பழைய சென்னை மாகாணத்தில், தமிழகத்தில்தான் 1000 ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்ட பெரிய, சிறிய ஏரிகள் அதிகம். அவை 39.000க்கும் மேற்பட்டவை.

காடுகளும் மலைகளும் மேற்கு எல்லைகளில் மட்டுமே அதிகம். இங்கே பாசனக் கிணறுகள் அதிகம்.

தெற்கே தாமிரபரணி ஆறு முதல், வடக்கே பெண்ணை யாறு வரையில் பல ஆறுகள் உள்ளன. இவற்றுள் எதுவும் வற்றாத ஆறு இல்லை.

ஆனால் கிருஷ்ணா ஆற்றுக்கு வடக்கே தொடங்கி, வடகோடியில் பிரம்மபுத்திரா ஆறுவரையில் பெரும்பாலானவை வற்றாத ஆறுகளாகும்.

காடுகள் அழிக்கப்பட்ட பிறகும், மலைகள் பாழடிக்கப்பட்ட பிறகும் வட இந்திய ஆறுகளில்-மழைக்காலமான சூன், சூலை, ஆகஸ்டு மாதங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

காடுகள் காப்பாற்றப்படுவது அரசினாலும், அரசு அதிகாரிகளாலும், பொதுமக்களாலும் மட்டுமே முடியக்கூடியது. வெள்ளையர் காலம் முதலே காடுகள் படிப்படியாக இவர்களால் அழிக்கப்பட்டன.

காகிதத் தொழிற்சாலைகளுக்கு அதிக மரக்கூழ் தேவை; வீடுகள் கட்ட மரம் தேவை; அடுப்பு எரிக்க விறகு தேவை. இவற்றுக்காக மரங்கள் பெரிய அளவில் அழிக்கப்பட்டன. ஆனால் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு, காடுகள் பாதுகாக்கப்படவில்லை.

கனிம வளங்கள் நிறைந்திருக்கும் காடுகள், 1977க்குப் பிறகு இந்தியப் பெரு முதலாளி களால் நாசப்படுத்தப்பட்டன; 1980களுக்குப் பிறகு, பன்னாட்டுப் பெருங் குழுமங்களும், அவர்களின் இந்தியத் தரகு முதலாளிகளும் சேர்ந்து இந்தியக் காட்டுச் செல்வங் களையும், மலைச் செல்வங்களையும், கடல் செல்வங்களையும் அரசுகளின்-அதிகாரி களின்-அரசியல் கட்சிகளின் துணைகொண்டு அழித்துவிட்டனர்.

இவற்றின் விளைவாக, 1997இல் ஒடிசா மாநிலத்தில் பெரும் புயல் ஏற்பட்டது; 2004 திசம்பரில் தமிழகத்தில் ஆழிப்பேரலை கொந்தளித்துப் பேரழிவை ஏற்படுத்தியது; 2005 இல் மும்பையில் பெருமழை ஏற்பட்டு நாசம் விளைத்தது. 2013 சூன் 17 தொடங்கி ஏறக்குறைய 7 நாள்களில் இமயமலையை ஒட்டிய உத்தர்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுக்கு 5000 பேர்களுக்குமேல் இரையாகிவிட்டனர். இவை எல்லாம் சீர் படுத்தப்பட இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகும் என்று அஞ்சப்படும் அளவுக்கு மனிதர்கள், ஆடு மாடுகள், வீடுகள், கடைகள், கோவில்கள் அடியோடு அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

உத்தர்கண்ட் மாநிலம் பிரிக்கப்படுகிற வரையில், அங்கே பிறந்த மேல்சாதிப் பார்ப் பனர்கள்தான், உத்தரப்பிரதேச மாநில முதல்வர்களாகத் தொடர்ந்து ஆட்சி புரிந்தனர். அவர்கள் வெகுமக்களின் எதிரிகளாகவே செயல்பட்டனர்.

அசாம் மாநிலத்துக் காட்டு வளங்களை வங்காளி களும், பீகாரிகளும், தேயிலைத் தோட்ட முதலாளி களும்தான் சூறையாடினர்.

