழல் நிலவுகிறது. நெருக்கடிகளை திசைதிருப்பவும் மக்களின் போராட்டங்களை ஒடுக்கவும் புதிய வடிவம் தேவைப்படுகிறது. எனவே பாசிச வடிவம் தேவைப்படுகிறது.

“தோழர்களே! கம்யூனிஸ்ட் அகிலத்தின் நிர்வாகக் குழுவின் பதிமூன்றாவது விரிவடைந்த கூட்டம் மிகவும் சரியாகக் கூறுவதைப் போல பாசிசம் அதிகாரத்தில் இருப்பது என்பது நிதி மூலதனத்தின் ஆகப் படுமோசமான, பிற்போக்கான, ஆக அதிகமான ஆதிக்க இனவெறி கொண்ட, ஆகப்படுமோசமாக ஏகாதிபத்திய நபர்களின் பகிரங்கமான பயங்கர தன்மை கொண்ட சர்வாதிகாரமாகும். -டிமிட்ரோ

வளரும் ஏகாதிபத்தியமான இந்திய நிதிமூலதனம் மற்றும் இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிதிமூலதனங்களின் நலனிலிருந்தே பாசிசம் முன்னுக்கு வருகிறது. பழைய தரகு ஏஜெண்டான காங்கிரசு கட்சி மக்கள் செல்வாக்கை இழந்துள்ள நிலையில் காவி இந்துத்துவ பாசிச கட்சியான பி.ஜே.பி. தன்னை ஆளும்வர்க்க விசுவாசமிக்க ஏஜெண்டாக முன்னிறுத்திக் கொண்டது.

நவீன பார்ப்பனீயம் என்பது இந்தி, இந்து, இந்தியா என்ற மூன்று கூறுகளைக் கொண்டதாகும். இதில் இந்தி, இந்தியா என்ற கூறுகள் ஒரு போலியான இந்திய தேசியத்தை கட்டமைக்க முயல்வதாகும். இந்துத்துவா என்பது பண்டைய பிராமணீயத்தின் வர்ணக்கோட்பாட்டையும் இடைக்கால பிராமணீயத்தின் சாதிய நிலவுடைமையையும் பெண்ணடிமைத்தனத்தையும் மூடப்பழக்க வழக்கங்களையும் உட்கூறுகளாகக் கொண்டது.

இந்துமதம் என்பது பிரிட்டிசாரின் பதிவுக் குறிப்பிற்காக கொண்டுவரப்பட்டது. இதற்குமுன் இந்துமதம் என்ற ஒன்று கிடையாது. இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள் தவிர அனைவரையும் இந்துக்கள் என்று பிரிட்டிசார் குறிப்பிட்டனர். அதுதான் இன்று வரை வழக்கத்தில் உள்ளது.

தமிழகத்தில் சைவ, வைணவ மற்றும் அதிகமாக சிறுதெய்வ வழிபாடுமே உள்ளது. இவைகளே இந்துக்களாக அடையாளம் காணப்படுகிறது.

பிரிட்டீஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கட்டத்தில் இந்துத்துவா பயங்கரவாதிகளான ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடாமல் மதத்தை முன்னிறுத்தி கலவரங்களை உண்டுபண்ணியது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது பெரும் கலவரங்களை உருவாக்கியது. இக்கலவரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

அதன் அரசியல் பிரிவாக தொடங்கப்பட்ட பாரதீய ஜனசங்கம் என்ற இந்துத்துவா கும்பல் 1980இல் பாரதீய ஜனதா என்ற அரசியல் கட்சியாக செயல்படத்துவங்கியது. கோவிந்தாச்சார்யா திட்டத்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள் கணிசமான அளவில் அணிதிரட்டப்பட்டனர்.

பின்னர், பாபர் மசூதி இடிப்பை நடத்தினர். இதன் விளைவாக இந்தியாவெங்கும் கலவரங்கள் நடந்தன. 1999இல் வாஜ்பாய் தலைமையில் மைய (ஒன்றிய) ஆட்சியில் அமர்ந்தனர். இதை ஒட்டியே குஜராத்தில் நரவேட்டை நாயகன் நரேந்திர மோடி தலைமையில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.

