தமிழ்நாட்டின் வரலாற்றில் 1916இல் தோற்று விக்கப்பட்டது பார்ப்பனரல்லாதார் கட்சி. 1926 இறுதியில் தோற்றம் பெற்றது சுயமரியாதை இயக்கம். இந்த இரண்டு அமைப்புகளும் முறைப்படி 1944இல் இணைந்தன. அதுவே திராவிடர் கழகம்.

28-10-1944 முதல் 16-11-1975 வரை 31 ஆண்டுகள் நான் திராவிடர் கழகத்தில் ஈடுபாட்டோடு பணியாற்றினேன். அதன்போக்கு திசைமாறிச் செல்வதாக 1971 ஏபிரலிலேயே, பலர் ஒன்று கூடித் தந்தை பெரியாரிடம் முறையிட்டோம். எங்கள் முறையீடு மிகச் சரியானது என 4-4-71 அன்றே பெரியார் கூறினார். அதை அப்படியே மேற்கொண்டு எடுத்துச் செல்ல மற்றெல்லோரும் தயங்கினர்; ஒதுங்கினார். என்னில் அந்த உணர்வு தேங்கிக் கிடந்தது.

6-1-1974இல் அந்த உணர்வை வெளிப்படுத்திட நான் விரும்பினேன். பெரியார் மறைந்தவுடன் காலில் அப்படி எதுவும் வேண்டாம் என்று என் நண்பர்கள் கூறினர். 1975 நவம்பர் 13இல் என் உணர்வுகளைத் திராவிடர் கழகத்தினர்க்கு முறைப்படி அறிக்கையாக வெளியிட்டேன். அதில் கண்டவற்றுக்கு விடை கூறாமல் என் பேரில் உள்நோக்கம் கற்பித்து, சொந்தக் கொடுக்கல் வாங்கலை ஒரு காரணமாகக் கூறிவிட்டு, 16-11-1975 அன்று என்னையும், பின்னர் மற்றும் சில தோழர்களையும் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேற்றினர்.

அப்போது முதலே திராவிடர் கழகத்தின் போக்கிலிருந்து நாம் மாறுபட்டோம். அப்படி மாறுபட்ட பலரும், 15-5-1976இல் முதன் முதலாகத் திருச்சியில் ஒன்று கூடினோம். அப்போது இருந்த அவசர கால நிலை ஆட்சியின் கெடுபிடியைப் பயன்படுத்தி, நம் ஆய்வுக் கூட்டத்துக்குக் காவல் துறை மூலம் தடை விதித்தனர்.

அதனை அடுத்து, 8-8-1976இல் சீர்காழி மா. முத்துச்சாமியின் இல்லத்தில் கூடினோம். நீண்ட நேரம் விவாதித்தோம். ‘பெரியார் சமஉரிமைக் கழகம்’ என்ற பெயரில் (பெ.ச.க) தனி அமைப்பைக் கண்டோம்.

அந்த அமைப்பு இன்று 34 ஆண்டுகளை முடித்து 8-8-2010இல் 35ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இது மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாகும்.

8-8-1976இல், தொடக்க நாள் அன்றே, நாம் சமதருமக் கொள்கையை’ ஏற்றுக் கொண்டோம்.

தந்தை பெரியாரின் வேலைத் திட்டங்களுள் ஒன்றான வகுப்புவாரி உரிமையை விகிதாசார அளவில் பெற்றிடப்பாடுபடுவது என்றும் முடி வெடுத்தோம்.

தமிழ்ப் பெருமக்களின் பேராதரவோடு, இந்த ஒரு வேலை திட்டத்தில் நான்கே ஆண்டுகளில் மாபெரும் வெற்றிகளை நாம் குவித்துள்ளோம்.

29-4-1978 முதல் 4-3-1982க்குள் நாம் இதற்காக எடுத்த முயற்சிகளும், குவித்த வெற்றிகளும் மகத்தானவை.

1.            பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசில் விகிதாசார இடஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையை 8-5-1978 அன்று இந்திய அரசிடம் முதன் முதலாக முன் வைத்தோம்.

2.            7-5-1978 இல் உ.பி. மாநிலப் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு உரிமை உணர்ச்சியைப் பற்ற வைத்தோம்.

3.            17-9-1978 முதல் 18-10-78 முடிய பீகார் மாநிலம் முழுவதிலும் இராம் அவதேஷ் சிங் உதவியுடன் பயணித்துப் பரப்புரை செய்தோம். 19-10-78 முதல் 31-10-78 முடிய பாட்னாவில் மாபெரும் சிறை நிரப்புப் போராட்டத்தை நடத்தினோம்.