அதேபோல், பீகாரின் ஜார்க்ண்ட் பகுதி தனிமாநிலம் ஆவதற்கு முன்னரே, கனிம வளங்களை வெட்டி யெடுப்பதற்காகச் சூறையாடப்பட்டது. இன்றும் சூறை யாடப்படுகிறது. சத்தீஷ்கர் மாநிலமும் அப்படியே சீரழிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் நீர்வளம் என்பது பெரிதும் காவிரிப் பாசனப்பகுதியை அடிப்படையாகக் கொண்டது. இரண்டா யிரம் ஆண்டுக்கு முந்தைய சிலப்பதிகாரம் கூறும் காவிரியின் செழுமையைப் பற்றி சில வரிகளை விதந்து விதந்து பாடிய நம் நாட்டு மக்களும், அரசியல் கட்சி களின் தலைவர்களும்-நாம் காவிரியின் கீழ்மடையில், கடைமடையில் இருக்கிறோம் என்பதை மறந்தே போனார்கள்.

கர்நாடக மண்ணில் கிருஷ்ணராச சாகர் என்கிற கண்ணம்பாடி நீர்த்தேக்கம், 1918-20இல், பழைய சென்னை மாகாணத்தின் பகுதியாக இருந்த தமிழ் நாட்டிலிருந்து போன தமிழ்நாட்டுத் தொழிலாளர்களால் தான் கட்டப்பட்டது. அன்றைய தொழிலாளர்களின் வழிவந்தவர்கள் இன்றும் பெங்களூரில் ஒருதனிப் பகுதியில் குடியிருக்கிறார்கள்.

அதற்குப் பிறகு கர்நாடகப் பகுதியில் கபினி, ஹேமாவதி, ஹீரங்கி அணைகள் தமிழ்நாட்டினரின்-இந்திய அரசி னரின் ஒப்புதல் இல்லாமலே கட்டப்பட்டன. ‘இந்திய தேசியம்’ பேசிய காங்கிரசுக் கட்சி ஆட்சியினர் இவற்றைக் கண்டு கொள்ளவே இல்லை.

1967இல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சியினர், 1974க்குப் பிறகு எழுந்த காவிரி நீர்ப்பங்கீடு தகராறில், 1974-1976இல் முதன்முதலாக வாய்த்த நீர்ப்பங்கீடு ஒப்பந்தத்தை வெற்றியாக முடிக்காமல் தவறவிட்டனர். அ.தி.மு.க.வுக்கு அஞ்சி, தி.மு.க. அரசு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் ஏமாந்து போனது. அதேபோல், 1980க்குப் பிறகு நீர்ப்பங்கிடு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வந்த நல்ல வாய்ப்பை, அன்றைய அ.தி.மு.க. ஆட்சி, தி.மு.க.,வுக்கு அஞ்சி இழந்துவிட்டது.

1990க்குப் பிறகு அமர்த்தப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, 10 ஆண்டுகளாக இந்திய அரசிதழில் வெளியிடப்படாமல் கிடப்பில் இருந்தது; 2013இல் தான் அது வெளியிடப்பட்டது.

அதன்படி, நீர் அருந்தல் காலத்தில்-தமிழ்நாட்டின் குறுவை நெல் சாகுபடிக்காக, வழக்கமாக சூன் 12 அன்று திறக்கப்படும் மேட்டூர் அணை பல ஆண்டுகளுக்குத் திறக்கப்பட முடியவில்லை; இந்த ஆண்டிலும் திறக்கப் படவில்லை.

2013 சூன் 17 அன்று பிற்பகல் முழுவதும், மேட்டூர் அணையின் எல்லாப் பகுதிகளையும் நானும், சேலம் செ.ஆனையப்பன், தாதம்பட்டி பொறிஞர் கு.வெங்கடேசன் ஆகியோரும் சுற்றிப் பார்த்தோம்.

17-6-2013 அன்றைய மேட்டூர் அணையின் நீர்அளவு விவர அட்டவணை கீழே உள்ளது.

மேலே கண்ட விவரப் படங்களை அன்னியில், நீர் இருப்பு, நீர் அற்ற ஏரி உள்வாயின் பரப்பு, மற்றும் மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன் இருந்த அப் பகுதிகளின் படங்கள் உள்ளிட்ட 80 நிழற்படங்களை அன்று எடுத்தோம். அதிகாரிகளிடம் எழுத்து மூலம் அனுமதி பெற்று, இரண்டு கள அலுவலர்களின் துணை யுடனேயே எல்லா இடங்களையும் பார்த்தோம்.

