பாரம்பரியமாகத் தொடரக்கூடியவையாக இருப்பதாலும் வேறு எளிதாகக் கிடைக்கக் கூடிய மாற்றுக்கள் இல்லாததாலும் பலசமயங்களில், சமூகரீதியாக வெறுக்கக் கூடிய ‘தூய்மையற்ற’ தொழில்களில் தலித்துக்கள் சிக்கவைக்கப்படுகின்றனர்.

பல லட்சக்கணக்கான பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் அவர்கள் பிறப்பு காரணமாகவே இழிவாகக் கருதக் கூடிய, சமூக ரீதியில் அவமதிப்புக்குரிய தொழில்களில் தொடர்ந்து இருக்கும் வகையில் சிக்கவைக்கப்பட்டுள்ளனர். காலங்கள் வெகுவாக முன்னேற்றம் கண்டிருக்கும் இவ்வேளையிலும் இந்தியாவின் எண்ணற்ற கிராமங்களில் சாதி அமைப்பு முறை பெருமளவில் நீடித்துக் கொண்டே தான் இருக்கிறது. அது ஒருவர் பிறந்த சாதியை  அடிப்படையாகக் கொண்டு வேலைப் பிரிவினையை அல்லது தொழில்கள் ஒதுக்கீட்டை கட்டாயமாக்குகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக ஒருவர் பிறந்த சாதித் தொழிலைச் செய்வதிலிருந்து சமூகரீதியில் மேலானதாகக் கருதப்படும் இன்னொரு வேலைக்கு மாறிக்கொள்ளும் வாய்ப்பு மக்களுக்கு சிறிதும் அனுமதிக்கப் படுவதில்லை. நவீன காலங்களிலும் இந்தத் தடைகளில் பல தொடர்ந்து நீடித்து வருகின்றன.

சாத்திர ரீதியாகத் ‘தூயமையற்றதாகவும்’ சமூகரீதியில் தாழ்ந்ததாகவும் கருதப்படுகிற வேலைகள் தலித்துக்களிலேயே மிகவும் ஆதரவற்ற சாதியினருக்கு சமூக ரீதியாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இந்தத் ‘தூய்மையற்ற‘ தொழில்களில் பெரும்பாலானவை ஏதாவது ஒரு வகையில் சாவு, மனிதக் கழிவு, அல்லது மாதவிடாய் ஆகியவற்றோடு தொடர்புள்ளவையாக இருக்கின்றன. எங்கும் இருக்கும் இந்த மூன்று உடலியல் செயல்பாடுகள் கலாசார ரீதியாக தீவிரமான சடங்குத் தீட்டுக்களாக நம்பிக்கை கொள்ளச் செய்யப்பட்டிருக்கின்றன.

நாடு 21 ம் நூற்றாண்டிற்குள், சந்தைப்படுத்தப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்குள் உயர்ந்து  சென்று கொண்டிருக்கிற இந்த நிலையிலும் கூட தாங்கள் இத்தகைய ‘தூய்மையற்ற’ தொழில்களுக்குள் சமூக ரீதியாகச் சிக்க வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது தான் சமூகரீதியாக ஒதுக்கப்பட்டிருக்கிற இந்தச் சமூகத்தினரின் கூட்டுத் துயரமும் கவலையும் ஆகும். பாரம்பரியம், நிலப்பிரபுத்துவ நிர்ப்பந்தம், மற்றும் பல பொருளாதாரக் கட்டாயங்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து  நாடெங்கும் குறுக்காகவும் நெடுக்காகவும் வாழ்கிற பல லட்சக்கணக்கான தலித் குடும்பங்களைத் தொடர்ந்து சமூக ரீதியாக வெறுக்கத்தக்க தொழில்களில்  இப்படிச் சிக்க வைத்திருக்கின்றன.

புனிதமற்றவைகளைக் கையாள்வது  

தலித் மக்கள் மீது கலாச்சார ரீதியாகத் திணிக்கப்பட்டுள்ள மனித மரணத்துடன் தொடர்புள்ள தூய்மையற்ற தொழில்களில் சவக்குழி தோண்டுவது, பிணங்களை எரிப்பதற்கான எரிபொருள்களைச் சேகரிப்பது, சிதைமூட்டும் வேலைகளைச் செய்வது, ஆகியவை அடங்கும்.

