சுதந்திர இந்தியாவை உருவாக்கியவர்கள் சமூக - பொருளியல் சமனின்மையைச் சரிசெய்திடக் கொண்டிருந்த அக்கறைகள் மறக்கடிக்கப்பட்டு வருகின்றன.

இந்திய அரசமைப்பு அவையில் 1949இல் மேதை பி.ஆர்.அம்பேத்கர் ஆற்றிய தன் கடைசி உரையில் முரண்பாடுகளுடனான வாழ்க்கையில் இந்தியக் குடியரசு அடியெடுத்து வைப்பது பற்றி ஓர் எச்சரிக்ககை விடுத்தார். “அரசியலில் நாம் சமநிலைப் பெற்றிருப்போம்; ஆனால் சமூக மற்றும் பொருளியல் வாழ்வில் சமனின்மையைப் பெற்றிருப்போம். இந்த ஏற்றத்தாழ்வுகள் நம் கவனத்தை ஈர்ப்பன. இவற்றைக் களைந்திடத் தவறினால், இதனால் பாதிப்புக்கு உள்ளாகின்றவர்கள் இந்த அரசியல் ஜனநாயகக் கட்டமைப்பைத் தகர்த்துவிடுவார்கள்” என எச்சரித்தார்.

திட்டங்கள் உறுதியாக நிறைவேற்றப்படுவதன் மூலம் இந்தச் சமனின்மைகளைச் சரிசெய்திட இயலும் என நேரு உண்மையாக நம்பினார். சமூக-பொருளியலிலும் மாநிலங்களுக்கு இடையேயும் உள்ள ஏற்றத்தாழ்வைக் களைந்திடுவதற்கு நிதியதிகாரம் ஓரளவு மய்யப்படுத்த வேண்டியதுத் தேவை என நேரு கருதினார்.

indian rupeeஒன்றிய அரசு பகிர்ந்தளிப்பதற்கு மாறாக பறித்தெடுத்தலைச் செய்கிறது.

அரசமைப்புச் சட்டத்தில் உள்ளார்ந்துள்ள சீர்மையற்றக் கூட்டரசியம் 2014 முதல் அரசியல் மய்யப்படுத்தல் மூலமாக மேலும் சீர்குலைக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு மாறாக பறித்துக் கொண்டுள்ளது. இந்திய அளவில் சரக்கு, சேவை வரிமுறைமை நடைமுறைப் படுத்தப்பட்டதால் மாநிலங்களின் வரி விதிக்கும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலங்கள் வருவாய்ப் பெருக்கும் திறனை இழந்துள்ளன. ஒன்றிய நிதியளிப்புத் திட்டங்கள் என்ற பெயரால் ஊடுருவி மாநில அரசுகளின் செலவின மாதிரியைக் கூட சிதைத்து விட்டது.

அரசயிலாக்கப்பட்ட ஒரு நிறுவனம்

நீண்ட காலமாகத் திட்டக்குழு மற்றும் நிதிக்குழு எனும் இரண்டு அமைப்புகளின் வழியாக நிதிப் பகிர்வு செய்யப்பட்டு வந்தது. ஆனால், திட்டக்குழு 1990இல் இருந்து தேய்ந்து, 2014இல் ஒழிக்கப்பட்டு விட்டதனால் நிதிக்குழு வழியாகவே நிதிப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஒன்றிய அரசு விதிக்கும் பொருள் உற்பத்திவரி (E.D), வருமான வரி ஆகிய இரண்டின் வருவாயை மட்டும் பங்கீடு செய்து வந்ததை மாற்றி 2000 முதல் ஒன்றிய வரிகள் அனைத்தும் பகிர்ந்தளிப்பது என விரிவாக்கப்பட்டது. இன்று நிதிக்குழு ஒன்றிய அரசுக்கு உள்ளார்ந்து சார்பானதாகவும் தான்தோன்றித்தன

மாகவும் நடக்கும் அரசியலாக்கப்பட்ட நிறுவனமாகி விட்டது. மய்யப்படுத்தப்பட்ட நிதிக் கொள்கையின் விளைவாக உலகில் மிகவும் பிற்போக்கான வரி  விதிப்பு முறையைக் கையாள்வதால் சமனின்மையைச் சரிசெய்ய வேண்டும் என்ற மூலநோக்கம், உயர்ந்த எண்ணம் உண்மையில் உருமாறி விட்டது.

