இந்த நாட்டில் அரசியல் புரட்சி என்பதாக ஒன்று, சரித்திரம் தெரிந்த காலந்தொட்டு நடந்துவரவில்லை.

தோழர்களே! புராணங்களில்கூட அரசியல் காணப்படுகிறது. கந்தபுராணம் இருக்கின்றது. அதில் சூரபத்மன் அரசாண்டு இருக்கின்றான். பாகவதத்தில் விஷ்ணு, பத்துக் கடவுள்களாக அவதாரம் எடுத்தான். அந்த 10 அவதாரங்களும் 10 அரசர்களைக் கொல்லு வதற்கே ஆகும். அவர்கள் இராவணன், இரணியன், இரண்யாட்சதன், மாபலி முதலானவர்களைக் கொன்று இருக்கிறார்கள். அப்படி அவதாரம் எடுத்த புராணக் கடவுள்கள், புராண கால அரசர்களை ஒழித்தது அரசியலுக்காக அல்ல; சாதிக்காக ஆகும். அத்தனை இராஜாக்கள் பண்ணிய காரியங்களும் ஒரு சாதியாரை - அதாவது தேவர்களைக் கொடுமை பண்ணினார்கள் என்பதே!

அனைத்தும் சாதிப் போராட்டமே!

இந்தத் தேவர்கள் எத்தனை பேர்? இன்றையப் பார்ப்பனர்கள் போல 100க்கு 2, 3 பேர்களே! ஆனால், அசுரர்கள் என்பவர்கள் 100-க்கு 97 பேர்கள். இந்த 97 பேர்கள் மீது 100-க்கு 3 பேராக உள்ள தேவர்களால் சுமத்தப்பட்ட பழியும் அதற்காக அவர்களை ஒழித்ததும் அரசியல் ஆகிவிடுமா? அது சாதிப் போராட்டமேயாகும்.

அடுத்து, சரித்திர காலத்தை எடுத்துக்கொண் டால், நமக்குக் கேடான ஆட்சியும், பார்ப்பனனுக்கு நன்மையான ஆட்சியுமே நடந்து வந்திருக்கின்றது. அதன் காரணமாக தேவாசுரப் போராட்டம் நடைபெற வில்லை. அந்த அரசர்கள் எல்லாம் பார்ப்பானுக்கு அடிமையாக இருந்து, அவனுக்குத் தொண்டு செய்வதே மேலான புண்ணியம் என்று கருதி ஆண்டு வந்தார்கள். பார்ப்பானுக்குப் பிழைக்கக் கோவிலும் மானியமும் வேதபாடசாலையும் ஏற்படுத்தி, அவர்கள் ஆதிக்கத்தை வளரச் செய்யப் பாடுபட்டார்களே ஒழிய, நம் மக்களின் நலனிலோ கல்வியிலோ அக்கறை காட்டவில்லை.

அடுத்து, முஸ்லீம்கள் இந்த நாட்டை ஆண்டார்கள். அவர்களும் பார்ப்பானுக்கு வாய்க்கரிசி போட்டுவிட்டுத் தங்கள் ஆட்சியை நடத்திக் கொண்டு போனார்களே ஒழிய, இந்த நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை.

வெள்ளையரின் துரோகம்!

அடுத்து, அறிவு வளர்ச்சி அடைந்த வெள்ளைக் காரன் 200 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தும் - நம் நலனிலோ, கல்வியிலோ அக்கறை செலுத்தாமல், பார்ப்பானுக்குக் கல்வி, உத்தியோகம், பதவி முதலியன பெற வாய்ப் பளித்து வந்தானே ஒழிய, நம்மைப் பற்றி கவலைப் படவில்லை.

அடுத்து, காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டது. காமராசர் ஆட்சிப் பொறுப்புக்கு வரும் வரையில் எவனும் இந்நாட்டு மக்களின் நலனில் அக்கறை காட்டாமல், பார்ப்பானுக்கே, பார்ப்பான் உயர்வுக்கே, பார்ப்பான் வாழ்வுக்கே - பாடுபட்டு வந்தார்கள்.

தோழர்களே! சேரன், சோழன், பாண்டியன் காலம் முதல் காமராசர் பதவிக்கு வரும் முன்பு வரையில், எவராவது 100-க்கு 97 பேராக உள்ள இந்த நாட்டு மக்களைப் பற்றிக் கவலை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள் என்று சொல்ல, ஒன்றும் இல்லை.

ஆதாரம் : “விடுதலை”, 6.4.1961