இந்தியாவின் பலபகுதிகளில் கிராமப்புறங்களில் மரணம் என்பது புனிதமற்றதாகவும் தூயமையற்றதாகவும் கருதப்படுகிறது. மரணச் செய்தியைக் கூட எவ்வளவு தொலைவு ஆனாலும் இறந்து போனவரின் உறவுகளுக்கு தலித்துக்கள் தான் சென்று தெரிவிக்க வேண்டும் என்பது பாரம்பரியமாக இருக்கிறது.

விலங்குகளின் மரணம் தொடர்பான தூய்மையற்ற தொழில்கள் நிறைய உள்ளன. பெரும்பாலான கிராமங்களில் தங்கள் வீடுகளில் கால்நடைகளோ, நாய்களோ, பூனைகளோ இறந்துபோனால் தலித்துக்கள் தான் அவற்றின் இறந்த உடல்களை அப்புறப் படுத்தவேண்டும் என்று இன்னும் கூட கிராமத்தினர் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் இறந்த விலங்கினங்களின் தோல்களை உரிப்பது, அவற்றைப் பதப்படுத்தி பயன்படுத்தக் கூடிய வகையில் உருவாக்குவது, சிலசமயங்களில் அவற்றை செதுக்கி செருப்புக்களாகவும், முரசு மற்றும் தப்பு இசைக் கருவிகளாகச் செய்வதும் அவர்களுடைய வேலைகளாக இருக்கின்றன. ஆந்திரப் பிரதேசம், இராசஸ்தான், உத்தரப்பிரதேசம், மகாராட்டிரம் போன்ற மாநிலங்களில் தோலுடன் தொடர்புள்ள தீட்டு காரணமாக திருமணங்களில், இறுதிச் சடங்குகளில், திருவிழா நிகழ்வுகளில் தோல் தப்பறை வாசிப்பதைக் கூட தலித்துக்கள் தான் செய்யவேண்டும் என்ற சமூக நிர்ப்பந்தங்கள் எங்கும் இருக்கின்றன.

கிராமப்பகுதிகளில் பொது அறிவிப்புகள் கூட  தலித்துக்களால் தான் முரசு அடிக்கப்பட்டு செய்யப்படுகின்றன. இதுவும் கூட  விலங்குகளின் தோலால் ஆன கருவி என்பதால், பிறருக்குத் தீட்டாகவும் எனவே தலித்துக்களின் கடமையாகவும் கருதப்படுகிறது. ஏனென்றால் உலர்ந்த பதப்படுத்தப்பட்ட் தோலின் தீட்டு அந்த முரசுக்கும் தொடர்கிறது.

தூய்மையற்ற தொழில்களின் மூன்றாவது வகை மனிதக் கழிவின் மாசு தொடர்பான கலாசாரத் தன்மையிலிருந்து வருவதாகும். மனிதக் கழிவுகள், பெரும்பாலும் வெறும் கைகளினால் அகற்றுவது, சட்டமீறலாக்கப்பட்டுவிட்ட போதும் கூட  மிக மோசமான இழிவுபடுத்தும் தொழிலாக இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தொடர்கிறது. கழிவு நீர்த் தொட்டிகள், கழிவு நீர்க் கால்வாய்கள், தெருக்களைப் பெருக்கித் துப்புரவாக்குவது போன்ற நேர்வுகளில் இந்தத் தீட்டு நீள்கிறது கர்நாடகம், உத்திரப்பிரதேசம், பீகார்,மகாராட்டிரம் ஆகிய மாநிலங்களில் பெண்களின் மாதவிலக்கு ஆடைகளை தோய்ப்பதும் மகப்பேறு மருத்துவம் பார்ப்பதும் தீட்டாகக் கருதப்படுகின்றன.