4.            இதன் விளைவுகள் இரண்டு. ஒன்று: பீகார் மாநிலத்தில் முதன் முதலாக முதலமைச்சர் கர்ப்பூரி தாக்கூர். பிற்படுத்தப்பட்டோருக்குத் தனியாக 20ரூ ஒதுக்கீடு வழங்கி 10-11-78இல் ஆணை வெளியிடச் செய்தோம்.

5.            காகா கலேல்கர் அறிக்கையை அமலாக்க மறுத்த பிரதமர் மொரார்ஜி தேசாய், “இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழுவை” அமைப்பதாக, 20-12-1978இல் நாடாளு மன்றத்தில் அறிவிக்க முன் வந்தார். 1-1-1979இல் பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் (பி.பி. மண்டல்) தலைமையில் அக்குழு அமைக்கப்பட்டது.

நம் இவ்விரண்டு சாதனைகளும் உண்மையான தொரு புதிய வரலாற்றைப் படைத்தவை. எப்படி?

1. ‘பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசில் எப்படி இட ஒதுக்கீடு தர முடியும்?’ என்றே, 29-4-1978 முதல் 1982 வரையில் சில மத்திய அமைச்சர்களும், பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் நம்மிடம் வாதிட்டனர். இந்த நான்கு ஆண்டுகளிலும் புது தில்லியிலும், இராஜஸ்தானிலும், உ.பி.யிலும், பீகாரிலும் இடைவிடாது பரப்புரை செய்து இவர்களுக்குப் போதிய புரிதலை உண்டாக்கினோம்.

2. 1978 வரை வட இந்திய மாநில அரசுகள் பிற்படுத்தப்பட்டோருக்கு 1 விழுக்காடு கூட இட ஒதுக்கீடு அளிக்க வில்லை. அதை மாற்றி, 10-11-1978 முதல் வட மாநிலங்களில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட எல்லாம் நாம் செய்தோம்.

நம் அமைப்பில் பல இலட்சக்கணக்கில் உறுப்பினர்கள் இல்லை. நம்மில் பெரிய செல்வந்தர்கள் எவரும் இல்லை. ஆயினும் கட்சிக்குத் தம்மை முழுவதுமாக ஒப்படைத்துக் கொண்ட நூற்றுக்கணக்கான தோழர்களின் பேருழைப்பையும், தமிழக மற்றும் பீகார் மாநிலப் பொது மக்களின் ஆதரவையும் கொண்டே இவற்றை நாம் சாதித்தோம்.

தமிழ்நாட்டில் என்ன சாதனையைச் செய்தோம்?

தமிழ்நாட்டில் 1972 முதல் பிற்படுத்தப்பட்டோருக்கு 31ரூ மட்டுமே ஒதுக்கீடு இருந்தது. ‘31 விழுக்காடாக உள்ள இட ஒதுக்கீட்டை 60 விழுக்காடாக உயர்த்துங்கள்’ என்று அ.தி.மு.க. அரசிடம், 17-8-1979 இல் நாம் மட்டுமே கோரிக்கை வைத்தோம். அதற்கான சான்றுகளை 7-10-79இல் அ.தி.மு.க அமைச்சர் பண்ருட்டி ச. இராமச்சந்திரனிடம் சேலம் அ. சித்தய்யனும், நானும், தெளிவுபடுத்தினோம். அதன் நேரடி விளைவாகவே 1-2-80 முதல் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இவற்றை ஊரும் உலகமும் அறிய ஏற்ற வகையில் பரப்புரை செய்வது நம் நீங்காகக் கடமை. இவற்றுடன் கூட, இந்திய உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங் இடம் நாம் 25-1-1982இலும், 4-3-1982இலும் அளித்த விளக்கங்களை வைத்துத்தான். அவர் மண்டல் பரிந்துரையை மக்கள் அவையில் வெளியிட்டார். இவற்றை மக்களிடையே கொண்டு செல்ல ஒரே ஊடகமாக நமக்கு உள்ளது. “சிந்தனையாளன்” ஏடு மட்டுமே.

