மே நாள்
தொழிலாளர் வர்க்கத்தை அமைப்பாக்கித்
தெருவுக்கு வந்து போராடிய நாள்
மார்க்சு எங்கல்சு மூட்டிய தீ
மாபெரும் நெருப்பாய் மாறிய நாள்
வெண் கொடி குருதி தோய்ந்து
செங்கொடியாய் மாறிய நாள்
ஈரெட்டு மணி நேர
இடைவெளியில்லா உழைப்புக்கெதிராய்
ஓரெட்டு மணி நேர
வேலைக்கான கோரிக்கைக்காய்
ஆயிரத்து எண்ணூற்று எண்பத்தாறிலே
அமெரிக்காவின் ஒரு நகரினிலே
சிக்காக்கோவின் தெருக்களிலே
மே முதல் தேதியிலே
திரண்டெழுந்தனர் தொழிலாளர் வர்க்கம்
மிரண்டு போயினர் முதலாளி வர்க்கம்
இராணுவத்தின் துணை கொண்டு
அவிழ்த்து விட்டனர் அடக்கு முறையை!
சுட்டு வீழ்த்தினர் பலரை;
தூக்கிலிட்டனர் சிலரை!
இரத்தம் தோய்ந்த
போராட்டத் திருநாள்
பாட்டாளி வர்க்கம்
போற்றிடும் ஒரு நாள்
உருக்குலைய உழைக்கும்
உழைக்கும் மக்களின்
வணக்கத்துக்குரிய நாள்
ஏகாதிபத்தியத்திற்கு
ஏவல் பார்ப்பவர்களுக்கு
எதிர்ப்பைக் காட்டிடும் நாள்
பன்னாட்டு முதலாளிகளுக்குப்
பல்லக்குத் தூக்குபவர்களுக்குப்
பாடைகள் கட்டிய நாள்
மனித உரிமை மறுப்பெல்லாம்
மே நாளில் முழங்க வேண்டும்
மாந்த இனம் மீட்பு பெற
மார்க்சு எங்கல்சு சித்தாந்தம் வேண்டும்
விவசாயிக்குக்
கஞ்சித் தொட்டி
பன்னாட்டு முதலாளிக்கு
விளை நிலங்கள்
தனியாருக்குக்
கல்வி நிலையங்கள்
அரசுக்கு
டாஸ்மாக் கடைகள்
மண்ணின் மைந்தர்
சேரிக்குள்ளே
வந்தேறிகள்
நகருக்குள்ளே
தேசிய இனங்கள்
காட்டுக்குள்ளே
கொள்ளைக்காரர்கள்
பாராளு மன்றத்துக்குள்ளே
முரண்பாடுகளின்
தொகுப்பல்ல இவை
பொதுவுடைமைக்கான
சிந்தனைகள் இவை
சூத்திரனும்
தாழ்த்தப்பட்டவனும்
பாட்டாளி வர்க்கத்தின்
பங்காளிகள்
பார்ப்பனியமும்
இந்துத்துவாவும்
முதலாளி வர்க்கத்தின்
முகமூடிகள்
அடங்கி வாழ மறுப்பது
ஆதிக்கத்தை வேரறுப்பது
எத்தனை நாளடா பொறுப்பது
எதிர்க்காமல் ஏனடா வாழ்வது
அறியாமை இருள் அகலவேண்டும்
சிவப்பு ஒளி பாய வேண்டும்
குருதி உடலில்
கொதிக்க வேண்டும்
புரட்சி இந்தியாவில்
வெடிக்க வேண்டும்.