ஆழமான காயங்கள்

சமூக ரீதியாக தீவிரமாக  வெறுக்கப்படும் – பலநேரங்களில் முற்றிலும் தூய்மைக்கேடான - இந்தத் தொழில்களில் வாழ்நாள் முழுதும் ஈடுபட்டிருக்க கட்டாயப் படுத்தபடுவோரிடம் இவை ஆழமான உடல் மற்றும் உளவியல் ரீதியான வடுக்களை ஏற்படுத்துகிறது. இந்த வேலைகளைப் பாதுகாப்பானதாகவும்  தூய்மையானதாகவும் செய்வதற்குரிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்ட போதிலும் அவை இன்னும் இந்தியாவில் அவ்வளவாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. சில தொழில்களின் தூய்மைக்கேடான இயல்பு குறித்த திடமான கலாசார நம்பிக்கைகள் உள்ளாற்றல் ரீதியாக சமகால மேம்பாடுகளைக் கட்டவிழ்த்து விடுவதற்கான புதிய நிலைமைகளுக்கு பிற்போக்கான வகையில் பொருந்தாமல் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, தோல்பொருள் ஆலைகளும். தோல் பதனிடும் ஆலைகளும் நிறுவப்பட்டிருப்பது தலித்துக்களைக் கணிசமான அளவுக்கு பாரம்பரியமான பரமபரைத் தொழிலிருந்து விடுவித்திருக்கிறது. ஆனால் தலித்துக்கள் இன்னும் கூட தோல் செருப்பு நிறுவனங்களுக்கு விற்பதற்கு தோலையும் அதனோடு தொடர்புள்ள விலங்குகளின் உடல்பகுதிகளையும் சுமந்து செல்கின்றனர். தோல் பொருள் தயாரிப்பு ஆலைகளிலும் பதனிடும் ஆலைகளிலும் இன்னும் கூட பெருமளவுக்குத்  தலித் தொழிலாளர்களே வேலை செய்கின்றனர் என்பது கவனிக்கத்தக்க செய்தியாகும். இக்காலத்திலும் கூட நவீன பொருளாதார அமைப்புக்களிலும் நகராட்சி நிர்வாகங்ககளிலும் திடக்கழிவுகளையும் இறந்த விலங்குகளின் உடற்பகுதிகளையும் எடுத்துச் செல்பவர்களும்  அதற்கான ஊர்திகளுக்கான ஓட்டுனர்களும் கூட தலித் மக்களிடமிருந்தே தேர்வு செய்யப்படுகின்றனர்.

நகராட்சி அதிகாரிகள் வழக்கமாகவே தெருக் கூட்டுவதற்கும் சாக்கடைத் துப்புரவுப் பணிகளுக்கும் தலித் மக்களை மட்டுமே பணியமர்த்துகின்றனர். கால்நடை மருத்துவர்களும் மருத்துவமனை மருத்துவர்களும் கூட சடலங்களைக் கூராய்வு செய்வதற்கு, பிணங்களை அறுப்பது உள்ளிட்ட வேலைகளை தலித்துக்களை செய்யச் சொல்லி, அவற்றைத் தாம் தொட்டு ஆய்வு செய்யாமல், தள்ளி நின்று பார்த்துவிட்டு அறிக்கை மட்டும் எழுதுகின்றனர்.

 சில தூய்மையற்ற தொழில்கள் விருப்பமின்றியும் ஊதியம் பெறாமலும் அல்லது அற்பக் கூலிக்கும் செய்ய வேண்டியவையாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் சாவுச் செய்திகளை எடுத்துச் செல்வது, ஆலயங்களின் பகுதிகளை தூய்மைப்படுத்துவது போன்றவையும் கேரளாவிலும் கர்நாடகத்திலும்  திருமண விருந்துகளுக்குப் பின்பு துப்புரவு செய்வதும் ஆந்திராவில் ஆதிக்கச் சாதியினருக்கு  மரியாதை நிமித்தமாக செருப்புத் தைத்துக் கொடுப்பதும் மற்றும்  பல மாநிலங்களில்  இறந்த விலங்குகளின் உடல்களை அப்புறப்படுத்துவதும் தப்பு அடிப்பதும் ஊதியமின்றிச் செய்யப்படும்.

