பேரன்புமிக்க - பெருமதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்.

தங்கள் 21-3-2010ஆம் நாளிட்ட கடிதமும், தங்களின் அரும் முயற்சியில் பதிப்பித்து வெளிவந்துள்ள “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” நூல் தொகுப்பு இருபது தொகுதிகளும் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி. அன்பு அச்சகம் அன்பர் திரு. மாறன் அவர்களின் தூண்டுதலும் துணையும் இன்றி, இந்த வாய்ப்புக் கிட்டியிருக்காது. அவருக்கு எனது நன்றி. இதுபோன்ற முயற்சிகளுக்கு எப்பொழுதும் துணையிருப்பேன்.

ஐயாவைப் போன்றோரின் ஓயாத பெரு முயற்சியால் - உயர் பதவிக்கான போட்டித் தேர்வுகளில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ்வோர் போன்றோருக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 2005 ஆண்டிற்கு முன், இத்தேர்விக்கான தரவரிசைப் பட்டியலில், பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர் மற்றும் மலைவாழ்வோர், தகுதி அடிப்படையில் - பொது வகுப்பினருக்கான தர வரிசையில் இடம் பிடித்தால், அவர்கள் அவ்வரிசையிலேயே பணி அமர்வு செய்யப்பட்டு, அவர் ஒதுக்கீடு வகுப்பில் கணக்கெடுக்கப்பட்டு, கழித்துக் கொள்ளப்பட மாட்டார்கள்.

ஆனால், அவ்வாறு ‘பொது வகுப்பில்’ தரவரிசை முன்னுரிமை பெற்ற பிற்படுத்தப்பட்ட, பட்டியல்குல பழங்குடி வகுப்பினர், அவர்களுக்குரிய வகுப்பிலேயே, அவரது தர வரிசை பெற்றிருந்தால், தரம் விரும்பிய பணி மற்றும் தரம் விரும்பிய பணியிடம் (மாநிலம்) கிடைத்திருக்கும். ஆனால், ‘பொது வகுப்பு தர வரிசையில் அவ்வாறு கிடைப்பது இல்லை எனக் காரணம் காட்டி, அவர்களின் விருப்பத்தின் பேரில், அவர்களை ஒதுக்கப்பட்டோர் தரவரிசையில் வைத்து, பணி அமர்த்தப்படுவார்கள் என பணிவிதிகளை 2005இல் திருத்தியது அரசு. இதனை சென்னை உயர்நீதிமன்றம் செல்லத்தக்கது அல்ல என விளம்புகை செய்தது. ஆனால், இந்திய உச்சநீதிமன்றத்தின் - தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அடங்கிய அரசியல் சாசன அமர்வு. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை இரத்து செய்து, அரசு கொண்டுவந்த திருத்தத்தை நியாயப்படுத்தியுள்ளது.

இதன்மூலம், அத்தீர்ப்பின்படி 2005ஆம் ஆண்டு இந்திய அரசுப்பணி மற்றும் அதுபோன்ற பணிகளில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் 31 பேர், பட்டியல் குலத்தினர் ஒருவர், அதுபோல் 2006 ஆம் ஆண்டுத் தேர்வில் 41 பிற்படுத்தப்பட்டோர், 15 பட்டியல் குலத்தினர் 2 பழங்குடியினர் மற்றும் 2007 ஆண்டுத் தேர்வில் 76 - பிற்படுத்தப்பட்டோர், 19, தாழ்த்தப்பட்டோர், 1 - மலைவாழ்வோர், அவ்வாய்ப்பினை இழந்து, அப்பணியிடங்களைப் ‘பொது வகுப்பினர்’ அபகரித்துக் கொண்டு விட்டனர்.

சமூக - ஒட்டுமொத்த வளர்ச்சிக்குக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் அரசின் கவனத்திற்கு இதனை எடுத்துச் செல்ல ஐயா அவர்கள் முயல வேண்டும் என உரிமையுடன் வேண்டுகிறேன். பணிவிதிகளில் ஒரு சின்னத் திருத்தம் கீழ்க்கண்டவாறு செய்தால் சமூக நீதிக்குக் குந்தகமில்லாமல், தேர்வாளருக்கும் பாதிப்பு இல்லாமல் இருக்கும் என நம்புகிறேன்.

தகுதியின் அடிப்படையில் - பொதுத்தர வரிசையில் இடம் பெற்ற OBC/SC/ST தேர்வாளர், அவருக்கு ஒதுக்கப் பெற்ற வகுப்பினர் தர வரிசையில் இருந்தால் என்ன பணி - எங்கு பணியிடம் பெற்றிருப்பதோ அதை அவருக்கு வழங்கிவிட்டு, அவர் ஒதுக்கப்பட்டோர் வரிசையில் - கடையில் இருப்போர், பொதுத்தர வரிசையில் - என்ன பணி, என்ன பணியிடம் கிடைக்குமோ அதைப்பெற வேண்டும். இதனால் ‘பொது வகுப்பில்’ தரவரிசையில் இருக்கும் பொதுப்பிரிவினருக்கு எந்தப் பாதிப்பும் இருக்க வாய்ப்பில்லை.

பொதுத்தர வரிசையில் இடம் பெற்ற OBC/SC/ST தேர்வாளர்கள் பொது வகுப்பிலே இடம் பெற்றிருப்பதோடு, அவர்கள் OBC/SC/ST க்கான ஒதுக்கப்பட்ட இடங்களை, அவ்வகுப்பைச் சேர்ந்த பிறருக்கு கொடுத்தவர்கள் ஆவார்கள். சமூக நீதிக்கு இதுபோன்ற திருத்தம் குந்தகமாக இருக்க முடியாது.

ஐயாவுக்கு நினைவூட்ட வேண்டியதில்லை. இருந்தும் சொல்ல வேண்டியது என் அதிதீவிர ஆர்வம். நன்றி. வணக்கம்! - நாம் முயலுவோம் (ஆசிரியர்).

- மூ. கிருட்டிணன், மதுரை

Pin It