16ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் வெற்றிபெற்று நரேந்திர தாமோதரதாஸ் மோடி இந்தி யாவின் 15ஆவது தலைமை அமைச்சராகப் (குல்சாரி லால் நந்தா 1964, 1966 இரண்டு தடவை இடைக் காலப் பிரதமராகப் பதவி வகித்தது நீங்கலாக) பதவி ஏற்றுள்ளார்.

இந்துமத இதிகாச-புராணங்களில்  மக்களையும் நாட்டையும் காக்க, கடவுள் பல அவதாரங்களை எடுத்தார் என்று கதையளப்பது போல், இந்தியா வேகமாக வளர்ச்சியடைவதற்கும், வல்லரசாக உருவாவதற்கும் நரேந்திரமோடி ‘அவதரித்திருக்கிறார்’ என்று இந்துத்துவ சக்திகளும் முதலாளித்துவ ஊடகங் களும் ஊளையிடுகின்றன. அத்துடன் இசுலாமியர் களுக்கு இரட்சகராகவும், கிறித்துவர்களுக்கு மீட்பரா கவும் இருப்பார் என்றும் மணல் கயிறு திரிக்கின்றன.

modi  tata company  600

நானோ மகிழுந்து தொழிற்சாலைக்கு டாடா போட்ட முதலீடு ரூ.3,000 கோடி - மோடி அரசு கொடுத்ததோ ரூ.30,000 கோடி

மே மாதம் நடந்துமுடிந்த மக்களவைக்கான தேர்தலின் மொத்த வாக்காளர்கள் 81.45 கோடியாகும். இவர்களில் 66.38 விழுக்காட்டினர் வாக்களித்தனர். இந்திராகாந்தியின் படுகொலைக்குப் பின் 1984 திசம் பரில் நடைபெற்ற அனுதாப அலைத் தேர்தலில் 64.01 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்ததே இதற்குமுன் உச்ச அளவாக இருந்தது. அந்தத் தேர்தலில் காங்கிரசு 414 இடங்களைக் கைப்பற்றியது.

பா.ச.க.வுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. 2014 தேர்தலில் பா.ச.க.வு க்கு 282 இடங்களும், காங்கிரசுக் கட்சிக்கு 44 இடங்களும் கிடைத்துள்ளன. பா.ச.க.வின் கூட்டணி கட்சிகள் 56 தொகுதிகளில் வென்றுள்ளன. 37 இடங் களைக் கைப்பற்றி அ.தி.மு.க. மக்களவையில் மூன்றா வது  பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

1996 முதல் நடுவண் அரசில் மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி இருந்து வந்தது. அதனால் காங்கிரசோ, பா.ச.க.வோ இனி நடுவண் அரசில் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க இயலாது என்று கருதப்பட்டது.

இத்தேர்தலில்  பா.ச.க.கூட 200-220 இடங்கள் கிடைக்கும் என்றே எதிர்பார்த்தது. ஏனெனில் 1998, 1999 தேர்தல்களில் 182 இடங்களில் வெற்றி பெற்றி ருந்தது. ஆனால் ‘272+’ என்பதே குறிக்கோள் என்று அறிவித்தது. மோடியின் ‘மாய வித்தையால்’ இந்த இலக்கை அடைந்து பா.ச.க. ஆட்சியில் அமர்ந்துவிட்டது.

2014இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கும் 1971இல் நடைபெற்ற தேர்தலுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. 1971 தேர்தலில் இந்திராகாந்தி, கட்சியில் செல்வாக்குடன் திகழ்ந்த காமராசர், நிஜலிங்கப்பா, சஞ்சீவி ரெட்டி, எஸ்.கே. பாட்டீல், அஜய்கோஷ் முதலான மூத்த தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு, தான் மட்டுமே தன்னேரிலாத தலைவர் என்ற நிலையை உருவாக்கிக் கொண்டார்.

அதேபோன்று நரேந்திரமோடி  இப்போது எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், யஷ்வந்த் சிங் போன்ற - தில்லி அரசியலை மய்யப்படுத்தி இயங்கிய தலைவர்களை ஓரங்கட்டினார். இந்திராகாந்தி 1971 தேர்தலில் முன்வைத்த ‘வறுமையை ஒழிப்போம்’ என்ற முழக்கம் மக்களை  ஈர்த்தது. அதேபோல் 2014  தேர்தலில் மோடி, ‘வளர்ச்சி, சிறந்த அரசாளுமை, உறுதியான-துணிவான தலைவர்’ என்று முன்வைத்த முழக்கம் மக்களை - குறிப்பாக இளைஞர்களைக் கவர்ந்தது.