அதுவரை கலவரங்கள் மூலம் அப்பாவி மக்களை கொன்று கொண்டிருந்த இந்துத்துவா கும்பல், “அபினவ் பாரத்” என்ற இந்துத்துவா இராணுவப் பயங்கரவாதக் கும்பல் ஒன்றை உருவாக்கி இந்தியாவெங்கும் மசூதி, தொடர்வண்டி போன்ற இடங்களில் குண்டுகளை வைத்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது. இதில் சாமியார்கள் மட்டுமல்லாமல் இராணுவ அதிகாரிகளும் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்தது. இது அரசு எந்திரத்தில் இந்துத்துவ பயங்கரவாதிகளின் ஊடுருவல் ஆழமாக உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

மேற்கண்ட வரலாற்றுப் போக்கிலேயே 2014இல் தனிப் பெரும் கட்சியாக மையத்திலே பா-ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்துள்ளது. இக்கட்டத்தில் மூன்று பகுத்தறிவாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மாட்டிறைச்சி உண்டதற்காக ஒருவர் கொல்லப்பட்டார். எம்.எல்.ஏக்கள் தாக்கப்படுகின்றனர். நாள்தோறும் வெறுப்பூட்டும் பேச்சுக்களை மைய அரசின் அமைச்சர்கள் பேசுகின்றனர். இவைகள் முக்கிய சிக்கலாக மாறு கின்றது. சென்னை (ஐ.ஐ.டி) பெரியார்-அம்பேத்கார் மாணவர் படிப்பு வட்டத்தினர் மீது தாக்குதல், மைய அமைச்சர்களின் தலையீட்டால் ஐதராபாத் மாணவர் தற்கொலை, டெல்லி மாணவர் தலைவர் கன்னையா மீது தேசத்துரோக வழக்கு என்று மாணவர்களின்மீது பாசிச தாக்குதல்.

இரண்டாவது முறையாக மோடி ஆட்சி தனிப்பெரும்பான்மையோடு (இ.வி.எம். உதவியோடு) ஆட்சி அமைந்தது. இதன் விளைவு முழுவேகத்தோடு தனது நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுகிறது. என்.ஐ.ஏ. சட்டத்திருத்தம், உபா கருப்பு சட்டத்திருத்தம், முத்தலாக் என்று மிக அவசரமாக சட்டங்கள் நிறைவேற்றும் போக்கில் உச்சக்கட்டமாக கஷ்மீர் இன்று இந்தியாவில் இரும்புத் திரைப் போட்ட பகுதியாகும். இந்துத்துவா பயங்கரவாதத்தின் கோரமுகம் இன்று கஷ்மீரில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இரத்தக் காடாக்கி முஸ்லீம் மக்களே இல்லாத கஷ்மீரை உருவாக்க சதி நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து “தேசிய பதிவேடு” மற்றும் குடியுரிமைச் சட்டம் என்ற பெயரில் இந்தியாவிலிருந்தே முஸ்லீம்களை விரட்டியடிக்க சதி நிறைவேற்றப்படுகிறது.

ஒருபக்கம் தலித்துகள், சிறுபான்மையினர் மீது கும்பல் படுகொலைகளும் மறுபக்கம் இதர சனநாயக ஆற்றல்களின் குரல்வளை நெறிக்கப்படுகின்றது. கலைத்துறையை சேர்ந்த பிரபலமான 47 பேர் கும்பல் படுகொலைகளுக்கெதிராக பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு பதிலளிக்கவில்லை. ஆனால், அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்படுகிறது. கருத்துரிமை, பேச்சுரிமை முற்றிலுமாக மறுக்கப்படுகின்றன.

எதிர்க்கட்சிகள் மீது வழக்குகள்பாய்கின்றன. மற்றவர்கள் மிரட்டப்படுகின்றனர். பெரும்பான்மை இல்லாத மாநிலங்கள் “பெரும்பான்மை”யாக்கப்படுகிறது. பெயரளவில் தன்னாட்சி பெற்ற அமைப்புகள் முழுக்கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்படுகின்றன.

