இலண்டன் நகரில் அய்ந்தில் ஒரு பகுதி பரப்பளவே உடைய கவன்டிரி நகரத்தில் அதிக எண்ணிக் கையில் சீக்கியர்களின் கோயில்களான-குருத்து வாராக்கள் உள்ன.இந்த நகரத்தில் வாழும் சிறு பான்மை இனத்தவர்களில்,சீக்கியரே அதிக எண்ணிக் கையில் வாழ்கின்றனர். அதனால் குருத்துவாராக்களும் அதிகமாக இருக்கின்றன என்று கருதிட இட முண்டு. ஆனால் சீக்கியரின் வாழ்வியலிலும் குருத்து வாராக்களிலும் சாதி அடிப்படையில் உயர்வு-தாழ்வு காட்டும் போக்கு இங்கு இருப்பது இங்கிலாந்து நாட்டின் வாழ்வியல் சூழலுக்குப் புதிரானதாகும்.

மார்ச்சு மாதத்தின் தொடக்கத்தில்,பிரபுக்கள் அவை,‘சாதி அடிப்படையில் வேற்றுமை பாராட்டுதல்’ என்பது இங்கிலாந்தில் இருக்கிறது என்பதற்குச் சட்ட ஏற்பு அளித்துள்ளது. 2010-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சமத்துவச் சட்டத்தில்  (Equality Act) பாகுபாடு காட்டப் படுவதற்கான அடிப்படையான கூறுகளில் ஒன்றாகச் சாதியையும் சேர்ப்பதற்குப் பிரபுக்கள் அவை ஒப்புதல் வழங்கியது.இங்கிலாந்தின் மக்கள் அவையும் இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டால், சாதி அடிப்படையில் கல்வியில், வேலைவாய்ப்பில், சமூக நலத் திட்டங்களை வழங்குவதில் வேறுபாடு காட்டுவது சட்டப்படித் தவறு என்ற நிலை ஏற்படும்.

“மரபினம், பாலினம், மதம் முதலான ஒன்பது பாதுகாக்கப்பட்ட கூறுகள் தற்போது சமத்துவச் சட்டத் தில் இடம்பெற்றுள்ளன.இவற்றுடன் இப்போது சாதியை யும் சேர்த்திட சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது”என்று எரிக் அவெபரி பிரபு கூறுகிறார்.

 இச்சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதில் இவர் முன்னோடி யாகச் செயல்பட்டார். கல்வி மூலமே சாதி உணர்ச் சியை ஒழித்துவிடலாம் என்று அரசு கருதியது; அதனால் சாதி ஒழிப்புக்குச் சட்டப் பாதுகாப்பு தேவையில்லை என்று அரசு கருதியிருந்ததாக எரிக் அவெபரி கூறுகிறார்.

இங்கிலாந்தில் இந்துமதத்தைச் சார்ந்த இரண்டு அமைப்புகள் சாதியைச் சமத்துவச் சட்டத்தில் சேர்ப்பதை எதிர்த்தன. சீக்கியர்களில் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் ஜாட் சாதியினர், சீக்கிய மதத்தில் சாதியே இல்லை என்று கூறி இதற்கு முட்டுக்கட்டை இட்டனர். இதனால் சமத்துவச் சட்டத்தில் சாதியைச் சேர்ப்பது என்பது தள்ளிப் போயிற்று.

இங்கிலாந்து நாட்டில் குடியேறிய போதிலும் இந்தியாவில் வாழ்வியலில் கடைப்பிடித்த, சாதிப் பாகுபாடு காட்டும் மனப்போக்கை விடாப்பிடியாகப் பின்பற்றிய தால்,அடுத்தடுத்த தலைமுறையினரிடமும் சாதிய மனப்பான்மை தொடர்ந்தது.