ஊராட்சி மன்றத் தலைவராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ பதவி வகித்திராத நரேந்திரமோடி 2001 அக்டோபர் மாதம் குசராத் முதலமைச்சராக இருந்த  கேசுபாய் பட்டேலுக்குப் பதிலாக ஆர்.எஸ்.எஸ். இன் பரிந்துரையின் பேரில் பா.ச.க.வால் முதலமைச் சராக அமர்த்தப்பட்டார். அதற்குமுன் மோடி இராஷ்டிரிய சுயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பில் பல ஆண்டுகளாகத் தீவிரமாகப் பணியாற்றி வந்தார்.

அதனால் 2002 பிப்பிரவரி 28 அன்று குசராத்தில் கோத்ரா ரயில் பெட்டி எரிக்கப்பட்டதன் எதிர்வினையாக ஆர்.எஸ்.எஸ்.,  விசுவ இந்து பரிஷத், பா.ச.க. அமைப்புகளின் குண்டர்கள் மோடி அரசின் முழு ஆதரவுடன் குசராத்தில் இரண்டயிரத்திற்கு மேற்பட்ட முசுலீம்களைக் கொன்றனர். அவர்களின் உடைமைகள் கொள்ளையடிக் கப்பட்டன.

அல்லது எரிக்கப்பட்டன. சில இலட்சம் இசுலாமியர்கள் அகதிகளாக்கப்பட்டனர். இசுலாமியர் மீதான இத்தாக்குதலுக்கு இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் கடும் கண்டம் எழுந்தது. இதைக் கண்டிப்பவர்கள் ‘குசராத்தியர்களின் கவுரவத்தை’ இழிவுபடுத்துபவர்கள் என்று முரட்டுத்தனமாகப் பேசி தன்னை மேலும் வலிமைப்படுத்திக் கொண்டார். 2002இல் குசராத் சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தி வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சரானார்.

இசுலாமியரின் இரத்தக்கறை படிந்த தன் சட்டை யை மறைப்பதற்காக ‘குசராத்தின் வளர்ச்சி’ என்ற முழக்கத்தை 2007இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் முன்வைத்தார். ‘வளர்ச்சி நாயகன்’ என்ற படிமத்தை மக்கள் மனங்களில் பதிய வைப்பதற்காக நவீன தகவல் தொடர்பு முறைகளைக் கையாண்டார். இதற்காக  அமெரிக்காவின் மக்கள் தொடர்பு நிறுவனமான அப்கோ வோர்ல்டு வைடு (Apco World Wide) நிறுவனத்தை 2007 தேர்தலின் போதே பரப்புரையில் ஈடுபடுத்தினார்.

2010-ஆம் ஆண்டு மேற்குவங்க மாநிலத்தில் சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ‘ஒரு இலட்சம் ரூபாயில் ஒரு கார்’ என்கிற நானோ தொழிற்சாலை அமைக்க மேற்குவங்க இடதுசாரிகள் அரசு, உழவர்களின் நிலங்களைப் பறித்துக் கொடுத்தது. மம்தா பானர்ஜியும், மாவோயிஸ்டுகளும், உழவர்களும் இதைக் கடுமையாக எதிர்த்ததால் டாடா நிறுவனம் திகைத்துக் கொண்டிருந்த போது, ஒரே நாளில் நானோ மகிழுந்து தயாரிக்க அகமதாபாத்துக்கு அருகில் ஆயிரம் ஏக்கர் நிலத்தை முதலமைச்சர் மோடி டாடாவுக்கு அளித்தார். இந்த மகிழுந்து தயாரிக்க டாடா மோட்டார்S போட்ட முதலீடு ரூ.3000 கோடி மட்டுமே. ஆனால் மோடி அரசு ரூ.30,000 கோடியளவுக்கு நிதி உதவி, கடன், மின் சலுகை, வரித் தள்ளுபடி என்று வாரி வழங்கியது.