உச்சநீதிமன்றமும் இதில் அடக்கம். கஷ்மீர் மசோதா கொண்டு வரும் நாளன்று தலைமை அமர்வு விடுமுறை அளிக்கிறது. ப.சிதம்பரத்தின் அவசர மனுக்களை விசாரிக்க மறுக்கிறது. ‘கௌதம் நவ்லாக்கா’வின் பிணை மனுவை விசாரிக்கத் தயாரில்லை. அயோத்தி சிக்கல் மிக அவசரமாக விசாரிக்கப்படுகிறது. நீதியைக் கொன்று அயோத்தியானது இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேற்கண்டவைகள் எல்லாம் மக்களை எப்பொழுதும் ஒருவித பதட்டத்தில் வைத்திருக்கின்றன. மக்களை எப்போதும் பதற்றத்தில் வைத்திருப்பது பாசிசத்தின் மிக முக்கிய அம்சமாகும். மறுபக்கம் தனது செயலாளர்களுக்கு (முதலாளிகளுக்கு) விசுவாசமாக பல சட்டங்கள் மௌனமாக நிறைவேற்றப்படுகின்றன.

கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை அளிக்கப் படுகிறது. கோடிக்கணக்கில் கார்ப்பரேட்டுகளுக்கு கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. (சமீபத்தில் 2.75 லட்சம் கோடி கடன் ரத்து செய்யப்பட்டது) ரிசர்வ் வங்கியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டு கார்ப்பரேட்டுகளுக்கு கடன் கொடுக்கப்படுகிறது. பல பொதுத்துறை நிறுவனங்கள் சூறையாடப்படுகின்றன. அரசு கஜானாவை சூறையாடுவது பாசிசத்தின் முக்கிய அம்சமாகும்.

மிகவும் படுமோசமான பிற்போக்கான பாசிச வகைதான் “நவீன பார்ப்பனீய - இந்துத்துவா பாசிசமாகும்”. ஆனால் பா.ஜ.க. தனது கொள்கையாக ‘காந்திய சோசலிசத்தை’ வெட்கமே இல்லாமல் அறிவித்துக் கொள்கிறது.

காந்தியை கொன்ற பயங்கரவாத கும்பலே இவர்கள்தான். சோசலிசத்திற்கும் இவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது கீழ்த்தரமான மதவெறி, சாதிவெறிமிக்கதாகும். இது ஓர் அரசியல் கொள்ளைக் கூட்டத்தின் அரசாங்க அமைப்புமுறையாக மாறியுள்ளது.

மேலும், போலி தேசிய வெறியை ஊட்டுகிறது. பாகிஸ்தானை காட்டி எப்பொழுதும் பதட்டத்தில் வைத்திருக்க முயல்கிறது. ஊழலற்ற ஆட்சி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி என்று வெற்று வாய்ச்சவடால்களை எப்பொழுதும் பேசி வருகிறது. வெற்று வாய்ச்சவடால்கள் பாசிசத்தின் மிக முக்கிய அம்சமாகும்.

இந்திய வரலாற்றில் இக்காலப்பகுதி எதிர்ப்புரட்சியின் பலம் வாய்ந்த காலப்பகுதியாகும். இந்துத்துவா பாசிசத்தின் வெற்றி என்பது தொழிலாளி வர்க்கத்தின் தோல்வியாகும். காரணம் நெருக்கடி என்பது புரட்சியின் மூலம் தீர்க்கப்பட வேண்டும். ஆனால், தொழிலாளி வர்க்கத்தின் பலவீனம் காரணமாகவே இந்துத்துவ பாசிசம் அதிகாரத்தை கைப்பற்றி உள்ளது.

தொழிலாளி வர்க்கம் ஒருபக்கம் திரிபுவாதிகளின் தொழிற்சங்கங்களின் பிடியிலும் (சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி.) மறுபக்கம் எஸ்சி, எஸ்டி சீர்திருத்தவாத அமைப்புகளின் பிடியிலும் சிக்கி காயடிக்கப்பட்டுள்ளனர்.

இதில் திரிபுவாதிகளின் பங்கே முதன்மையானதாகும். இதனால் தனியார்மயம், தாராளமயம் வந்து 30 ஆண்டுகள் ஆகியும் எந்தவித எழுச்சிமிகு போராட்டமும் இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை சடங்குத்தனமாக பொதுவேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

இவர்களிடமிருந்து தொழிலாளர்களை மீட்பதற்கான எந்தவித மாற்றுச்சக்திகளும் பலமாக இல்லை.