அதனால், 2014இல் இருந்து என்ன மாறியுள்ளது என்பதைக் காண்போம். இன்றைய நிதிக் கொள்கையை இயக்கும் அரசியல் அதிகாரங்களை மய்யப்படுத்தும் பண்பாட்டுத் தேசியவாதக் காலத்தில் சுதந்திர இந்தியாவை உருவாக்கியவர்கள், சமூக-பொருளியல் சமனின்மையைச்  சரிசெய்திடக் கொண்டிருந்த கொள்கை மறக்கப்பட்டது. ‘தாமாகச் சேர்ந்த கூட்டமைப்பாக’ இருப்பதற்கு மாறாக சேர்த்துப் பிடித்து வைக்கப்பட்ட வட்டமைப்பாக உள்ளது, இந்தியா எப்போதும் ஒரு உண்மையானக் கூட்டமைப்பாக இருந்ததில்லை என்பது உறுதி.

தாமாகச் சேர்ந்த கூட்டமைப்பில் சிறிய சுதந்திர நாடுகளும் வந்து சேர்ந்து ஒரு கூட்டாட்சியாக உருவாக வேண்டும் (அமெரிக்க அய்க்கிய அரசுகள் போல) 1950 சனவரி 26இல் ஏற்கப்பட்ட அரசமைப்புச் சட்டம் அளிப்பதைவிட 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தில் கூட்டாட்சி இயல்பு மிகுந்திருந்தது; மாகாண அரசுகளுக்கு அதிக அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த அதிகாரக் குவிப்பு அச்சுறுத்தலை எதிர்பார்த்துத்தான் சி.என்.அண்ணாதுரை அவர்கள் 1967இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் “இந்திய இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பேண ஒன்றிய அரசுப் போதுமான வலுவுள்ளதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இங்கே (மாநிலத்தில்) உள்ள துறைகளான கல்வியையும் நல்வாழ்வுத் துறையையும் அவர்கள் (ஒன்றியத்தில்) வைத்திருக்கலாமா... அது எந்த வகையில் இந்தியாவின் இறையாண் மையையும் சுதந்திரத்தையும் வலுப்படுத்தும்?” என்று வினவினார். அதன்பின் 1969இல் தி.மு.க.அரசு, ஒன்றிய - மாநில நிதி உறவுகள் பற்றியும், அதிக நிதிஉட்பட பகிர்வுகள் பற்றியும், மாநில அரசுகளுக்கு வரிவிதிக்க அதிக அதிகாரங்கள் அளிப்பது பற்றியும் ஆராய்வதற்காக நீதிபதி பி.வி.இராசமன்னார் தலைமையில் ஒரு குழு அமைத்தது. ஒரு மாநில அரசு இத்தன்மையிலான ஒரு குழு அமைத்தது இதுவே முதன்முறை ஆகும். இது இந்தியாவின் பிற பகுதிகளில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 1990 மற்றும் 2000களில் ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சிகள் இருந்தும் விளைவு ஒன்றுமில்லை. அதிகாரக் குவிப்பு 2014 இல் மிகவும் உச்சத்தைத் தொட்டது.