“வீடற்றவர்களாக நடுத்தெருவில் நின்ற எங்களுக்கு அடைக்கலம் அளித்துப் புரந்தவர் மோடி” என்று டாடா மோட்டார்ஸ் மேலாண்மை இயக்குநர் இரவிகாந், மோடியைப் புகழ்ந்தார். டாடாவும்,  “மற்ற மாநிலங் களில் தொழில் தொடங்க உரிமம் பெறுவதற்கு ஆறு மாதங்கள் ஆகும். ஆனால் குசராத்தில் மட்டும் இரண்டே நாள்கள் போதும்” என்று மோடியைப் பாராட்டினார். குசராத்தின் கடற்கரையையும் விளைநிலங்களையும் அரசு நிலங்களையும் அதானி, டாடா, அம்பானி சகோத ரர்கள் முதல் பன்னாட்டு  நிறுவனங்கள் வரையிலான அனைவருக்கும் மோடி வாரிக் கொடுத்தார்.

வரிச் சலுகை கள்-மானியங்களை அள்ளி வழங்கினார். கேட்பதற்கு முன் வாரிவழங்கும் வள்ளல் தன்மையும், சட்டம்-நெறிமுறை என எதையும் பொருட்படுத்தாமல் செயல் படும் வேகமும் இந்திய முதலாளிகளை “மோடியைத் தங்கள்  மீட்பராக - இரட்சகராக” நினைக்கச் செய்தன.

2012 திசம்பரில் நடைபெற்ற குசராத் சட்டப் பேரவைத் தேர்தலில் மோடி மாபெரும் வெற்றி பெற்று  மூன்றா வது தடவையாக முதலமைச்சரானார். உடனே இந்தியாவின் தலைமையமைச்சர் பதவியைக் குறி வைத்து அரசியல் சூதாட்டத்தில் காய்களை நகர்த்தினார்.

இந்தச் சூழலில் நடுவண் அரசில் இரண்டாவது தடவையாக ஆட்சியில் இருந்த மன்மோகன் அரசின் ஆதர்ஷ் வீடுகள் ஒதுக்கீடு 2-ஜி அலைக்கற்றை  ஒதுக்கீடு, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு, முதலானவற்றில் நடந்த ஊழல்கள், உணவுப் பண்டங்களின் கடுமையான விலை உயர்வு, ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடை யிலான நிதிப்பற்றாக்குறை அதிகரித்தல், அமெரிக்க டாலருக்கான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி ஆகியவற்றால் மக்களிடம் காங்கிரசு ஆட்சிக்கு எதிரான மனப்போக்கு வளர்ந்தது. 2010-11இல் 8.9 விழுக்காடாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2011-12இல் 6.7 விழுக்காடு, 2012-13இல் 4.5 விழுக்காடாகக் குறைந்தது.

மன்மோகன் அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் நிலக்கரி, இரும்பு, பாக்சைட் உள்ளிட்ட கனிம வளங்கள் முதலாளி களால்  கொள்ளையடிக்கப்படும் திட்டங்களுக்கு எதிராக மக்கள் திரள் போராட்டங்கள் பல இடங்களில் நடந்தன. இதனால் முதலாளிகள் மன்மோகன் அரசின் மீது எரிச்சலடைந்தனர்.

அதனால் இந்தியப் பெருமுதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் முரட்டுத் துணிச்சலுடன் முடிவெடுக் கும் ஆற்றல் கொண்டவராக நரேந்திர மோடியை அடையாளங்கண்டனர். எனவே 2013 சனவரியில் குசராத்தில் “அடலேறுவின் திமில் போல் குசராத்தின் வீறார்ந்த வளர்ச்சி இருக்கிறது” என்பதைக் காட்டிட பெருமுதலாளிகளின் மூன்று நாள்கள் மாநாட்டை நரேந்திர மோடி நடத்தினார்.

அடுத்த தலைமை அமைச்ச ராக மோடியை ஆட்சியில்  அமர்த்துவதே குறிக்கோள் என்று முதலாளிகளின் கூட்டம் முடிவெடுத்தது. அமெரிக்கா விலிருந்து வெளிவரும் ‘டைம்ஸ்’ கிழமை ஏடு தன் அட்டையில் மன்மோகன் படத்தைப் போட்டு ‘லாயக் கற்றவர்’  என்று எழுதியது. அதே ஏடு மோடி படத்தை அட்டையில் போட்டு ‘மோடி என்றால் நினைப்பதைச் செய்து முடிப்பவர்’ என்று எழுதியது.

modi 350

மோடியால் பெருமளவில் சலுகை பெற்ற பெருமுதலாளி கௌதம் அதானியுடன் மோடி

2013 செப்டம்பரில் நரேந்திர மோடிதான்  பா.ச.க.வின் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டார். கணை விடுபட்ட அம்புபோல் மோடி தேர்தல் களத்தில் பாய்ந் தார். 2013 செப்டம்பர் முதல் 2014 மே மாதம் தேர்தல் வரையிலான காலத்தில் மொத்தம் 5,829 நிகழ்ச்சி களில் பங்கேற்று உரையாற்றினார்.

