annaimuthu 300நான், 21-6-2014 அன்று 90ஆம் அகவையைத் தொடுவேன். 90 ஆண்டுகளில் 13-1-1974இல் சேலத்தில் செத்துப் பிழைத்தேன். கோவையில் 25-2-2011இல், 4 மணி நேரம் உணர்வற்ற பிணம் போல் ஆகி, சூலூர் தோழர்களால் காப்பாற்றப்பட்டேன்.

என் ஊரில் உள்ளவர்களில், ஒரு நடுத்தர வசதி படைத்த வேளாண் குடும்பத்தில் நான் பிறந்தேன். என் ஊரில் அரசுப் பள்ளியோ, நிதி உதவி பெறும் பள்ளியோ இல்லாததால், என் தாய்வழிப் பாட்டியின் வளர்ப்பில் 9 ஆண்டுகள் இருந்தேன். 1942இல் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.

7ஆம் வகுப்பில் படித்த நாள் முதற்கொண்டு, ஆசிரியர் ந.கணபதி அவர்களால் புரிதல் பெற்றநான், “பார்ப்பனப் புரோகிதம்”, “பார்ப்பான் படைக்கிற கோவில்” புறக்கணிப்புப் பரப்புரை செய்தேன். 1943 வரையில் இராமலிங்க அடிகள் வழியைப் பின்பற்றினேன்.

அதனால் நான் பெற்ற பயன்கள்: (1) மதுக்குடி இன்மை, (2) சூது (சீட்டாடுதல்) மறுப்பு, (3) பிறர் மனை நயவாமை. இவற்றில் இன்றுவரை உறுதியாக உள்ளேன்.

தூக்கம் வராமல் தடுத்திட வேண்டி மூக்குப் பொடி போடுவதைத் திருமுதுகுன்றத்தில் 1953இல் பணி யாற்றிய போது பழகினேன். இன்றுவரை அதைத் தவிர்க்கமுடியவில்லை.

28-10-1944இல் பரமத்தி வேலூரில் பெரியாரின் சொற்பொழிவை முதன்முதலாகக் கேட்டேன்.

1953 முதல் 1957 வரையிலும்; பின்னர் 1960-62 இலும் பெரம்பலூர் வட்டத்தைத் திராவிடர் கழகக் கோட்டையாக உருவாக்கும் பணியைத் தோழர்களின் ஒன்றுபட்ட ஒத்துழைப்புடன் மிகத்திறம்படச் செய்தேன். பெரியாரால், சென்னை கடற்கரைப் பொதுக் கூட்டத் தில், ‘பெரம்பலூரைப் போல் பணியாற்றுங்கள்’ என்று குறிப்பிடுகிற அளவுக்குத் தோழர்களுடன் பணியாற்றி னேன். அப்படிப்பணியாற்றியவர்களுள், அந்தூர் கி.இராமசாமியும், நானுமே உள்ளோம்.

1957, 1962, 1967 தேர்தல்களில் காங்கிரசை ஆதரித்து திராவிடர் கழகம் பணியாற்றியது. பிந்தைய இரண்டு தேர்தல்களிலும் திருச்சி மாவட்டத் தேர்தல் பணிகளை, பெரியார் சொற்படி, என்னிடம் திராவிடர் கழகம் ஒப்படைத்தது. மிகத் திறம்படச் செயலாற்றிப் பெரியாரின் நம்பிக்கையைப் பெற்றேன். இதனால் திருச்சி நகரிலுள்ள இரண்டு பேர் என் பேரில் பொச் சரிப்பு அடைந்தார்கள். நான் அதை வெளியில் சொல் லாமலேயே, “திருச்சி நகர மக்கள் குழு” என ஒன்றை நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கிச் செயல்பட்டேன்.