வேலைகளாகும். காசிக்கள், பநோக்கள், டோம்கள் ஆகியோர் தோல் தொழில்களிலும் துப்புரவுப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படும் நிலமற்ற மக்களாவர். இவர்களை தலித் அல்லாதோரும் தலித் விவசாயிகளில் சிலரும் கூட விவசாயக் கூலி வேலைகளுக்குக் கூட அமர்த்துவதில்லை. ஒரிசாவில் மிஞ்சிய சாதம், பழைய துணிகள், ஒரு கைப்பிடி உணவு தானியம் இவற்றில் ஏதாவது ஓன்று தான் ஊதியமாகத் தரப்படுகிறது. இராஜஸ்தானின் பெரும்பகுதி கிராமங்களில் தலித்துக்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் தூய்மையற்ற வேலைகளுக்கு பணமாக ஊதியம் தரப்படுவதில்லை, பதிலாக சிறிதளவு உணவு (இரண்டு ரொட்டிகள்) தவிர வேறு எதுவும் தருவதில்லை. கர்நாடகாவில், தப்பு அடிப்பதற்கு சாராயம், ஒருவேளை உணவு, சிறிது பணம் ஊதியமாகத் தரப்படுகிறது. மகப்பேறு மருத்துவம், இறந்த விலங்குகளின் உடல்களை எடுத்துச் செல்வது போன்ற வேலைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியமே வழங்கப்படுகிறது. துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளாட்சி அமைப்புக்களில் மாத ஊதியத்திற்கு அமர்த்தப்படுகின்றனர் அல்லது ஊர்மக்கள் அவர்களுக்கு சிறிது பணமோ அல்லது பழைய சாதமோ கொடுக்கின்றனர்.

தூய்மையற்ற வேலைகள் எல்லாவற்றுக்குமே ஊதியம் தரப்படுவதில்லை. பெரும்பாலும் அவை கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன. அத்தகைய தூய்மையற்ற தொழில்களைச் செய்ய மறுத்தால், பல நேரங்களில் இழிவுபடுத்தல், அடித்தல் அல்லது சமூக விலக்கம் போன்ற தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அத்தகைய  வெளிப்படையான கட்டாயம் இல்லாத போதும் கூட, இழிவுபடுத்தும் பாரம்பரிய தொழில்களிருந்து தலித்துக்கள் தப்பித்துக் கொள்வதை பொருளாதார நிர்ப்பந்தங்கள் தடுக்கின்றன. வேறு எந்த தொழிலும் செய்ய அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு இறந்துபோன எருமையின் தோலை உரிப்பதால் கிடைக்கும் 200 ரூபாய் அவர்கள் வீட்டுப் பானையில் சோற்றைக் காண உதவும். துப்புரவுத் தொழில் அவர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்களில் நிலையான வேலையைப் பெற்றுத் தந்திருக்க‌லாம். இந்தத் தூய்மையற்ற தொழில்கள் அவர்களுக்குக் குறைந்த ஊதியத்தை பெற்றுத் தந்தாலும் இவற்றில் அவர்கள் இருப்பது அவர்களுக்கு அது உத்தரவாதமான வருவாயைப் பெற்றுத் தருகிறது.

ஒரு சமுதாயத்திற்கு இன்றியமையாத துப்புரவுத் தொழில் அல்லது இறந்த விலங்குகள், மனிதர்கள் உடல்களை அப்புறப்படுத்துவது போன்ற வேறு எந்தக் குழுவினரும் செய்ய விரும்பாத  தூய்மையற்ற தொழில்களைச் செய்வது பிற ஆதரவற்ற  மக்களை விட அவர்களுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பை வழங்கலாம். ஆனால் அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை மிகவும் காட்டுமிராண்டித் தனமான, மிக மோசமான, சமூகரீதியான  இழிவுபடுத்தல் ஆகும். இருப்பினும் அவர்கள் இந்த சமூக இழிவுபடுத்துதலிலிருந்து தப்பித்து சமூகக் கண்ணியத்தைப் பெற விரும்புவார்களானால் வெறுக்கத்தக்க தொழில்களைக் கைவிட்டுப் பாட்டாளி வர்க்கத்தின் பரந்த அணிகளோடு சேரவேண்டும். அப்படியானால், இது அவர்களுடைய உத்தரவாதமற்ற மையமாக இருக்கும். அவர்கள் பொருளாதாரப் பாதுகாப்பை நாடினால் அவர்கள் சமூக இழிவுபடுத்தலின் அடிமட்டத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் சமூக கண்ணியத்தை விரும்பினால் பொருளாதாரப் பாதுகாப்பின்மையையும் வாழ்வாதார இழப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நம்பிக்கையின் அறிகுறிகள்