திறனற்றதாகும் நிதிக் கொள்கை

1955-56இல் மாநிலங்கள் தங்கள் சொந்த நிதி வருவாயிலிருந்து 69% செலவினங்களைச் செய்யும் வலுவுள்ளதாக இருந்தன. 2019-20இல் இது 38%க்கும் குறைந்து விட்டது. மாநில அரசுகளின் செலவினங்கள் உயர்ந்து வரும் வேளையில் வருவாய் உயரவில்லை. இப்போதும் கல்விக்கு 85%ம் நல்வாழ்வுக்கு 82%ம் என இந்திய அளவில் 60% செலவினங்களை மாநிலங்களே செலவிடுகின்றன. மறைமுக வரி விதிப்புக் கட்டுப்படுத்தப் பட்டதாலும் பெட்ரோல், டீசல், மின்சாரம், மது மீதான வரிவிதிப்புத் தவிர, பிற வரி விதிப்பு அதிகாரங்களை சரக்கு - சேவை வரி எடுத்துக் கொண்டுள்ளதாலும் மாநிலங்கள் வரி வருவாயை உயர்த்த இயலாததால் மாநிலங்களின் வருவாய் கடந்த பத்தாண்டாக உள்நாட்டு செல்வ உற்பத்தி (GDP)யில் 6% என்கிற அளவிலேயே தேங்கி நிற்கிறது.

14ஆம் நிதிக்குழு (2013 சனவரியில் அமைத்தது)வின் முடிவின்படி மாநிலங்களுக்கான பகிர்ந்தளிப்பு 32% இல் இருந்து 42% ஆக உயர்த்தப்பட்டாலும், அதன்பின் விதிக்கப்பட்ட மேல் வரி (செஸ்), கூடுதல் வரி (சர்சார்ஜ்) மாநிலங்களுக்குப் பிரித்தளிக்காதத் தொகுப்பில் நேரடியாக ஒன்றிய அரசின் பெட்டிக்குச் செய்வதால், (உயர்த்திய நோக்கம்) வீழ்த்தப்பட்டது. இந்த பிரித்தளிக்காதத் தொகுப்பில் ஒன்றிய அரசின் மொத்த வருவாய் 2012இல் 9.43% இலிருந்து 2020இல் 15.7% ஆக உயர்ந்துள்ளது. இதனால், மாநிலங்களுக்குப் பிரித்தளிக்கக்கூடியத் தொகுப்பில் வருவாய் சுருங்குகிறது. மேலும் அண்மையில் கார்பரேட் வரியைக் கடுமையாகக் குறைத்ததன் தாக்கம் பிரித்தளிக்கும் தொகுப்பிற்கான வருவாய் மிகவும் சரிந்தது; சரக்கு சேவை வரிக்காக மாநிலங்களுக்கு அளிக்கும் இழப்பீட்டிலும் பெரிய விளைவுகளை ஏற்படுத்துவதில் முடியலாம்.

இவற்றுடன் கூட, மாநில அரசுகள் சந்தையில் பெறும் கடனுக்கு வேறுபட்ட வட்டியாக 7%க்குப் பதிலாக 10% வரை அளித்திடுமாறு ஒன்றிய அரசு கட்டாயப் படுத்துகிறது. இதுவுமின்றி, முற்றாகத் திறமையற்ற நிதி மேலாண்மை காரணமாக மாநிலங்கள் இழப்புக் குள்ளாகின்றன. மாநில அரசுகளிடம் சந்தையில் அதிக வட்டிக்குப் பெறும் பணம் கையிருப்பில் உபரியாக உள்ள நிதியை ரிசர்வ் வங்கி அறிவுரைப்படி ஒன்றிய அரசு வெளியிடும் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் திறைசேரி உண்டியலில் (treasury bills) குறுகிய காலத்திற்கு முதலீடு செய்வதால் மாநிலங்களைச் சுரண்டி ஒன்றிய அரசு ஆதாயமடைகிறது.

