பெரியார் 144-வது பிறந்த நாள் சிந்தனை

1919 முதல் 1925 வரை தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியில் செயலாளராகவும் தலைவராகவும் இருந்த பெரியார் வகுப்புவாரி உரிமை வேண்டும் எனக் கொண்டு வந்த தீர்மானங்கள் பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் நிறைவேற்ற முடியாத நிலையில், காங்கிரசில் இருந்து வெளியேறி 1926-இல் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.

பார்ப்பனர் அல்லாதார் சமூக விடுதலை, பெண் விதலை ஆகியவற்றை முன்நிறுத்தித் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். அதற்குத் தடையாக இருந்த, இந்து மதத்தையும் பார்ப்பனர் களையும் கடுமையாக எதிர்த்து வந்தார்.

1929இல் செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள் தமிழக சமூக அரசியலில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியது. சமதர்ம கொள்கையை 1928 முதல் தன்னுடைய இறுதிக் காலம் வரை பெரியார் பரப்புரைக் செய்து வந்தார்.

1937இல் இராசாசி சென்னை மாகாண முதல்வராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டவுடன் சென்னை மாகாணப் பள்ளிகளில் இந்தியை கட்டாயப் பாடமாக்கினார். இதைக் கண்டித்து தமிழ் நாட்டில் மாபெரும் போராட்டம் வெடித்தது. ஆண்களும் பெண்களும் கைக்குழந்தைகளுடன் சிறையேகினர். தமிழர் பெரும்படை 1938 ஆகத்து ஒன்று, அன்று திருச்சியிலிருந்து வழிநடைப் பயணமாக 42 நாள்கள் இந்தி எதிர்ப்பு பரப்புரை மேற்கொண்டு, 11-9-1938 அன்று சென்னை வந்தடைந்தது. கடற்கரையில் மாபெரும் வரவேற்புக் கூட்டத்தில் பெரியார் தமிழ்நாடு தமிழுருக்கே என்று முழங்கினார்.

1938 திசம்பர் 29,30,31 நாள்களில் சென்னையில்  நடைபெற்ற தென்னிந்தியர் நல உரிமைச் சங்கத்தின்  மாநாட்டில் பெரியார் அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது மொழிவழி மாநிலம் பிரியவில்லை, சென்னை மாகணமாக  இருந்தது. அன்றைய நீதிக்கட்சித் தலைவர்களின் கருத்தின் அடிப்படையில் திராவிட நாடு திராவிடருக்கே என்று முழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. திராவிட நாடு பிரிவினையை பெரியார் தீவிரமாக மேற்கெண்டார். 1.11.1956இல் மொழி வழி மாநிலங்கள் பிரிந்த பின்பு, ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்பதை தமிழ்நாடு தமிழருக்கே என்று மாற்றினார்.

1950 சனவரி 26 முதல் புதிய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததன் காரணமாக நீதிக்கட்சி ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட வகுப்புரிமை ஆணை செல்லாது என்று செண்பகம் துரைராசன் வழக்கில் சென்னை உயர்நீதி மன்றமும், இந்திய உச்ச நீதிமன்றமும் 1950இல் தீர்ப்புக் கூறியதை கண்டித்து, ஓர் ஆண்டு முழுவதும் தமிழ்நாட்டிற்கு வரும் ஒன்றிய அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டமும் கடைஅடைப்பும் நடத்தச் செய்தார்.

வகுப்புரிமை செல்லாது எனக்கூறும் அரசியல் அமைப்புச் சட்டம் ஒழிக எனவும் முழங்க வைத்தார். வகுப்புரிமைக்கு ஆதரவாக மாணவர்கள் கல்லூரிப் புறக்கணிப்பு என தமிழ்நாட்டையே போர்களமாக்கினார். அதன் விளைவாகத் தான் இந்திய அரசியல் சட்டத்தில் 1951இல் முதல் திருத்தம் செய்யப்பட்டு 15 (4) என்ற விதி சேர்க்கப்பட்டு கல்வியில் இட ஒதுக்கீடு மீட்கப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சாதிக்கு பாதுகாப்பு அளிக்கும் விதிகள் 13,25,372 உள்ளன என்று கூறி, அந்த பிரிவுகளை எரிக்கும் போராட்டத்தை 1957 நவம்பர் 26 அன்று நடத்தினார். சுமார் 10,000 பேர் எரித்தனர்; 3000 பேர் ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைப் பெற்றனர்.

 பார்ப்பனர்கள் தாங்கள் உயர்ந்த சாதியினர் என்று கூறிக்கொள்ள இடமளிக்கும் கோயில் கருவறை நுழைவுப் போராட்டத்தை 1969இல் அறிவித்தார். தமிழ்நாட்டு முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று அப்போராட்டத்தை தள்ளி வைத்தார். கலைஞர் ஆட்சியில் 02.10.1970 இல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என நிறைவேற்றப்பட்டச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் வழக்குத் தொடுத்தனர்.