தலித்துக்களுக்கான பாரம்பரியமான தூய்மையற்ற தொழில்கள் கிராம சமூக அமைப்பு முறையில் பொதிந்திருக்கிற போதிலும் அதில் உடைவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்புக்கள் குறித்த பல செய்திகள் வருகின்றன. தமிழ்நாட்டில் அண்மைக்காலம் வரையில் தூய்மையற்ற தொழில்களை செய்ய மறுப்பது தண்டம், வன்முறை அல்லது சமூகவிலக்கம் போன்றவற்றைச் சந்தித்து வந்தது. கடந்த பல பத்தாண்டுகளில் கூட்டு எதிர்ப்பு நடவடிக்கைகள், மிகவும் சாதி-மத்திமத் தன்மையுள்ள, மரியாதைக்குரிய விவ்சாய கூலித் தொழிலாளர் பணிகளில் தலித்துக்களை ஏற்றுக்கொள்வதற்கு  தலித் அல்லாதவர்களை நிர்ப்பந்தித்திருக்கின்றன. இராஜஸ்தானின் நிலப்பிரபுத்துவப் பகுதிகளில் கூட சில எழுச்சியூட்டும் ஆய்வுகள் வந்துள்ளன. சிரோகியின் பாலரி கிராமத்தில் விலங்குகளின் இறந்த உடல்களை அகற்ற தலித்துக்கள் கூட்டாகச் சேர்ந்து மறுத்துள்ளனர். சாதி இந்துக்கள் வன்முறை, சமூக, பொருளாதார விலக்கம் ஆகியவற்றைக் கொண்டு பதிலளித்துள்ளனர். ஆனால் தலித்துக்கள் உறுதியாக நின்றுள்ளனர். இன்று அவர்கள் அந்த இழிவிலிருந்து தங்களை மீட்டுக் கொண்டுள்ளனர்.

அதேபோல, சிகாரின் சுஜான்புரா கிராமத்தில் ரெகார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இறந்த விலங்குகளின் உடல்களை அப்புறப்படுத்த மறுத்தனர். பின்னர் தலித் அல்லாதோர் பேச்சு வார்த்தைகள் நடத்தி, பாரம்பரியத்திலிருந்து உடைத்துக்கொண்டு, ஒவ்வொரு சாதியிலிருந்தும் இரண்டு பேர் வீதம் முறை வைத்துக்கொண்டு இறந்த விலங்குகளின் உடல்களை ஊருக்கு வெளியே அப்புறப்படுத்துவது என்று உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டனர். இருப்பினும் இன்னும் கூட இறந்த விலங்குகளின் தோலை உரிப்பது ரேகார்களின் வேலையாகவே நீடிக்கிறது.

கைகளால் கழிவுகளை அகற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் தாங்களாகவே அமைத்துக்கொண்ட தன்மதிப்புள்ள வன்முறையற்ற நேரடி நடவடிக்கைக்கான தனித்துவமிக்க தேசிய இயக்கம் – சபாய் கர்ம்காரி அந்தோலன் - இந்த நடைமுறையிலிருந்து பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்களை, குறிப்பாக பெண்களை, விடுவிப்பதில் வெற்றிபெற்றுள்ளது. இருந்தாலும் அதன் விடாபிடியான கடைசி எச்ச மிச்சங்கள், இந்திய தொடர்வண்டித் துறை உட்பட பல இடங்களில் நீடிக்கவே செய்கின்றன.

இழிவுபடுத்தும் சமூகப் பாரம்பரியங்களின் தளைகளிருந்து  தாங்களாகவே தங்களை விடுவித்துக்கொள்ளும் இத்தகைய துணிச்சல்மிக்க, பெருமிதமான போராட்டங்கள் தாம் உலகில்  நமது குழந்தைகள் அனைவர்க்கும் இன்னும் மனிதநேயம் மிகுந்த சமூக அமைப்பு குறித்த நம்பிக்கை ஒளியை ஏற்றி வைப்பவையாக இருக்கின்றன.  

நன்றி - தி இந்து நாளிதழ்-09.01.2011.

- ஹர்ஷ் மந்தர்
தமிழில் வெண்மணி அரிநரன் (
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It