ஒன்றிய அரசின் திட்டங்களை நிறைவேற்றும் முகமைகளாக மாநிலங்கள் மாற்றப்படுவதால் மாநிலங் களின் தன்னாட்சியைக் கட்டுப்படுத்துகிறது. ஒன்றிய அரசு நிதியளிக்கும் திட்டங்கள் 131 உள்ளன. இவற்றுள் குறைந்த எண்ணிக்கையிலான திட்டங்களுக்கு மட்டுமே 90% நிதி ஒதுக்குகிறது. செலவின் ஒரு பகுதியை மாநிலங்கள் பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகும். தங்களுக்கான திட்டங்களுக்கு செலவிடுவதைக் குறைத்து, இணைமாணியமாக 25% இலிருந்து 40% வரை செலவிட வேண்டியுள்ளது. மக்கள நாயக அரசியலில், தேர்தலில் மாநில மக்கள் தீர்ப்புக்கு ஏற்ப நிறைவேற்ற வேண்டிய மாநில முன்னுரிமைத் திட்டங்களைப் பின்னுக்குத் தள்ளி, எல்லா மாநிலங்களுக்கும் ஒரே மாதிரித் திட்டங்களைத் திணிக்கும் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு முதல் முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது.

சொல்லப்போனால், மாநிலங்கள் உருவாக்குகின்ற செயல்திட்டங்களே மக்களுக்குப் பயனுள்ளவை என்பதும் சமூக மேம்பாட்டிற்கு உதவியுள்ளது என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. மகாராட்டிரத்தின் வேலை உறுதித் திட்டம், தமிழ்நாட்டின் பகல் உணவுத் திட்டம், கர்நாடாகா மற்றும் கேரளத்தின் உள்ளாட்சி மற்றும் இமாசால பிரதேசத்தின் பள்ளிக்கல்வி போன்ற வெற்றியடைந்த மாநிலத் திட்டங்கள் மக்கள் நாயக உந்துதல் காரணமாக இந்தியா முழுமைக்கும் தேசிய அளவில் ஏற்றுப் பின்பற்றப்படுகின்றன.

மாநிலங்களுக்கு உரிமையான நிதியை ஒன்றிய நிதியளிப்புத் திட்டங்களுக்கு மாற்றுவதால் மாநிலங்களின் சொந்த திட்டங்களுக்கு நிதியாதாரம் குறைந்து விடுகிறது. இது அரசமைப்புச் சட்ட விதிகளை மீறுவதாகிறது. மாநிலங்களுக்குரிய பட்டியலில் உள்ள இனங்களுக்கு ஒன்றிய அரசு நிதியளிப்புத் திட்டங்கள் ஏன்? அதேபோல் ஒன்றிய அரசுக்குரிய பட்டியலில் உள்ள இனங்களுக்குரிய திட்டங்களுக்கான செலவிற்கு மாநில அரசுகள் ஏன் பங்களிக்க வேண்டும்? சான்றாக, மாநிலங்களுக்குரிய பட்டியலில் உள்ள மக்கள் நல்வாழ்வுக்கானத் திட்டத்திற்கு ஒன்றிய அரசின் திட்டத்தை மாநிலங்களின் மீது திணிப்பது ஏன்? தமிழ்நாடு, கேரளா ஆகிய செயல்திறன் செம்மையாக உள்ள மாநிலங்களின் மீதும் கூடத் திணிப்பது ஏன்? இது மாநிலங்கள் தங்கள் சொந்த தன்னாட்சி வளர்ச்சிப் பாதையில் திட்டமிடுவதைத் தடுக்கிறது.

விரிவடையும் ஏற்றத்தாழ்வு

இந்த அரசியல் அதிகாரத்தை மய்யப்படுத்துதல் ஏற்றத்தாழ்வை விரிவடையவே செய்யும், தேசிய வருவாயில் தனியார் செல்வத்தின் விகிதம் 1980இல் 290% இலிருந்து 2020இல் 555%ஆக உயர்ந்தள்ள­தாக உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை மதிப்பிட்டுள்ளது. இது உலகில் மிகவேகமான உயர்வு . உலகின் மொத்த செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கு செல்வத்தை 10% மேல் தட்டினர் பெற்றுள்ள அதே வேளையில் உலக மக்கள் தொகையில் பாதியாக உள்ள மிகவும் ஏழையர் 6% செல்வத்தைப் பெற்றுள்ளனர். பணக்காரர்களுக்கு வரிவிதிப்பதில் இந்தியா கீழ்நிலையில் உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி - வரி வருவாய் விகிதத்தில் இந்தியா உலகத்தில் மிகவும் கீழே உள்ளது. வளர்ந்து வரும் சந்தை பொருளாதார நாடுகளின் சராசரியான 21 விழுக்காட்டை விட கீழே 17 விழுக்காடாக உள்ளது. கூட்டுறவு மற்றும் வளர்ச்சி அமைப்பு (OECD) நாடுகளில் இந்த விகிதம் கிட்டத்தட்ட 34 விழுக்காடாக உள்ளது.