“1960களில் கவன்ட்ரி நகரில் சீக்கியர்களின் கோயிலான ஒரு குருத்துவாரா கட்டப்பட்டது. கீழ்ச்சாதிச் சீக்கியர்கள் அக்கோயிலில் அன்னியராக நடத்தப்பட்டனர்.அதனால்தான் கீழ்ச்சாதிச் சீக்கியர்கள் தங்களுக்கென ஸ்ரீ குரு இரவிதாஸ் சபா கோயிலையும்,மகரிஷி வால்மீகி கோயிலையும் உருவாக்கிக் கொண்டனர்” என்று கவன்ட்ரி நகரின் மேனாள் நகரத் தந்தையும் சீக்கியருமான இராம்லேக்கா கூறுகிறார்.

சாதி வெறுப்புணர்ச்சிக்கு எதிராகப் போராட நேரிட்ட தன் சொந்த அனுபவத்தை இராம்லேக்கா கூறுகிறார் :“1989ஆம் ஆண்டு, தெற்காசியர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியில் நகரமன்ற உறுப்பினர்தேர்தலில் நான் போட்டியிட்டேன்.அப்பகுதியில் வாழ்ந்த பார்ப்பனர்கள் நான் தலித் வகுப்பைச் சேர்ந்தவன் என்று அறிந்த பிறகு,எனக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தனர்.எனவே நான் அடுத்த தேர்தலில்,வெள்ளையர் அதிகம் வாழும் தொகுதியில் போட்டியிட்டேன்.”

இராம்லேக்கா தொழிற்கட்சியின் சார்பில் 23ஆண்டுகளாகக் கவன்ட்ரி நகர மன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். கவன்ட்ரி தவிர, இங்கிலாந்தில் 4,80,000 தலித்மக்கள் வாழ்கின்றனர். பர்மிங்ஹாம், லெயிசெ°டர், பெட்ஃபோர்டு, கிழக்கு இலண்டன், கவுத்ஹால் உள்ளிட்ட 22 இடங்களில் தலித் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.

மார்ச்சு மாதம் பிரபுக்கள் அவையில் சமத்துவச் சட்டத்தில் சாதியை ஒரு கூறாகச் சேர்ப்பது குறித்த விவாதம் நடந்த அன்று,மேலே குறிப்பிட்ட ஊர்களி லிருந்து தலித் மக்கள் பாராளுமன்றத்தின் முன் திரண்டனர்;தங்களுக்கு இழைக்கப்படும் சாதிசார்ந்த அநீதிகளை, அவமானங்களை எடுத்துரைத்தனர்.குருத்துவாராக்களில் பிரசாதம் வழங்கவும்,பூசை செய்யவும் மறுக்கப்படுபவதாகக் குமுறினர்.

“பள்ளிகளில் எங்கள் பிள்ளைகள் அச்சுறுத்தப்படுகின்றனர்; பணியிடங்களில் நாங்கள் பாகுபாடாக நடத்தப்படுகின்றோம்.வணிகத்தில் நாங்கள் நல்ல முன்னேற்றம் பெற்ற போதிலும் சாதி காரணமாக வெறுக்கப்படுகிறோம்”என்று தங்கள் அவலங்களை எடுத்துக் கூறினர்.

சட்டப் பாதுகாப்பு மூலம் மட்டுமே சாதியக் கொடு மையைத் தடுத்துவிட முடியாது. ஏனெனில் இங்கிலாந்தில்,உள்ளூர் மட்டத்தில் உள்ள அலுவலர்களுக்கோ,அல்லது நிருவாகத்தில் இருப்பவர்களுக்கோ, ‘சாதி’  என்ற சொல்லுக்குள் புதைந்துள்ள கொடூரத்தைப் புரிந்து கொள்ள முடியாது.

நாற்பது அகவையினரான அனிதா கவுர் என்ற பெண் பிரிட்டனிலேயே பிறந்தவர். லெயிசெஸ்டர் பகுதியில் வாழ்பவர்.சாதி அடையாளத்தை வெளிப் படுத்தாத தன்மையிலான ‘குடிப்பெயரை’ (Sur name) உடையவர். ஆயினும், சீக்கியர்களின் மன்றங்களி லும், கோயில்களிலும் அவர் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் என்று கேட்டுத் துன்புறுத்துகின்றனர். தன் மகளேனும் சாதியக் கழுகின் கொடிய கூர் நகங்களுக்குச் சிக்காமல் இருப்பதற்காக அவர் எடுத்த முயற்சிகளும் தோல்வியுற்றன.