‘சிந்தனையாளன், ஒரு வார ஏடாக 17-8-1974இல் என்னால் தொடங்கப்பட்டது. இன்று 17-8-2010இல், 37ஆவது ஆண்டில் அடிவைத்திருக்க வேண்டும். ஆனால் இன்று 33ஆம் ஆண்டில்தான் அடியெடுத்து வைக்கிறோம். இன்று இது கட்சியின் அதிகாரம் வாய்ந்த மாத ஏடாக வெளிவருகிறது.

சிந்தனையாளன் இதழ் மூலம் வெளிச்சம் பெற்ற தமிழ் மக்களிடம் நாம் இடை விடாது சென்று, நம் ஏட்டுக்கு ஆதரவு திரட்டியிருந்தால், இடையில் தொய்வுகள் நேராமல் இன்று 37ஆவது ஆண்டை எட்டியிருக்க முடியும்.

35 ஆண்டுக்காலத்தில் நாம் இட ஒதுக்கீடு ஒன்றைப் பற்றி மட்டும் முயற்சி எடுக்கவில்லை.

1. தமிழ் வழிக்கல்வி எல்லா நிலையிலும் வேண்டும் என்கிற சிந்தனையைத் தமிழ் மக்களிடம் விதைத்திருக்கிறோம்.

2. 1981 முதல் முறைப்படி விவாதங்களை மேற்கொண்டு நாம் மார்ச்சிய - லெனினியக் கொள்கையினர் என்பதைத் தெளிவு பட நிலைநாட்டியிருக்கிறோம். “பெரியார் சமஉரிமைக் கழகம்” என்னும் பெயரை “மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி” என 13-3-1988இல் மாற்றம் செய்திருக்கிறோம். அதனை விளக்கிப் போதிய விவரங்களை ‘சிந்தனையாளன்’ வாயிலாகவும் நூல்கள் மூலமும் பரப்பியுள்ளோம்.

இந்திய சமுதாயத்தில் மார்க்சியம் வென்றெடுக்கப்படப் பெரியாரிய - அம்பேத்கரிய நெறியே சரியானது என்பதைப் பெரியார் - அம்பேத்கர் பற்றாளர்களுக்குப் புரிய வைத்திட எல்லாம் செய்துள்ளோம்.

3. தேசிய இனவிடுதலை, தமிழ்த் தேசிய இன விடுதலை, தமிழீழ விடுதலைக் கொள்களைத் தூக்கிப் பிடித்துத் தமிழகத்திலும் வெளி மாநிலங்களிலும் தேசிய இனவிடுதலைக் கொள்கை பரப்பப்பட்ட 1991 முதல் இணக்கமான முயற்சிகளை நாம் மேற்கொண்டுள்ளோம். இவற்றை அடுத்த கட்டத்துக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.

35ஆவது ஆண்டில், மா.பெ.பொ.க. 12 மாவட்டங்களில் மட்டும் கால் கொண்டிருப்பது போதாது. தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும், மாவட்டந்தோறும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டதாகச் செம்மையாக நம் கட்சி அமைக்கப்பட வேண்டும்.

இன்று 33ஆவது ஆண்டில் தட்டுத்தடுமாறி வெறும், 3000 படிகளாக உள்ள ‘சிந்தனையாளன்’ ஏடு, மிகவிரைவில் 10,000 படிகளாகவும்; 1000 படிகளாக உள்ள “PERIYAR ERA” ஆங்கில மாத ஏடு 3000 படி களாகவும் பெருக்கப்பட நம் தோழர்கள் வழிகாண வேண்டும்.

இவற்றை விரைவில் தொடங்கிடவும், தொடர்ந்து மேற்கொள்ளவும் ஆற்றல் மிக்க தோழர்கள் சிலர் நம்மிடையே உள்ளனர், இவர்களுள் இரண்டு மூன்று பேர் தாமாகவே முன் வந்து பொறுப்பேற்று, மாதந்தோறும் ஒரு பத்து நாள்கள் முழு நேரப்பணியாக மேற்கொண்டிட முன் வாருங்கள் எனக் கோருகிறேன்.

என்னிடம் நீங்கள் எதிர் பார்க்கும் பணிகளை முடிந்த வரையில் நான் செய்வேன்.

இயக்கத்துக்கும், ஏடுகளுக்கும் நல்ல ஏற்றத்தை உண்டாக்கிட ஏற்ற பணிகளை மேற்கொண்டிட தோழர்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு முன்வரவேண்டுகிறேன்.

திட்டமிட்டுச் செயலாற்றுவோம்! தீரம் மிக்க சாதனைகளைக் குவிப்போம்!

- வே.ஆனைமுத்து