இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றில் பல காலக்கட்டங்களில் பல இனங்களின் படையெடுப்பு தங்குதடையின்றி நடைபெற்றது. இன்றைய வட மாநிலங்களில் உள்ள இந்தி பேசும் மக்களின் தொன்மை நிலையைப் பற்றிப் பல ஆய்வாளர்கள் குறிப்பாக மானுட இயல் ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துகளை முன் மொழிந்துள்ளனர். ஒரு காலத்தில் திராவிடர்கள்தான் இந்தியத் துணைக்கண்டத்தின் முழுமைக்கும் பரவி யிருந்தார்கள். அவர்களை வட திராவிடர்கள் என்றும் அழைத்தனர்.

இன்றைக்கும்  மத்தியப்பிரதேசத்தில் சில பழங்குடியினர் பேசும் கோந்து போன்ற மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தவை என்று பல ஆய்வா ளர்கள் உறுதி செய்துள்ளனர். தென் பகுதியில் மனித நாகரிகம் தோன்றிய காலத்திலேயே தமிழ்மொழிதான் மூத்த மொழியாக இருந்தது. இம்மொழியில் இருந்து சிதைந்தவைதாம் கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு போன்ற மொழிகள் என்று சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதல் பொருளாதாரப் பேராசிரியர் கில்பர்ட் சிலேட்டரும், பல மொழிஇயல் அறிஞர்களும் கூறி யுள்ளனர்.

தென்னகம் இத்தகைய தனிச்சிறப்பைக் கொண்டபோதிலும், வடநாடு பல இனங்களின் படை யெடுப்புகளுக்கும், தாக்குதல்களுக்கும் உள்ளானது என்பதே உண்மையாகும்.

வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, 23.11.2008இல் எழுதிய கட்டுரையில் “ஆரியர்கள், ஆரியர் அல்லாதவர்கள், திராவிடர்கள், சீனர்கள் சாகா நதிக்கரையிலிருந்தும், ஹீணர்களும், பத்தான்களும், மொகலாயர்களும் ஒரு உடலுக்குள் பல உறுப்புகளாக இங்கே ஒருங்கிணைந்தார்கள்” (What Nehru Owed to Tagore? The Hindu, 23.11.2008)) என்பது போன்ற பல வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டியுள்ளார்.

இத்தகைய பல்வேறு இனக்குழுக்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் நுழைந்தது பற்றி கவிஞர் தாகூர்.

யார் அழைத்து வந்தார்கள் யாருக்கும் தெரியாது!

பல ஆறுகள் நுழைவது போல, பல்வகை மனிதர்கள் வந்தார்கள்!

ஓய்வறியாத அலைபோல தெரியாத இடங்களிலிருந்தும் வந்தார்கள்!

ஒரு குகைக்குள் இணைந்தார்கள்!

என்று  இந்தியாவின் பன் முகத்தன்மைப் பற்றி அழகுறக் குறிப்பிட்டார்.

இதை ஒட்டிதான் பொருளியல் அறிஞர் அமர்தியா சென், தனது ‘வாதிடும் இந்தியன்’ என்ற நூலில், ‘இந்தியா என்பது பெருமளவில் வேறுபாடுகளையுடைய பல தனித்தன்மைகள் மிக்க குறிக்கோள்களையும், மிகப் பெரிய அளவில் முற்றிலும் வேறுபட்ட நம்பிக்கைகளையும், பல கோணங்களில் ஓர் உண்மையான கருத்து விருந்தளிக்கக் கூடிய ஒரு நாடாக உள்ளது’ (India is an immensely diverse country with many distinct pursuits, vastly disparate convictions, widely divergent customs and a veritable feast of viewpoints. The Argumentative Indian, by Amartya Sen, preface)என்று  கூறியுள்ளார்.

இந்தியா ஒரு  நாடா? அல்லது பல நாடுகள் கொண்ட ஒரு  துணைக் கண்டமா? என்பதைப்  பற்றிய  ஆய்வுகள்  தொடர்ந்து  வந்த  வண்ணமே  உள்ளன. வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, ‘காந்திக் குப் பிறகு இந்தியா’ என்ற நூலின் முன்னுரைக்கு ‘இயற்கையாக அமையாத நாடு’ (Unnatural Nation) என்று தலைப்பிட்டுள்ளார்.