அந்த அமைப்பின் சார்பில், பெரியாரின் அறிவுரை யையும் கடுஞ்சொல்லையும் மீறி, வெறும் பெரியார் பக்தனாகி, ‘பெரியாருக்குச் சிலைநாட்டியே தீருவது’ என்று நானும் என் தோழர்களும் முடிவு செய்து, 17-9-1967இல், முதன்முதலாக, திருச்சியில் வெண்கலத் தாலான முழுஉருவச் சிலையை அமைத்தோம். அந்தத்தீய நோய் இன்று கண் மண் தெரியாத அளவுக்குத் தமிழ்நாட்டில் பரவிவிட்டது.

“திருச்சி நகர மக்கள் குழு”, பெரியாரிடம் சிலை வைத்த இடத்தை ஒப்படைத்த பிறகு கலைக்கப்பட்டது.

அடுத்து, 7-3-1970இல் தந்தை பெரியாரை வைத்து, “திருச்சி சிந்தனையாளர் கழகம்” தொடங்கினோம். செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபோலவே பேசுவோம்; உள்ளும் புறமும் ஒன்றித்தே செயல்படுவோம். அதனால்தான் “பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள்” என்னும் நூலை, பல்வேறு துன்பங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும், எகத்தாளத்துக்கும் இடையே வெளியிட்டு ஒரு மாபெரும் செயலை நிறைவேற்ற முடிந்தது.

என் பொதுவாழ்வில் இன்பம் சேர்த்த காலம் அதுமட்டுமே.

1-7-1974இல் வெளியிடப்பட்ட “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” மேலும் 60 விழுக்காடு புதிய சேர்க் கையுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு, 2010 மார்ச்சு 23 அன்று பெரியார்-நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக் கட்டளை வெளியிடப்பட, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியினரும், சூலூர் பாவேந்தர் பேரவையினரும் ஆற்றிய பங்கு ஒரு மாபெரும் செய லாகும். ரூபா ஒரு கோடிக்கு மேல் முன்பதிவு செய்த பெருமை இவர்களுக்கே உரியது.

இவ்வளவு பணிகளுக்கும் என்குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு நல்கினர். நிற்க.

பெரியாரின் எழுத்துக்களையும் சொற்பொழிவுகளை யும் மறுபதிவு செய்கிற ஒரு பணியை எந்த அளவுக்குச் செய்வதாலும்-அவற்றைப் பரப்புவதனாலும் மட்டும் பெரும்பயனோ, கொள்கையில் வெற்றியோ வந்து சேராது.

இது சரியான முடிவே. ஏன்?

மகாத்மா புலேவும், தந்தை பெரியாரும், மேதை அம்பேத்கரும் விரும்பிய வருண ஒழிப்பு, உள்சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதியப் பழக்க வழக்க ஒழிப்பு என்பவற்றில்-வருணம் மாறித்திருமணம் செய்வது, உள்சாதி மாறித் திருமணம் செய்வது இவற்றுக்கு மட்டுமே, இன்றைய அரசமைப்பில் தடை இல்லை.

வருணப்படி மட்டுமே மடாதிபதிகளாகவும், உள்சாதி வரிசைப்படியே மடாதிபதிகளாகவும் வர, இன்றைய அரசமைப்பில் கெட்டியான பாதுகாப்பு உண்டு. இது உடைக்கப்படவே இல்லை. இத்திசை நோக்கி நாம் பயணிக்கவே இல்லை.

ஒரு செங்கல்லையும், கற்சிலையையும், அய்ம்பொன் சிலையையும் நட்டுவைத்து வணங்குவது காட்டாண்டித் தனம் என்பது நம் கொள்கை.

ஆனால் அவை வணங்கப்பட உரிமை உண்டு என்பதற்குச் சட்டத்தில் கெட்டியான பாதுகாப்பு உண்டு.

“கற்சிலையானது, சொத்து வைத்துக் கொள்ளு வதைப் பொறுத்தவரையில் மட்டும், அது ‘சட்டப்படி யான ஒரு மனிதனாக மாறிவிடுகிறது, (JURIDIC

PERSON)” என்றே சட்டத்தில் தெளிவாக இருக்கிறது.

இவற்றின் பொருள் என்ன?