ஒருபக்கம் தொழிலாளி வர்க்கம் பலவீனமான சூழ்நிலையில் மறுபக்கம் எதிர்க்கட்சிகளும் பலவீனமாக உள்ளன. அதே சமயத்தில் ஆளும்வர்க்கத்திள் பெரும்பகுதியும் ஊடகங்களின் ஆதரவு பலத்திலும் எதையும் செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறது நவீன பார்ப்பனீய- இந்துத்துவா பாசிச கும்பல்.

நாடாளுமன்றம் கலைக்கப்படவில்லை என்றும் அதனால் பாசிசம் ஆட்சிக்கு வரவில்லை என்றும் தவறாக மதிப்பிடுகின்றனர். அதற்கான தேவை இல்லை. பெரும்பான்மையாக இருப்பதால் நாடாளுமன்ற சனநாயகம் என்ற பெயரிலேயே எல்லா சட்ட மறுஉருவாக்கங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கஷ்மீர் மசோதா காலையில் முன்வைக்கப்பட்டு அவசர அவசரமாக மாலையிலேயே நிறைவேற்றப்படுகிறது. சிஏஏ மசோதா மாநிலக்கட்சிகள் மிரட்டப்பட்டும் விலைக்கு வாங்கப்பட்டும் நிறைவேற்றப்படுகிறது. ஒரே நாளிலேயே பல எண்ணிக்கையிலான மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்படுகின்றன. உண்மையில் நாடாளுமன்ற சனநாயகம் என்பது பெயரளவில் கூட இல்லை என்பதுதான் உண்மை.

நவீன பார்ப்பனீய - இந்துத்துவா பாசிசம் சமூக அடித்தளத்தில் வணிகர்கள், நடுத்தர வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்கிறது. மேலும் அரசு எந்திரங்களில் பலமாக ஊடுருவி உள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரையில் நவீன பார்ப்பனீய - இந்துத்துவா கும்பல் சாதியடிப்படையில் திரட்ட முயற்சி செய்கிறது. முதலில் நாடார்கள், தேவர்கள் மத்தியில் செயல்படத் துவங்கிய இக்கும்பல் கவுண்டர்கள், வன்னியர்களை அணிதிரட்ட முயற்சி செய்கிறது. இப்படி சாதியை குறுக்கு வழியாக வைத்து தமிழகத்தில் வேரூன்றப் பார்க்கிறது.

இதன் வளர்ச்சிப்போக்கு அரசியல் களத்தில் முதன்மை முரண்பாடாக உள்ளது.

ஆனால், சிலர் இந்த அபாயத்தைக் காண மறுக்கின்றனர். உண்மையில் நாம் ஆழமாக பார்க்கும்பொழுது இப்பாசிசத்தின் வேர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலானது. இது தனித்துவமானது; இந்தியவகைப்பட்டது.

கி.மு. இரண்டாயிரத்தில் மனு உருவாக்கப்பட்டபின் அப்போது இருந்த சூத்திர நிலவுடமைச் சமூகம் பிறப்பின் அடிப்படையிலான வர்ணச் சமூகமாக இறுகிப்போனது. பார்ப்பனர்கள் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. இதுவே, பண்டைய பார்ப்பனியமாகும். வர்ணச் சமூகம் திட்டவட்டமான வர்க்கச் சமூகமாக இல்லாததால் சில நூறாண்டுகளுக்குப் பின்னர் பொருளாதார வீழ்ச்சியில் ஏற்பட்ட சூத்திரர்களின் எழுச்சியாலும் வைசியர்களின் கலகத்தாலும் வீழ்ச்சியுற்றது.

பின்னர் பார்ப்பனர்கள் சத்திரியர்களுடன் சமரசம் செய்து கொண்டு சாதி-நிலவுடமைச் சமூகத்தை கட்டமைத்தனர். சாதிகள் பிறப்பின் அடிப்படையில் தொடர்ந்தன. சாதியடிப்படையிலான உடமை மற்றும் உழைப்பு பிரிவினை உருவாக்கப்பட்டது.

பெண்ணடிமைத்தனம் இறுகிப்போனது. மூடச்சடங்குகள் வளர்த்தெடுக்கப்பட்டன. இக்கட்டத்தை இடைக்கால பார்ப்பனீயம் என்கிறோம். இதுவே இந்துத்துவா ஆகும்.

