தூங்கிக் கிடக்கின்ற
தமிழா
நீ துள்ளி எழுவது
எப்போது?

வரலாற்றுப் புனைவுகளில்
மயங்கிக் கிடப்பவனே
வரலாறு படைத்திட
மார்தட்டி எழுவது
எப்போது?

இரவைப் பகலாக்கிப்
பகலைச் செயலாக்கிப்
பன்முகத் திறன்களால்
உன்முகம் காட்டுவது
எப்போது?

அய்யப்பனுக்கு
இருமுடி சுமப்பாய்;
அவனே மெய்யப்பனென்று
நம்பி!

பழனிப் பஞ்சாமிர்தத்தில்
உள்ளது மகிமையென்று
பாதையாத்திரை போவாய்

திருப்பதி லட்டால்தான்
திருவிடமே வாய்க்குமெனத்
திருமலை ஏறுவாய்

ஆனைமுகத்தானால்
ஆகாதது ஏதுமில்லையென
அவன் சிலை செய்து
ஆழியில் கரைப்பாய்

கோடம்பாக்கத்தில் அரிதாரங்களால்தான்
கோடிகோடி சுபிட்சமெனப்
பாலாபிசேகம் செய்வாய்
அவர்களின் படங்களுக்கு!

அங்கே பார்!
காதலியோடு
தேனிலவைச் சுவைக்கப்
பலகோடி
ஒளிவருடங்களுக்கு அப்பால்
உள்ள கிரகத்தில்
இடம் தேடுகின்றார்கள்
மேலை நாட்டார்கள்

ஆரியர்கள் வந்தபோதும்
மொகலாயர்கள் வென்றபோதும்
வெள்ளையர்கள் கொள்ளையடித்தபோதும்
உனக்குள் தானே
சண்டை போட்டுக் கொண்டிருந்தாய்
குக்கல்களைப் போல!

பிரிட்டனில் தொழில்புரட்சி
நடந்தபொழுது
பஞ்சாங்கக் கட்டங்களில்
சுக்கிர திசையைத்
தேடியநீ இன்னும்
அவ்விழிவைத் தொடருகிறாய்
நீ தேடிக் கொண்டிருந்தாய்

ஈழத்துப் பிரபாகரனுக்கு
முன்னும் பின்னும்
இங்கொரு சேகுவாரா
தோன்றவில்லையே ஏன்?

சாமிகளின் அடிமையாய்
சனாதனத்தின் வாரிசாய்
இருப்பதைவிட
அறிவியலை வாளாக்கி
அறியாமையைத் தூளாக்கு!

- வெற்றியூர் வேலு சதானந்தம்

Pin It