(1963க்குப் பிறகு 2013க்குள் நான்காம் தடவையாக மேட்டூர் அணையை நான் பார்த்தேன்)

இப்படிப் பலரும் மேட்டூர் அணைக்குச் சென்று பார்க்கிறோம். தமிழக வேளாண் மக்களின் அவலநிலை பற்றி ஒப்பாரி வைக்கிறோம்.

தமிழகத்தை 1967 முதல் 46 ஆண்டுகளாக-மூன்று பேர்களே முதலமைச்சர்களாக இருந்து ஆட்சி புரிந்தார்கள்.

ஆனால், (1) 1977க்குப் பிறகு 1987க்குள் எந்த ஆண்டி லாவது, அந்நாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர் களும், முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களும் நேரில் சந்தித்து இதுபற்றி விவாதித்தார் களா? நேரில் இருவரும் தில்லிக்குப் போய்ப் பிரதமரிட மும், மத்திய நீர்வள அமைச்சரிடமும் விவாதித்தார்களா? இல்லை. ஏன் அப்படிச் செய்யவில்லை?

(2) 1989 முதல் முதலமைச்சராக வந்த மு.கருணாநிதி அவர்களும், இன்றைய முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களும் எப்போதாவது நேரில் சந்தித்து இதுபற்றி விவாதித்தார்களா? இவ்விரு தலை வர்களும், இன்றுள்ள 7.22 கோடி மக்களின் சார்பில், ஒரு தடவையேனும் புதுதில்லிக்குச் சேர்ந்து சென்றார் களா? இல்லை.இனியேனும் செல்வார்களா என்கிற வருத்தமே நமக்கு மேலிடுகிறது.

பழம்பெரும் கருநாடகக் காங்கிரசு முதலமைச்சர் நிஜலிங்கப்பா முதற்கொண்டு, நேற்று முதலமைச்சராக இருந்த ஷட்டர் வரையில்-இந்நாள், முன்னாள் கருநாடக முதலமைச்சர்கள், அவ்வப்போது ஒருங்கே கூடி பெங் களூரில் விவாதித்தார்கள்; விவாதிக்கிறார்கள். புது தில்லிக்கு ஒரே குழுவினராகச் சேர்ந்து போகிறார்கள். அதாவது கருநாடக மக்களை அவர்கள் மதிக்கிறார்கள்.

தில்லிக்காரர்களின் ஏவலாளர்கள் போலத்தான், எல்லா மாநிலங்களின் முதலமைச்சர்களும் இன்று விளங்கு கிறார்கள். ஏனெனில் இந்திய அரசியல்-தந்தை பெரியா ரின் மொழிப்படி, கெட்டதிலிருந்து கழிசடை ஆகிவிட்டது.

ஆனாலும், “கருநாடக மக்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது” என்று தில்லிக்காரர்கள் அஞ்சுகிற அளவுக்கு, அங்கு, கருநாடகத்தின் எல்லாக் கட்சிக்காரர்களும் ஒன்றாகச் சேர்ந்து, “ஒரு சொட்டு நீர் கூடத் தமிழகத் துக்குத் தரமுடியாது” என்று ஓங்கி உரைக்கிறார்கள்.

இந்நிலையில், 24-6-2013 அன்று, மேட்டூர் அணை நீர் மட்டம் 15 அடி ஆகிவிட்டது. இனி, காவிரி நிர்ப் பிடிப்புப் பகுதியான குடகில் கனமழை பெய்து, கண்ணம் பாடி அணை நிரம்பி, பின் கபினி அணை வழிந்து ஓடி, ஹீரங்கி அணை உடைத்துக் கொள்ளும் நிலைமை வருகிறபோது தான், அப்படி மிஞ்சுகிற வெள்ளத்தைக் காவிரியில் திறந்து விடுவார்கள்.