உலகிலேயே ஆகச்சிறந்த சுரண்டல்முறையாக இது இருப்பதால் பின்னர் வந்த ஆட்சியாளர்களான முஸ்லிம் மற்றும் பிரிட்டிஷார் இதை ஒழிக்க விரும்பவில்லை. இந்திய பெருமுதலாளி வர்க்கமும் இதையே தொடர்கின்றது.

அதே சமயத்தில் முதலாளிவர்க்கத்தால் மேலிருந்து செய்யும் மாற்றங்கள் தவிர்க்க இயலாமல் சாதிநிலவுடமையை சிதைக்கிறது.

இதையே தடுத்து நிறுத்த வேண்டும் என்று நவீன பார்ப்பனீயக் கும்பல் கருதுகிறது. இது வெகுமக்களிடம் உள்ள பிற்போக்குத் தனங்களை, மூடநம்பிக்கைகளை கிளறிவிடுகிறது.

இது இடைக்காலக்கட்ட காட்டுமிராண்டித்தனத்தை சாதி நிலவுடமைச் சமூகத்தை மீண்டும் முழுமையாக கொண்டுவர முயற்சிக்கிறது. இது கடந்த காலங்களைப் போல் சுரண்டுவதற்கும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று கருதுகிறது.

அதாவது மக்கள் சாதி மதங்களில் பிளவுபட்டு இருப்பது தனது எஜமானர்களின் நிதிமூலதனச் சுரண்டலுக்கு பாதுகாப்பாக இருக்கும் என கருதுகின்றது. இதில் பார்ப்பனர்களின் நலனும் அடங்கியுள்ளது.

நவீன பார்ப்பனீய - பனியா அதிகாரக் கும்பல் அதிகாரத்திற்கு வந்தபிறகு நிதிமூலதனத்தை பாதுகாக்க மிக வேகமாகச் சட்டங்களும் திட்டங்களும் முழுவதுமாகக் கொண்டுவரப்படுகின்றன.

இதிலிருந்து மக்களை திசைதிருப்ப பிற்போக்குத்தனங்கள் முன்கொண்டு வரப்படுகின்றன. முஸ்லிம்களும் தலித்துகளும் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். பெண்கள் மீதான வன்கொடுமைகள் இந்தியா முழுவதும் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன.

மேற்கண்ட பின்னணியிலிருந்து நவீன பார்ப்பனீய இந்துத்துவா பாசிசத்தை புரிந்துகொள்ள வேண்டும். அதன் முதன்மை அபாயத்தை புரிந்து கொள்ளவேண்டும். ஆனால் சிலர் நிதிமூலதன எதிர்ப்பையே முதன்மைப்படுத்துகின்றனர்.

சிலர் இரண்டையும் சமப்படுத்துகின்றனர். இரண்டுமே தவறானது. நிதி மூலதனச்சுரண்டலின் நலனிலிருந்தே, அதை பாதுகாக்கவே நவீன பார்ப்பனீய - இந்துத்துவா பாசிசம் வளர்த்தெடுக்கப்படுகிறது.

நவீன பார்ப்பனீய - இந்துத்துவா பாசிசத்தை எதிர்ப்பது என்பதே நிதி மூலதனத்தை எதிர்ப்பது என்பதுதான் ஆகும். அடிப்படையும் முதன்மையும் சமமாகாது. நிதி மூலதனம் என்பது அடிப்படையானது. நவீன பார்ப்பனீய -இந்துத்துவா பாசிசம் முதன்மையானது. முதன்மையான முரண்பாட்டை தீர்ப்பதன் மூலமே இத்துணைக்கட்டம் அடுத்த கட்டத்திற்கு நகரும்.

எனவே இப்படிப்பட்ட அபாயகரமான சூழலை எதிர்த்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதனால் அனைத்து இடதுசாரி சக்திகளையும் சனநாயக சக்திகளையும் நவீன பார்ப்பனீய - இந்துத்துவா பாசிச எதிர்ப்பு முன்னணிக்கு அணிதிரட்ட வேண்டும். இதுவே நமது முதன்மை கடமையாகக் கொள்ள வேண்டும்.

- துரை.சிங்கவேல்

(அடுத்த பகுதி)