“சீக்கிய மதம் சாதியமைப்பை ஏற்பதில்லை. சீக்கிய மத நூலான குருகிரந்த சாகிப்பில் பக்கம் 349இல், ஒருவருடைய சாதியைப் பற்றிக் கேட்காதே என்று கூறப்பட்டுள்ளது. ஆயினும் என் மகளை, ‘உன் சாதி என்ன?’ என்று மற்ற சீக்கிய மாணவர்கள் வினவுகின்றனர். ‘எனக்குத் தெரியாது’என்று என் மகள் கூறினால்,‘வீட்டுக்குப் போய் உன் பெற்றோரிடம் கேட்டுத் தெரிந்து வந்து சொல்’ என்று சொல்கின்றனர்” என்று, தாய் அனிதா கவுர் கூறுகிறார்.

சாதியக் கொடுமை பற்றிய செய்தி முதன்முதலாக 2010-ஆம் ஆண்டில்தான் பிரித்தானிய செய்தி ஏடுகளில் பரவலாக இடம்பெற்றது.விஜய்பெக்ராஜ்,அமரதீப் ஆகிய இருவரும் கணவன்-மனைவி ஆவர். இருவர்க்கும் அகவை 34. இவர்கள் பர்மிங்ஹாம் வேலைவாய்ப்புத் தீர்ப்பாயத்தில் நியாயம் கோரி விண்ணப்பித்தனர். விஜய் இந்து தலித்; அவர் மனைவி சீக்கிய ஜாட் சாதியினர்.இச்சாதிய உயர்வு தாழ்வே இவர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்பட்டதற்கான அடிப்படையாகும்.

ஒரு சட்ட ஆலோசனை நிறுவனத்தில் விஜய்,வணிகம் மற்றும் நிதி மேலாளராக ஆறு ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.அதே நிறுவனத்தில் அமரதீப் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.இருவருமே இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள்.இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதென முடி வெடுத்த பிறகுதான் ‘இந்து தலித்’என்கிற சாதி அடையாளம் தனக்கு இருப்பதை விஜய்யும், ‘சீக்கிய ஜாட்’ என்கிற சாதி அடையாளம் தனக்கு இருப்பதை அமரதீப்பும் உணரும் நிலை ஏற்பட்டது.

விஜய்யின் பெற்றோர் நாற்பது ஆண்டுகளுக்கு முன் பஞ்சாபிலிருந்து பிரிட்டனில் குடியேறினர்.“எங்கள் இருவரின் பெற்றோர்கள் எங்கள் திருமணத்திற்கு இசைவளித்துவிட்டனர். ஆனால் எங்கள் நிறு வனத்தில் உயர் அதிகாரிகளாக இருந்த மூவர் நாங்கள் திருமணம் செய்து கொள்வதற்குக் கடும் எதிர்ப்பைக் காட்டினர். அவர்கள் சாதியைச் சார்ந்த அமரதீப், கீழ்ச் சாதிக்காரனான என்னைத் திருமணம் செய்துகொள் வதை அவர்களால் ஏற்க முடியவில்லை. அதனால் அமரதீபத்தை அழைத்து, நான் பிறவியிலேயே கீழான வன் என்று கூறி என்னைத்  திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று எச்சரித்தனர். என்னுடைய சாதி, ஏவல்,வேலை செய்வதற்கென்றே கடவுளால் படைக்கப்பட்ட சாதி என்பதற்கான சாத்திர ஆதாரங்களை எனக்கு மின் அஞ்சல் வழியாக என்னுடைய உயர் அதிகாரிகள் எனக்கு அனுப்பினார்கள்”என்று விஜய் தீர்ப்பாயத்திற்கு அளித்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விஜயை வேலையிலிருந்து நீக்கினார்கள். உயர் அதிகாரிகளின் அச்சுறுத்தல்களுக்கும் கொடுமைகளுக்கும் அஞ்சி அமரதீப் தன் வேலையை விட்டு விலகினார்.