அரசுதான் - அதற்கான அரசமைப்புச் சட்டமும், உரிமை இயல்சட்டமும் தான் பெரியாரின்-அம்பேத் கரின் குறிக்கோள் நிறைவேற்றத்துக்கு முட்டுக்கட்டை களாக-எதிரிகளாக உள்ளன என்பதுதான்.

இதை ஒவ்வொரு பெரியாரிய-அம்பேத்கரியத் தொண்ட ருக்கும் முழுமையாக எப்போது புரியவைப்பது? கோடிக் கணக்கான மக்களுக்கும் என்றைக்குப் புரிய வைப்பது?

பெரியாரின், அம்பேத்கரின் தத்துவங்களைத் துறைபோகக் கற்றவர்களாகச் சில ஆயிரம் பேரை உருவாக்குவதன் வழியாகவும், அவர்கள் தொடர்ந்து இன்னமும் ஒருதலை முறைக்காலம் போராடி-மார்க்சு, லெனின், புலே, பெரியார், அம்பேத்கர் குறிக்கோளை நிறைவேற்ற ஏற்றதாக இன்றைய அரசமைப்பையும், அரசையும் அடியோடு மாற்றிட வழிகண்டால் ஒழிய, ஒருக்காலும் அவை நிறைவேறமாட்டா.

இந்தப் பணியைச் செய்யப் பலகோடி ரூபா நிதி வேண்டும்.

இந்தியா முழுவதையும் சுற்றிச் சுற்றி வந்து இந்தியா வை நாம் உலுக்க வேண்டும்; ஆட்டிப் படைக்க வேண்டும்.

இந்தியாவில் அமைந்துள்ள 29 மாநிலங்களில் வழங்கப்படும் எல்லா மொழிகளையும் சில நூறுபேர் கற்க வேண்டும். அம்மொழிகளில் பேச வேண்டும்; அம்மொழிகளில் அறிக்கைகளையும், நூல்களையும் வெளியிடவேண்டும்.

“பெரியார் ஈ.வெ.ரா. இராமசாமி-நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை” அத்தகைய தகுதி வாய்ந்த சில நூறு பேர்களை உருவாக்குவதற்காகவே பணி யாற்றுகிறது. இது ஒரு நீண்டகாலப் பணி.

இந்நிலையில், என் முன்னுள்ள உடனடிப் பணிகள் இரண்டு.

1.தந்தை பெரியாரின் முழு வரலாற்றை உருவாக்குவது. இப்போது, 2014 ஆகத்தில் இரண்டாம் தொகுதியை எழுதி முடிப்பேன்.

2.பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, 17-9-2014 முதல் 31-10-2014 முடிய 45 நாள்கள் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள விழை கிறேன்.

இதற்கு இப்போதே சில தோழர்களேனும், ஆயத்த மாக வேண்டுகிறேன்.

3.2015 பிப்ரவரிக்குள் மூன்றாவது தொகுதியை எழுதி முடிப்பேன்.

4.அடுத்து, விகிதாசார இடப்பங்கீடு தொடர்பாக, 2015 மார்ச்சு, ஏப்பிரல், மே 3 மாதங்கள் வடமாநிலங் களிலும்; பின்னர் படிப்பதற்காகச் சில  அயல்நாடுகளுக்கும் போவேன்.

இந்தப் பணிகளைச் செய்து முடித்த பின்னரே, பெரியார் வரலாற்றின் நான்காவதான, இறுதித் தொகுதியை எழுதி முடிப்பேன்.

என் உடல் நிலையைப் பாதுகாப்பதில் நான் கருத் தாக இருக்கிறேன். நான் எதிர்பார்க்கிற அளவுக்கு-அவரவர் வசதிக்கேற்ற தன்மையில், இப்பணிகளுக்கு என் தோழர்களும், நண்பர்களும், தமிழ்ப் பெரு மக்களும் மனமுவந்து ஒத்துழைப்பு நல்க வேண்டு கிறேன்.

இனி, என் 91 ஆம் பிறந்தநாளில் நாம் சந்திப்போம், உறுதியாக!

Pin It