இவற்றுள்  437 பொதுக்கூட்டங்கள், மோடியே நேரில் நின்று பேசுவது போன்று காட்சி தரும் முப்பரிமாண (3D) ஹோலோக் ராம் தொழிற்திறன் மூலமான 1350  நிகழ்ச்சிகள், 4000 தேநீர் விவாத வீடியோ நிகழ்ச்சிகள் அடங்கும். உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 450 நடமாடும் வீடியோ வேன்கள் மூலை முடுக்கெல்லாம் “மோடியால்தான் நல்லாட்சியைத் தரமுடியும்” என்ற செய்தியைப் பரப்பின.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ரூ.70 இலட்சம் வரை மட்டுமே செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் விதி வகுத் துள்ளது.ஆனால் கட்சிகள் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் செலவு செய்யலாம். கணக்குக் காட்ட வேண்டியதில்லை என்ற நிலை இருக்கிறது. இந்திய அரசு இத்தேர்தலுக்காக ரூ.3426 கோடி செலவிட்டுள்ளது.

அவுட்லுக் ஆங்கில ஏட்டின் (மே 26, 2014) ஆய்வின்படி, வேட்பாளர்களும் கட்சிகளும் ரூ.31,950 கோடி செலவிட்டுள்ளனர். இதில் பா.ச.க. மட்டும் ரூ.21,300 கோடி செலவு செய்துள்ளது. மற்ற கட்சிகள் ரூ.10,650 கோடி செலவிட்டுள்ளன.

அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் தேர்தல் நடப்பது போன்ற தன்மையில், 2014இல் இந்தியா வின் பிரதமர் தேர்தல் பரப்புரையை மோடி நடத்தினார். முதலாளியச் சந்தையின் எல்லாவகையான விளம்பர உத்திகளையும் விஞ்சும் வகையில் மோடி தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டார்.

வெகுமக்களின் ஊடகங் களில் மட்டுமல்லாமல், மற்ற கட்சிகள் நுழையாத  ப்ளாக், முகநூல், டுவிட்டர், யூட்யூப், கூகுள், ஹாண்ட்  அவுட்ஸ் போன்ற இணையதளக்களங்களில் தன்னை பறைசாற்றிக் கொண்டார். அதனால் இந்தியாவின் தேர்தல் வரலாற்றில் காங்கிரசு அல்லாத ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் பெருமையைப் பா.ச.க.வுக்கு மோடி வழங்கியுள்ளார்.

பா.ச.க. வெற்றி பெற்ற இடங்களில் 90 விழுக்காடு உ.பி., மகாராட்டிரம், பீகார், மத்தியப்பிரதேசம், குசராத், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ளன. நாடாளுமன்றத்தின் 543 இடங்களில் 45 விழுக்காடு இடங்கள் இம் மாநிலங்களில் இருக்கின்றன.

சுதந்தரப் போராட்ட காலத்தில் இந்திய தேசியக் காங்கிரசுக் கட்சி, சுதந்தரம் பெற்றதும் பாலாறும் தேனாறும் ஓடும் என்று கூறி மக்களை ஈர்த்தது.  சுதந்தர இந்தியாவின் முதல் தேர்தல் 1951 முதல் 1952 வரை 5 மாதங்கள் நடைபெற்றது. சோவியத் நாட்டின் முன்மாதிரியில் நேரு அய்ந்தாண்டுத் திட்டங்களைக் கொண்டு வந்தார்.

1955இல் ஆவடியில் நடை பெற்ற அகில இந்தியக் காங்கிரசு மாநாட்டில் சோசலிச மாதிரியிலான சமூகத்தை அமைப்பதே நோக்கம் என்று நேரு அறிவித்தார்.  அதன்பின் நிலச்சீர்திருத்தச் சட்டங்களைப் பல மாநிலங்கள் இயற்றின. பெரும்பாலும் அவை ஏட்டளவிலேயே   நின்றுவிட்டன. 