 1857ஆம் ஆண்டு ‘சிப்பாய்க் கலகத்திற்குப்’ பிறகு இந்தியத் துணைக்கண்டத்தில் தனது நேரடி ஆட்சியை இங்கிலாந்து அரசு கொண்டு வந்தது. புதிய மாகாணங்கள், மாவட்டங்கள் உருவாக் கப்பட்டன. அறிவு, ஆட்சியியல் திறமைகள் கொண்ட இந்திய ஆட்சிப்பணியினர் (ICS)) நிர்வாகத்தை மேற் கொண்டனர். நீர்ப்பாசனத் துறை, காட்டுவளத் துறை, காவல் துறை ஆகியத் துறைகள் உருவாக்கப்பட்டன. இரயில்வே இணைப்புகள் உருவாக்கப்பட்டன.

 1888இல் இந்தியாவினுடைய வைஸ்ராய் ஆலோசனைக்குழு உறுப்பினராக இருந்த ஸ்டிராட்சி, ஓய்வுக்குப் பிறகு தனது இந்திய அனுபவங்களைக் கேம்பிரிட்ஜ் பல் கலைக்கழகத்தில் சொற்பொழிவுகளாக நிகழ்த்தினார். அது ‘இந்தியா’ என்ற தலைப்பில் நூலாக வெளியானது.

இந்நூலில் ஒரு முதன்மையான கருத்து குறிப்பிடப்பட்டுள்ளது. ‘இந்திய நாடுகளுக்கிடையே காணப்படும் வேற்றுமை அய்ரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டால் அய்ரோப்பாவில் இருப்பது மிகக் குறைவாகும்... இன, மொழி, மத வேறுபாடுகள் மிகப் பெரிய அளவில் இந்தியாவில் உள்ளன...

பழங்காலத்தில் இந்தியா என்ற  தேசமோ  அல்லது  நாடோ  இல்லை. எதிர்காலத்திலும்   ஒன்று   இருக்கப்  போவதுமில்லை’(The differences between the countries of Europe were much smaller than those countries of India... In India the diversities of race, language and religion were far greater... There was no Indian nation or country in the past; nor would there be one in the future - India After  Gandhi : The History of the World’s Largest Democracy, p. (iii). இத்தகைய பதிவுகளைக் குறிப்பிட்டுவிட்டு, ஸ்டிராட்சியின் கருத்தை வரலாற்றுத் தீர்ப்பு என்று குகா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியத் தேசியக் காங்கிரசை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்த வர்களில் ஒருவரான ஹுயும் (A.O.Hume) என்ப வரும், ஸ்காட்லாந்து பெற்றோருக்குப் பிறந்தவர் என்று குறிப்பிடுகிறார்.

இயற்கையாக அமையாத இந்திய நாட்டிற்கு விடுதலைப் பெற்றுத் தந்த இயக்கமான காங்கிரசும் அந்நியர்களால் உருவாக்கப்பட்டது என்பது தான்  வரலாற்று உண்மையாகும்.

1930இல் வின்சென்ட் சர்ச்சில் இங்கிலாந்து நாட்டில் ஆற்றிய ஒரு சொற்பொழி வில் ‘இந்தியர்களுக்கு  ஆட்சிப் பொறுப்பை அளித்தால் அது பார்ப்பனர் கைக்கு போய் சேரும். இது கொடுமை யான நிகழ்வாகவும், அநீதியான புறக்கணிப்பாகவும் அமைந்துவிடும்’ (to abandon India to the rule of bramins (who in his opinion dominated the Congress Party) would be an act of cruel and wicked negligence, p.xv) என்று குறிப்பிட்டார்.

தந்தை பெரியார் 1925 இல் காங்கிரசுக் கட்சியை விட்டு விலகி, பார்ப்பனர்கள் கையில் காங்கிரசு இருப் பதைiயும், இடஒதுக்கீடு, சமத்துவக் கொள்கைக்கு எதிராகப் பார்ப்பனர்கள் நடந்து கொள்வதையும் தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் எடுத்துரைத்தார் என்பது குறிப் பிடத்தக்கது.