எப்போதும் நம் பங்கு நீரைத் திறந்துவிட, இந்திய அரசுக்கும் குடிஅரசுத் தலைவருக்கும் அதிகாரம் உண்டு. ஆனால் அந்த அளவுக்கு அழுத்தத்தை இந்திய அரசுக் குத்தரத், தமிழக ஆட்சியாளர்கள் எப்போதும் முன்வர வில்லை. இது ஏன்? ஏன்? ஏன்?

தமிழகப் பெருமக்கள், இப்போதேனும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். நாம் விரைவில், தண்ணீருக்குத் தவிக்கப் போகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1.            தமிழ்நாட்டில் உள்ள 39,000 பெரிய, சிறிய ஏரி களையும் 2020க்குள், மண்வாரி இயந்திரங்களை வைத்துப் போர்க்கால விசையில் தூர்வார வேண்டும்;

2.            ஊர்தோறும் 2 குளங்கள் உள்ளன. எல்லாக் குளங் களுமே பாழ்பட்டுக் கிடக்கின்றன. குளிக்க நீர், குடிக்க நீர் தரும் குளங்களே இவை. இவற்றையும் இயந் திரங்களை வைத்துத் தூர்வார வேண்டும்;

3.            ஏரிகள், குளங்களின் நீர்வரத்து வாய்க்கால்கள், நீர்ப் போக்கு வாய்க்கால்களைத் தூர்வாரவேண்டும்.

4.            ஏரிகளிலுள்ள-குளங்களிலுள்ள-வாய்க்கால்களி லுள்ள ஆக்கிரமிப்புகளை அரசு உடனே அகற்றிட வேண்டும்.

                இவற்றுக்காக, ஊர்தோறும், பழைய குடி மராமத்து முறையைக் கட்டாயமாக்கிச் செயல்படுத்தவேண்டும்.

5.            ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மண் வாரிகளை இயக்கி, மேட்டூர் அணையின் உள்வாயை-நீர்ப்பிடிப்புப் பகுதியை, கொளத்தூர் வரையில், கட்டாயம் தூர் வாரி ஆழப்படுத்த வேண்டும்.

இவை அனைத்தும் போர்க்கால விசையில் தமிழக அரசினரால் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி, 54,000 சிற்றூர்களிலும் தமிழ்ப் பெருமக்கள் ஒன்றுகூடி, ஒரேநாளில், ஒரே நேரத்தில் கோருங்கள்.

இன்று தமிழக அரசினர் குடிநீரை விலைக்கு விற்க ஆவன செய்கிறார்கள். அரசு தரப்போகும் குடிநீர் ஒரு லிட்டர் 10 ரூபா. பால், அரைலிட்டர் 18 ரூபா.

தனியார் விற்கும் குடிநீர் ஒரு லிட்டர் ரூபா 15, 17, 20, 25 என, இடத்துக்கு ஏற்றார்ப்போல் விற்கப்படு கிறது.

தாமிரபணி ஆறு தொடங்கி எல்லா ஆற்றுப் படுகை களிலும், பாசனக் கிணறுகளிலுமிருந்து குடிநீரை, தனியார் உறிஞ்சி எடுக்கிறார்கள். தமிழகத்தில் நிலத்தடி நீர் 600 அடிக்குக் கீழே போய்விட்டது.

வனத்துறைக் காடுகளையும், ஊர்தோறும் இருந்த தோப்புகளையும் ஈவிரிக்கமின்றி நாம் அழித்துவிட்டோம்.

மனஉணர்ச்சி இல்லாத மாக்களாக மனிதக் கூட்டம் மாறி வருகிறது. படிப்பும், பரப்புரை ஊடக வசதிகளும், வளர்ந்திருக்கின்றன. ஆனால் மனித குலம் பண்புள்ள தாக-மதங்களால், சமயங்களால், சங்கங்களால், கட்சி களால், படிப்பினால் வளர்த்தெடுக்கப்படவில்லை.

இனி, நாம் குடிநீருக்கு ஆலாய் பறக்கப் போகிறோம்!

இதுபற்றி நாம்தான்-மக்கள் தாம்-உழைக்கும் மக்கள் தாம் மனதாரக் கவலைப்பட வேண்டும்!

கவலைப்படுவோம் வாருங்கள்!

கடமைகளாற்றிட வாருங்கள்!