சோசலிசம் பேசினாலும் நேரு அரசும் முதலாளிகளுக்கும் பெருநிலப் பண்ணையாளர்களுக்கும் எவ்வகையிலும் தொல்லை தராத அரசாகவே செயல்பட்டது. பார்ப்பன-பனியா வர்க்கமே ஆளும் வகுப்பாக  நீடித்தது.

இந்திராகாந்தியும் அரசியலில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள ‘சோசலிசம், மதச்சார்பின்மை’ பற்றி முழங்கினார். நெருக்கடி நிலை காலத்தில் அரசமைப்புச் சட்டத்தில் இச்சொற்கோவையைச் சேர்த்தார்.

வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன. அந்நிய நாட்டுப் பொருள்களும் மூலதனமும் இந்திய நாட்டின் தொழில் வளர்ச்சியை விழுங்கிவிடாத வகையில் சில தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

மக்களின் அடிப்படைத் தேவைகளை   ஓரளவேனும் நிறைவேற்ற வேண்டும் என்ற தன்மையில் சில திட்டங்கள் தொடங்கப்பட்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகில் பெரும்பாலான நாடுகளில் இந்தியாவைவிட ‘மக்கள் நல அரசு’ கோட்பாட்டின் அடிப்படையிலான திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப் பட்டன.

ஆனால்,   1991 தேர்தலில் நரசிம்மராவ் தலைமை அமைச்சராகவும், மன்மோகன் சிங் நிதி அமைச்சரா கவும் பொறுப்பு ஏற்றபின், தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்பது தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டது.

அந்நிய மூலதனமும், பொருள்களும்  இந்தியாவில் குவிக் கப்படுவதற்கு எதிராக இருந்த தடைகள் நீக்கப்பட்டன. மேலும் மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம், மின்சாரம், சாலைகள் முதலானவற்றில் அரசின் மூலதனம் குறைக்கப்பட்டு, இவற்றில் தனியார் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டது.

ஆறு ஆண்டுகள் ஆண்ட வாஜ்பாய் ஆட்சியிலும் இதே கொள்கைதான் பின்பற்றப்பட்டது. இதனால் 1950-1980 காலத்தில் 3.5 விழுக்காடாக இருந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 1990களில் 5 விழுக்காடு, 2000-2010 காலத்தில் 9 விழுக்காடு அளவுக்கு உயர்ந்து அதன்பின் 5 விழுக்காடாகக் குறைந்துவிட்டது.

1984இல் இராசிவ் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் 2014 தேர்தல் வரையிலான முப்பது ஆண்டுகளில் ஏற்பட்டதாகக் கூறப் படும் நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்கு இந்தியப் பெருமுதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக் கும் போய்ச் சேர்ந்திருக்கிறது.

இந்த வகையில்  73 இலட்சம் கோடி உருபா அரசின்  வரிச்சலுகைகள், மானியங்கள் என்ற பெயரில் பெருமுதலாளியக் குழுமங் களுக்கு அரசு அளித்திருக்கிறது.

இந்தியாவின் 100 பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு  நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் (GDP) 25 விழுக்காடாக உள்ளது. அதேசமயம் 80 கோடி மக்கள் ஒரு நாளைக்கு ரூ.20க்கும் கீழ் செலவு செய்யும் வறிய நிலையில் வாழ்கின்றனர்.

அண்மையில் ஃபோர்ப்ஸ் (Forbes) வெளியிட்ட உலக அளவில் 100 கோடி டாலருக்கு மேல்   (ரூ.6000 கோடி) சொத்துடையவர்களின்  பட்டியலில் 55 இந்தியப் பணக்காரர் கள் இடம்பெற்றுள்ளனர்.

nature 350இவர்களில் முதலில் உள்ள பத்துப் பேர், அடுத்துள்ள 45 பேரின் சொத்துக்குச் சமமான சொத்து வைத்திருக்கிறார்கள். முதல் நிலை 10 பணக்காரர்களில் 7 பேர் வைசியர்; அடுத்த 45 பேரில் 19 பேர் வைசியர்; மற்றவர்கள் பார்ப்பனர், பார்சி, பிற மேல்சாதியினராவர். இந்தப் பார்ப்பன-பனியா-பணக் கார மேல்சாதியினர்தாம் வருணாசிரமத்தை - சாதிய மைப்பை  அப்படியே கட்டிக் காக்க வேண்டும் என்பதற் காக இப்போது பா.ச.க.வை - மோடியை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள்.