இந்தியா இயற்கையில் ஒரு நாடாக அமை யாவிட்டாலும், பல்வேறு மேலைநாட்டு அறிஞர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் எச்சரித்தது இந்தியாவில் நடைபெற்றுவிடக்கூடாது என்ற கவலையில்தான் வர லாற்று ஆய்வாளர் குகா இதை எல்லாம் தனது நூலில் பட்டியலிட்டுள்ளார்.

தற்போது பா.ச.க. தனித்த பெரும்பான்மையோடு நடுவண் அரசில் ஆட்சியமைக்கும் தருணத்தில் இக்கருத்துகளை எல்லாம் மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.

‘இந்தியாவின் வளர்ச்சிதான் தனது முதல் குறிக்கோள்’என்று மோடி பேசத் தொடங்கினார். ஆனால் பா.ச.க. தேர்தல் அறிக் கையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும், எல் லோருக்கும் பொது குடிமைச் சட்டம் இயற்றப்படும் என்றும், ராமர் கோயில் கட்டப்படும் என்ற அறிவிப்பு களும் இடம்பெற்றுள்ளன.

இவைகள் நிறைவேற்றப் படுமா?  பா.ச.க. கனவு நிறைவேறுமா?  என்பதை வரும் ஐந்தாண்டுகளில் இந்திய மக்கள் காணப்போகிறார்கள். இச்சூழலில் இதுவரை ஆண்ட காங்கிரசுக் கட்சி பின்பற்றிய சில அரசியல் மரபுகளையும் நடந்த நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டு தேசியக் கட்சிகளுக்கும் பெரும் வேறுபாடுகள் இல்லை என்பதே வெளிப்படுகிறது.

இந்தியாவில் 1947லிருந்து நடைபெற்ற காங்கிரசு ஆட்சியிலும், 1989க்குப்பிறகு உருவான கூட்டணி ஆட்சிகளிலும் தொடர்ந்து பல வகுப்புக் கலவரங்கள் நடந்துள்ளன. இந்த வகுப்பு கலவரங்கள் உருவாவதற்கான காரணங்களை அடையாளம் கண்டு, அவற்றைக் களைவதற்குக் கடும் நடவடிக்கைகளை மேற்கொள் வதற்குப் பதிலாகக் காங்கிரசு, தனது ஆட்சி அதி காரத்தைச் சில குடும்பங்களின் நலனிற்காகவே பயன் படுத்தியது. குறிப்பாக, இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது 1975ஆம் ஆண்டு நெருக்கடி நிலையை அறிவித்து, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை முடக்கி, ஒரு சர்வாதிகார ஆட்சியை  உருவாக்கினார்.

மேலும்  எல்லாச்  சட்ட  நடைமுறை  விதிகளையும் உடைத்து, ஒழுக்க நெறிகளை நொறுக்கி, குடும்ப ஆட்சி முறையை நிறுவியதும் காங்கிரசுக் கட்சிதான்  என்பதை  மறைக்க  இயலாது.

இந்திய மாநிலங்களில் ஆளும் பல மாநிலக் கட்சிகள் கொண்ட கொள்கையின்படி ஆட்சி நடத்தாமல் ஊழல், ஊதாரித் தனம், குடும்ப ஆதிக்கம் ஆகியவற்றை நிலைநிறுத்து வதற்கும், இந்தியாவில் மாநில உரிமைகள் பறிபோனதற்கும் காங்கிரசின் நடைமுறைகள் வழிவகுத்தன என்றால் அது மிகையாகாது.

 மாநிலங்களின் தன்னாட்சி உரிமையை நசுக்கி, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட திருத்தங்களை மேற்கொண்டு மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரங்களில் நாடாளுமன்றத்தின் வழியாகச் சட்டங்கள் இயற்றி,  ஒற்றையாட்சி முறையின் கூறுகளைக் காங்கிரசு பின்பற்றியது.