14.03.1972இல் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில் பரம்பரை அர்ச்சகர் முறை ஒழித்தது செல்லும்; ஆனால் ஆகமக் கோயில்களில் ஆகமத்தின் அடிப்படையில்தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று கூறியது.

கலைஞர் மீண்டும் முதலமைச்சராக இருந்த போது 23.05.2006இல் அனைத்துச் சாதியினர் அர்ச்சகர் ஆக நியமிக்கச் சட்டமியற்றினார்; அதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 16.12.2015இல் தீர்ப்பளித்த நீதிபதிகள் இந்தச் சட்டம் செல்லும் அதே நேரத்தில் ஆகம அடிப்படையில் அமைந்த கோயில்களில் ஆகம விதிகளை மீறி அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் கீழ்நீதி மன்றத்தை நாடலாம் என தீர்ப்பு வழங்கியது.

தமிழக முதல்வர் அவர்கள் தமிழக அரசின் ஆகமப் பள்ளிகளில் படித்து முடித்த அர்ச்சகர்களை 14.08.2021 அன்று அர்ச்சகர் பணிகளில் நியமனம் செய்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 22.8.2022 அன்று சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியத் தீர்ப்பில் தமிழக அரசின் அர்ச்சகர் பணியமர்த்தம் செல்லும் என்று கூறியது. அதே தீர்ப்பில் ஆகமத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட கோயில்களை கண்டறிய 5 பேர் குழுவை நியமித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. ஆகமத்தின் அடிப்படையில் அமைந்த கோயில்களில் ஆக விதிகளின் படி அர்ச்சகர் நியமனம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. மீண்டும் கருவறைத் தீண்டா மைக்கே வழிவகுக்கிறது, இதற்கு எதிராக நம்முடைய போராட்டம் தொடர வேண்டும்.

1925 செப்டம்பர் 27 அன்று ‘இராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்’ (ஆர்.எஸ்.எஸ்) தொடங்கப்பட்டது. அதன் குறிஇலக்கு இந்தியாவை இந்து நாடாக (இந்து இராஷ்டிரம்) ஆக்குவது. இதற்காக “பாரதிய ஜனசங்கம்” (பி.ஜே.எஸ்,) என்ற ஆர்.எஸ்.எஸ்-இன் அரசியல் கட்சியை 1951 இல் சியாமா பிரசாத் முகர்சி என்ற பார்ப்பனர் உருவாக்கினார். அது தொடங்கிய 25 ஆண்டுகள் கழித்து, 1977இல் உருவான ஜனதா கட்சியில் இணைந்து, இந்திய ஒன்றிய ஆட்சியதிகாரத்தில் பங்கு பெற்றது. ஜனதா கட்சியில் உறுப்பினராக இருந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்-இலும் உறுப்பினராக - இரட்டை உறுப்பினராக இருந்ததற்கு எதிர்ப்புக் கிளம்பியதால்,  1980இல் தனியாகப் பிரிந்து ‘பாரதிய ஜனதாக் கட்சி’ என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்-இன் குறிஇலக்கு, அது தொடங்கிய நூறாவது ஆண்டிற்குள் இந்தியாவை இந்து நாடு என்று ஆக்க வேண்டும் என்பதே. பா.ச.க. அதற்கு முதல் படியாக பார்ப்பனரான அடல்பிகாரி வாஜ்பாயி தலைமையில் 1999 முதல் 2004 வரை இந்திய ஒன்றிய அரசதிகாரத்தில் கோலோச்சியது. அப்போதே தோழர் வே.ஆனைமுத்து “2ஆம் புஷ்ய மித்ர சுங்கன்” ஆட்சி எனக் கடுமையாக எதிர்த்தார். அது கூட்டணி ஆட்சியாக இருந்ததால், வெளிப்படையாகப் பெரிய செயல்களைச் ஈடேற்றிக் கொள்ள இயலவில்லை “இந்து தேசியம்”, “இந்துத்துவம்” என்ற கொள்கையின் தந்தையாகக் கருதப்படும் வி.டி.சாவர்கர் படத்தை நாடாளுமன்ற நடுமண்டபத்தில் திறந்து வைத்தார்கள்.

ஆர்.எஸ்.எஸ் தொடங்கிய 90ஆம் ஆண்டில் அடுத்த படியாக, பா.ச.க 2014இல் தனிப் பெரும்பான்மையுடன் இந்திய ஒன்றிய அரசதிகாரத்தைக் கைப்பற்றியது. 2024இலும் ஆட்சியதி காரத்தைக் கைப்பற்றி, கடந்த 8 ஆண்டுகளாக மளமளவென்று பலவற்றை செயல்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் - பா.ச.க. மத உணர்வைத் தூண்டி ஆதாயமடைவது என்ற செயலுத்தியை 1992இல் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்ததில் தொடங்கினர். மசூதி இடித்த இடத்தில் இராமன் கோயில் கட்ட இந்தியத் தலைமை அமைச்சரான நரேந்திர மோடி 2020இல் அடிக்கல் நாட்டி விட்டார். 18,000 கோடி செலவில் 2023 இல் கட்டி முடித்து 2024 தைத்தில் திங்கள் முதல் நாளில் திறப்பது என்று நேற்று நடைபெற்ற இராமர் கோயில் கட்டுமானக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. (தினமணி 13.09.2022) கோயிலைத் திறக்க விரைவாக வேலைகள் நடைபெறுகின்றன.

