இரண்டாயிரத்துப் பதினாறு வரை
“வீடுபேறு” அடைவோரின் பட்டியல்
விரைவாகத் தயாராகி வருகிறது.

இலவச அறிவிப்புகளைக் கேட்ட
இன்ப அதிர்ச்சியிலேயும்
அடையும் அவசரத்திலேயும்
இறந்து போகின்றனர் சிலர்.

அதுவும் நல்லது தான்.
மருத்துவமனைக்குச் சென்று
மனம் பதைக்கச் செலவு
 செய்யாமலேயே
மரணமும் வாய்க்கிறது
இலவசமாய்!

அரிசி, தொலைக்காட்சிப்பெட்டி
வீட்டுமனை, வீடு
மின்சாரம் எரிவாயு எனத்
தொடரும் இலவசங்களால்
“ஈயென இரத்தல்”
இழிவாகத் தெரியவில்லை
தமிழர்களுக்கு!

“இலவச வளர்ச்சித் துறை” ஒன்றை
 ஏற்படுத்தி அதற்குத்
“தனி அமைச்சரைப்” போட்டால் நல்லது.
 குடும்பத்தில்
 இன்னொரு உறுப்பினருக்கு
 ஒரு பதவியும் கிடைக்க வாய்ப்பாகும்.

டாஸ்மாக் கடைகளில்
நிரம்பி வழியும் கூட்டத்தைப் பார்த்தால்
அடுத்த முதல்வரும் நீங்கள்தானென
அனுமானிக்க வைக்கிறது.

அய்யாவுக்கு
ஒரு வேண்டுகோள்.
எல்லாம் இலவசமாய்க் கொடுக்கிறீர்
மிக்க நன்றி!

ஆனால் . . .
பொது இடங்களில்
பேருந்து நிலையங்களில்
ஒன்னுக்கு - ரெண்டுக்குப் போவதென்றால்
அஞ்சு பத்துன்னு அழவேண்டியுள்ளது.

இயலாத எங்களால்
எல்லா ஆத்திரத்தையும்
நெஞ்சில் அடக்கிக் கொள்ள முடிகிறது
ஆனால் . . .
மூத் . . . . . . தை?