வரலாறு முழுவதும் இந்திய மேல்தட்டு வர்க்கம் ‘ஒரு ஆளுக்கு ஒரு வாக்கு’ அளித்துள்ள அரசியல் சமத்துவம் தங்களை அச்சுறுத்துவதாக நினைத்து, நிதித்திறனை குறைமதிப்பிற்கு உட்படுத்து கின்றனர் என்று இலண்டன் பொருளியல் ஆய்வு மய்யத்தின் புனிதா சூரிய நாராயண் விளக்கியுள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு நிதித்திறனைப் பயனற்றதாக்குவது பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டுள்ளது. இதன் விளைவு மறைமுக வரிவிதிப்பு முறையின் அடித்தளம் உலகில் மிகவும் பிற்போக்கானதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

சொத்துடைய வர்க்கத்திற்கு வரிவிதிக்க இந்தியா தவறியுள்ளது. 1970இல் வேளாண்மை செழித்திருந்த போது வேளாண்மை வருவாய்க்கு வரிவித்தல் எதிர்க்கப்பட்டது. 1990களில் முதலாளியத்திற்கு சார்பாக மாறிய காரணத்தினால் அடுத்தடுத்து வந்த அரசு களால் கார்பரேட்டுகளுக்கான வரி குறைக்கப்பட்டது. இந்தியாவில் செல்வ வரி விதிப்பும் இல்லை. இந்தியாவில் வருமான வரிவிதிப்புக்கான வாய்ப்பும் குறுகலானது. மொத்த வரி வருவாயில் இப்போதும் மறைமுக வரி 56 விழுக்காடு பங்களிக்கிறது. நேரடி வரிவிதிப்பை அதிகப்படுத்துவதற்கு மாறாக ஒன்றிய அரசு  2019இல் கார்பரேட் வரியை 35% இலிருந்து 25% ஆகக் குறைந்துள்ளது.

ஒன்றிய அரசு தன் பொதுத்துறை நிறுவனங் களின் சொத்துகளை விற்று பணமாக்குகிறது. அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்க இவ்வாறு செய்வதாக அரசு கூறுகிறது. திட்டமிடல்கள் - மூலமாக சமமின்மைகளைத் தணிக்கலாம் என சுதந்திர இந்தியாவை உருவாக்கியவர்களின் கனவுக்கு முரணாக அரசியல் அதிகாரத்தை மய்யப்படுத்தப் படுபவர்களால் இந்திய நிதிக்கொள்கையில் கூட்டாட்சியியல் சமூக பொருளியல் ஏற்றத்தாழ்வை மேலும் அதிகப்படுத்துகிறது. இது மாநிலங்களுக்கு இடையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் கூட திருத்தி யமைத்திடவில்லை. வறுமை ஒழிப்பு, சமமின்மைக் குறைப்பு, மக்கள் நல்வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதெனின் அவை மாநில அரசுகளின் திட்டங்களால் விளைந்தவையே, ஆனால் அவையும் இப்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

(28.07.2022 அன்று ‘The Hindu’ ஏட்டில் வெளிவந்த கட்டுரை)

தமிழில் சா.குப்பன்

இக்கட்டுரையாளர் ஆ.கலையரசன் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் தெற்காசிய நிறுவனத்தில் ஆய்வாளர், The Dravidian Model : Inteáreting the Political Economy of Tamilnadu நூலின் இணையாசிரியர். மா.பெ.பொ.க.யின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஆ.கு.ஆறுமுகம் அவர்களின் இளைய மகன்.