தேசிய குடிமக்கள் பதிவு, தேசிய குடிமக்கள் பதிவேடு என ஒரு பக்கம்; பண்பாட்டு தேசியம் என்று சொல்லிக் கொண்டு இசுலாமிய எதிர்ப்பு - இசுலாமிய அடையாளங்களை அழித்தல் இன்னொரு பக்கம் என்று செயல்படுகிறார்கள். மற்றொரு பக்கம் பிதித்தானிய காலனிய அடையாளங்களை அழிப்பது என புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப் படுகிறது. இராஜபாதை என்பதை “கடமைப் பாதை” எனப்பெயர் மாற்றப்படுகிறது. அதாவது “கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே” என்ற கீதையின் வாசகத்தை நினைவுபடுத்துகிறார்கள்.

மெக்காலே கல்வி முறையான மேலை நாட்டுக் கல்வி முறை, இந்திய கல்வி முறையையும் கலாச்சாரத்தை சீரழித்து விட்டது என்று சொல்லி, தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் மாநிலங்களின் கல்வி உரிமைகளைப் பறிப்பதுடன் கல்வியில் இந்தியை - சமற்கிருத்தைத் திணித்து கல்வியை அறிவியலுக்கு மாறாகக் காவிமயமாக்கும் வேலையைச் செய்கிறார்கள். தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை அனைத்திலும் ஊடுருவி கல்வியைக் காவிமயமாக்கி வருகின்றனர்.

ஒரு புறம் இந்துத்துவத்தை - அதன் மூட நம்பிக்கைகளை, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த பகுத்தறிவு வழி எழுத்தாளர்கள் - அறிஞர்கள் - செயற் பாட்டாளர்களான நரேந்திர தபோல்கர், எம்.எம்.கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, கவுரிலங்கேஷ் போன்றவர்களைக் காவிப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்கின்றனர். இன்னொரு புறம் 2018இல் மராட்டியத்தில் பீமா கே ரேகான் போரின் 200ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்றதற்காக ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லகா, வரவரராவ், ஸ்டேன் சாமி. சுதா பரத்வாஜ். வெர்னான் கன்சால்வஸ் போன்ற அறிஞர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் 16 பேரை பலவிதமான பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தும் அரசு பயங்கரவாதச் செயல்களை நிறை வேற்றுகின்றனர்.

இந்து ராஷ்ட்டிரத்திற்குகான அரசியல் அமைப்புச் சட்வரைவின் சுருக்கத்தை “தரன்சன்சாது”  என்கிற அமைப்பு 13.3.2022 அன்று வெளியிட்டுள்ளது. அதில் வாரணாசி இந்து ராஷ்டிராவின் தலைநகராக இருக்கும் என்றும் மநு உள்ளிட்ட இந்து சாத்திர  நூல்களே சட்ட நூல்களாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இசுலாமியர்கள் கிறித்துவர்கள் வாழலாம் ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது என்று அறிவித்­துள்ளது.750 பக்கங்கள் கொண்ட இந்து ராஷ்ட்டிரா அரசமைப்புச் சட்டம் 2023க்குள் எழுதி முடிக்கப்படும் என்று அவ்வமைபினர் அறிவித்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ் - இற்கு நேர் எதிரானக் கொள்கை யைக் கொண்டுள்ள பெரியாரியலாளர்களான நாம் நம்முடையக் கொள்கைகளை வென்றெடுக்க என்ன என்ன திட்டங்கள் வைத்துள்ளோம்? எப்படிச் செயல்படப் போகின்றோம்? என்பதை இந்தப் பெரியாரின் 144ஆம் பிறந்த நாளில் - சுயமரியாதை இயக்கம் தொடங்கிய 96ஆம் ஆண்டில் மீளாய்வுச் செய்ய கடமைப்பட்டுள்ளோம். பெரியார் வெற்றிப் பெற்று விட்டார் எனப் போலிப்பெருமை பேசி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில் பயனில்லை.

ஆர்.எஸ்.எஸ் -இன் இந்துத்துவ சித்தாந்ததை தமிழகத்தில் வேர்பிடிக்காமல் வீழ்த்துவோம்!

பாசிசப் பா.ச.க.வை ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கியெரியப் பாடுபடுவோம்!

தமிழகத்தின் தன்னாட்சி உரிமைகளுக்குப் போராடுவோம்!

பெரியாரின் கொள்கைகளை உரத்து முழங்குவோம்!

- வாலாசா வல்லவன்