1998 இல் ஐக்கிய  முன்னணி ஆட்சி அமைத்த போது தேவையற்ற முறையில் அந்த ஆட்சியைக் காங்கிரசு கவிழ்த்தது. இதன் காரணமாகத்தான் 1999 இல் பா.ச.க., வாஜ்பாய் தலைமையில் 5 ஆண்டுகள் கூட்டணி ஆட்சியை அமைத்தது.

நடுவண்  அரசில் இந்திராகாந்தி கோலோச்சிய போதுதான் பஞ்சாப் மாநிலத்தின் பொற்கோயிலுக்குள் ‘நீலநட்சத்திர’ இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. இதன் காரணமாக  இந்திராகாந்தி சுடப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக  அப்பாவி சீக்கிய மக்களுக்கு எதிரான தாக்குதல்களைக் காங்கிரசு, தில்லியில் தூண்டிவிட்டது. நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இன்றளவும் அந்த வகுப்புக் கலவரங்களைத் தூண்டிய காங்கிரசுக்காரர்கள் மீதும், நடவடிக்கை எடுக்கத் தயங்கிய அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பல சீக்கிய அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

மேலும் நடுவண் அரசில் காங்கிரசு ஆட்சிக்காலத்தில்தான் 1992ஆம் ஆண்டு திசம்பர் 6 அன்று உத்திரப்பிரதேசத்தில் பல ஆயிரக்கணக்கான துணை இராணுவத்தினர் இருந்தபோதும் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதற்கு அன்றைய பிரதமர் நரசிம்மராவ் மறைமுக ஒத்துழைப்பை அளித்தார் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

மேற்கூறிய மதவெறி சார்ந்த நிகழ்வுகள் காரணமாகத்தான் இந்து அடிப் படைவாதமும், காஷ்மீரில் இசுலாமிய அடிப்படை வாதமும் மேலோங்கத் தொடங்கின. Throughout the 1990s, as Hindu fundamentalism gathered strength in the rest of India, Islamic fundamentalism was on the ascendant in Kashmir, P.656) என்று ராமச்சந்திர குகா குறிப்பிடுகிறார்.

மேலும், 2002 இல் கோத்ரா கலவரத்தின் போது,  நரேந்திர மோடி தான் குசராத் முதல்வராக இருந்தார். அந்தக் கோத்ராரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பிறகு இசுலாமிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில்  2000 பேர் உயிரிழந்தனர்.

இந்நிகழ்வுகளை முதல்வர் நரேந்திரமோடி,  ‘தொடர்வினையும் மறுவினையும்’ (Chain of action and reaction))   என்று குறிப்பிட்டார். அப்பாவிச் சீக்கியர்கள் தில்லியில் படுகொலை செய்யப் பட்டதையும், அப்பாவி இசுலாமியர்கள் குசராத்தில் படுகொலை செய்யப்பட்டதையும் “Pogrom” என்ற சொல்லால் குறிப்பிட்டார் குகா.

ஆக்சுபோர்டு பல்கலைக் கழக அகராதியில் இச்சொல்லுக்கு, ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் மீது திட்டமிட்டு நடத்தப்படும் படுகொலை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடுகிறார். இந்த இரு படுகொலைகளுக்குப் பிறகு தில்லியில் இராசீவ்காந்தியும் (1984), குசராத்தில் (2002) நரேந்திர மோடியும்  இந்த இரக்கமற்ற இன அழிப்பு  நடவடிக்கைகளை  நியாயப்படுத்தினார்கள்  என்றும்  குகா  குறிப்பிட்டுள்ளார்.

எனவேதான் ஈழத்தில் தமிழர் கள் மீது ராஜபக்சே நிகழ்த்திய இனப்படுகொலை மீது, பன்னாட்டு விசாரணையை மேற்கொள்வதற்குத் தடைகளை ஏற்படுத்தியது, சோனியா வழிகாட்டுதலில் நடைபெற்ற காங்கிரசு ஆட்சி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பா.ச.க.விற்கும் காங்கி ரசிற்கும் உள்நாட்டு  அரசியல் கொள்கைகளில் வேறுபாடு இல்லை என்பதை ஆய்வாளர் குகா தனது நூலில் நிலைநாட்டியுள்ளார்.