2004 தேர்தலில் வாஜ்பாயைப் பிரதமர்  வேட்பாளராக மீண்டும் அறிவித்து, ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற முழக்கத்தை பா.ச.க. முன்வைத்த போதிலும் தோற்றது.   ஏன்?

அப்போது இந்திய  முதலாளிகள் வாஜ்பாயைவிட மன்மோகன் சிங் தாராளமய-தனியார் மயக் கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்துவார் என்று கருதி மன்மோகனை ஆட்சியில் அமர்த்தினர்.

இப்போதுள்ள  சூழ்நிலைக்கு ஏற்றவர் - வல்லவர் நரேந்திரமோடி என்று முடிவு செய்து வெற்றி பெறச் செய்துள்ளனர். ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற, வாஜ்பாய் முழக்கம் தோற்றது; ஆனால் ‘குசராத் ஒளிர்கிறது’என்ற மோடியின் முழக்கம் இப்போது வென்றுள்ளது.

இது  இந்தியாவின் வெற்றி’ என்கிறார் மோடி. உண்மையில்   முதலாளிகளின் வெற்றி இது. எனவே நாடாளு மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் களின் சராசரி சொத்து  மதிப்பு 14.6 கோடி ரூபா. இவர்களில் 34 விழுக்காட்டினர் குற்றவழக்குகளில்   உள்ளவர்கள் (The Hindu,, 19.5.2014).

‘குசராத் ஒளிர்கிறது’ என்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதும், மக்கள் நலவாழ்வுக் கூறுகளில் குசராத் தமிழ்நாட்டைவிட எந்த அளவுக்குப் பின்தங்கி யுள்ளது என்பது இங்கு அட்டவணையாகத் தரப்பட் டுள்ளது.  

மக்கள் நலவாழ்வுக் கூறுகள்                                  தமிழ்நாடு                               குசராத்

1. பிறந்த குழந்தைகளின் இறப்ப(IMR)                     22                                             41

(உயிருடன்பிறக்கும்1000 குழந்தைகளில்)

2. 5 அகவைக்குட்பட்ட ஆயிரம்                     25                                             52

 குழந்தைகளுள் இறப்பு 

3. பேறுகாலத்தில் தாய்மார்கள்                               97                                            148

  இறப்பு (உயிருடன் பிறக்கும்

ஒரு இலட்சம் குழந்தைகளின்

தாய்மார்களில்)

4. குழந்தைகள் பிறப்பு விழுக்காடு                           1.8                                             2.4

5. ஊட்டச்சத்துக் குறைபாடுடைய                            31.1                                           51.7

குழந்தைகள் (%)

6. மருத்துவமனையில் நிகழும்                              89                                               62

மகப்பேறுகள் (%)

7. குழந்தைகளுக்குத் தடுப்பூசி                                90                                                45

                போடுதல் (%)

பா.ச.க.வுக்கு 90 விழுக்காடு நாடாளுமன்ற உறுப் பினர்களை வழங்கியுள்ள இந்தி பேசும்  மாநிலங்கள் குசராத்தைவிட மிகவும் பின்தங்கியுள்ளன. முதலில் இம்மாநிலங்களை,  தமிழ்நாடு, கேரளாவுக்கு இணை யாக மோடி ஒளிரச் செய்யட்டும்.

நிலம், காடு, மலை, கனிம வளங்கள், நீர் ஆதாரங்கள், முதலானவற்றைப் பெருமுதலாளிகள் கொள்ளையடிக் கும் வகையில் தனியார்மயம், தாராளமயம்  கொள் கையை நடைமுறைப்படுத்துவதே பா.ச.க., காங்கிரசு, மாநிலக் கட்சிகளின் கொள்கையாக இருக்கிறது.

இந்தக் கொள்ளையில் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், காவல் துறையினர், நீதித்துறையினர் உள்ளிட்டோர் பங்கு பெறுகின்றனர். எனவே அரசு என்பது முதலாளி களுக்கான அரசாகவே செயல்படுகிறது.

மக்கள் திரள் போராட்டங்கள் மூலம் இக்கொள்ளை யர்களின் கூட்டுச் சதியையும், இதற்குத் துணை போகும்   அரசு  கட்டமைப்பையும் தகர்க்காத வரையில் நேரு முதல் மோடி வரை உழைக்கும் வெகுமக்களை வஞ்சிக்கின்ற அரசாகவே இது நீடிக்கும்.

Pin It