இங்கிலாந்தில் சாதிக்கு எதிரான கண்காணிப்பு அமைப்பைச் சேர்ந்த சத்பால் மம்மும் என்பவர் விஜய் வழக்கில் ஒரு சாட்சியாகத் தீர்ப்பாயத்தில் சாதியத்தின் கொடுமைகள் குறித்து விளக்கமளித்தார். ஆனால் அன்று மாலை அவர் தன் வீட்டிற்குத் திரும்பிய போது, வீட்டின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.

இங்கிலாந்தில், சாதிப்பாகுபாடும், கொடுமையும் உண்மையில் இருக்கிறதா என்பது திட்டவட்டமாக அரசுக்கு தெரியவில்லை என்ற காரணத்தால்தான், சாதிய ஒடுக்குமுறையைத் தடுப்பதற்கான சட்டப் பாதுகாப்பை உருவாக்குவதில் அரசு தயக்கம் காட்டி வந்தது. அரசின் சமத்துவத்துக்கான அலுவலகம்,சாதிப் பாகுபாடு பற்றிய நிகழ்வுகளின் விவரங்களைத் திரட்டியது. 2010 திசம்பர் மாதம் இதை ஓர் அறிக் கையாக வெளியிட்டது. சாதி வேற்றுமை பாராட்டப்படு வதைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்கும் சட்டம் தேவை என்று இந்த அறிக்கை வலியுறுத்தியது.

சாதியமைப்பின் வேர்கள் இந்து மதத்தில் இருக்கின்றன.ஆயினும் இங்கிலாந்தில் சீக்கிய சமூகத்தில் எளிதில் அசைக்க முடியாத அளவுக்குச் சாதி உணர்ச்சி மேலோங்கியுள்ளது. மேல்சாதியினர் எனத் தங்களைக் கருதும் ஜாட் சீக்கியர்கள் கீழ்ச்சாதிகள் எனப்படும் இரவிதாச மற்றும் வால்மீகி சீக்கியர்களை இழிவுபடுத்திய -கொடுமைப் படுத்திய எண்ணற்ற நிகழ்ச்சிகள் பதிவாகியுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ‘தலித் ஒற்றுமை இணையம்’ என்கிற  அமைப்பு கோயில்கள், பணியி டங்கள், அரசியல், உடல் நலவாழ்வு சேவைகளைப் பெறல், கல்வி முதலானவற்றில் சாதி காரணமான ஒதுக்கல்கள்,ஒடுக்குமுறைகள் குறித்து ஆராய்ந்தது. அதை அறிக்கையாக வெளியிட்டது.அந்த அறிக்கைக்கு அவ்வமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பி னருமான ஜெரிமி கோர்பைன் என்பவர் ஒரு முன்னுரை எழுதினார். அதில் அவர்,“சாதியமைப்பும் உணர்ச்சியும் இந்தியர்கள் வழியாக இங்கிலாந்துக்கு இறக்குமதி யானது. அதனால் இங்கிலாந்தில் வாழும் தெற்காசிய மக்களிடையே பிறவியில் உயர்வு-தாழ்வு, புனிதம்-தீட்டு என்கிற கருத்தோட்டங்கள் வாழ்வியல் நடை முறைகளாக உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கோர்பைன் இந்தியன் எக்ஸ்பிரஸ்செய்தியாளரிடம்,“நான் மத்திய இலண்டன் பகுதியில் உள்ள ஒரு தொகுதியிலிருந்துநாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். என்னுடைய தொகுதியில் சாதி வேற்றுமை பாராட்டல் எனும் போக்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வெளியில் மற்ற பல இடங்களில், மனித உரிமைகளைக் கடுமையாக மீறுகின்ற வகையில் சாதியக் கொடுமைகள் உள்ளன.எனவே பாதிக்கப்படு வோர்க்குச் சட்டப் பாதுகாப்பு அளிப்பதன் மூலம்தான் சாதியக் கொடுமையைக் கட்டுப்படுத்த முடியும்”என்று கூறினார்.

(இலண்டனிலிருந்து ஷாலின் நாயர் எழுதிய கட்டுரை. நன்றி: “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்”, 26.3.2013, புதுதில்லி பதிப்பு; தமிழாக்கம் க.முகிலன்)

Pin It