பொருளாதாரக்   கொள்கைகளைப்  பொருத்தவரை  ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கடந்த பத்தாண்டுகளாகச்   சுதேசிக்  கொள்கையை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்தது.

சென்னையில் இந்துத்துவா தரகர் குருமூர்த்தி பல மேடைகளில் காங்கிரசு ஆட்சியின் பொருளாதாரக் கொள்கைகளின் மீது கடும் விமர்சனம் வைத்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னோடி கோவிந்தாச் சார்யா டெகல்கா இதழுக்கு 2008இல் மே திங்களில் அளித்த பேட்டி குருமூர்த்தி கொள்கைக்கு முரணாக உள்ளது.

தெகல்கா இதழின் கேள்வி:  பா.ச.க.வும் காங்கிரசும் பொருளாதார, வெளிநாட்டுக் கொள்கைகளில் உள்ள கருத்து வேறுபாட்டை எவ்வாறு தீர்க்க முடியும் என்று நினைக்கின்றீர்கள்?

கோவிந்தாச்சார்யா பதில்:  பொருளாதாரக் கொள்கை களில் எவ்விதக் கருத்து வேறுபாடுகளும் கிடையாது. இரு கட்சிகளும் வெளிநாட்டுக் கொள்கையில் அமெரிக்காவை ஆதரிக்கின்றன. பொருளாதாரக்  கொள்கைகளில் பணக்காரர்களை ஆதரிக்கின்றன. முதலாளித்துவத்தோடு இருவரும் பின்னிப்பிணைந்தவர்களே. இதுதான்   இப்போது இரு கட்சிகள்.

ஆனால் ஒரே கொள்கை என்ற புதிய அரசியல் நிலைப்பாடாகும். (Govindacharya: There need not be any difference between economic policies. Both will be pro-US to start in the foreign policy, and in the economic policy both will be prorich. They will be part and parcel of corporatocracy. That is a new kind of polarization in politics, Tehalka,:31, 2008).

ஆண்ட  கட்சிக்கும், ஆளுகின்ற கட்சிக்கும் இருக்கின்ற வேறுபாடுகள் இவைதான் என்பதை இந்நிகழ்வுகள் அடையாளம் காட்டுகின்றன. காங்கிரசு   இயக்கத்தைச் சேர்ந்த கபில்சிபல் அண்மையில்,  அம்பானியிடம், தேர் தலுக்காகப் பா.ச.க. பண உதவி பெறுகிறது என்று குற்றம்சாட்டினார், பா.ச.க. பெரும் முதலாளியான அதானியிடமிருந்தும் பணம் பெறுகிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

பெரும் முதலாளிகளிட மிருந்து பணம் கறப்பதில் யார் வல்லவர்கள் என்பதை விரைவில் தெரிந்து கொள்ளலாம். பெரும் முதலாளித் துவ நிறுவனங்களின் பேராசையைப் பற்றி 2014 ஏப்ரல்  15ஆம் நாள் நடைபெற்ற 15ஆவது கோலி நினைவுச் சொற்பொழிவில் காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் :

“பெரு நிறுவனங்களின் நாகரிகமற்ற நிலையைப் போன்று, பேராசையும் எல்லையைக் கடந்து நிற்கிறது. நாம் கறுப்புப் பணத்தைப் பற்றியும், இணையான பொருளாதாரம் தொடரும் போக்கினைப் பற்றியும் பேசுகிறோம்.

ஆனால், ரிலையன்சு  நிறுவனம் ஒரு இணையான அரசாகவே செயல்படுகிறது. இயற்கை வளங்கள் மீதும், நிதியாதாரங்கள் மீதும், அதிகாரத் தளத்தின் மீதும்,  இதன்காரணமாக மனித வளத்தின் மீதும் வெட்கமின்றி ஒரு தனிப்பட்ட நிறுவனம் ஆதிக்கம் செலுத்துவதை  எந்த நாட்டிலும் காண இயலாது” (The Hindu, April 16, 2014) என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரசு ஒரு அரை பா.ச.க. போன்று செயல்பட்டுள்ளது. பா.ச.க. முழு காங்கிரசைப் போன்று செயல்படப் போகிறதா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Pin It